No icon

தண்ணீர் தட்டுப்பாடு

வறட்சியின் பரிசல்ல! அலட்சியத்தின் பரிதவிப்பே!

தண்ணீர் தட்டுப்பாடு சமீப நாள்களாக ஊடகங்களின் பேசும்பொருளாக மையங் கொண்டுள்ளது. தண்ணீரை பூமிக்குள் தேடுவது ஆபத்து. அதை வானத்தில் இருந்து வரவழைக்க முயற்சிசெய் என்கிற நம்மாழ்வாரின் கூற்றுகள் ஒருபுறம்; எதிர்கால தலைமுறைக்காக கோடி கோடியாய் சொத்து சேர்ப்பதை விட்டுவிட்டு குடிக்க நல்ல நீரை எப்படி சேமிப்பது என்பதை யோசியுங்கள் என்கிற ஸ்டேட்டஸ்கள் மறுபுறம். கூடவே,  தண்ணீர் தட்டுப்பாடு என்பது எதிர்கட்சிகளால் ஜோடிக்கப்பட்ட பொய் என்று ஆளும் தரப்புப் பேட்டிகள் கொடுத்து விட்டு தங்கள் நாற்காலிகளை தக்க வைக்க மத்திய அரசின் வாலைப்பிடித்துக் கொண்டிருக்கும் சூழலே தமிழகத்தின் தற்போதைய நிலை. எனவேதான், தமிழகத்தில் நீர் மேலாண்மைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் தலைவிரித்தாடுகிறது தண்ணீர் பஞ்சம். தலைநகர் சென்னையில் அதன் தாக்கம் அதிகரிப்பதை தினந்தோறும் அங்கு வசிக்கும் உறவுகளின் அலைபேசி உரையாடல்கள் உறுதிசெய்கின்றன. சென்னைக்குக் குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் வறண்டு கிடக்கின்றன. கடந்த ஆண்டு 4 ஏரிகளிலும் 3,872 மில்லியன் கனஅடியாக இருந்த நீர் இன்று வெறும் 261 மில்லியன் கன அடியாக குறைந்து விட்டது. சென்னைக்குத் தினமும் 854 மில்லியன் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. தண்ணீர் தட்டுப்பாட்டால் தற்போது 400 மில்லியன் லிட்டர் குடிநீர்தான் விநியோகிக்கப்படுகிறது. 
திடுக்கிடும் தரவுகள், தள்ளாடும் தமிழகம்
ஒவ்வோர் ஆண்டும் சுத்தமான குடிநீர் கிடைக்காமல் இரண்டு லட்சம் இந்தியர்கள் இறந்து போகின்றனர். கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டால் 60 கோடி இந்திய மக்கள் பாதிக்கப்படுகின்றனர். 21 இந்திய நகரங்கள் அடுத்த ஆண்டு தண்ணீர் இல்லாமல் தவிக்கப் போகின்றன என்கிறது நிதி ஆயோக். டெல்லி, பெங்களுரு, சென்னை, ஹைதராபாத் நகரங்கள் உட்பட 21 நகரங்கள் 2020 ஆம் ஆண்டிற்குள் நிலத்தடி நீரை முற்றிலும் இழக்கப் போகின்றன. இந்தியாவின் 40 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட மக்கள் தொகைக்கு 2030 ஆம் ஆண்டிற்குள் குடிநீர் இல்லாத நிலை ஏற்படப்போகிறது. இப்படி பல்வேறு ஆய்வுப்பூர்வமான எச்சரிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன. மக்களின் அடிப்படை உரிமையான தண்ணீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு என்ன வழிவகை அரசிடம் உள்ளது? இயற்கையைப் பேணிட மக்கள் என்னென்ன திட்டங்கள் வைத்திருக்கின்றனர்? இவைகேட்க வேண்டிய அவசர கேள்விகள்.
