No icon

எழு! ஒளிவீசு!!

எண்ண மாற்றத்திற்கான சாவி Key to change of thought

Key to change of thought                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               பேரா. னு. எண்ணம் என்பது யாராலும் பார்க்க முடியாத ஒன்று; அதற்கு வரையறை கிடையாது. அதைக் கட்டுப்படுத்துவது கடினம். ஆனால், எண்ணத்தின் திசையை மாற்றலாம். இல்லாமல் இருக்கச் செய்ய அதிக முயற்சி தேவை. ஆழ்ந்த தியானம் செய்வோர் எண்ணத்தைப் பொருட்படுத்தாமல் இருக்க முயற்சி செய்வர். ஆனால், அபாயம் நெருங்குகிற உணர்வு வந்தால் உயிரைக் காப்பாற்ற வேண்டிய வழிமுறைகளைச் செய்யும். ஆனால், பிறரின் எண்ணங்களை அறிந்து துணிச்சலோடு சொன்னதாக சொல்லப்படும் நபர் இயேசு தான். (லூக் 5:22) அவருக்குப் பின் தூய ஆவியார் (1கொரி 2:10) அதனை அறிவார் என்று சொல்லப்பட்டு உள்ளது. இந்த சிந்தனைத் தொகுப்பில் எண்ணத்தைக் கட்டுப்படுத்தவும், நெறிப்படுத்தவும் ஏதாவது வழிமுறை இருக்கிறதா என்ற தேடலுக்குள் செல்கிறோம்.

“திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்போர் தங்கள் எண்ணங்களைக் கட்டுப்படுத்துகின்றனர்” (சீரா 21:11) என்று சீராக் ஞானி சொல்லுகிறார்.

அதனால், எண்ணத்தைக் கட்டுப்படுத்த எப்படியும் வழி இருக்கும் எனும் நம்பிக்கை வருகிறது. முழுவதுமாக எண்ணங்களை நிறுத்த முடியாவிட்டாலும், கட்டுப்படுத்தவும், சரியான பாதையில் திசை திருப்பிவிடவும் முடியும் என்ற நம்பிக்கையை அதே ஞானியே இவ்வாறு தொடர்ந்து சொல்கிறார்:

“என் தவறுகளுக்காக என்னை விட்டுவைக்காமலும் என் பாவங்களைக் கவனிக்கத் தவறாமலும் இருக்குமாறு, என் எண்ணங்களைக் கட்டுப்படுத்தத் தண்டனை கொடுப்பவர் யார்? என் உள்ளத்திற்கு ஞானத்தின் நற்பயிற்சியை அளிப்பவர் யார்? (சீரா 23:2).

இதனைத் தொடர்ந்து செல்லும் ஞானி “இறுமாப்புள்ள பார்வைக்கு நான் இடம் கொடாதிருக்கச் செய்யும்” என்றும், ‘தீய நாட்டங்களை என்னிடமிருந்து அகற்றும்’ என்றும் வேண்டுதல் செய்வார். எனவே தகாத எண்ணங்களுக்கு ஒப்புவிக்காதேயும் (காண். சீரா 23:4-6) எனவே, எண்ணத்தைக் கட்டுப்படுத்த உதவும் சுக்கானாக இருந்து இது வழி நடத்துகிறது.

“இது முதல் புதியனவற்றையும், அறியாத மறைபொருள்களையும் உனக்கு வெளிப்படுத்துவேன்” (எசா 48:6 (ஆ)) என்று சொல்லியுள்ளது போல, எண்ண மாற்றத்தின் ஆழத்தை ஆய்ந்தறிய இறைவன் வழிநடத்தட்டும்.

“Group of Faith”என்னும் பெயரில் உள்ள இலங்கை வாழ் குழுவினருக்கு வாரத்துக்கு ஒருமணி நேர உரை கூகுள் மீட்டிங்கில் கொடுத்து வருகிறேன். இந்தவார சிந்தனைக்கு எண்ணத்தை எடுத்தேன். வேறு யாருக்கு பயன் உள்ளதாக இருந்ததோ இல்லையோ எனக்குப் பயன்பட்டது. அதனால் இதிலே பதிவு செய்கிறேன்.

1. சிந்தனை மாற்றம் செயல் மாற்றத்துக்கு காரணமாகிறது

இப்போது வாசிப்பதை நிறுத்திவிட்டு “உங்கள் எண்ணம் எதைப்பற்றியது? எங்கிருக்கிறது?” என்று கேட்டுப்பாருங்கள். உண்மையிலே எண்ண மாற்றம் வேண்டும் என்று வாசித்துக் கொண்டிருந்தால் தொடர்ந்து வாசிப்பீர்கள். ஏனெனில் நோக்கத்தில் தெளிவு இருக்கிறது. இல்லை என்றால், இதைத் தொடர்ந்து வாசித்தாலும் பயன் இருக்காது. எனவே, நோக்கம் அல்லது இலட்சியத் தெளிவு முக்கியம். அத்தகைய தெளிவு இருந்தால் எந்தச் சூழ்நிலையிலும் ஆற்றல்மிக்க எண்ணத்தால் வாழ்வை மாற்ற முடியும். அழகான இந்த நிகழ்வை வாசித்து பயன் பெறுங்கள்.

