No icon

பொன்விழா ஆண்டின் எளிய துவக்கம்!

என் இனியநம் வாழ்வுவாசகப் பெருமக்களே!

வாழ்வு என்பது ஓர் உன்னதமான கொடை! இறைவன் அருளும் மாபெரும் பரிசு! ஆயினும், இந்த வாழ்வு இன்பம்-துன்பம், வெற்றி-தோல்வி, வளமை-வறுமை, உயர்வு-தாழ்வு, மகிழ்ச்சி-சோகம், ஏற்றம்-இறக்கம் எனும் எதிரெதிர் துருவங்கள் கொண்ட எதார்த்த நிலைகளால் கலந்திருப்பவை. சமூகம்...  ஒளி-இருள், உண்மை-பொய்மை, நன்மை-தீமை இவைகளுக்கிடையே உள்ள போராட்டங்களைச் சந்திப்பது போல, மானுட வாழ்வும் ஒவ்வொரு நாளும் எதிர் துருவ எதார்த்த நிலைகளுக்கிடையே போராட்டங்களைச் சந்திக்கிறது. இங்கே நிரந்தர வெற்றியும் இல்லை; நிரந்தர தோல்வியும் இல்லை. வெற்றியும்-தோல்வியும் ஒன்றையொன்று தொடர்ந்தே வந்து கொண்டிருக்கும். வெற்றியின் முகம் அடையாளப்படுத்தப்படும்போது, தோல்வியின் சுவடுகள் பெரிதாய் வெளியே அறியப்படுவதில்லை. ஆயினும், ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னும் பல படிநிலைகளில் முயற்சிகள், முன்னெடுப்புகள், தொடர் தயாரிப்புகள் இருப்பதை மறந்துவிடக்கூடாது.

அவ்வாறே, ‘நம் வாழ்வுஎனும் இவ்வார இதழும் தமிழகத் திரு அவைக்கு இறைவன் தந்த ஒரு மாபெரும் கொடை! 50-வது அகவையை எட்டியிருக்கும் இவ்வேளையில், அதன் கடந்த கால பயணப் பாதையைத் திரும்பிப் பார்க்கும்போது பல நிலைகளில் ஏற்றமும்-இறக்கமும் கலந்தே உடன் பயணித்திருப்பதை அறிய முடிகிறது. சரியான தலைமைகள், சரித்திர நிகழ்வுகள், சந்தித்த சவால்கள், சரிந்த சூழல்கள், மீண்டும் சாத்தியமான ஏற்றங்கள் என நம் வாழ்வின் காலச் சக்கரம் சுழன்று கொண்டே சென்றிருக்கிறது. இந்நிலையில் எம் முன்னவர்கள் அனைவரும் பாராட்டுக்கும், நன்றிக்கும் உரியோரே.

காலத்தின் தேவையை நன்கு கணித்து, தத்தம் பணிக் காலங்களில் வளர்ச்சிப் பணிகளை முன்னெடுத்திருப்பது பாராட்டுதற்குரியதே. இனிய தொடக்கம்-வாசகர் தேடல்-நிறுவனக் கட்டமைப்பு-பெரும் வீச்சில் பரவலாக்கம்-எழுத்தாளர்கள் உருவாக்கம்-துணை இதழ் தொடக்கம்-தமிழ்நாடு அரசின் சிறுபான்மை ஆணையம் வழியாக இதழ் அரசு நூலகம் செல்ல ஏற்பாடு... எனப் பயணித்து, இன்று சமூக வலைதளம் மற்றும் எண்ம தளங்களில் (Social Media & Digital Platform) வளர்ச்சி என காலத்தின் அறிகுறிக்கேற்ப பல வளர்ச்சி நிலைகளைநம் வாழ்வுகண்டிருக்கிறது.