தமிழகத்திற்கு எதிராக முல்லைப் பெரியாறு அணையில் கேரளாவின் துரோகம், காவிரியில் தொடரும் கர்நாடகாவின் வஞ்சகம் எதையும் தமக்கு சாதகமாக்கி தமிழக நலனுக்கு எதிராக அநீதி இழைக்கத் துடிக்கும் மோடி அரசு. இப்படி எத்தனை காலம் தமிழினம் புறக்கணிப்புகளை சந்தித்துக் கொண்டிருக்கப் போகிறோம்? எத்தனை காலம்; புலம்பிக் கொண்டிருக்கப் போகிறோம்? இயற்கையாக இயல்பாக உள்ள நீர்நிலைகளை பராமரிக்க அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்து வருகிறது? பருவக் காலங்களில் கிடைக்கும் மழைநீரைச் சேமித்து பராமரித்து பயன்படுத்தும் வகையில், அறிவியல் பூர்வமான திட்டங்கள் நம்மிடம் உள்ளதா? இந்தியாவின் முதுகெலும்புகளான விவசாயிகளின் தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் தகுதி ஆளும் வர்க்கத்திற்கு உண்டா?
பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, ரியல் எஸ்டேட் மாஃபியாக்களின் முக்கூட்டு கொள்ளை யால் தமிழகத்தின் நீர் ஆதாரங்கள் இன்று அழிந்து கொண்டிருக்கின்றன. எட்டு வழிச்சாலை, ஹைட்ரோ கார்பன் - மீத்தேன் திட்டங்கள், கூடங்குளம் அணு உலைக் கழிவுக் கிடங்கு... இப்படி பல இலட்சம் கோடிகளை முதலீடு செய்து கமிசன் தொகையை கணக்கீடு செய்யும் அரசின் தான்தோன்றிதனத்தால் இயற்கை அழுது கொண்டிருக்கிறது. நீரோட்டத்தின் வேர்கள் தொடர்ந்து முறிக்கப்படுகின்றன. இயற்கை யின் கொடையான தண்ணீரைப் பாதுகாக்க, மக்களின் அடிப்படைத் தேவையான குடிநீரை தட்டுப்பாடின்றி கொடுக்க பெரிதாக எந்த நீர் மேலாண்மைத் திட்டங்களையும் ஏற்படுத்தாத மக்கள் விரோத அரசை எத்தனை காலம் நாம் அரவணைக்க வேண்டுமோ?
திட்டமிட்ட சதியும் அடிப்படை உரிமை மறுப்பும் 
இரண்டு உண்மைகளை நாம் உரக்கச் சொல்லியாக வேண்டும். ஒன்று, பருவ மழை பொய்த்துப்போவதால் ஏற்படும் வறட்சியே தண்ணீர் தட்டுப்பாடு. இதுதான் நம் பொதுப்புரிதல். இது தவறான அணுகுமுறை. மழையின்மையால் ஏற்படுவது ஒரு வகை வானிலை தொடர்பான வறட்சி மட்டுமே! அதைத்தாண்டி நீர்வள வறட்சி, வேளாண் வறட்சி என பல்வேறு வடிவங்கள் தண்ணீர் தட்டுப்பாட்டிற்குக் காரணமாக அமைகிறது. இரண்டு, நம்மை அச்சுறுத்தும் தண்ணீர் பஞ்சம் இயற்கையானதல்ல; திட்டமிட்டு அரசால் உருவாக்கப் படுவது.அரசு தலைமைகளின் தன்னல வேட்டை களால் ஏற்படுவது. மகசேசே விருதுபெற்ற பத்திரிகையாளரான சாய்நாத் அவர்களின் கூற்றுகளை வைத்து
இதனை நிரூபிக்கலாம். அவர்பல விதமான தண்ணீர் இடமாற்றங்கள் பற்றிப் பேசுகிறார். தண்ணீர் இட மாற்றங்கள்தான் தண்ணீர்ப் பற்றாக் குறையை உருவாக்குகின்றன என்கிறார்.