நிகழ்ச்சி-1

ஓர் அரசனுக்கு ஒரு யானையின் மேல் மிகவும் விருப்பம். பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்த யானை அது. அதற்கு வயதாகிவிட்டது என்பதனால், இப்போதைக்கு அதனை போருக்குப் பயன்படுத்துவதில்லை. அதனால் யானைக்கு மிகவும் வருத்தம். போருக்கு செல்ல மிகவும் ஏக்கம். ஒரு நாள் தண்ணீர் குடிக்க ஒரு குளத்திற்குச் சென்ற யானை சகதிக்குள் மாட்டிக்கொண்டது. அந்த செய்தி அரசனை சென்றடைந்தது. எல்லா மக்களும் ஒன்று சேர்ந்து, யானையைக் கரையேற்ற முயன்றுகொண்டிருந்தனர். அப்போது அதன் வழியாகக் கடந்து சென்ற கௌதம புத்தர், சூழ்நிலையைப் பார்த்துவிட்டு, “குளத்தைச் சுற்றி போர் முரசு அடியுங்கள்” என்றார். ‘யானையை விடுவிக்க போர் முரசு எப்படி உதவ முடியும்’ என்று நினைத்தனர். ஆனாலும் அவரது ஆலோசனையை மறுக்க இயலாமல் முரசு அடித்தனர். போர் முரசு கேட்டதும் யானையின் அசைவிலே மாற்றம் தெரிந்தது. யானை தன் வலுவெல்லாம் கூட்டி போராடியது. பிறகு தன் முழு அறிவையும், பலத்தையும் கூட்டி செயல்பட்டு குளத்தைவிட்டு வெளியே வந்து விட்டது. ஏனெனில், போருக்கான ஏக்கம் இதயத்தில் வேரூன்றியிருந்தது.

இதிலிருந்து என்ன புரிகிறது? யானையின் ஆற்றலில் குறைவு இருக்கவில்லை. மாறாக, ஆர்வத்தைத் தூண்டக்கூடிய தேவை இருந்தது. அது போருக்கு செல்ல விரும்பும் யானை, அதனால் போர் முரசு கொட்டியதும் அதன் தேவையான உந்துசக்தி (Motivation) மற்றும் ஆற்றல் (Power) உள்ளிருந்து செயல்பட்டு வெளிவரச் செய்துள்ளது. இதுபோல மனிதர்களிலும், ஆர்வத்தைத் தூண்டக்கூடிய ஆற்றலைத் தட்டி எழுப்பக்கூடிய சரியான எண்ணம் தேவை. "விரக்தி மனப்பான்மை" எந்த எண்ணத்திலும் நம்மை மேற்கொள்ள விடக்கூடாது. ஆனால், சூழ்நிலையைப் பார்ப்பவர் “முடியாது” என நினைக்கலாம். யானையும் கூட தன்னால் முடியாது என்று நினைத்திருக்கலாம். ஆனால், அதன் எண்ண மாற்றத்திற்கு ஒரு போர் முரசு தேவை. அதனை கௌதம புத்தரால் எடுத்துச் சொல்ல முடிந்தது. இன்றும் இளைஞருக்குத் தேவை (i) புறத்தூண்டுதல் (ii) அகத்தூண்டுதல்.

அதனால் அன்பார்ந்த இளையோரே! அருமைப் பெற்றோரே! நம் இளைஞர்களுக்குள்ளே மாற்றத்தைக் கொண்டுவரச் செய்யும், சரியான தூண்டுதல் பெறச்செய்யவும், பிறருக்குக் கொடுத்து உதவவும் முடியும் என்பது என் நம்பிக்கை.

நாங்கள் இளையோரோடு வாழ்ந்து, இளையோருக்காகவே வாழ்வின் பெரும்பகுதியை செலவழித்து உள்ளோம். இத்தகைய ஆற்றல்மிக்க எண்ண மாற்றத்தை இளையோரில் ஏற்படுத்தி வாழ்வில் மாற்றம் காணச் செய்திருக்கிறோம். அதனால் நீங்களும் உறுதியாக நம்பலாம்.

