No icon

நம்பிக்கையூட்டும் இயேசுவின் உயிர்ப்பு!

எல்லாருக்கும் நீதி, சமத்துவம், அன்பு, மனித மாண்பு நிறை கடவுளின் வாழ்வு என்று போதித்து, அநியாயம், அக்கிரமம், அதர்மம் செய்கின்றவருக்குச் சவாலாகத் தீவிரமாகச் செயல்பட்ட இயேசுவைக் கொன்று புதைத்து விட்டால் இயேசுவின் இலட்சியமான இறையாட்சியே அழித்து விடலாம் என்று கங்கணம் கட்டி, கொலைச் சதியை நிறைவேற்றினார்கள் இயேசுவின் எதிரிகள். ‘புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை, விதைக்கப்படுகிறார்கள்என்பதற்கேற்ப, எந்தச் சாவும், எந்தக் கல்லறையும் இயேசுவை அடக்க முடியாது. சாவுக்கே சாவு மணியடித்தவராய், வெற்றியோடு உயிர்த்தெழுந்த இயேசுவிலே அவரது இலட்சிய இறையாட்சிக் கனவும் உயிர்த்தது.

ஒத்தமைவு நற்செய்தியாளர்கள் பதிவு செய்யாத உயிர்ப்புப் பகுதிகளை யோவான் குறித்து வைத்துள்ளார். உயிர்த்த இயேசுவின் முதற்காட்சி பெற்ற மகதலா மரியா (20:11-18), ஐயமுற்ற தோமாவுக்குத் தோன்றுதல் (20:24-28), சீமோன் பேதுருவின் தலைமைத்துவத்தை உறுதி செய்தல், அவரின் மறைசாட்சி மரணத்தை முன்னறிவித்தல் (21:14-19), யோவான் நற்செய்தி எழுதிய அன்புச் சீடரின் முக்கியத்துவத்தை வலியுறுத்தல் (21:19-25) போன்ற பொருள் பொதிந்த நிகழ்வுகளை மறக்காமல் எழுதி வைத்துள்ளார்.

துன்பம், அநியாயம், அக்கிரமம், சாவு என்றென்றும் ஆட்சி செய்ய முடியாது. நீதி, சமத்துவம், உண்மை, அன்பு வாழ்வுதான் இறுதியில் வெற்றி பெறும், முடிவில்லா ஆட்சி செய்யும் எனும் நம்பிக்கை துளிர்விடுவது இயேசுவின் உயிர்ப்பிலே.

பெண்களை அடக்கி அடிமைப்படுத்தி இருந்த ஆணாதிக்க யூதச் சமூகத்திலே பெண்ணையே தமது உயிர்ப்பின் முதல் சாட்சியாகவும், முதல் திருத்தூது அறிவிப்பாளராகவும் மாற்றி, பெண்ணின் மாண்பைத் தூக்கிப் பிடித்துள்ளது இயேசுவின் உயிர்ப்பு.

● “நீ என் சகோதரர்களிடம் சென்று அவர்களிடம்என் தந்தையும், உங்கள் தந்தையும், என் கடவுளும் உங்கள் கடவுளுமானவரிடம் செல்ல விருக்கின்றேன் எனச் சொல்” (20:17) என்று தம் தந்தையையும், கடவுளையும் மானுடத்திற்குச் சனநாயகப்படுத்தி வழங்கியுள்ளது இயேசுவின் உயிர்ப்பு.

● ‘கண்டால்தான் நம்புவேன்; தொட்டுப் பார்த்தால்தான் நம்புவேன்என அடம்பிடித்த தோமாவின் வழியாகப் புலனுணர்வுகளையும் தாண்டியுள்ள ஆழமான நம்பிக்கைக்கு வித்திட்டது இயேசுவின் உயிர்ப்பு.

மூன்று முறை இயேசுவை மறுதலித்த பலவீனமான பேதுருவையே திரு அவையின் முதல் தலைவராக உயர்த்தி, பலவீனத்தைப் பலமாக்கியது இயேசுவின் உயிர்ப்பு.

ஒத்தமைவு நற்செய்தியாளர்கள் தரும் உயிர்ப்பு நற்செய்தியோடு யோவானில் மிளிரும் தனித்துவமான உயிர்ப்பு நற்செய்தி, கடவுள் விரும்பும் நீதி, சமத்துவ, அன்புச் சமுதாயத்திற்கு நம்பிக்கையாக ஒளிர்ந்து கொண்டே இருக்கின்றது.

துணிச்சல்மிகு கிறிஸ்தவம் தேவை

வரும் பொதுத் தேர்தலில் துணிச்சல் மிகுந்த நம்பிக்கையோடு கிறிஸ்தவர்கள் சனநாயகம் காக்க உழைத்திடும் மக்களோடு கைகோர்த்துத் திராணியோடு செயல்பட வேண்டிய நேரம் வந்து விட்டது. சமுதாய அக்கறையின்றி, நாட்டைக் காக்கும் வீரமின்றி உறங்கி, ஒதுங்கி வாழ வேண்டாம். நெருப்பினின்று கிளர்ந்தெழும் பீனிக்ஸ் பறவை போல வெகுண்டெழுவோம்.