முதல் வகை தண்ணீர் இடமாற்றம் என்பது விவசாயத்திலிருந்து தொழில் துறைக்கு தண்ணீரை இடமாற்றம் செய்வது. எடுத்துக்காட்டாக தமிழகத்தின் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எடுத்துக் கொள்வோம். இந்நிறுவனம் 1000 லிட்டர் தண்ணீரை 10 ரூபாய்க்கு பெற்றுக்கொண்டது. ஆனால் ஆலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் பெண்கள் நல்ல குடிநீருக்காக 25 லிட்டர் தண்ணீரை 10 ரூபாய் கொடுத்துப் பெற நீண்ட தூரம் நடந்து செல்லும் சூழல். இரண்டாவது வகையான தண்ணீர் இடமாற்றம் விவசாயத்திற்குள்ளேயே அதாவது, உணவுப் பயிரில் இருந்து பணப்பயிருக்கு தண்ணீரை இடமாற்றம் செய்வது. பணம் மட்டுமே முதன்மை என்கிற மனநோயின் வெளிப்பாடேயிது. நெல், வாழை பயிரிடுதலை தவிர்த்து ரப்பர் மரங்களுக்கு மாறிய குமரியின் இன்றைய கதிநிலை நமக்கு தெரியும். அவ்வாறே, கரும்புப் பயிர் ஏராளமான தண்ணீரை எடுத்துக் கொள்வதை மக்கள் இன்னும் உணரவில்லை. ஓர் ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிடுவதற்கு 18 மில்லியன் முதல் 20 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவை. இது ஏறத்தாழ 12 ஏக்கர் நிலத்தில் கம்பு, சோளம் பயிரிடுவதற்குத் தேவையான தண்ணீரின் அளவு என்கிறார்கள். மூன்றாவது வகையான தண்ணீர் இடமாற்றம் என்பது கிராமப்புறத்தில் இருந்து நகர்ப்புறத்திற்கு தண்ணீர் இடம்மாறுவது. தண்ணீர் விற்பனை பண்டமாக்கி இலாபமீட்டும் கார்ப்பரேட்டுகளின் வணிகத்தனத்தால் விளைவதிது. வாழ்வாதாரத்திலிருந்து சொகுசு வாழ்க்கை முறைக்குத் தண்ணீரை இடமாற்றம் செய்வது நான்காவது வகை. நகர்களில் பெரிய பெரிய வளாகங்கள், 30-40 மாடி கட்டிடங்கள் எழும்பிக் கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு மாடியிலும் நீச்சல் குளங்களும் தண்ணீர் விளையாட்டுகளும் இடம்பெறுகின்றன.
இங்ஙனம், இந்தியாவின் தண்ணீர் இடமாற்றங்கள் ஏழைகளிடமிருந்து வசதி படைத்தவர்களுக்கு, அதாவது கீழிருந்து மேல் நோக்கி தண்ணீர் தேவைக்கும் அதிகமாக  பாய்ந்து கொண்டிருக்கின்றது. இதனால் ஏழைகளும் விவசாயிகளும் பாதிக்கப்படுகின்றனர். தண்ணீர் சந்தைப்படுத்தப்பட்டு, விற்பனைக்கு உகந்ததாக லாபம் தரும் வணிக பண்டமாயிற்று. எனவே தண்ணீரைப் பெற இயற்கையை எந்நிலையிலும் சுரண்ட கற்றுக் கொண்டுவிட்டது கார்ப்பரேட் கைக்கூலிகளான அரசுகள், அதில் ஒரு ரகம்தான் ஆழ்துளைக் கிணற்றுத் தொழில். 16 ஆப்பிரிக்க நாடுகளிலும், இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும், யூனியன் பிரதேசத்திலும், ராஜஸ்தானில் இருந்து சிரபுஞ்சி வரைக்கும் உள்ள அனைத்து இடங்களிலும், ஒவ்வொரு வருடமும் ஏறத்தாழ 200 கோடி அடி ஆழத்திற்கு பூமியில் துளையிடப்பட்டு நீர் உறிஞ்சப்படுகிறது. 
வரும், ஆனா வராது...
தமிழகத்தின் நீராதாரங்களை கணக்கீடு செய்கையில் அரசின் மெத்தனப்போக்கும், மக்களின் சுயநலமுமே தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு முதன்மைக்காரணம் எனலாம். தமிழ்நாடு மொத்தம் 1,30,058 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இங்கு வருடம் 750 மி.மீ முதல் 800 மி.மீ வரை சராசரி மழையளவு பதிவாகிறது. குறைந்த அளவான 750 மி.மீயை (75செ.மீ) எடுத்துக்கொண்டாலே ஆண்டுக்கு ஒரு சதுர கிலோமீட்டருக்கு 26.44 மில்லியன் கனஅடி. மொத்த பரப்பான 1,30,058 சதுரகிலோமீட்டருக்கு 441.33 டிஎம்சி தண்ணீர் மழை நீராகப் பெறுகிறோம். (10டிஎம்சி தண்ணீர் என்பது 1000 மி.க.அடி). இதில் 50 சதவீதம் தண்ணீர் ஆவியாகிவிட்டாலும் மழையினால் நமக்கு கிடைக்கும் நீர் 3441.33ஓ1/2 = 1720.66 டிஎம்சி.