நிகழ்ச்சி-2

இளையோருக்கு என்று ஏற்படுத்தியுள்ள Youth Group (men youth) (Skype) என்ற ஸ்கைப் குழுவில் நான் சந்தித்து மாற்றம் காணச் செய்திருந்த ஓர் இளைஞரின் சாட்சியத்தைக் கேட்டேன். இன்ஜினியரிங் படித்துவிட்டு, முப்பத்திரெண்டு அரியர் (32 arrears) உள்ள இளைஞனைச் சந்தித்து நான் கொடுத்த எண்ண மாற்றம் இதுதான்: ‘பரவாயில்லையே! மீதியுள்ள பேப்பர்ஸ் எல்லாம் பாஸாகி இருக்கிறாயே! அதனால், இதனையும் முடித்துவிடலாம்”. இந்த எண்ணம் மனதில் பதிய இன்ஜினியரிங் முடித்து, இன்று நல்ல வேலையில் அந்த இன்ஜினியரிங் பட்டப்படிப்பை வைத்தே சென்னையில் உயர்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். மூன்று ஆண் குழந்தைகளுடன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

இவ்வாறு, யானைக்குக் கிடைத்த தூண்டுதல் போல, "மீதியுள்ள பேப்பர்ஸ் எல்லாம் முடித்திருக்கிறாயே" என்ற எண்ணம் அவனது வாழ்வு மாற்றத்துக்குக் காரணம் ஆனது.

இன்னுமொரு வளர் இளம் பருவத்தினை சேர்ந்த ஒருவரின் வாழ்வில் நடந்தது.

நிகழ்ச்சி -3

ஒரு சிறுவனுக்கு பழங்கள் என்றால் மிகவும் விருப்பம். ஒரு செரி பழம் நிறைந்த மரத்தைப் பார்த்தான். அது அவனுடைய அப்பாவிற்குச் சொந்தமானது. ஆனால், அப்பா கண்டிப்பாக பறிக்கக் கூடாது என்று கட்டளை கொடுத்திருந்தார். அவனுக்கு பழத்தின் மேல் இருந்த விருப்பத்தைக் கண்ட அவனது நண்பன், “நீ பயப்பட வேண்டாம். நீ தான் பழத்தைப் பறித்தாய் என்று அறிந்தால் உன் தந்தை உன்னைக் கண்டிப்பாக அடிக்கமாட்டார். ஏனெனில் உன்னை அதிகம் அன்பு செய்கிறார்” என்று சொன்னான்.

“ஆம்! அதே காரணத்திற்காகத்தான் நானும் அந்தப் பழத்தைத் தொட மாட்டேன். ஏனெனில், அது என் தந்தையை அதிகக் காயப்படுத்தும். ஆகவே, என் கீழ்ப்படியாமையால் அவரை வேதனைப்படுத்தவே மாட்டேன்” என்று துணிவுடன் சொன்னான். ‘அன்பில் அச்சத்திற்கு இடமில்லை, மாறாக நிறை அன்பு அச்சத்தை அகற்றிவிடும் (1 யோவா 4:18). இந்தச் சிறுவனின் அன்பு நிறை அன்பு. அச்சத்தைவிட, அவனது ஆசையைவிட, தன் தந்தையின் அன்புணர்வு மேலானது என்பது தெளிவாகிறது.

இத்தகைய நிறைவான அன்பு கொண்ட தந்தையின் மக்களாக வாழும் நாம், நம் எண்ணத்தை மாற்றிக் கொண்டால் போதும் (i) முடியாதது என்பதும் முடியும் (ii) முடியும் என்றாலும் தவறு செய்யத் துணியாது. இவை இரண்டும் எண்ண மாற்றத்தின் ஆணிவேர். எனவே, காலைப் பொழுதையும், இரவுப் பொழுதையும் கீழ்க்காணும் இறை வேண்டுதலால் தொடங்கி, இதய பரிசோதனையோடு நிறைவு செய்யுங்கள்.

அதிகாலை இறைவேண்டல்:- “என் கற்பாறையும், மீட்பருமான ஆண்டவரே! என் வாயின் சொற்கள் உமக்கு ஏற்றவையாய் இருக்கட்டும்; என் உள்ளத்தின் எண்ணங்கள் உமக்கு உகந்தவையாய் இருக்கட்டும்”(திபா 19:14) ஆமென்.

இரவு ஆத்ம சோதனை: இறைவா! நீர் என் உள்ளத்தை ஆய்ந்து அறியும்; என் எண்ணங்களை அறியுமாறு என்னைச் சோதித்துப் பாரும். உம்மை வருத்தும் வழியில் நான் செல்கின்றேனோ என்று பாரும்; என்றுமுள வழியில் என்னை நடத்தியருளும் (திபா 139: 23,24) ஆமென்.

அதிகாலையில் நமது விண்ணகத் தந்தையின் பாதுகாப்பில் எண்ணத்தை சமர்ப்பிப்போம், இரவிலே அந்த அப்பாவை வருத்தப்படுத்தினோமா என்று சோதித்து பார்ப்போம். ‘எல்லாம் முடியும்’ என்று நம்புவோம். வாழ்வு கண்டிப்பாய் மாறும்.

-இன்னும் கதிர் வீசும்-

Comment