No icon

வாழ்வு வளம் பெற -18

பாதாளத்திற்கொரு பாதை!

இந்தப் பட்டியலில் உள்ளவர்களில் பலரைப் பற்றி நீங்கள் படித்திருக்கலாம். திரையில் சிலரைப் பார்த்திருக்கலாம். பல பேச்சாளர்கள் இவர்களைப் பற்றிப் பேசுவதைக் கேட்டிருக்கலாம். காரணம், இவர்கள் அனைவரும் உலக அளவில் புகழ் பெற்றவர்கள்.

ஒவ்வொருவராக இவர்களைப் பார்த்துக்கொண்டே வரும்போது, ஒரு கேள்விக்கு நீங்கள் பதில் தேட வேண்டும். இவர்கள் அனைவருக்கும் பொதுவானது என்ன? ‘புகழ் பெற்றோர் என்பதைத் தவிர, இவர்களை இணைப்பது என்ன?’ என்ற கேள்வி உங்கள் மனத்தில் இருக்க வேண்டும்.

பட்டியலில் முதலில் இருப்பவர் நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். மாசிடோனியா நாட்டு மன்னர். போரில் வெல்லும் உத்திகளில் தேர்ச்சி பெற்றவர் என்பதனால் பல நாடுகளை வென்று, நமது நாட்டிற்குள்ளும் நுழைந்து, சில பகுதிகளைக் கைப்பற்றியவர். தனது முப்பத்து இரண்டாவது வயதில் இறந்த மாவீரன் அலெக்சாண்டர்.

இரண்டாவது நபர் உலகப் புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகை. இவர் வாழ்ந்த காலத்தில் உலகின் மிக அழகிய பெண்களில் ஒருவராகக் கருதப்பட்டவர். தன் குழந்தைப் பருவத்தில் மீண்டும் மீண்டும் நோயுற்றவர். எட்டு வயதில் பாலியல் வல்லுறவுக்குப் பலியானவர். ஆழ்மனத் துயரினால் அலைக்கழிக்கப்பட்டு, தனது 36-ஆம் வயதில் அளவுக்கு மீறிய தூக்க மாத்திரைகளை ஒரே நேரத்தில் உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டவர். பெயர் நினைவுக்கு வருகிறதா? மர்லின் மன்றோ!

மூன்றாவது நபர் உலகறிந்த பேரறிஞர்! நவீன உளவியலின் பிதாமகன் என்று போற்றப்படுபவர். இவர் புனைந்த சில பதங்களை உளவியல் பயிலும் மாணவ, மாணவியர் இன்றும் கற்கின்றனர். பெயர் சிக்மண்ட் ஃப்ராய்ட்!

நான்காவது ஆள் புகழ் பெற்ற அமெரிக்க அறிவியலாளர், எழுத்தாளர். பல புதிய கண்டு பிடிப்புகளைச் செய்தவர். அமெரிக்க ஐக்கிய நாடுகளைச் சுதந்திர நாடாக உருவாக்கியவர்களில் ஒருவர். மின்சக்தி பற்றிய இவரது ஆய்வுகள் பலருக்கு வழிகாட்டின. இவர் பெயர் பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்!

ஐந்தாவது நபர் புகழ்பெற்ற பல ஓவியங்களைத் தீட்டிய கலைஞர். ஒரு சமயம் தன் இரு காதுகளில் ஒன்றை வெட்டி ஒரு விலைமாதுவுக்குக் கொடுத்தவர். தன்னைத் தானே சுட்டுக்கொண்டு இறந்த இந்த ஓவியரின் பெயர் வின்சென்ட் வான் ஹா!

ஆறாவது நபரைப் பற்றி நிச்சயம் கேள்விப்பட்டிருப்பீர்கள். இவர் இறந்தபோது இவருக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில் அமெரிக்காவில் அத்தனை விளக்குகளும் அணைக்கப்பட்டன. காரணம், மின் விளக்கைக் கண்டு பிடித்ததே இவர்தான். மொத்தம் 1093 புதிய கண்டு பிடிப்புகளுக்கான காப்புரிமை இவரிடம் இருந்தது. படிப்பு வரவில்லை என்று பள்ளி நிராகரிக்க, ‘கற்றுத்தர நானிருக்கிறேன்என்று சொன்ன தாயிடம் கற்றுத் தேர்ந்தவர். இவரின் பெயர் நிச்சயம் உங்களுக்குத் தெரியும். தாமஸ் ஆல்வா எடிசன்!