நம் வாழ்வுதனது பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சூழலில், இந்த வரலாற்றுப் பதிவுகளை அசைபோட்டுப் பார்க்கும் வண்ணம் சனவரி 5, 2024 அன்று அதன் பொன்விழா ஆண்டுத் துவக்க நிகழ்வு எளிய முறையில், பொருள் பொதிந்த வகையில் கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு ஆயர் பேரவையின் தலைவரும், ‘நம் வாழ்வுஅச்சு ஊடகப் பணியகத்தின் தலைவருமான சென்னை-மயிலை உயர் மறைமாவட்டப் பேராயர் மேதகு. ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்களின் தலைமையில் சிறப்புத் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. புதுப்பிக்கப்பட்டுள்ள அலுவலகம் மற்றும் ஊடகப் பணியக வளாகம் பேராயர் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டன.

திருப்பலியின் நிறைவில் பொன்விழா ஆண்டுக்கான இலட்சினையும், செயல் திட்ட வரைவும் ஆயர் அவர்களால் வெளியிடப்பட்டன. அவ்வேளையில், ‘நம் வாழ்வுவார இதழுக்கு வெள்ளி விழா கண்ட தந்தை அருள்முனைவர் வின்சென்ட் சின்னதுரை அவர்கள் இப்பொன்விழா வேளையில் உடனிருந்தது இரட்டிப்பான மகிழ்வு. எழுத்துப் பணியில் கடந்த ஐம்பது ஆண்டுகளாகப் புரட்சி செய்து வரும் நம் வாழ்வின் 50-வது அகவையைக் குறிக்கும் வண்ணம்நம் வாழ்வு இதழ் எண் - 50 - பேனாவை உயரப் பிடித்திருக்கும் கைஆகியவை அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றன. தமிழ்நாடு திரு அவையின்நம் வாழ்வு’, குருகுலம்-இறை குலம் எனத் துறவறத்தாரையும், பொதுநிலையினரையும் இணைத்து, பொன்விழா ஆண்டை நோக்கிப் பயணிக்கிறது என்பதும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு ஆயர் பேரவைத் தலைவரே இவ்விதழின் தலைவர் என்பதோடு, முதன்மை ஆசிரியர், துணை ஆசிரியர்கள், நம் வாழ்வு வெளியீட்டுச் சங்க ஆலோசகர்கள் என்ற நிர்வாகப் படிநிலைகளில் பயணித்த இவ்விதழ், இதழியல் மற்றும் எழுத்துத் துறைகளில் தமிழ்நாட்டளவில் நன்கு அறியப்பட்ட ஐந்து கிறிஸ்தவ ஆளுமைகளை இதன் ஆசிரியர் குழுவாக இவ்வாண்டில் பெற்றிருப்பது இவ்விதழின் வளர்ச்சிக்கும், பொலிவிற்கும், உயர்வுக்குமான அடுத்தக் கட்ட நகர்வாகவே பார்க்கப்படுகிறது. தலைமைச் செயலகத்துடன், திருச்சி மற்றும் நாகர்கோவிலில் செயல்படும் மண்டலச் செயலகங்களும், மறைமாவட்டந்தோறும் களப்பணி மேற்கொள்ளும் பொறுப்பாளர்களும் சேர்ந்து பயணிப்பதுநம் வாழ்வுஇதழின் பரவலாக்கத்திற்குச் சிறப்பாக வழிவகுக்கும் என்றே நாம் நம்புகிறோம்!

