No icon

வாழ்வு வளம் பெற – 24

சேர்த்துச் சேர்த்துச் சேகரித்து!

இவர்கள் இருவரும் சிறு வயதில் இருந்தே நெருங்கிய நண்பர்கள். ஒரே நகரில், ஒரே பள்ளியில், ஒரே வகுப்பில் படித்தவர்கள். இருவரில் ஒருவர் ராயன், மற்றவர் ஜோசுவா. இருவரின் குடும்பங்களிலும் இருந்த அவலங்களும், அல்லல்களும் இவர்களின் பள்ளிக் காலத்தை வேதனை மிகுந்த ஆண்டுகளாக மாற்றின. ராயன் இரண்டாம் வகுப்பில் இருந்தபோதே அவரது பெற்றோர் மணமுறிவு பெற்றுப் பிரிந்தனர். கணவனின் பிரிவைத் தாங்க முடியாத அவரது தாய் போதை மருந்துகளுக்கு அடிமையாகிவிட்டார்.

ஜோசுவாவின் குடும்பமும் அப்படித்தான். அவரது தந்தை எதற்கும் எளிதில் கோபமுற்று, வன்முறையில் இறங்கும் முரடர். எரியும் சிகரெட்டை அவரது தாயின் மார்பில் வைத்து தந்தை துன்புறுத்திய காட்சியை ஜோசுவாவால் மறக்கவே முடியவில்லை. மணமுறிவு பெற்றுப் பிரிந்து சென்றுவிட்ட அவரது தாய் விரைவில் மதுவிலேயே மிதக்கும் குடிநோயாளியானார்.

இருவரும் கல்லூரியில் வந்து சேர்ந்தபோது மனத்தில் ஒரு தீர்க்கமான முடிவோடுதான் வந்தார்கள். வறுமையின் பிடியினின்று தங்களை விடுவித்துக் கொள்ள, நன்கு படித்து, நிறைய சம்பளம் தரும் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து நிறைய சம்பாதிக்க வேண்டும் என்பதுதான் அந்த முடிவு.

நன்கு படித்து நல்ல வேலையில் சேர்ந்ததால், இருவரும் இளம் வயதிலேயே நிறைய சம்பாதிக்கத் தொடங்கினர். எண்ணற்ற சொத்துகளையும், பொருள்களையும் வாங்கிக் குவித்தனர். எல்லாம் இருந்தாலும் மனத்தில் நிறைவு இல்லாமல் இருவரும் வாழ்ந்தபோது, ஒருவரில் எதிர்பாராத மாற்றமொன்று நிகழ்ந்தது.

ஆறு மாதங்களுக்கு மேல் தன் நண்பன் ஜோசுவா என்றும் இல்லாத மகிழ்ச்சியோடு இருப்பதைப் பார்த்து, அவரை மதிய உணவுக்கு அழைத்துப் போய் மகிழ்ச்சியின் இரகசியத்தைச் சொல்லுமாறு ராயன் கேட்கிறார். ஆறு மாதங்களுக்கு முன்பு தான் உணர்ந்த சில உண்மைகளும், அவற்றை உணர்ந்ததால் அதன்பின் தான் செய்தவையும்தான் தனது புதிய மகிழ்ச்சிக்குக் காரணம் என்கிறார் ஜோசுவா.

ஜோசுவா உணர்ந்த உண்மைகள் என்ன?

நிறைய பணம் இருந்ததால், அந்தப் பணத்தை வைத்து எதை வேண்டுமானாலும் வாங்கலாம் என்பதால், எண்ணற்ற உடைகள், நகைகள், பொருள்கள், பாத்திரங்கள் என்று வாங்கிக் குவித்திருக்கும் உண்மை.

இத்தனை ஆண்டுகளாய் இப்படி வாங்கிக் குவித்தவற்றில் மிகப் பலவற்றை, தான் இப்போது பயன்படுத்துவதே இல்லை எனும் உண்மை. எந்தப் பயனும் இல்லாமல் இடத்தை அடைத்துக் கொண்டு இத்தனை பொருள்களும் வீணாய் தன் வீட்டில் உள்ளன எனும் உண்மை. இவற்றை வாங்குவதிலும், பேணுவதிலும், பாதுகாப்பதிலுமே வெகுநேரம் போய் விடுவதால், மனைவி, பிள்ளைகள், நெருங்கிய நண்பர்களோடு செலவிட நேரம் இல்லை எனும் உண்மை.  இதனால் உறவுகள் விலகி, தனிமைச் சிறைக்குள் தானே தன்னை அடைத்துக் கொள்ளும் உண்மை.