ஒரு மனிதனுக்கு சராசரியாக ஒரு நாளைக்கு எல்லா உபயோகத்திற்கும் சேர்ந்து தேவைப்படுவது 100 லிட்டர் (3 க.அடி). ஓர் ஆண்டுக்கு தேவைப்படுவது 365ஓ3=1095 க.அடி (சுமார் 1000 க.அடி). ஓர் ஆளுக்கு 1000 க.அடி என்றால் 1000 பேருக்கு 10,00,000 க.அடி (1 மி.க.அடி). 10 லட்சம் பேருக்கு 1000 மி.க.அடி (1டிஎம்சி). ஒரு கோடி பேருக்கு 10 டிஎம்சி. தமிழ்நாட்டின் ஜனத்தொகையான சுமார் 8 கோடி பேருக்கு 80 டிஎம்சி அல்லது அதிகபட்சமாக 100 டிஎம்சி தண்ணீர் மட்டும்தான் தேவை. இந்த நீர் தேவையை பொதுவாக ஆறுகள்,குளங்கள் மற்றும் நீர் ஆதாரங்கள் மூலமும் நாம் எளிதாக பூர்த்தி செய்ய முடியும். ஆனால் கிணற்றைக் காணோம் என்கிற வடிவேல் காமெடிபோலத்தான் நம் நிலை.
அவசியம் தீர்க்கப்பட வேண்டிய காரணிகள்
தற்பொழுது நிலவும் தண்ணீர் பிரச்சினைக்கு அவசரமான அவசியமான நிரந்தர தீர்வுகள் மூன்றே! 
1) நிலத்தடி நீரை மேம்படுத்துவது 
2) நீர்நிலைகளைப் பராமரிப்பது
3)     மரங்களை நட்டு இயற்கையைப் பேணுவது 
நிலத்தடி நீரை மேம்படுத்துவது
பெய்கின்ற மழையில் 16 விழுக்காடாவது நிலத்திற்குள் செல்ல வேண்டும். ஆனால், சென்னை போன்ற பெருநகரங்களில் ஐந்து விழுக்காடுகூட நிலத்திற்குள் செல்வதில்லை. காரணம், எங்கும் கான்கிரீட் மயமான கட்டுமானம். அழகு பெயரில் நம் வீட்டு முற்றங்களையும் இன்று கான்கிரீட் தளம் அலங்கரிக்கத் தொடங்கிவிட்டது. இந்நிலை மாற வேண்டும். ஐநா பொதுச்சபையின் ‘தண்ணீர் அடிப்படை உரிமை’ எனும் சுiபாவ வடி றுயவநச தீர்மானத்திற்கு ஆதரவாக 2010-இல் இந்தியா வாக்களித்துள்ளது. அதன்படி கண்ணியமான மனித வாழ்வுக்கு நீரின் மீதான மனித உரிமை தவிர்க்க முடியாது. தண்ணீர் மற்ற மனித உரிமைகளைவிட முதன்மையானது என்பதை இந்தியா ஒத்துக் கொள்கிறது. அப்படியெனில் தண்ணீரை வணிகப்
பொருளாக தனியார் முதலாளிகளுக்குத் தாரைவார்க்கும் போக்குகள் நிறுத்தப்பட வேண்டும். ஆழ்துளைக் கிணறுகள் மூலம் நிலத்தடி நீரை உறிஞ்சும் கார்ப்பரேட் சூழ்ச்சிகள் தீவிரமாய் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ஆவணப்படம் ஒன்றிற்காக பேட்டியளித்த பன்னாட்டுக் கம்பெனியான நெஸ்லேவின் நிறுவனர் பீட்டர்ப்ரெபெக், தண்ணீர் அடிப்படை மனித உரிமைகளின் கீழ்வராது என்றும், இது மற்ற உணவுப் பண்டங்களைப் போல் விற்பனைச் சரக்காக மாற்றப்பட வேண்டுமென்றும் பேசினார். அவரின் பேச்சுக்குப் பின்னால் உள்ளது சூட்சுமம். ஆண்டுக்கு கூ6.9 பில்லியன் (சுமார் ரூ. 38,000 கோடி) பாட்டில் நீர் விற்பனை செய்யும் அதன் சந்தையை விரிவுபடுத்துவதை நோக்கமாக கொண்டதே அவரது பேச்சு. 70-களில் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதை சந்தை மதிப்பாக மாற்ற முயற்சித்து தாய்மார்கள் தாய்ப் பாலூட்டுவதைத் தவிர்க்கச் செய்த சூழ்ச்சி நினைவிருக்கட்டும்.
