No icon

சங்கே முழங்கு...

ஆண்டவர் இயேசு உயிர்த்துவிட்டார் என்று!

இயேசுவின் உயிர்ப்பு விழா கிறிஸ்தவர்களின் மாபெரும் விழா! இது கிறிஸ்தவர்களின் ஒரே விழா என்று சொன்னால் கூட அது மிகையாகாது. ஏனென்றால், கிறிஸ்தவ நம்பிக்கையின் அடிப்படையாக இருப்பது இயேசுவின் உயிர்ப்பு. இயேசு உயிர்த்ததால்தான் திருத்தூதர் சமூகம் ஓர் உறுதியான நம்பிக்கைச் சமூகமாக மாறியது

பயந்து, நடுநடுங்கி வாழ்ந்த இயேசுவின் சீடர்களை தூய ஆவியானவர் ஒன்றுகூட்டி திடப்படுத்துகின்றார். அவர்கள் தாய்த் திருச்சபையாக உருவெடுக்கிறார்கள். திக்கெட்டும் சென்று திருமறையைப் பரப்புகிறார்கள். ஆகவே, உலகமெங்கும் நற்செய்தியைப் பரப்புவதற்கும், கிறிஸ்தவ நம்பிக்கை வேரூன்றுவதற்கும் அடிப்படையாக இருந்தது இயேசுவின் உயிர்ப்பு. எனவேதான் புனித பவுல்கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லையென்றால், நாங்கள் பறைசாற்றிய நற்செய்தியும், நீங்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையும் பொருளற்றதாயிருக்கும்”(1கொரி 15:14) என்று முழங்குகின்றார். ஆகவே, இயேசுவின் உயிர்ப்பு நமது அன்றாட வாழ்வுக்கு நம்பிக்கைத் தரும் ஒளிச் சுடராக விளங்குகிறது.

இயேசு பிறருக்காகவே வாழ்ந்தார்

இயேசு பிறருக்காகவே முற்றிலும் வாழ்ந்த மாமனிதர். இயேசுவின் உடலின் ஒவ்வோர் அங்கமும் பிறருக்காகவே வாழ்ந்தது. சென்ற இடமெல்லாம் நன்மையையே செய்தார். ஏழைகளின் நண்பரானார்! பாவிகளின் தோழரானார்! நோயுற்றோரின் தேற்றரவாளரானார்! சமுதாய வீதியின் கடை எல்லையிலே வீசி எறியப்பட்ட ஒவ்வொரு மாந்தருக்கும் மாண்பு உண்டு என்பதைத் தமது சொல்லால் - செயலால் - வாழ்வால் எண்பித்தார். இதைக் கண்ட ஒரு சுயநலக் கூட்டம் அவரைக் கொன்றுவிட வேண்டும் என்று சதிவலை பின்னியது. வேடன் விரித்த வலையில் வீழ்ந்துவிட்ட வெண்புறாவைப் போல இயேசு சதிகாரர்களால் கொல்லப்பட்டார். இருப்பினும், இயேசுவோ மீண்டும் உயிர்த்தெழுந்து வந்துவிட்டார்! அல்லேலூயா!

உண்மைக்குக் கிடைத்த வெற்றி

இயேசுவின் உயிர்ப்பு என்பது ஓர் உண்மை நிகழ்வு மட்டுமன்று, அது ஒரு போராட்டம்! உண்மைக்கும், பொய்மைக்கும் இடையே நடக்கின்ற போராட்டம்! ஒளிக்கும், இருளுக்கும் இடையே நடக்கின்ற போராட்டம்! நீதிக்கும், அநீதிக்கும் இடையே நடக்கின்ற போராட்டம்! இதில் உண்மை, அன்பு, நீதியின் சக்திகள் வெற்றி அடையும் என்பதுதான் இயேசு ஆண்டவரின் உயிர்ப்பு நமக்குத் தருகின்ற பாடம். உண்மைக்கு, ஏழைகளின் உரிமைக்கு, நீதிக்குக் குரல் கொடுத்த இயேசுவை அழித்துவிடலாம் என்று எண்ணியது சுயநலக்கூட்டம். ஆனால், இயேசுவோ வெற்றித் திருமகனாக உயிர்த்துவிட்டார். இயேசுவின் உயிர்ப்பு நீதிக்குக் கிடைத்த வெற்றி! அது உண்மைக்குக் கிடைத்த வெற்றி!

