No icon

அழுத்தம் எனும் ஆட்கொல்லி நோய்

‘அழுத்தம் கொடுத்தால் எளிதாய் காரியம் நடக்கும்’ என்பதே இன்றைய எதார்த்தம். ஏதாவது ஒரு விதத்தில், யார் வழியாவது அழுத்தம் கொடுத்து காரியங்களைச் சாதிப்பவர்கள் நம்முன் கதாநாயகர்களாக, சாதனையாளர்களாகத் தென்படுகிறார்கள். இனி எவராவது உண்மையான, நீதியான, நேர்மையான முறையில் காரியங்களைச் சாதிப்பேன் என்று சென்னால் அவரை வேற்றுக் கிரகவாசியாகவே இந்த சமூகம் பாவிக்கும் என்பதே உண்மை.
எப்படி ‘ப்ரஷர்’ (ஞசநளளரசந) என்கிற ஆங்கில பதம் பல அர்த்தங்களை உள்ளடக் கியதோ அவ்வாறே நவீன மனிதன் சந்திக்கும் வாழ்வியல் அழுத்தங்கள் ஆயிரமாயிரம். இன்று உடலில் இரத்த அழுத்தம் அதிகரிப்பதும் இளைஞர்கள் ஏராளம் பேர் இரத்த அழுத்த நோயினால் மரணத்தைத் தழுவுவதும் பல்வேறு விதமான அழுத்தங்களால்தான்! ஸ்ட்ரெஸ் ஓர் உயிர்க்கொல்லி நோய். அதைச் சரிவரக் கவனிக்கா விட்டால் உயிரை எடுத்துவிடும். புள்ளிவிபரப்படி 16 வயது முதல் 36 வயது வரையுள்ள இளைஞர்களில் மூன்றில் ஒருவர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். குறைந்த வயது மரணங்களில் எப்படி இறந்துபோனார்? என்ற கேள்விக்குப் பதில் பல வேளைகளில் ப்ரஷர் தலைக்கேறி இறந்து போனார் என்பதே எதார்த்தமாக உள்ளது.
இளைஞர்கள் சந்திக்கும் அழுத்தங்கள்
‘நாளைய உலகு’ என்கிற நம்பிக்கை வர்ணனைக்கு உட்பட்ட இளைஞர் சமூகம் சந்திக்கும் அழுத்தங்கள் இந்த நாகரீக உலகில் அதிகம். அவற்றை வரையறைக்குள் கொண்டு வருவதாயின் நான்கு நிலைகளில் பட்டியலிடலாம்.
1)        உடலில்  - துரித உணவின், மதுபானங்களின் அழுத்தம்
2)    உறவுகளில் - ஊடகக் காதலும் கவர்ச்சியும் தரும் அழுத்தம்
3)    உழைப்பில்  - வேலையின்மையும் இயந்திரத்தனமும் தரும்  அழுத்தம்
4)     சமூகக் கரிசனையில்   - கொள்கையும் கொள்ளையும் தரும் அழுத்தம். 
உடலில்  - துரித உணவின், மதுபானங்களின் அழுத்தம்
இன்று ஒவ்வோர் இளைஞனும் இளம் பெண்ணும் தான் இருக்கவேண்டிய எடையை விட சராசரியாக பத்து முதல் இருபது கிலோ அதிகமாகத் தான் இருக்கின்றனர். காரணம் என்ன? தவறான உணவு முறையும், உணவுவகைகளும் உடல் பருமனை அதிகரிக்கச் செய்து, பல தொற்று நோய்களுக்கு நம் உடலைத் திறந்து வைக்கின்றன. நாவிற்குச் சுவையான உணவு உண்பது அதிகமாகிக்கொண்டே வரவர உடலுழைப்பு மிக மிகக் குறைந்து கொண்டே வருகிறது.
