No icon

ஆண்டவரின் உயிர்ப்புப் பெருவிழா (திப 10:34,37-43; கொலோ 3:1-4; யோவா 20:1-9)

31, மார்ச் 2024

சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்து உயிர்த்துவிட்டார்! அல்லேலூயா! அவரின் உயிர்ப்பில் அகமகிழ்வோம். அல்லேலூயா! இயேசுவின் உயிர்ப்பின் சாட்சிகளாவோம். அல்லேலூயா! அனைவருக்கும் இனிய உயிர்ப்புப் பெருவிழா வாழ்த்துகள்!

இருளை ஒழித்து, சாவை வென்று, வெற்றி வீரராய் மாட்சியோடு உயிர்த்தெழுந்த ஆண்டவர் இயேசுவின் பாஸ்கா பெருவிழாவை இன்று நாம் கொண்டாடுகின்றோம். உயிர்ப்பே நற்செய்தியின் உச்சக்கட்ட உண்மை! இதுவே தலையாய நற்செய்தி! புதிய ஏற்பாட்டின் மையச்செய்தி! உயிர்ப்பு இல்லாவிடில், இன்று கிறிஸ்தவம் இல்லை; நற்செய்தி இல்லை; நம்பிக்கை இல்லை.

உயிர்ப்பு சாதாரண ஒருநாள் கொண்டாட்டமல்ல; மாறாக, உயிர்ப்பு முதல் பெந்தேகோஸ்து நாள்வரை (ஏழு வாரங்கள்) உள்ள 50 நாள்களின் நட்சத்திரக் கொண்டாட்டமாகும் (கத்தோலிக்கத் திரு அவையின் மறைக்கல்வி ஏடு, எண். 1169). உயிர்ப்புப் பெருவிழாதான் எல்லா விழாக்களுக்கும் தலையான விழாவாக அமைகிறது.

கிறிஸ்து உயிர்த்துவிட்டார், அல்லேலூயா!

தலைமைச் சீடர் பேதுரு, “நீங்கள் சிலுவையில் ஏற்றிக் கொலை செய்த இயேசுவைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார். இதற்கு நாங்கள் அனைவரும் சாட்சிகள்” (திப 2:32) என்று பெந்தேகோஸ்தே நாளில் நிகழ்த்திய பேருரையும், “…கடவுள் அவரை மூன்றாம் நாள் உயிரோடு எழுப்பிக் காட்சி அளிக்கச் செய்தார்” (திப 10:39,40) என்று உரோமை நூற்றுவர் தலைவரான கொர்னேலியு இல்லத்தில் முழங்கிய உரையும் ‘இயேசு உயிர்த்து விட்டார்’ என்பதற்கான தொடக்கக் கால மறையுரைகளாக இருக்கின்றன. 1. புரட்டப்பட்ட கல், 2. வெறுமையான கல்லறை, 3. கல்லறையில் கிடந்த துணிகள், 4. வெண்ணாடை அணிந்த இளைஞரின் செய்தி என்பவை ‘இயேசு உயிர்த்துவிட்டார்’ என்பதன் தொடக்கச் சான்றுகள்!

இயேசுவின் உயிர்ப்புப் பற்றிய செய்திகளை இறையியல் நோக்கில் 1. ஈஸ்டர் செய்தி (Easter Kerygma), 2. ஈஸ்டர் கதைகள் (Easter Stories) என இரு வகைப்படுத்தலாம். ‘இயேசு உயிர்த்தார், அவர் வாழ்கிறார்’ என்னும் ஒற்றை வாக்கியமே சீடர்களின் ‘ஈஸ்டர் செய்தியாக’ இருந்தது. இதுவே உயிர்ப்பு அறிக்கை (Easter Confession) என்றும் அழைக்கப்பட்டது. ‘ஈஸ்டர் கதைகள்’ என்று சொல்லும்போது இவை கற்பனைப் புனைவுகள் என்ற பொருளில் மொழிபெயர்க்கக்கூடாது. திருவிவிலியப் பின்னணியில் ஈஸ்டர் கதைகள் என்பவை வெறுமையான கல்லறை (Empty tomb) மற்றும் உயிர்த்த இயேசுவின் காட்சிகள் பற்றியவையாக அமைந்துள்ளன.

