No icon

வாழ்க்கையைக் கொண்டாடு – 51

இரசிக்கும் வரை இளமை!

‘அவன் ஓர் இரசனை மிகுந்த மனுசன்பா! எல்லாத்தையும் அறிஞ்சு, அனுபவிச்சு செய்றவனாச்சே!’

‘இளமை சொட்டச் சொட்ட இரசிக்கும் மனப்பக்குவம் அவனுக்கு மட்டும்தான் இருக்கு.’

‘இதையெல்லாம் இரசிச்சு, ருசிச்சுச் சாப்பிடணும் புரியுதா?’

‘அவனுக்கு என்னா குறை? அதான் எல்லாத்தையும் இரசிச்சு, அனுபவிச்சு, ஆண்டுட்டானே!’

இப்படி எத்தனையோ முறைகளில் பேசுவதைக் கேட்டிருப்போம். இவை அனைத்தும் ஒருசேர நமக்குச் சொல்ல வருவது, இரசனை மிகுந்த வாழ்க்கையைத்தான். அது எப்போதும் நமக்கு ஒரு புத்துணர்வைத் தரும். மேற்கொண்டு இந்த இரசனை இளமை ததும்பும் நிலையில் நம்மை வைத்திருக்கும். ஏனென்றால், இரசிப்பும், இளமையும் ஒருசேரப் பயணிக்கக்கூடியவை.

இரசிப்பு இருந்தால் இளமை ததும்பும். இளமை இருந்தால் இரசிப்பு வருமா? என்பது சற்று ஐயத்திற்கு உரியது.

‘இரசிப்பு’ என்பது ஓர் அதிசயமான மற்றும் அற்புதமான அனுபவ உணர்வாகும். இந்த இரசிப்புத் தன்மை எல்லாருக்கும் உரியது. இரசிப்பு ஈர்ப்பாக மாறும். ஈர்ப்பு விருப்பமாக மாறும். விருப்பங்கள்தான் நாம் அடைய நினைக்கும் குறிக்கோள்களுக்கு அவசியமானதாக அமையும்.

‘இரசிப்பு’ என்பது எல்லாவற்றிலும் புகுந்து விளையாடும் ஆற்றல் கொண்டது. எல்லாவற்றிலும் நாம் புகுந்து விளையாடத் தேவையான வலிமையைத் தரவல்லது. சினிமா, கதைகள், நடனம், பாடல்கள், கலை, பூக்கள், உணவு, இலக்கியம், திருமணம், மகிழ்ச்சி, ஆச்சரியம், காதல், அன்பு, பாசம்... இப்படி எல்லாவற்றிலும் இருந்து நம்மை ஆட்டுவிக்கும் ஆற்றல் கொண்டது இந்த இரசிப்பு. 

எல்லாமே நன்றாக இருந்தால்தான் இரசிப்பு ஏற்படும் என்பது ஒரு வாதம்; இரசிப்பு இருந்தாலே எல்லாம் நன்றாகத் தெரியும் என்பது இன்னொரு வாதம். எது எப்படியோ, இரசனையோடு அணுக ஆரம்பித்தால், அனைத்தும் நலமென அமையும்.

இந்த இரசிப்புத்தன்மை நம்முள் உயிர்ப்போடு இருக்கும்போது சுரக்கும் ஹார்மோன்களால் இரத்த ஓட்டம் அதிகரித்துச் செல்களைப் புத்துணர்வடையச் செய்கிறது. இதனால் உடலில் வயதான மாற்றங்கள் ஏற்படுவது தள்ளிப்போகும். இளமை நீடித்திருக்கும் என்பது மருத்துவத் தகவல். இதனால் உடலிலும், உள்ளத்திலும் ஏற்படும் தாக்கம் ஒரு புதுவித அனுபவத்தை நமக்குத் தரும். அப்படியானால் இரசிப்புத்தன்மையைப் பெருக்கி, இளமையைக் கூட்ட வேண்டியதுதானே?