நட்பு வட்டாரங்களில் இருந்து வரும் அளவு கடந்த அழுத்தத்துக்கு ஆளாகி தினமும் குடிக்கு அடிமையாகும் இளைஞர் கூட்டமும் அதிகரித்து வருகிறது. மதுப்பழக்கம் சமூகத்தால் வெறுக்கப்பட்டது தீயது என்றிருந்த காலம்மாறி இப்போது தாங்கள் குடித்து கும்மாளமடிப்பதை ஃபேஸ்புக், வாட்சப்பில் வெளிப்படையாக இளைஞர்கள் பகிர்வதைக் காண முடிகிறது. கேட்டால்
‘சோஷியல் ட்ரிங்கிங்’ என கெத்துக் காட்டுகிறார்கள். பையன் பொறுப்பானவனாக, எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாதவனாக, நல்ல குடும்பத்தைச் சார்ந்தவனாக, ஒரு டீசண்டான வேலை செய்பவனாக இருக்க வேண்டும் என்பதுதான் முந்தைய தலைமுறையின் திருமண பந்தத்திற்கான வரையறை. ஆனால் இன்று? பையன் எத்தனை இலக்கத்தில் சம்பளம் வாங்குகிறான்? அவன் பேரில் லோன் கடன் ஏதும் இருக்கிறதா சொந்த வீடு இருக்கிறதா? வீட்டில் ஏசி இருக்கிறதா?  கார் இருக்கிறதா? என்று நமது பட்டியலில் வசதி வாய்ப்புகள் மட்டுமே பெரிதாக விழுகின்றன. மற்றவர் எதிர்பார்பிற்கேற்ப கெத்துக்காட்ட வேண்டுமென்ற அழுத்தம் பல இளைஞர்கள்மீது விழுகின்றன. விழுமியங்களைப் பின்னுக்குத் தள்ளி பணம் பொருட்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் வாழ்வினால் என்ன பயன்? அதிகரிக்கும் விவகாரத்துகளுக்கு இதுவும் ஒருவித காரணமே!
உறவுகளில் - ஊடகக் காதலும் கவர்ச்சியும் தரும் அழுத்தம்
பொள்ளாச்சியில் முகநூல் மூலம் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி, கற்பழித்து, படமெடுத்து, மிரட்டி, சம்பாதித்த நிகழ்வு தமிழக வரலாற்றில் ஒரு கரும்புள்ளி. இன்றைய உறவுகளில் எதிரிகள் குறைவு துரோகிகள் அதிகம்; பிடித்தவர்கள் குறைவு நடிப்பவர்கள் அதிகம்; பாசம் குறைவு வேஷம் அதிகம். பெற்றோர்களின் வேலைப்பளு உருவாக்கும் பணிச்சுமையும், உடல் சோர்வும், பொருளாதாரப் பிரச்சினையும் பிள்ளைகளுடனான  உடனிருப்பை, போதிய பாசத்தைத் தடுக்கின்றன. இதனால், இன்று பெற்றோர் பிள்ளைகளுக்கிடையே ஏற்பட்டிருக்கும் இடைவெளியை ஊடகங்கள் நிரப்பிப் பணம் சம்பாதிக்கின்றன. ஊடக உறவுகள் உண்மையல்ல என்ற புரிதல் இல்லாமல் முன்பின்
தெரியாதவர்களை, உண்மைத்தன்மை உணராமலேயே காதலிக்கத் தொடங்குகிறார்கள்; ஒருகட்டத்தில் அதிலிருந்து மீளமுடியாமல் மணிக்கணக்கில் அலைபேசியில் நேரம் செலவிடுகிறார்கள். இதனால் உண்மை உறவுகளைக் கண்டுகொள்ளாமல் உதறிச் சென்று ஆபத்தில் மாட்டிக்கொள்ளும் இளவல்கள் ஏராளம்.
இரவு குறிப்பிட்ட நேரத்திற்குப்பின் பெரும்
பாலான இளைஞர்களின் அலைப்பேசிகள் பிஸி
யாகவோ அல்லது தொடர்பு எல்லைக்கு வெளியிலோ, தான் உள்ளன. மணிக்கணக்கில் அலைபேசியில் அளவளாவும் பிள்ளைகளின் செயல்தனை பல வேளைகளில் பெற்றோர் கண்டுகொள்வதுமில்லை. இதில் நிஜமாகக் காதலிப்பவர்கள் ஒரு சிலரே. பெரும்பாலும் டைம்பாஸ் அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்களோடு பேசி நேரத்தையும் ஆளுமை யையும் சீர்குலைக்கிறார்கள். இப்படி பேசிக் கொண்டு பொழுதுகளைக் கடத்திக் கொண்டிருக்கும் பலர் எவ்வித வேலைக்கும் செல்வதில்லை. தென் கொரியா போன்ற நாடுகளில் இன்று பொருளாதார கவலைகளால் இளைஞர்கள் திருமணம் செய்வதையே தவிர்த்து வருகிறார்கள். திருமணம் அவசியம் என்பதைவிட தவிர்ப்பதை வசதியாகத் தேர்வு செய்கின்றனர். இந்நிலை நம் நாட்டிலும் வந்திடும் நாள் வெகு தொலைவில் இல்லை.
