No icon

விஜய்

மீண்டும் ஒரு (வெற்று) அரசியல்!

தமிழ்நாட்டில் நிலவும் அரசியல் வெறுமையைப் (emptiness) போக்கப் புதிதாய் உதயமாகிவிட்ட கட்சியை நாமும் வரவேற்பதால் தவறொன்றும் இல்லையே! ‘தளபதி’ என்று அன்பொழுகத் தொண்டர்களால் அழைக்கப்பெறும் நடிகர் விஜய் அரசியலுக்கு வருகிறார்; கட்சியொன்றை நிறுவ இருக்கிறார் என்ற செய்தி தமிழ்நாட்டினுள் உலா வந்தபோது, விஜய் அவர்களின் அரசியல் பிரவேசம், புதுக் கட்சியொன்றின் உதயம் என்பனபற்றியெல்லாம் தமிழ்நாட்டின் பல்வேறு கட்சித் தலைவர்களின் கருத்துகள் பல்வேறு ஊடக வழி கேட்கப்பட்டபோது, அனைவருமே விஜய் அவர்களின் அரசியல் நுழைவை வரவேற்றதோடு, இவரின் நிலைப்பாட்டில் எத்தவறும் இல்லையென்றதோடு, குடிமகன் ஒருவனின் சனநாயகவுரிமையென்றும் தயக்கமின்றித் தம் கருத்தை எடுத்து வைத்தனர்.

கருத்து கூறிய எவருமே விஜய் அவர்களின் அரசியல் நிலைப்பாட்டிற்கு எதிரான கருத்தைத் தரவில்லை. தமிழ்நாட்டு அரசியல் களத்தில் நடிகர் விஜய் அவர்களின் நுழைவு ஏற்படுத்தப்போகும் தாக்கம் என்ன? தமிழ்நாட்டு அரசியல் அரங்கில் விஜய் அவர்கள் நிகழ்த்தப்போகும் விந்தை என்ன? தமிழ்நாட்டில் இயங்கும் அரசியல் கட்சிகளும், கட்சி சாரா பொதுமக்களும் இவரின் வருகையை எப்படி எதிர்கொள்ளப் போகின்றனர்? இவர்கள் என்னதான் எதிர்பார்க்கின்றனர்?

விஜய் அரசியலின் வெளி (Space)

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். தொடங்கி, மறைந்த விஜயகாந்த், அவரைத் தொடர்ந்து ‘வருகிறேன், வருகிறேன்’ என்று அச்சுறுத்தி அச்சுறுத்தி இறுதியில் கைவிட்டுப் போன இரஜினிகாந்த் வரை, இவர்களோடு இன்று புகமுனையும் விஜய் வரைக்குமான அரசியல் வெளி (Political Space) எங்குள்ளது?

நமது நாட்டின் அரசியல் களத்தில் மேற்கண்டோரெல்லாம் இறங்காதிருப்பின் என்ன நிகழ்ந்திருக்கும்?

எம்.ஜி.ஆரும், அவரால் உருவான செயலலிதா அம்மையாரும், இந்நாட்டின் எந்த வெளியை நிரப்பத் துணைபுரிந்தனர்? தமிழ்நாட்டில் தோன்றிய நீதிக்கட்சி சில மாற்றுக்கொள்கைகளை முன்னெடுத்தது. மாற்று அரசியலுக்கான சித்தாந்தம் முழுமையாக வெற்றி கண்டதோ, இல்லையோ... இன்றைய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி வரை ‘திராவிடம்’ எனும் சித்தாந்தம் அல்லது ‘சமூக நீதிக்கொள்கை’ இன்றுவரை பேசுபொருளாய் உள்ளது. இச்சித்தாந்தம் பலவேளை, சிலரால் சமரசத்துக்குள்ளாகியிருக்கலாம்;  காட்டிக் கொடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால், அன்னியரிடமிருந்து இந்தியா விடுதலைக்குப் போராடி வந்த காலத்தில், இந்தியத் தேசிய இயக்கமாம் காங்கிரசுக்கு எதிராக நிகழ்ந்த சித்தாந்த இயக்கமாகத்தான் நீதிக்கட்சியையும், திராவிட இயக்கங்களையும் பார்க்கிறோம். இவ்வியக்கங்கள், காங்கிரஸ் கட்சிக்கு வழிவிட்டு, கட்சி ரீதியாகத் தோற்றுப் போனாலும், ஆட்சிக் கட்டிலேறிய காங்கிரஸ் கட்சியும் சமூக நீதிப் போரில் துணைநின்றது என்பதே உண்மை. எனவேதான் சுயமரியாதை இயக்கம் கண்ட தந்தை பெரியார் காமராசரைப் ‘பச்சைத் தமிழர்’ என்று வர்ணித்து அவருக்கு ஆதரவும் தந்தார். 1967 -ஆம் ஆண்டிற்குப் பின் காங்கிரஸ் தன் வலுவை இழந்த நிலையில், ஆள வந்த திராவிடக் கட்சிகள் கொள்கை வலுவிழந்து வெறுங்கட்சியாய் மாறிப்போன நிலையில், சித்தாந்த நிலையில் பெரும் தோல்வியைக் கண்ட நிலையில், கொள்கை (+) கட்சிகள் என்ற நிலைமாறி, கொள்கையற்ற கட்சிகள் தந்த ‘கும்பல் அரசியல்’ தந்த வெளியில் ‘புரட்சி நடிகர்’ என்று புகழப்பட்ட எம்.ஜி.ஆர். புகுந்தார்.