இப்போது இளமைக்கு வருவோம். விடலைப் பருவத்துக்குப் பின்னர் வரும் பருவம் இளமை. பொதுவாக 18-24 அல்லது 29 வயதுவரை இளமைப் பருவம் எனப்படுகிறது. இது ‘வாலிப வயசு’ எனப் பல சேட்டைகளையும், வம்புகளையும் வாங்கிக் கட்டிக்கொண்டு திரியும் வயது. இதை மட்டும் கொஞ்சம் சரிப்படுத்தாவிட்டால், நம்மைப் படுத்தி எடுத்துவிடும்.

இளமை என்பது இளமையாக இருக்கும் காலம். இது ஒருவரின் எல்லா எண்ணங்களும் உச்சத்தில் இருக்கும் காலகட்டம். இளமை எனும் வார்த்தையே சற்றுக் குதூகலம் நிறைந்தது.

இளங்காற்று, இளங்கன்று, இளம்பெண், இளங்கதிர், இளங்காய், இளஞ்சூடு, இளநீர், இளநெஞ்சம், இளந்தென்றல், இளவரசன், இளவரசி, இளவட்டம், இளம்பயிர்... இப்படி இது தொடர்பாக நாம் கேட்கும் அத்தனை வார்த்தைகளும் தேன் சொட்டும் வார்த்தைகளாக நமக்குள் ஒலிக்கிறதுதானே! வார்த்தையே இப்படி இன்பம் தரும்போது, அதை இரசித்து அனுபவித்தால் கூடுதல் இன்பம் நமக்குள் குடிகொள்ளாதா என்ன?

இளங்கலை பயிலும் வேளையில், இளங்காலை நேரத்தில் இசையோடும், என் இனிய எண்ணங்களோடும், அந்த எண்ணங்களை ஈடேற எனக்கு உந்துதல் தர ஏற்றத்துணையும் அமைந்து விட்டால் எல்லாம் துணிவுமிக்கதாக மாறிவிடும் எனும் ஏக்கம் நம் அனைவருக்கும் உண்டு. இது எல்லாருக்கும் கிடைக்கும் கொடுப்பினையா? கொடுப்பினைதான்! நாம் எப்படி அமைத்துக் கொள்கிறோம்? என்பதைப் பொறுத்து அது அமைகிறது. இரசிப்புக் கூடும்போது இளமை நம்மை வசீகரிக்கிறது. இவை இரண்டும் ஒன்றுகூடும் போது அங்கு மகிழ்ச்சி நிரந்தரமாகிறது.

பணி செய்யும் இடங்களிலும், நாம் பயணிக்கும் இடங்களிலும் இரசிக்க எத்தனையோ காரணிகள் உள்ளன. அத்தனையையும் ஓரங்கட்டி விட்டு ‘சிடு... சிடு’ முகத்தோடும், ‘கடு... கடு’ எண்ணத்தோடும் இருக்கும்போது, எதை நாம் அனுபவிக்க முடியும்? இப்படி அனுபவிக்காது செல்வது, நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் தண்டனைதான் அன்றி வேறென்ன!

இளமைத் துடிப்போடு இருக்கும் பலரை நிறுவனங்களில் வேலைக்கு எடுக்கும்போது அவர்களுக்கு வேலையை இரசனையோடு அணுகும் முறை தெரிகிறதா? என்பதை ஓர் அளவீடாகச் சில நிறுவனங்கள் வைத்துள்ளன.

ஆதலால் நமக்குள் உறங்கிக்கொண்டு இருக்கும் அந்த இரசிப்புத் தன்மையைச் சற்றுத் தட்டி எழுப்பி, என்றும் இளமைத் துடிப்போடு இருப்போம்.

இரசனை என்பது

பிடித்ததை வைத்துக்கொள்வது;

பிடித்து வைத்துக்கொள்(ல்)வதல்ல!

தொடர்ந்து பயணிப்போம்....

Comment