வெறுமையான கல்லறையே புதிய ஏற்பாட்டில் உயிர்ப்பிற்கான முதல் அடையாளம். பெண்கள் நம்பத்தகுந்த சாட்சிகளாக எதற்கும் கருதப்படாத சூழலில், ‘அவர்கள் வெறுமையான கல்லறையைப் பார்த்தார்கள்’ என்று நான்கு நற்செய்தியாளர்களும் எழுதும்போது, அது வரலாற்றுப்பூர்வமாக நடந்ததாகவே கருத முடிகிறது. இல்லாவிடில், மக்களுக்கு எளிதில் நம்பிக்கை வராத பெண்களின் சாட்சியத்தை நற்செய்தியாளர்கள் எழுதியிருக்கத் தேவையில்லை. ஆச்சரியமூட்டும் வகையில், மரபுக்கு மாறாகப் பெண்களின் சாட்சியத்தை நற்செய்தியாளர்கள் வரைந்திருப்பது உண்மையிலே உயிர்ப்பு மறுக்க முடியாத ஒரு வரலாற்று நிகழ்வு என்பதை நமக்கு உணர்த்துகிறது. அதுபோலவே, உயிர்த்த ஆண்டவர் முதலில் தம்முடன் பணியாற்றிய பெண்களுக்கும், பேதுருவுக்கும், அதன் பின் பன்னிருவருக்கும், பின்பு ஐநூறுக்கும் மேற்பட்டோர், யாக்கோபு, அனைத்துத் திருத்தூதர்கள், இறுதியில் பவுல் என அனைவருக்கும் (1கொரி 15:5-8) கொடுத்த காட்சிகள் இயேசுவின் உயிர்ப்புக்கு அதிகம் வலு சேர்க்கின்றன.

உயிர்ப்பே கிறிஸ்தவ நம்பிக்கையின் அடித்தளம்

உலகில் வாழ்ந்து இறந்த மகான்களில் இயேசுவைத் தவிர, வேறு எவரும் உயிர்த்ததாக வரலாறு இல்லை. இயேசுவின் உயிர்ப்பு, அவரது வாழ்வு மரணத்தின் தொடர்ச்சி. ‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; ஆனால், தர்மம் மீண்டும் வென்றே தீரும்’ என்ற பாரதியின் இலக்கிய வரிகளுக்கு வரலாற்றுச் சுவடாக அமைந்திருப்பதுதான் இயேசுவின் உயிர்ப்பு. “கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால், நாங்கள் பறைசாற்றிய நற்செய்தியும், நீங்கள்  கொண்டிருக்கிற நம்பிக்கையும் பொருளற்றதாயிருக்கும். நாங்களும் கடவுள் சார்பில் பொய்ச்சான்று பகர்வோர் ஆவோம்” (1கொரி 15:14,15) என்று பவுல் தீர்க்கமாக, அறுதியிட்டுக் கூறுகிறார். “கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால், நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை பயனற்றதே” என்று மேலும் அவர் கூறுகிறார் (கொரி 15:17). ஆம்! கிறிஸ்துவின் உயிர்ப்பே கிறிஸ்தவ நம்பிக்கையின் அடித்தளம்; ஆதாரம்; ஆணிவேர்.