இந்த உண்மைகள் எல்லாம் புரிந்ததால் என்ன செய்தார் ஜோசுவா?

வீட்டிலிருந்த அத்தனை துணிகள், பொருள்கள், நூல்கள், இதழ்கள், சமையலறைச் சாதனங்கள், சாமான்கள் எல்லாவற்றையும் அட்டைப் பெட்டிகளில் வைத்து அடுக்கி, பெட்டிகள் யாவற்றையும் வாசலுக்கருகில் இருந்த ஓர் அறையில் வைத்து விட்டார். அதன் பிறகு எதுவுமே இல்லாத ஒரு புது வீட்டிற்குள் குடி புகுந்ததைப் போல, அன்றாட வாழ்விற்கு என்ன தேவைப்பட்டதோ அவற்றை மட்டும் அந்தப் பெட்டிகளிலிருந்து எடுத்து வந்து பயன்படுத்தினார்.

சில நாள்களில் என்ன புரிந்தது? முன்பு வீட்டில் இருந்தவற்றில் மிகச்சில பொருள்கள்தான் அன்றாட வாழ்விற்குத் தேவைப்பட்டன. அப்படித் தேவைப்பட்டுப் பயன்படுத்திய பொருள்களை மட்டும் வைத்துக்கொண்டு, மீதித் துணிகள், நூல்கள், பொருள்கள் யாவற்றையும் தேவைப்பட்டோருக்கு நன்கொடையாகக் கொடுத்தார். யாருக்கும் பயன்படாதவற்றைக் குப்பைத் தொட்டியில் போட்டு விட்டார்.

தேவையானவற்றை மட்டும் வைத்துக் கொண்டு வாழும்போது வீட்டில் அதிக இடம் இருப்பதும், உறவுகளுக்கும் கடமைகளுக்கும் அதிக நேரம் இருப்பதும் ஜோசுவாவுக்குப் புரிந்தது. தன் நண்பன் சொன்னதையெல்லாம் கேட்டு அதிசயித்த ராயன், தானும் அப்படியே செய்து, அதனால் கிடைத்த மகிழ்ச்சியை உணர்ந்தார்.

ராயன் நிக்கடிமஸ், ஜோசுவா ஃபீல்ட்ஸ் மில்பர்ன் ஆகிய இந்த இருவரும் ‘த மினிமலிஸ்ட்ஸ்’ எனும் இயக்கத்தைத் தொடங்கினர். தங்களின் அனுபவத்தை விவரித்து நூலொன்று எழுதினர். அழைத்த இடங்களுக்கெல்லாம் போய் பேசினர். அங்கு வந்தவர்களோடு உரையாடினர். இதனால் இப்படி வாழ்வதன் பொருளையும், பயன்களையும் புரிந்துகொண்ட பலர், இவர்களைப் போன்றே சிலவற்றில் நிறைவு காண்பவர்களாக மாறியுள்ளனர்.  இந்த உண்மைகள் யாவும் நமக்கும் பொருந்துமல்லவா!

கண்ணில் பட்டதை, ஆசைப்பட்டதைக் கடையில், தொலைக்காட்சியில், இன்னொருவர் வீட்டில் பார்த்ததை… என்று நாம் வாங்கி, வாங்கிச் சேர்த்துக்கொண்டே இருக்கிறோம். வாங்கிச் சேர்த்ததைப் பாதுகாக்கிறோம். எதையும் தூக்கியெறிய மனமில்லாமல் அத்தனைக்கும் மத்தியில் வாழ்கிறோம்.

நம்மை இப்படி வாங்கிச் சேர்க்க வைப்பது எது? வறுமை எனும் கொடிய கீழ்த்தளத்திலிருந்து முயன்று மேலேறி வந்து விட்டவர்கள், வறுமைக் காலத்தில் வாங்க முடியாததையெல்லாம் இப்போது வாங்கிவிட வேண்டும் என்று செயல்படுகின்றனர். வறுமையில் ஒருநாளும் வாடாதவர்கள் கூட ஏனென்று புரியாமலே வாங்கிச் சேர்க்கின்றனர். மனத்தில் உள்ள ஒரு வெற்றிடத்தைத் துணிகளும், நகைகளும், பொருள்களும் நிரப்பும் என்று நினைக்கின்றனர். சமுதாயத்தில் இவையெல்லாம் தன்னிடம் இருந்தால், பிறர் நிமிர்ந்து, வியந்து பார்க்கும் ‘அந்தஸ்து’ தனக்கும் கிடைத்து விடும் என்றெண்ணி அவற்றை வாங்கி உடைமைகளாக்கச் சிலர் முயல்கின்றனர்.