ஏழாவது நபர் புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகை. ‘கிளியோபாட்ரா’, ‘பட்டர்ஃபீல்ட்போன்ற பிரபல திரைப்படங்களில் நடித்தவர். ஏழெட்டு முறை திருமணம் செய்து கொண்டவர். பெயர் எலிசபெத் டெய்லர்!

பட்டியலின் கடைசியில், எட்டாவது இடத்தில் இருப்பவர் புகழ் பெற்ற அமெரிக்க எழுத்தாளர். இவர் எழுதியதி ஓல்ட் மேன் அன்ட் ஸீ’, ‘ஃபார் ஹூம் பெல் டால்ஸ்போன்ற நாவல்கள் பிரபலமானவை. மனநல பிரச்சினைகளால் வாழ்நாள் முழுவதும் பாதிக்கப்பட்டு, துப்பாக்கியால் தன்னையே சுட்டுக்கொண்டு இறந்த இந்த எழுத்தாளரின் பெயர் எர்னஸ்ட் ஹெமிங்வே!

இந்த எட்டு நபர்களுக்கும் பொதுவானது என்ன என்று கண்டுபிடித்து விட்டீர்களா? இவர்கள் அனைவரும் மதுவிற்கோ, போதை மருந்துகளுக்கோ அடிமையானவர்கள். சரி, இந்தப் பட்டியலில் இருப்பவர்கள் எல்லாம் வெளியூர்க்காரர்கள் அல்லவா? நம் ஊரில் இதற்குப் பலியானவர்கள் பட்டியல் இல்லையா? என்று நீங்கள் கேட்கலாம். அந்தப் பட்டியல் நம் அனைவருக்கும் தெரிந்ததே.

இந்தப் பட்டியல்களைப் பார்த்ததும் என்ன கேள்வி என்று தோன்றலாம்? ‘இந்த  அளவுக்கு அறிவும் அழகும், பொருளும், புகழும் இருப்பவர்கள்கூட எப்படி அந்தப் பழக்கங்களுக்கு அடிமையாகி தங்களையே அழித்துக்கொள்கிறார்கள்?’

ஆய்வுகளின் அடிப்படையில் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. மரபணுக்கள். சிறு வயதிலேயே இந்தப் பழக்கங்களோடு ஏற்பட்ட அறிமுகம். இந்த அழிவுப் பழக்கங்களுக்கு அடிமையாகி விட்ட தந்தை, உறவினர், நெருங்கிய நண்பர்கள், இவற்றை ஊக்குவிக்கும் சமூகச் சூழல், கலாச்சாரம் என்று பல காரணங்கள்  சொல்லப்படுகின்றன.

பொதுவான முதல் காரணம் போதைக்கான தேடல். வேண்டியவை யாவும் இருந்தாலும், அவை தரக்கூடிய நிறைவைத் தாண்டி, தன்னை மறக்கச் செய்து, மிதக்கும் உணர்வைத் தரும் போதைக்கான நாட்டம்தான் முதல் காரணம்.

எல்லாம் இருந்தும் நிறைவு இல்லாமை, எல்லா மனிதருக்கும் இடப்பட்டிருக்கிற சாபம். கிடைக்காத போது தோன்றும் தீவிரமான வேட்கை, கிடைக்கும் கணம் பற்றிய கற்பனைகள், கிடைத்த சிறிது காலத்தில் ஏற்படும் சலிப்பும், அலுப்பும், அதன்பின் ஏற்படும் வெறுப்பும், கசப்பும் மனித வாழ்வுக்கு விதிக்கப்பட்டவையே.

அறிஞரும், புனிதருமான அகுஸ்டின்உமக்கென்றே படைக்கப்பட்டது எங்கள் இதயம்; எனவே, இறைவா, உம்மில் நாங்கள் இளைப்பாறும் வரை எங்கள் மனத்திற்கு ஓய்வில்லைஎன்றார்.