உயிர்ப்புக்குச் சாட்சியம் பகர்ந்த பெண்கள்

உயிர்த்த ஆண்டவரை முதலில் சந்தித்து, திருத் தூதர்களுக்கு அவரைப் பற்றி அறிவிக்கும் பேறு பெற்றவர்கள் பெண்கள்! கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட இயேசுவைக் காண விடியற்காலையில் நறுமணப் பொருள்களுடன் சென்றவர்கள் மகதலா மரியா, வேறொரு மரியா (மத் 28:1), யாக்கோபுவின் தாய் மரியா, சலோமி (மாற் 16:1), யோவன்னா மற்றும் அவர்களோடு இருந்த வேறு சில பெண்கள் (லூக் 24:10). இவர்கள்தாம் இயேசுவின் உயிர்ப்புக்கு முதற்சாட்சிகள்! இயேசுவைக் கைது செய்த போதும், இறுதியில் இயேசு உயிர் விடும்போதும் அவரோடு இருந்தவர்கள் பெண்கள். இயேசு மீண்டும் உயிர்பெற்றுத் தோன்றியபோது, முதலில் இயேசுவைக் கண்டவர்கள் இவர்களே.

மரியா என்னும் கன்னிப் பெண் வழியாக மானுட உரு எடுத்த இறைவன், மகதலா மரியா என்னும் பெண் வழியாக மனித உடல் கடந்த உயிர்ப்பின் நற்செய்தியை அறிவிக்கச் செய்கிறார். பெண்ணை அடிமையாகக் கருதிய யூதச் சமுதாயத்தில் பெண் வழியாகப் பிறப்பையும், பெண் வழியாக உயிர்ப்பையும் உலகிற்கு உணர்த்துகிறார். இயேசுவின் உயிர்ப்பை அனுபவிப்போர் எல்லைகள் கடந்த பாலினச் சமத்துவ நிலைக்கு அழைக்கப்பட்டவர்கள் என்னும் உயரிய உண்மையை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6-ஆம் நாள் பக்ரைனிலிருந்து இத்தாலிக்குச் செல்லும் போது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் “ஒவ்வொரு முறை பெண்கள் வத்திக்கானுக்குள் பணிக்காக அமர்த்தப்படுகிறபோது, வத்திக்கானின் நிர்வாகம் முன்பைவிடச் சிறப்படைவதை நான் அங்குக் கண்டதுண்டு” எனும் கூற்றிலிருந்து, பெண்களின்றி திரு அவை இல்லை என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், இன்றும்கூட ‘பெண்ணாகப் பிறப்பதே பேதைமை’ என்றெண்ணி, அவர்களைத் திரு அவையில் சுதந்திரமாகப் பங்கெடுக்க அனுமதிக்காதது உண்மையிலேயே வருந்தத்தக்கது, ஏற்கவியலாதது.

உயிர்ப்பு, சான்று பகர்வதற்கான அழைப்பு

இயேசுவின் இறப்பால் கோழைகளாகச் சிதறிப் போன, பூட்டிய அறையில் முடங்கிப்போன சீடர்களை வெற்றி வீரர்களாகச் சான்று பகர வீதியில் ஒன்றுசேர்த்தது இயேசுவின் உயிர்ப்பு. இயேசுவின் உயிர்ப்புக்குச் சான்று பகர்ந்த சீடர்களின் வாழ்வில் மிகப்பெரிய வாழ்வு மாற்றம் ஏற்பட்டது. “கடவுள் இயேசுவோடு இருந்தார்” எனவும், “எங்கும் நன்மை செய்துகொண்டே சென்றார்” (திப 10:38) எனவும் இயேசுவைப் பற்றிச் சான்று பகர துணிவு தந்தது. நன்மைகள் மட்டுமே செய்த இயேசுவைச் சிலுவையில் கொலை செய்ததற்கு “நாங்கள் சாட்சிகள்” (திப 10:39) என இயேசுவை மறுதலித்த பேதுருவையே சான்று பகர வைத்தது. யூதத் தலைமைச் சங்கம் முன்பாகவும் (திப 4:1-22), ஆளுநர்கள் முன்பாகவும் (திப 23:23-35) துணிவுடன் சான்று பகர்ந்தார் கள். அவர்கள் இயேசுவுக்காக உயிரைக் கொடுக்கவும் முன்வந்தார்கள். சீடர்களின் சாட்சிய வாழ்வு இயேசுவின் உயிர்ப்புக்கான தெளிவான சான்றாக அமைகின்றது. சீடர்களைப்போல நாமும் உயிர்ப்பின் சாட்சிகளாக மாறி, உயிர்ப்பின் செய்தியை எங்கும் அறிவிக்க அழைக்கப்படுகிறோம்.