விவிலியத்தில் ஜூபிலி ஆண்டு ஒரு வரலாற்றுப் பதிவாகக் குறிப்பிடப்படுகிறது; நன்றியின் ஆண்டாக-இறைவேண்டலின் ஆண்டாக -மன்னிப்பின் ஆண்டாக அடையாளப்படுத்தப்படுகிறது. அதுபோலவேநம் வாழ்வின்ஜூபிலி ஆண்டும், நம் வாழ்வு கண்ட வளர்ச்சிக்காக இறைவனுக்கு நன்றி சொல்லும் ஆண்டு, இன்னும் அடுத்தக் கட்ட வளர்ச்சிக்கு இறைத்துணையையும், பராமரிப்பையும் வேண்டும் இறைவேண்டலின் ஆண்டு. மேலும், உண்மையை உரக்கச் சொல்லும்போது, அது சுட்டெரிக்கும் தன்மை கொண்டது. அத்தகைய சூழலில், தனது கூர்மையான எழுத்துகளால், உண்மை சார்ந்த நிலைப்பாடுகளால்நம் வாழ்வுஎவரையேனும் காயப்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு வேண்டும் காலமும் இதுவே. ஆகவே, எம் முன்னவர்களின் கருத்துகளால், எழுத்துகளால் யாரேனும் மனத் தாங்கல் கொண்டிருந்தால் அவர்களிடம் இந்த யூபிலி ஆண்டில்நம் வாழ்வுசார்பாக நான் மன்னிப்பு வேண்டுகிறேன். அதே வேளையில், ‘தமிழ்நாடு திரு அவையின் தனிப்பெரும் வார இதழாகஇதன் அடையாளம் கூர்மைப்படுத்தப்பட்டுள்ள இச்சூழலில், இது நம் அனைவருக்கும் சொந்தமான இதழ் - ‘இது நமது இதழ்; இது நமது குரல்என்று ஓங்கி ஒலிக்க வேண்டும் என்ற எனது ஆவலையும் இங்கே நினைவூட்ட விரும்புகிறேன்.

நம் வாழ்வுவாசகர் சேர்ப்புக்காக வாரந்தோறும் ஞாயிறு திருப்பலிக்குப் பல்வேறு பங்குகளுக்குச் செல்லும் நாங்கள், பங்குப் பணியாளர்கள், அருள்சகோதரிகள், பங்குப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் ஆலயப் பணியாளர்கள், இறைமக்கள் யாவருடைய ஒத்துழைப்பையும், பாராட்டுதலையும் பெறுவது இன்னும் இப்பணியில் திறம்பட, ஈடுபாட்டுடன் செயல்பட உத்வேகத்தையும், ஊக்கத்தையும் தருகிறது என்பதைக் குறிப்பிட விழைகிறேன். ஆயர் பெருமக்கள் இவ்விதழைச் சிறப்பு விழாக்களில் வலியுறுத்திச் சொல்வதும் மட்டற்ற மகிழ்ச்சியளிக்கிறது. தாங்கள் ஒவ்வொருவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தரமான கட்டுரைகள் வெளிவரும் இச்சூழலில், உங்களுடைய சிறப்பானவாசகர் கடிதங்கள்எங்களையும், கட்டுரையாளர்களையும் உற்சாகப்படுத்துகின்றன என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். இவ்விதழின் வளர்ச்சியில் தொடர்ந்து நீங்கள் பெரும் பங்காற்ற வேண்டும் என அன்போடு வேண்டுகிறேன்.

பொன்விழா ஆண்டின் செயல்திட்டங்களில் முதலாவதாக, பிப்ரவரி 5-ஆம் நாள் அனைத்து மறைமாவட்ட இதழ்களின் முதன்மை ஆசிரியர்களை ஒன்றிணைக்கும்  கூட்டம் நடைபெற உள்ளது. இரண்டாவதாக, இவ்விதழின் வாசகர்கள் உள்ளடங்கியநம் வாழ்வு புரவலர்திட்டம் அறிமுகம் செய்யப்படவிருக்கிறது; கூடுதல் தகவல் பக்கம் 7-இல் குறிப்பிடப்பட்டுள்ளது. இறுதியாக, நம் வாழ்வில் பயணித்து, தொடர்ந்து கூட்டொருங்கியக்கத் திரு அவையாக நாமனைவரும் ஒன்றிணைவோம்! இப்பொன்விழா ஆண்டிலும், எதிர்வரும் காலங்களிலும், உண்மையை உரக்கச் சொல்வோம்! அப்பணியில், கூர்முனைப் புரட்சியால் சீர்மிகு உலகமைப்போம்!

அன்புத் தோழமையில்,

அருள்பணி. செ. இராஜசேகரன்

Comment