No icon

Rev.Fr.S.James Peter

மோசே - கடவுளின் சொல் நம் செயலாகட்டும்

புனித லூயிஸ், பிரான்ஸ் நாட்டின் மன்னராக விளங்கியவர். மற்றொரு நாட்டின் இளவரசியைத் திருமணம் செய்தபோது, திருமண மோதிரத்தில் மூன்று பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன. இளவரசியின் பெயர் மார்கரெட். மோதிரத்தில் இறைவன், பிரான்ஸ், மார்கரெட் என்று எழுதப்பட்டிருந்தது.

மோதிரத்தில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் முதல் இடத்தை, முதல் அன்பை கடவுளுக்கே வழங்கினார். எல்லாரையும் விட, எல்லாவற்றையும் விட இயேசுவையே அதிகம் நேசித்தார். கடவுள் விரும்புவதையே, தன் விருப்பமாகச் செயல்படுத்தினார். ஆகவே, அவரது மன்றாட்டு, ஆண்டவருக்குப் பிரியமாக இருந்தது. ஆண்டவரிடம் நாம் பேசுகிறோம், ஆண்டவர் நம்மிடம் பேசுகிறார், இதுவே மன்றாட்டு.

ஆண்டவரிடம் நாம் வேண்டுகோள் விடுப்பது போலவே, அவரும் நம்மிடம் சில கட்டளைகளைத் தருகிறார். நாம் சொல்வதை ஆண்டவர் நிறைவேற்ற வேண்டுமானால், ஆண்டவர் சொல்வதை நாம் அப்படியே நிறைவேற்ற வேண்டும்.

’மோசே ஆண்டவரின் கட்டளையின்படி செய்தார்’

என்ற வசனம் ஒரே அதிகாரத்தில் பலமுறை தொடர்ந்து வருவதைக்கண்டு அதிசயிக்கிறேன். ஆனந்தமடைகிறேன். (விப 25: 9, 40; 26:30; 40:14, 19, 21, 23, 25, 27) தூய ஆவியார் இந்த வசனங்களை எவ்வளவு மகிழ்ச்சியோடு எழுதியிருப்பார்.

1)  ’ஆண்டவரே பேசும், அடியேன் கேட்கிறேன்’ (1சாமு 3:10) என்பது சாமுவேலின் மன்றாட்டு. நீர் சொல்வதையெல்லாம் நிறைவேற்ற நான் தயாராக இருக்கிறேன் என்பதுவே மன்றாட்டின் அர்த்தம். இயேசுவின் இறைவேண்டலைப் பாருங்கள்; ”என் தந்தை எனக்குக் கற்பித்ததையே நான் எடுத்துச் சொல்கிறேன். அவருக்கு உகந்ததையே எப்பொழுதும் செய்கிறேன்” (யோவா 8 : 28, 29). என்ன பேசுவது, என்ன செய்வது என்பதற்கு, இயேசு தந்தையையே நோக்கிப் பார்த்தார். தந்தை சொன்னதையே இயேசு பேசினார். தந்தை செய்து காண்பித்ததையே இயேசு செய்தார். ஆம், மன்றாடுகிறவனின் வாயிலிருந்து புறப்படுவது விண்ணக மொழிகளே. அன்பான, மன்னிப்பான வார்த்தைகளே, சமூகத் தீமைகளுக்கு எதிரான செயல்களே, மன்றாடுகிறவன் செய்யும் காரியங்கள் தெய்வீகச் செயல்களே, பிறரன்பின் செயல்களே, தாழ்த்தப்பட்டோருக்காகவும், ஒடுக்கப்பட்டோருக்காகவும், நலிந் தோருக்காகவும் ஆற்றும் அன்புப் பணிகளே.

2) ஆண்டவர் சொல்வதையெல்லாம் செய்து முடிப்பதே மன்றாட்டு வாழ்வு. பணக்கார வாலிபன், கொலை செய்யவில்லை, விபசாரம் செய்யவில்லை, களவு செய்யவில்லை, பொய்சான்று சொல்லவில்லை, அநியாயம் செய்யவில்லை, தாய் தந்தையை போற்றினார், சிறு வயது முதல் இவை யாவற்றையும் கடைபிடித்து வந்தார். கடவுளின் கட்டளைப்படியே வாழ்ந்ததால் ஆண்டவர் இயேசு அவர்மேல் அன்பு கூர்ந்தார். இவ்வளவு கட்டளை களைக் கடைபிடிப்பவரை, ஆண்டவர் நேசிக்காமல் இருப்பாரா? ஆனால், அவரிடம் ஒன்று குறைவாய் இருப்பதை ஆண்டவர் உணர்த்தினார். அவரிடம் உள்ளதையெல்லாம் விற்று, ஏழைகளுக்குக் கொடுக்கச் சொன்னார். இந்த வேண்டுகோள், அவரது முகத்தை வாடச் செய்தது. வருத்தத்துடன் திரும்பிச் சென்றார். அவரது மன்றாட்டு வாழ்வு சோக முடிவாயிற்று (மாற் 10:17-22). ஆண்டவர் சொல்வது, யாவற்றையும் கடைபிடிப்பதே மன்றாட்டு வாழ்வு. இச் செயலை மட்டும் என்னால் தியாகம் செய்யமுடியாது என்று எல்லைக்கோடு இடுவோமாயின் அது மன்றாட்டல்ல.

3) பத்துத் தொழுநோயாளிகள் இயேசுவின் கட்டளைப் படியே குருவிடம் காட்டச் செல்லும்போது, வழியிலேயே நலமடைந்தனர். ஒருவர் இயேசுவிடம் திரும்பி வந்து, பாதம் பணிந்து, நன்றி செலுத்தினார்.  இயேசுவின் வார்த்தையின்படி, அனைவரும் ஆலயக் குருவிடம் செல்ல வேண்டும். ஆகவே, மற்ற ஒன்பது பேரும் ஆலயம் நோக்கி சென்றது சரிதானே? வழியிலே திரும்பி வந்தவரை பாராட்டி மற்ற ஒன்பது பேரும் திரும்பி வராததற்காக இயேசு வருத்தப்படுவதன் அர்த்தமென்ன? ஆண்டவரின் வார்த்தைக்குள் அடங்கியிருக்கிற அவரது சித்தத்தை அறிந்து செயல்படுவதே மேலான ஜெப வாழ்வு. இயேசு வல்லவர், மேலான தலைமைக் குரு, அவரிடமே முதலில், தான் சுகமானதைக் காட்டவேண்டும். அவருக்குத்தான் முதல் நன்றிப் பண் பாட வேண்டும். அவரையல்லவா மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்ற தூய ஆவியானவரின் குரலை அந்த சமாரியர் உணர்ந்து கொண்டார். ஆகவே, உடலில் மட்டுமல்ல, ஆன்மாவிலும் முழுமையான சுகத்தைப் பெற்றுக் கொண்டார் (லூக் 17:11-19).

கடவுளின் சொல், நம் செயலாகட்டும். ஆமென்.

Comment