No icon

முனைவர் மரிய தெரசா

கல்வி, திசையெட்டும் எட்டட்டும்!

இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொருவரும் குறையுடைய வர்கள் என்ற நிலையில், யாரும் யாரைப் பார்த்தும்என்னைப் போல் வாழ்ந்து விடுஎனக் கட்டாயப்படுத்த முடியாது. தான் பெற்ற பிள்ளையாக இருந்தாலும், தான் கற்பிக்கும் மாணவனாக இருந்தாலும் அவர்களுக்குத் தனித்தனி இயல்புகள் உண்டு. வேறுபட்ட தாலந்துகள் உண்டு. முரண்பட்ட உணர்வுகளும், தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளும் எண்ணிலடங்காத ஆசைகளும் உண்டு.

ஆனால் எது எப்படி இருந்தாலும், பிறருக்கு உதாரணமான மனிதர்களைக் கடவுள் வரவைக்கின்றார். இவர்கள் உயிருள்ள விதைகளைப் போன்றவர்கள். கிடைக்கும் வாய்ப்புகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, நேர்மறை நோக்கங்களை கண்முன் நிறுத்தி, நம்பிக்கையுடன் தனக்கே உரிய தனித் தன்மையுடன் விடாது உழைத்து முன்னுக்கு வருபவர்களாக இருப்பார்கள். இத்தனை படிநிலைகளைக் கடந்து வெளிச் சத்துக்கு வரும்போதுதான் பிறர் கண்களுக்குத் தெரிகிறார்கள். எவ்வளவு ஆழத்தில் புதைக்கப்பட்டிருந்தாலும் உயிருள்ள விதை முளைக்கும்; தன் முகம் காட்டும்; கிளைகளை பரப்பும்; பூத்துக் காய்த்துக் கனிந்து பயன் தரும்; வெயிலில் வருவோருக்கு நிழலும் தரும்.

உயிருள்ள விதை எதுவாக இருந்தாலும் புதையுண்டபின் வெளிப்படும். இதற்கு விதிவிலக்கு இல்லை. முளைத்து வரும் பாதையில் பாறாங்கற்களே குறுக்கிட்டாலும் பாறையை துளைத்து தன்முகம் காட்டும். கோடாரிக்கு இடம் கொடுக்காத பாளை பசுங்குருத்துக்கு வழிவிடும் என்று ஒளவைப் பிராட்டியாரும் பாடியுள்ளார்.

இது இயற்கை மனிதனுக்குக் கற்பிக்கும் மிகப்பெரிய பாடம். எந்தக் குடும்பம், எந்த ஊர், எந்தக் கல்வி நிறுவனம் என நாம் ஆராய்ந்து பார்த்தாலும் அனைவரும் ஒன்றுபோல் முன்னேறிச் செல்வதை நாம் பார்க்க முடியாது. ஒன்றிரண்டு பேர் தடைகளைத் தாண்டி முயற்சி செய்வதைக்  காணமுடியும். முன்னேற வேண்டும், சாதிக்க வேண்டும். குறிக்கோளை அடைந்தே தீரவேண்டும் என்று எண்ணுவோருக்கு குடும்ப வறுமையோ, வேறு எந்தவிதமான எதிர்மறையான சூழ்நிலையோ தடையாக இராது.

உதாரணமாக, மாறுபவர்கள் சும்மா இருந்து கொண்டு சாதிப்பதில்லை. அவர்கள் எடுக்கும் முயற்சி, குறிக்கோளை அடையப் போராடும் முறை, நேர்மறை சிந்தனைகள், இலக்கை நோக்கி எண்ணக் குவிப்பு, கிடைக்கும் நேரம், வளம், அனைத்தையும் இலக்கை நோக்கி திசை திருப்பும் முனைப்பு போன்றவையே உயிருள்ள விதையைப் போல தன் முகம் காட்ட வைக்கின்றது. இதற்குக் கேரள மாணவி ஹனன் உதாரணமானவர்.

கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்தவர். 21 வயது ஹனன் என்ற மாணவி. இவர் தனது படிப்புச் செலவுகளுக்காக பல்வேறு தொழில்களைச் செய்து வந்தார். குறிப்பாக தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவது, பொது நிகழ்ச்சிகளுக்கு அலங்காரம் செய்வது போன்ற பணிகளைச் செய்தார்.