இயேசு புதைக்கப்படவில்லை, விதைக்கப்பட்டார்!

கிறிஸ்தவ மறையை ஒழிக்க எண்ணிய உரோமை மன்னர்கள் தொடக்கக் காலக் கிறிஸ்தவர்களைக் கொன்று குவித்தனர். அதனால் கிறிஸ்தவ மறை ஒழிந்துவிட்டதா? ஒன்று பத்தாக, பத்து நூறாக, நூறு ஆயிரமாகப் பெருக்கெடுப்பது போல் கிறிஸ்தவ மறை உலகெங்கும் பரவியது. இது போன்றுதான் நீதியின் சக்திகளை, தர்மத்தின் சக்திகளை நசுக்கிடவோ, ஒடுக்கிடவோ முடியாது. வெட்ட வெட்ட முளைத்து வரும் வாழைத் தண்டு போல, உதைக்க உதைக்க மேலெழும் உதைபந்து போல, நசுக்கப்படும் நீதியின் வர்க்கம் உயிர்ப்பெற்றெழும் என்பதுதான் இயேசுவின் உயிர்ப்பு நமக்குச் சொல்லித் தருகின்ற பாடம். காரணம், அவர் புதைக்கப்படவில்லை, விதைக்கப்பட்டார்!

நசுக்கப்பட்டோர் சகாப்தம் ஆவர்

இன்று உழைக்கும் மக்கள் உரிமைக்காகப் போராடுகின்றார்கள். சாதியின் பெயரால் நசுக்கப்படுகின்ற மக்கள் சமநீதிக்காகக் குரல் கொடுக்கின்றார்கள். இம்மக்கள் ஒருவேளை நசுக்கப்படலாம்; இவர்களது போராட்டங்கள் ஒருவேளை ஒடுக்கப்படலாம். ஆனால், மிக விரைவில் அதிக சக்தி பெற்று எழும். விதை புதைக்கப்படுவதில்லை; அது விதைக்கப்படுகிறது. விதைக்கப்பட்டது முளைத்து எழும். கோதுமை மணி மண்ணில் விழுவது மடிவதற்கல்ல; புத்துயிர் பெற்று எழுவதற்கு! உயிர்த்த இயேசுவின் புதிய ஆற்றல் காலத்திற்கும், ஞாலத்திற்கும் கட்டுப்படாத ஒரு வரலாறாக உருவெடுக்கிறது. அவ்வாறே, ஒடுக்கப்பட்டோரின் வாழ்வும் உருமாறும்.

நமது வாழ்வில் உயிர்ப்பு

இயேசுவின் உயிர்ப்பு என்றோ ஒருநாள் நடந்துவிட்ட நிகழ்வன்று; அது இன்றும் நடைபெறுகின்ற நிகழ்வு. இயேசுவின் உயிர்ப்பு நமது அன்றாட வாழ்வில் ஒவ்வொரு நாளும் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற போராட்டம். எவனொருவன் நீதிக்காக, உண்மைக்காக, மனித மாண்புக்காக உணர்வு பெற்று வாழ்கின்றானோ, அவன் உயிர்த்தவனாக வாழ்கின்றான். எவனொருவன் அநீதியோடு, அதர்மத்தோடு, பொய்மையோடு இதயம் மழுங்கி வாழ்கின்றானோ, அவன் செத்தவனாகவே வாழ்கின்றான். இயேசுவின் உயிர்ப்பு என்பது ஒரு போராட்டம். இருளுக்கும்-ஒளிக்கும், உண்மைக்கும்-பொய்மைக்கும், நீதிக்கும்-அநீதிக்கும் இடையே நடக்கும் போராட்டம். இதில் இறுதியாக வெல்வது உண்மை, அன்பு, நீதியே!

Comment