நீதி, சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் போற்றி, இறையாண்மை, சமநிலைச் சமுதாயம், சமயச்சார்பின்மை, மக்களாட்சி முறை அமைந்ததொரு குடியரசாக இந்தியா மலர்ந்திட நம்மை அழைத்துச் செல்லும், உறுதி கொடுக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தை சிதைத்து விட்டு, அடிமைப்படுத்தும் பார்ப்பனிய இந்துத்துவ மனுச்சட்டத்தை நடைமுறைப்படுத்தி, இந்தியாவைச் சின்னாபின்னமாக்கிடும் அபாயங்களும், ஆபத்துகளும் நிறைந்த சூழலில் இப்பொதுத் தேர்தலைத் துணிச்சலோடு எதிர்கொள்வோம்.

இந்திய அரசமைப்புச் சாசனத்தைப் பாதுகாத்திடும், எல்லாருக்கும் நீதி, சமத்துவம், மனித மாண்பு, சுதந்திரம் கொடுத்து இந்தியாவை வழிநடத்தும் மக்கள் பிரதிநிதிகளைப் பொறுப்புணர்வுடனும், சுதந்திர இந்தியாவை எதிர்கால நமது தலைமுறைகளுக்கு விட்டுச் செல்ல வேண்டுமென்ற கடமையுணர்வோடும் இத்தேர்தலைச் சந்திப்போம்.

இந்தப் பொதுத் தேர்தல்...…

இந்திய அரசமைப்புச் சாசனத்திற்கும், அடிமைப்படுத்தும் மனுச்சட்டத்திற்குமான தேர்தல்!

சனநாயகத்திற்கும், சர்வாதிகாரத்திற்குமான தேர்தல்!

சமயச் சுதந்திரத்திற்கும், அடிப்படை மதவாத பயங்கரவாதத்திற்குமான தேர்தல்!

ஏழைகளுக்கும், கார்ப்பரேட்டுகளுக்குமான தேர்தல்!

சுதந்திர இந்தியாவுக்கும், சகக் குடிமக்களையே அடிமைப்படுத்தும் சக்திகளுக்குமான தேர்தல்!

வாழ்வுக்கும் சாவுக்குமான தேர்தல்!

கடந்த ஆண்டுகளிலே மக்கள் கொடுத்த அதிகாரத்தை, அநியாயத்தைத் தக்கவைக்கும் அமைப்பாக  மாற்றி, அனைத்துப் பொது அமைப்புகளையும் அடிமைப்படுத்தும் பார்ப்பனிய-இந்துத்துவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தி, மக்களை மதப் பயங்கரவாதத்தால் பிரித்தாண்டு, சிறுபான்மையினரையும், பழங்குடியினரையும், ஒடுக்கப்பட்ட மக்களையும் பயமுறுத்தியே ஆட்சி செய்து, இயற்கை வளங்களைக்  கார்ப்பரேட்டுகளுக்குத் தாரைவார்த்துப் பணம் புரட்டி, ஜி.எஸ்.டி. வரி கொண்டு சுரண்டி, வரி வழங்கும் மாநிலங்களுக்குச் சரியான பங்கீடு செய்யாமல், தேர்தல் பத்திரங்கள், பி.எம். கேர்ஸ் வழியாகக் கோடிக் கோடியாகச் சுரண்டி, பணத்தாலும், பயத்தாலும் மறுபடியும் ஆட்சிக்கு வந்துவிடலாம் என எத்தனிக்கும் சக்திகளை முறியடிக்க முடியுமா? பதவியிலிருந்து தூக்கி எறிந்து விட முடியுமா? எனப் பயந்திடாமல் செயல்பட, இயேசுவின் சாவை  வென்ற உயிர்ப்பு நமக்கு நம்பிக்கை ஊட்டட்டும்.

அநியாயமும், சர்வாதிகாரமும் வரலாற்றில் நிலைத்து நின்றதில்லை! மக்கள் சக்தியால் துடைத்துத் தூக்கி எறியப்பட்டன எனும் நம்பிக்கையோடு தேர்தலை எதிர்கொள்வோம். இயேசுவின் துணிச்சலையே கேடயமாகக் கொண்டு இத்தேர்தலைத் துணிச்சலான, பொறுப்பான கிறிஸ்தவர்களாகச் சந்திப்போம். மற்ற சனநாயகக் குழுக்களோடும், அமைப்புகளோடும் இணைந்து செயல்படுவோம். இந்தியாவைத் தீவிர மதவாதத்தால் அடிமைப்படுத்தும் பார்ப்பனிய-இந்துத்துவ ஆதிக்கத்தை நிலைநாட்டிடும், கார்ப்பரேட்டுகளை வளர்த்திடும் கொள்ளையடிக்கும் சர்வாதிகாரச் சக்திகளிடமிருந்து இந்தியாவை மீட்போம். சனநாயகச் சக்திகளுக்கு இந்தியாவைக் கையளிப்போம்.

இது இந்தியாவின் இரண்டாவது சுதந்திரத்திற்கான போராட்டம் என்பதை மறந்து விட வேண்டாம்.

Comment