காலை, மாலை நேரங்களில் கடைத் தெருவில் மீன் விற்பதை வாடிக்கையாக வைத்திருந்தாள். கல்லூரி சீருடையில் மீன் விற்ற காட்சி சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதைத் தொடர்ந்து மாநிலத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஹனனுக்கு உதவிகள் குவிந்தன. கேரள முதல் மந்திரி, திரு. பினராயி விஜயனும் ஹனனை அழைத்து பாராட்டி உதவிகள் வழங்கினார்.

படிப்பதற்குப் பணமில்லாமல் அவள் செய்த பணிகள் நிமித்தமாக, அதன் தேவைக்கும் அதிகமாக அவளுக்கு மக்கள் மூலம் நிதி உதவிகள் வந்து கொண்டிருக் கின்றன. சமீபத்தில் கேரளாவின் கன மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவள் ஒன்றரை லட்சம் வழங்கியுள்ளாள். நான் படிக்க சிரமப்பட்டு நின்ற போது இந்த மக்கள்தான் என் படிப்புச் செலவுக்கு பணம் தந்து உதவினர். தற்போது தேவையில் இருக்கும் அவர் களுக்கு இப்பணத்தை முதலமைச்சரின் நிதிக்கு அனுப்பியுள்ளதாக அவள் தெரிவித்தாள்.

நான் ஏழைக் குடும்பத்தில் பிறந்து விட்டேன். என்னைப் படிக்க வைக்க ஒருவருமில்லை! நான் முன்னேறவே முடியாதா? என்னை யார் தூக்கி விடுவார்கள்? என்று மனதுக்குள்ளும், வெளியேயும் அங்கலாய்க்கும் பல மாணவர்களுக்கு மாணவி ஹனனின் வாழ்க்கை ஒரு முன்னுதாரணம்.

நாம் கொஞ்சம்கூட எதிர்பார்க்காத சில நபர்கள் வலிமையான சக்திகளாக, சாதிக்கும் நபர்களாக, எல்லாரும் திரும்பிப் பார்க்கத் தூண்டும் முகங்களாக வெளிப்படுவதைப் பார்க்க முடியும். இது திடீரென நிகழும் நிகழ்வு அல்ல. அவர்கள் தெரிந்தெடுத்த குறிக்கோளும், அதை அடைய நடைமுறைப் படுத்தும் அவர்களது முயற்சியும், ஈடுபாடும், கடுமையான உழைப்பும் அவர்களை முன்னுக்கு தள்ளும். எந்தவிதமான பின்புலமும் இல்லாத சிலர் பிரபலமாவது இப்படித்தான்.

நேர்மையான வழியில் செல்லும் பயணம் தவறான இடத் துக்கு வழிகாட்டாது. நோக்கம் உயர்வானதாக இருந்தால் எந்தத் தடையும் விலகி அவர்களுக்கு வழி பிறக்கும். ஹனனின் வாழ்க்கை மட்டுமல்ல, பல பிரபலங்களின் வாழ்க்கையும் இதற்கு உதாரணங்களே. பகுதி நேர வேலை பார்த்துவிட்டு அந்த வருமானத்தில் படித்து முன்னுக்கு வந்த பல முன்னோடிகள் உண்டு. படிக்கும் காலத்தில் அணு விஞ்ஞானியும் மறைந்த குடியரசு தலைவருமான அப்துல் கலாம் பகுதி நேர வேலையாக வீடு வீடாக பத்திரிகை போட்டவர். அவரது விஞ்ஞானி கனவுக்கும், குடியரசு தலைவர் பதவிக்கும் அவர் செய்த அச்செயல் தடையாக இருக்கவில்லை.

ஆபிரகாம் லிங்கன் ஆரம்ப காலங்களில் செருப்பு தைத்தவர். இன்றும் அமெரிக்காவின் மறைந்த மற்ற ஜனாதிபதிகளை விட லிங்கனையே மக்கள் அதிகமாக பேசுகின்றனர். எடுத்துக் காட்டானவராக சுட்டிக் காட்டு கின்றனர். தொழில் மேதை ஜி.டி. நாயுடுவும் ஆரம்ப காலங்களில் தோட்ட வேலை செய்திருக்கின்றார். இப்படிப் பலரையும் உதாரணம் காட்ட முடியும்.