நீர்நிலைகளைப் பராமரிப்பது
மழைநீரைத் தாங்கி தேக்கி வைத்திருக்கும் ஏரி - குளங்களை முறையாகப் பராமரிக்க வேண்டிய கடமையை மாநில அரசு திட்டமிட்டே புறக்கணித்து வருவதால், 80 விழுக்காடு மழைநீர் வீணாகக் கடலில் கலக்கிறது. வெறும் 2 விழுக்காட்டு நீரைத்தான் நாம் பயன்படுத்த முடிகிறது! தமிழகத்தில் உள்ள 39 ஆயிரத்து 202 கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகளில் 10 விழுக்காடு அழிந்து போய்விட்டன என்கிறது சர்வதேச நீர் மேலாண்மை மையத்தின் தகவல். 1980களில் சென்னையில் சிறிதும் பெரிதுமாக 500-க்கும் மேற்பட்ட நீர்நிலைகள் இருந்தன. இதுவே 2013 - கணக்கீட்டின்படி 43 ஆகச் சுருங்கி விட்டன. அதாவது, 96 விழுக்காடு நீர்பிடிப்பு நிலைகளைக் காணவில்லை. சென்னை முதல் குமரி வரை வளர்ச்சி பெயரிலும், சுரண்டல் நிலையிலும் காணாமல்போன நீர்நிலைகளை இனி எப்படி மீட்டெடுப்பது?  கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகள் மற்றும் நீர்வரத்துக் கால்வாய்களில் உள்ள
ஆக்கிரமிப்புகளை பாரபட்சம் பாராமல்
அகற்றிட வேண்டும். நீர்நிலைகள் தூர்வாரப்பட வேண்டும். கண்மாய்களின் சங்கிலித் தொடர்பு புதுப்பிக்கப்பட வேண்டும். அரசால் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுப் பணிகளில் எந்த விதத்திலும் நீர்நிலைகளோ, விளைநிலங்களோ இல்லாதிருப்பதை அல்லது இருந்தாலும் பாதிப்பு ஏற்படுத்தாததை உறுதிசெய்து கண்காணிப்பது அவசியம்.
மரங்களை நட்டு இயற்கையைப் பேணுவது 
பல்வேறு விதங்களில் இயற் கையை இன்று நாம் சீர்குலைத்து வருகிறோம். வளர்ச்சி திட்டங்களுக்காக பல ஆண்டுகள் வளம் தந்த மரங்களை நொடிப்பொழுதில் வெட்டி வீழ்த்து கிறோம்; துறைமுகங்களுக்காக மலைகளை பெயர்க்கிறோம். இப்படியே சென்றால் விரைவில் தமிழகம் பாலை நிலமாகிடும் என்பதில் ஐயமில்லை. எனவே எதிர்கால சந்ததியினருக்காக மட்டுமல்ல, நாளை நம் பொழுதுகள் நலமும் வளமும் காணும் நோக்கிலும் மரங்களை நட்டுப் பராமரிப்பதை அடிப்படைப் பண்பாக இளந்தலைமுறைக்கு கற்றுத் தருவோம். பிறந்தநாள், திருமணம் போன்ற வைபவங்களுக்கு பரிசாக மரக்கன்றுகளை வழங்குவோம், நடுவோம். அனைத் திற்கும் மேலாய், தண்ணீர் சேமிப்பு மற்றும் பயன்படுத்துதல் தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்து வோம்.  இதில் தொண்டு நிறுவனங்கள், மக்கள் இயக்கங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு மக்கள்நல அமைப்புகளை இணைத்துக் கொண்டு செயல்படுவோம்.

Comment