போதையைத் தேடிச்சென்று, அது விரிக்கும் வலையில் சிக்கிக்கொள்வோர் தொடக்கத்தில் புரிந்து கொள்ளாதது இதுதான். இந்தப் போதைக்கான பாதையில் முதல் அடி எடுத்து வைத்து விட்டால் போதும்; அதற்குப் பிறகு எதுவும் நம் கட்டுப்பாட்டில் இல்லை. இந்தப் பாதை பாதாளத்திற்கு இட்டுச் செல்லும் சறுக்குப் பாதை என்ற உண்மை பலருக்குப் புரியாத ஒன்று.

இந்தப் போதைக்கான தேடல் உடல்நலத்தை மெல்ல மெல்ல அழித்து, உயிரைக் குடிக்கிறது; உறவுகளை அழிக்கிறது; பணிகளைப் பாதிக்கிறது.

இந்தப் போதைப் பிரியர்கள் அடிக்கடிச் சொல்லும் சில காரியங்களைக் கேட்டிருப்பீர்கள். ‘ஒயின் இதயத்திற்கு நல்லது’, ‘பித்தப்பை கற்களுக்குப் பீர் நல்லது’, ‘அளவோடு குடித்தால் ஆரோக்கியமாய் வாழலாம்போன்ற அனைத்துக் கூற்றுகளும் ஆதாரமில்லாத பொய்கள் என்று சமீபத்தில் உலகச் சுகாதார நிறுவனம் அறிவித்தது. உடலின் பல பாகங்களை மது, புகை, போதை பழக்கங்கள் சீர்குலைத்து அழிக்கின்றன என்று ஆய்வுகளின் அடிப்படையில் அறிவித்தது.

அதை மறைத்து, அந்த நஞ்சுகள் இல்லாமல் கொண்டாட்டம், மகிழ்ச்சி, நட்பு எதுவுமில்லை என்ற அபத்தத்தைச் சமீபத்தில் வந்தமஞ்சுமெல் பாய்ஸ்’  திரைப்படம் உள்பட நமது ஊடகங்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ சொல்லிக்கொண்டே உள்ளன. இதனால் போதையைத் தேடிப் போய் வகையாய் மாட்டிக்கொள்வோரில் பள்ளி மாணவர் முதல் அருள்பணியாளர் வரை பலர் இருக்கிறார்கள்.

சிலர் என்ன கேட்பார்கள்? ‘அப்ப நாங்க ஜாலியாவே இருக்கக் கூடாதா? வாழ்க்கையை அனுபவிக்கக் கூடாதா?’

அனுபவிக்கலாம். அனுபவிக்க வேண்டும். வாழ்க்கை இறைவன் தந்த கொடை! அதை அனுபவித்து வாழ்வதே இறைவனுக்கு நாம் செய்யும் மரியாதை. ஆனால், யாராவது ஒருவர், ஏதாவது ஒன்றைச் சுட்டிக்காட்டி, ‘இத ட்ரை பண்ணிப் பாரு; இதை டேஸ்ட் பண்ணிப் பாரேன்; ஒருமுறை நல்லா உள்ள இழுத்து விடுஎன்றெல்லாம் தூண்டும் போது, இரு கேள்விகளுக்கு நேர்மையான, சரியான பதில்களை நாம் தேடிக் கண்ட பிறகே முடிவெடுக்க வேண்டும். ஒன்று, இதனால் எனக்கு என்ன நன்மை விளையும்? இதனால் கிடைக்கும் பயன் என்ன? இதன் பின்விளைவுகள் என்ன? இரண்டாவது கேள்வி, இது என் கட்டுப்பாடுகள் அனைத்தையும் இழக்கச் செய்து, என்னை அடிமையாக்குகிற ஒன்றா?

நான் உன் உடலுக்குள்ள நுழைஞ்சு, உள்ளே இருக்கிறதையெல்லாம் கெடுக்கிறேன். நீ கவலைப்படாம போதையில எல்லாத்தையும் மறந்து, மிதந்து திரிஎன்று சொல்லி, நம் வாழ்வை உறிஞ்சிக் குடிக்கும் நஞ்சுகள் நமக்குத் தேவையா? வாழ்வைத் தக்கவைத்துக் கொண்டால்தானே அதை வளமாக்க முடியும்?

(உங்கள் கருத்துகளை +91 9445006852 என்ற எண்ணிற்குக் குறுஞ்செய்தியாகவோ அல்லது குரல் பதிவாகவோ அனுப்பி வையுங்கள்.)

Comment