இன்று வெளிநாட்டு படிப்பும், வேலையும் பல மாணவர்களின் கனவாக இருக்கின்றன. ஆனால் பொருளாதார நிலை இடம் கொடுக்குமா என்ற தயக்கம் பலரிடமும் இருக்கின்றது. கனவும், முயற்சியும், உழைப்பும், தன்னடக்கமும், பணிவும் இணையும்போது எந்த நாட்டுக் கல்வியும் எட்டக்கூடியதே.

சமீபத்தில் ஸ்வீடன் நாட்டுக்கு உயர்கல்வி கற்கச் சென்ற உறவினன் ஒருவன் வீட்டுக்கு வந்திருந்தான். அங்குள்ள கல்விமுறை, செலவுகள், படிப்பு, வேலை, பழக்க வழக்கங்கள் பற்றி கேட்டபோது ஆரம்பகால படிப்புச் செலவு சவால் நிறைந்ததாக இருந்தது என்றான். ஆரம்ப செலவுகளைப் பெற்றோர் பார்த்துக் கொண்டனர். அதன்பிறகு தனது படிப்பு, உணவு, தங்கு இடம் போன்றவற்றுக்காக பகுதிநேர வேலை பார்த்ததாகக் கூறினான். எப்படிப்பட்ட பகுதி நேர வேலை என்று விசாரித்தபோது உணவகத்தில் பாத்திரங்கள் கழுவும் வேலை என்றான். கேட்பதற்கு கொஞ்சம் சங்கடமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது. ஏனெனில் அவன் பெற்றோருக்கு தவம், செபம் மூலம் பிறந்த மகன்.

அவன் சொன்ன இன்னொரு தகவல் நம் நாட்டு மாணவர்களுக்கும், வாலிபர்களுக்கும் பயன்படும் என்று எண்ணுகிறேன். சுவீடன் நாட்டில் வாலிப வயதை எட்டிய பையன்கள் தங்களது  கைச்செலவுக்கு பெற்றோரிடம் கை நீட்டுவது இல்லை. அப்படி கை நீட்டுவது அவர்களுக்கு கேவலம் என வாலிபர்கள் எண்ணுவார்களாம். எனவே எவ்வளவு பெரிய பணக்காரர் வீட்டுப் பிள்ளையாக பிறந்திருந்தாலும் சொந்த செலவுக்கான பணத் தேவைக்கு சாதாரண வேலைகளை பகுதிநேரப் பணியாகச் செய்ய அவர்கள் தயங்குவதில்லையாம்.

எதையும் செய்யாமல், முயலாமல், போராடாமல் இருக்கும்போது யாரும் நம்மை உள்ளோருக்கு கூட நம் தகுதிகள் தெரியாமல் போய்விடும். தகுந்த குறிக்கோளை அமைத்துக்கொண்டு அதை நோக்கிய பயணத்தில் முன்னேறும் போதோ, தடைகளை தாண்டும்போதோ தான் பிறர் அடையாளம் காண்கிறார்கள். சிலர் போராடும் போது கண்டுகொள்ளப்படுகிறார்கள். சிலர் போராடி மேலே வரும்போது இனம் காணப்படுகிறார்கள்.

குறிக்கோள் வகுக்கும்போது நமக்கு மட்டும்தான் தெரியும். அனைவருமே குறிக்கோள் வகுக்கின்றார்கள். செயல்படுவதிலும், தடைகளைத்தன்னால் முடியுமா என்று தயங்குவதாலும் பலர்

பாதியில் நின்று விடுகிறார்கள். தாழ்வு மனப் பான்மையால் சிலர் அமைதியாகி விடுகின்றார்கள். துணிந்தவர்களே உதாரணமாகின்றார்கள்.

மாணவர்களே! குறிக்கோளை நோக்கிய பயணத்தில் நேர்மையான வழிகளில் தடைகளைத் தாண்டி முன்னேறுங்கள். அந்தப் பயணம் கண்டிப் பாக உதாரணம் காட்டும்படியானதாக மாறும். ஏனெனில் குறிக்கோளை நோக்கிய பயணத்துக்கு அவ்வளவு ஈர்ப்பு சக்தி உண்டு. எந்த முயற்சிக்கும் மந்திர சக்தி உண்டு.

Comment