தங்களின் வருமானத்திற்காக ஊடகங்கள் அனுமதிக்கும் விளம்பரங்கள் ‘வா, வா, வந்து வாங்கு’ என்று நம்மை அழைத்துக் கொண்டே இருக்கின்றன. மனித மனம் ஏங்கும் அன்பு, உறவின் நெருக்கம், பெருமை, மகிழ்ச்சி எல்லாம் சில உடைமைகளை வாங்கிவிட்டால் கிடைத்து விடும் என்ற பொய்யைக் கவர்ச்சியில் குழைத்துச் சொல்கின்றன. மது, புகை, போதைப் பொருள்களுக்குச் சிலர் அடிமையாகி விடுவது போல, வாங்கிச் சேர்ப்பதற்கும் சிலர் அடிமைகளாகி விடுகின்றனர். ஐம்பது, அறுபது சேலைகளை அலமாரியில் அடுக்கி வைத்திருந்தாலும், இந்த மாதச் சம்பளம் வந்ததும் இன்னொரு சேலையை வாங்கி வைப்போர் உள்ளனர்.

இதில் வேடிக்கை என்ன? உழைத்துச் சம்பாதித்துப் பணத்தைச் செலவிட்டு வாங்கிச் சேர்ப்பவற்றில் பலவற்றை நாம் பயன்படுத்தப் போவதில்லை அல்லது அவற்றைப் பயன்படுத்தி பல காலங்கள் ஆகிவிட்டன. மீண்டும் பயன்படுத்தப் போவதில்லை. பயன்படுத்தாத, பயன்படுத்த இயலாத காரியங்களை வாங்க இவ்வளவு பணமும், நேரமும் செலவிடுகிறோம் என்ற உண்மையைச் சில நிகழ்வுகள் உரக்கச் சொல்லி விடுகின்றன.

பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபராக இருந்தவர் காலஞ்சென்ற ஃபெர்டினன்ட் மார்க்கோஸ். பெயருக்குத்தான் அவர் அதிபரே ஒழிய, நிஜத்தில் ஈவிரக்கமற்ற சர்வாதிகாரி. அவரின் கொடுமைகளையும், கோடி கோடியாய்க் கொள்ளையடித்த தந்திரத்தையும் பொறுத்துக் கொள்ள இயலாத நாட்டு மக்கள் புரட்சி செய்தபோது, மார்க்கோசும், அவரது குடும்பத்தினரும் அவசர அவசரமாகத் தப்பியோடினர். அதன் பிறகு மக்கள் கூட்டம் அதிபரின் மாளிகைக் கதவுகளை உடைத்து உள்ளே நுழைந்தது. மார்க்கோசின் மனைவி இமெல்டா மார்க்கோசின் அறையில் அவர்களுக்குப் பெரும் வியப்பொன்று காத்திருந்தது. அங்கே இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட விலையுயர்ந்த செருப்புகள் இருந்தன! இதையொத்த இன்னொரு நிகழ்வு நம் சென்னையிலும் நடந்தது நினைவிருக்கலாம்.

தப்பியோடியபோது எத்தனை செருப்புகளை இமெல்டா அணிந்திருக்க முடியும்? பயன்படுத்த இயலாதவற்றை வாங்கிச் சேர்த்து, பாதுகாக்க அவர் எத்தனை பாடுபட்டிருப்பார்! இப்படி நமது இல்லங்களில் சேர்ந்து கொண்டே இருக்கும் பொருள்குவியலை எப்படி அகற்றிச் சுத்தப்படுத்துவது என்பதை மேலை நாட்டாருக்குக் கற்றுத் தந்தவர் மரீ கோன்டோ எனும் ஜப்பானியப் பெண். ‘டைடியிங் அப் - த ஜாப்பனீஸ் ஆர்ட் ஆஃப் டீக்ளட்டரிங்’ (Tidying Up – The Japanese Art of Decluttering) என்பது அவரது பிரபலமான நூல். அதற்கடுத்து அவர் எழுதிய நூல் ‘ஸ்பார்க் ஜாய்’ (Spark Joy).