உயிர்ப்பு அன்றாடம் நிகழும் தொடர் நிகழ்வு

உயிர்ப்பு என்பது ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நடந்த ஒரு நிகழ்வு என்று உயிர்ப்பு அனுபவத்தைச் சுருக்கிவிட முடியாது. எங்கெல்லாம் மானிடநேயப் பணிகள் ஆற்றப்படுகின்றனவோ,  அங்கெல்லாம் இயேசுவின் உயிர்த்தெழுதல் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது. இயேசுவைப் போன்று வாழ்பவருக்கும், பணி செய்பவருக்குமே உயிர்ப்புச் சாத்தியப்படும். இயேசு ஆற்றிய பணிகளைத் தொடர்ந்து ஆற்றுவதிலும், அப்பணிகளால் மக்கள் வாழ்வு பெறுவதிலும்தான் உயிர்ப்பின் அனுபவம் அடங்கியுள்ளது. எனவே, உயிருடன் எழுப்பப்பட்ட இயேசுவின் இறையாட்சிப் பணியை இன்றும் தொடர்ந்தாற்றுவதுதான் நமக்கான அழைப்பு. இறையாட்சியைத் தொடங்கி வைத்த இயேசு ஏழையர், புறக்கணிக்கப்பட்டோர், விளிம்புநிலை மாந்தர் ஆகியோருக்கு அதில் முன்னுரிமை கொடுத் தார். இயேசுவின் பிறப்பிலும், உயிர்ப்பிலும் விளிம்புகள் மையமாகின்றன.

இயேசுவின் உயிர்ப்பைக் கொண்டாடுவோம்!

பெனடிக்டைன் துறவி பீடு கிரிபித்ஸ் (Bede Griffiths 1906 - 1993) ‘நட்சத்திர மணி நேரம்’ (Star Hours) பற்றிப் பேசுவார். அதாவது, எத்தனையோ மணி நேரங்கள் வந்து போனாலும், சில மணி நேரங்கள் மட்டுமே மனிதகுல வரலாற்றில் மிகப்பெரிய மாற்றங்களுக்கு வித்திட்ட நேரங்களாக அமைகின்றன. அவ்வகையில் ‘இயேசுவின் மரணம் - உயிர்ப்பு - விண்ணேற்பு’ நிகழ்ந்த மணி நேரங்கள் முக்கிய நட்சத்திர நேரங்களாக அமைபவை. இயேசு மரித்து இம்மண்ணில் புதைக்கப்பட்டதன் வழியாக, மண்ணுக்குரிய இயல்பை விண்ணுக்குரிய இயல்பாக மாற்றியுள்ளார். எனவே, இயேசுவின் உயிர்ப்பைக் கொண்டாடுவோம். நாம் கைவிடப்பட்டோர் அல்லர்; மாறாக, நமக்கென வானகத் தந்தை உள்ளார். இயேசுவின் பணியைச் செய்ய அஞ்ச வேண்டாம். அன்புக் காய், நீதிக்காய், உண்மைக்காய் இயேசுவைப்போல உழைப்போம். உயிர்த்த நம் ஆண்டவருக்காக நாம் வாழும் நேரங்களை ‘நட்சத்திர மணி நேரங்களாக’ மாற்றுவோம்.

Comment