உழைப்பில்  - வேலையின்மையும்  இயந்திரத்தனமும் தரும் அழுத்தம்
மத்திய மோடி அரசின்  மேக் இன் இந்தியா,
ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்மார்ட் சிட்டி போன்ற திட்டங்கள் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை அதிகரிக்கும் என்று எதிர்பார்த்திருந்தது கானல் நீராகி விட்டது. அறிவிப்புகளுக்கு எதிர்மாறாக இன்று வேலையின்மையே அதிகரித்துள்ளது. கடந்த 45 ஆண்டுகாலம் இல்லாத அளவிற்கு 6.1 விழுக்காடாக வேலையின்மை அதிகரித்துள்ளது என்றால் பாருங்கள்! இதனால் கிராமப்புறங்கள் கடனில் சிக்கித் தவிக்கின்றன. கொஞ்சமிருந்த நிலங்களையும் விற்று அல்லது உடைமைகளை அடமானம் வைத்து உயர் கல்வியை நிறைவு செய்த இளைஞர்கள் வாங்கிய கல்விக்கடன்களை திரும்ப செலுத்த முடியாமல் திணறுவதும், கிடைப்பது கொஞ்ச சம்பளமாக இருந்தாலும் ஏதாவது வேலையில் சேர வேண்டும் என்று அங்கலாய்த்துக் கொண்டிருப்பதையும் அன்றாடம் காண முடிகிறது.
இதற்கிடையில், லாபம் ஈட்டும் கார்ப்பரேட்டு
போட்டிகள் உலகில் இளைஞர்களின் சக்தியை மதிப்பதுகூட இல்லை. இயந்திரத்தனமாகவே மனிதர் களையும் பாவிக்கும்போக்கு  இளைஞர்களுக்கு அழுத்தம் வருவிக்காமல் என்ன செய்யும்? எவ்வளவு
தான் நவீன தொழில்நுட்பம் வாழ்க்கை வசதிகளைப் பெருக்கினாலும் உழைப்புச் சுரண்டல் மட்டும் மாற வேயில்லை. கார்ல் மார்க்ஸ் வாழ்ந்த காலத்தைவிட இன்னும் பல மடங்கு அதிகரித்துள்ளது. கார்ப்பரேட் கம்பெனிகளுக்குச் சேவகம் செய்யும் இளைஞர் களுக்கு பகல் இரவாகவும், இரவு பகலாகவும் மாறிவிட்டது உடல்நலத்திற்கு மட்டுமல்ல, வாழ்வின் உறவு நிலைகளுக்கே வேட்டு என்பதை யார் புரிந்து கொள்வார்கள்?
சமூகக்கரிசனையில் - கொள்கையும் கொள்ளையும் தரும் அழுத்தம்
அரசியல் அதிகம் பேசும் காலக்கட்டத்தில் நாமிருக்கிறோம். கொள்கைப் பிடிப்பு கொண்ட இளைஞர் களையும் பார்க்கிறோம்; கொள்ளைக் கூட்டத்தோடு சேர்ந்திருக்கும் இளையோரையும் சந்திக்கிறோம். ‘பணமென்றால் பிணமும் வாய்த் திறக்கும்’ என்பதற்கு இணங்க கட்சிகள் இடும் சில நூறு ரூபாய்களுக்காய் பிரச்சாரக் கூட்டங்களுக்கு வாகனங்களில் படை யெடுக்கும் இளைஞர்களைக் காண்கிறோம். எங்ஙனம் கொள்கையின்றி கூட்டணிகளை பணபேரம் பேசி கட்சிகள் அமைத்துக் கொண்டனவோ அங்ஙனமே எவ்வித நிலைப்பாடும் இன்றி காற்றில் அடித்துச் செல்லப்படும் தூசுபோன்று இளைஞர்கள் செல்வதால் எத்திசையிலிருந்தும் இளைஞர்களை பணபலமிக்க, செல்வாக்குமிக்க ஆதிக்க சக்திகள் தூண்டில் போட்டு இழுக்கின்றன. வேளாவேளைக்கு உணவுக்கும், மதுபானப் படையல்களுக்கும் ஆட்படும் இளைய சமூகம் எங்ஙனம் தலைமைப் பொறுப்பில் வளருவது குறித்து சிந்திக்கும்? நாட்டில் அநீதி நிகழ்கையில் எதிர்ப்புக் குரலெழுப்பும்? கொள்கையற்ற வாழ்வு, இலக்கற்ற வாழ்வு. நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சொல்வது போன்று, “பொதுநலக் கொள்கைகள் என்பது பொதுவாக அரசுகளின் பொறுப்பு என்பதை நாம் உணர்ந்தாலும் அக்கொள்கைகளை உருவாக்கு வதிலும், அவற்றை நிறைவேற்றுவதிலும் மக்களாகிய நமக்கும் பெரும் பங்கு உள்ளது”. இதனை எண்ணத்தில் ஏந்தி, இளைஞர்கள் கொள்ளையர்கள் தரும் அழுத்தங்களுக்கு ஆட்பட்டு விடாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

Comment