இந்த இரு நூல்களிலும் அவர் சொல்லும் அடிப்படையான கருத்து ஒன்றுதான். ‘இன்றும் உங்கள் மனத்திற்குத் தொடர்ந்து மகிழ்வூட்டும் காரியங்களை மட்டும் வைத்துக்கொண்டு, மீதிப் பொருள்களை எல்லாம் கொடுத்து விடுங்கள் அல்லது குப்பை என்று எறிந்து விடுங்கள்.’ சிலவற்றை மட்டும் வைத்துக் கொண்டு வாழவும், பணியாற்றவும் தம் சீடர்களுக்குக் கற்றுத் தந்தார் இயேசு. “பயணத்திற்குக் கைத்தடி தவிர, உணவு, பை, இடைக் கச்சையில் செப்புக் காசு முதலிய வேறெதையும் நீங்கள் எடுத்துக் கொண்டு போக வேண்டாம். அணிந்திருக்கும் அங்கி ஒன்றே போதும்” (மாற்கு 6:8-9).

இரண்டே இரண்டு பொருள்களை மட்டும் வைத்துக்கொண்டு வாழ்ந்த இறை ஊழியர் பீட்டர் பரதேசியை உங்களுக்குத் தெரியுமா? திருமங்கலத்திற்குப் பக்கம் அம்மாப்பேட்டைக்கு அருகில் பெரியூரில் 1895 -இல் பிறந்து வளர்ந்து, எம்.ஏ., எல்.டி. படிப்பைப் படித்து முடித்து, பாளையங்கோட்டையில் உள்ள புனித சவேரியார் கல்லூரியில் பொருளாதாரப் பேராசிரியராகப் பல்லாண்டுகள் பணியாற்றியவர். எதுவும் இல்லாத பரதேசியாக வாழ்ந்து, நற்செய்தியை அறிவிக்க இறைவன் தன்னை அழைக்கிறார் என்பதை உணர்ந்ததும், வேலையை, குடும்பத்தை விட்டு விட்டு, தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், ஆந்திர மாநிலம் என்று ஊர் ஊராக அலைந்து போதித்தார். அவர் எப்போதும் வைத்திருந்த துணிப்பையில் இருந்த பொருள்கள் இரண்டே இரண்டுதான். ஒன்று திருவிவிலியம். இன்னொன்று பிச்சை எடுக்க அவர் வைத்திருந்த பாத்திரம்.

இப்படி எல்லாவற்றையும் விட்டு விட நம்மால் இயலாதென்றாலும், அறிந்தும் அறியாமலும் வாங்கி வாங்கிச் சேர்த்து, சேகரித்து, சேமிக்கும் பொருள்களில் உண்மையில் தேவையானவற்றை, தொடர்ந்து பயன்படுத்துபவற்றை மட்டும் வைத்துக்கொண்டு, மீதியைக் கொடுப்பதும், கொட்டுவதும் ஓர் அலாதியான நிறைவை நமக்குத் தரும். நம்மிடம் இருந்தாலும் கிடைக்காத இடத்தையும், நேரத்தையும் கொண்டு வந்து காட்டும். தேவையில்லாத குப்பைகளோடு வாழும் நமக்குத் தேவையான நிம்மதியையும், மகிழ்ச்சியையும் தரும். நம் மனத்திலும், வாழ்விலும் கிடக்கும் தேவையில்லாத குப்பைகளை அகற்றினால் கிடைக்கும் ஆனந்தத்திற்கு முன்சுவையாய் அமையும்.

‘மினிமலிஸ்ட்ஸ்’ இயக்கத்தைத் தொடங்கிய இருவரில் ஒருவரான ஜோசுவா சொல்லும் ஓர் உத்தியை நான் கடைப்பிடிக்கத் தொடங்கி விட்டேன்.

என்ன உத்தி?

ஒவ்வொரு நாளும் அறையைச் சுற்றிப் பார்த்து, உடையோ, பொருளோ,  நூலோ தேவையில்லாத, பயன்படுத்தாத ஒன்றைக் கண்டு, அதனைக் கொடுப்பது அல்லது குப்பையில் போடுவது. ஒவ்வொரு நாளும் இதைச் செய்தால் ஒரு மாதத்தில்... ஒரு வருடத்தில்...?

(இந்த வாரக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை +91 9445006852 என்ற எண்ணிற்குக் குறுஞ்செய்தியாகவோ அல்லது  குரல் பதிவாகவோ அனுப்பி வையுங்கள்)

Comment