கட்சிகள் என்பன சில தனிமனிதர்கள் கூடும் கும்பல் அல்ல; கட்சிகள் சனநாயகம் தந்த நன்கொடை! கூடுதற்கு, கூடிச் சிந்திப்பதற்கு, கருத்துரிமைக்கு, தனித்தக் கொள்கைகளுக்கு உருகொடுக்க சனநாயகம் தந்த அருங்கொடை! முரண்படும் உரிமையைக் காக்கவும் உருவான கட்சிகள் தெளிவான கொள்கையுடையன. அரசியல் இதன் உள்ளடக்கம். கட்சிகள் முன்னெடுக்கும் அரசியல் மூலம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற முனையும் அரசியலமைப்பு. ஆட்சியதிகாரம் இதன் இலக்கு. ஆயினும், வெறும் ஆட்சி மாற்றத்தை நோக்கியதாக மட்டும் இதன் இலக்கு இருக்க முடியாது. இருக்கும் அல்லது இயங்கும் ஆளும் கட்சி, மக்களின் வாழ்வுக்கு அல்லது விடுதலைக்கு உகந்த கொள்கையுடையதல்ல என்பதனை முன்வைத்து மாற்றுச் சித்தாந்த அடிப்படையில் ஆட்சியைக் கைப்பற்றுவதே கட்சியின் நோக்கம். ஏற்கெனவே சொன்னது போன்று ஆட்சி மாற்றம் நோக்கமாக இருந்தாலும், ஆட்சி மாற்றம் வெறும் கட்சி மாற்றமல்ல; கொள்கை மாற்றமே இதன் உள்ளீடு.

இன்றைய வகுப்புவாத பாரதிய சனதா கட்சி, வகுப்புவாதக் கருத்தியலை வலுவான உள்ளடக்கமாகக் கொண்ட கட்சி. மதவாதம், மதப் பெரும்பான்மைவாதம் மூலம் ஆட்சியேற்கும் இக்கட்சி, உண்மை சனநாயகத்திற்கும், பன்மையைப் போற்றும் சமயச் சார்பின்மைக்கும் எதிரானது. வகுப்புவாதக் கருத்தியலை எதிர்கொள்ள, சமயச் சார்பற்ற சனநாயக இயக்கம் ஒன்று தேவை. சித்தாந்தத் தெளிவில்லாமல் மதவாதக் கட்சிகளை எதிர்கொள்ள முடியாது. எனவேதான், இராகுல் காந்தி அவர்கள் ‘சித்தாந்தப் போரின்’ தேவையைப் பேசினார், பேசி வருகிறார். 

இந்தியாவின் மிகச்சிறந்த அரசியல் அறிஞர் இரஜினி கோத்தாரி மிகத் தெளிவாகக் கூறுகிறார்: “இன்றைய அரசியல் கட்சிகள் கொள்கையற்றவை; கொள்கை எனும் நங்கூரம் (Anchorless) அற்றவை” என்பார். கொள்கை இன்மையால்தான் இக்கட்சிகள் தனிநபர் வழிபாட்டை ஊக்குவிக்கின்றன. சனநாயகம் தந்த கட்சிகளின் தலைமை முடியாட்சித் தலைமையின் அத்தனை இலக்கணத்தையும் வழுவாது கடைப்பிடிக்கின்றன. கட்சி உறுப்பினர்களுக்குக் கொள்கை எனும் கவசம் தேவைப்படாமையால், பலர் குற்றவாளிகளாக (Crimicals) மாறிப்போயுள்ளனர்.

மக்கள் வாக்குகள் மூலம் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் பலர் கிரிமினல்களாக இருப்பதை நாம் அறிவோம். கட்சிகள் கொள்கைகளை இழந்துவிட்டமையால், அக்கட்சிக்குள் எவரும் எளிதாக இடம்பெற முடிகிறது. இவ்வெளியில்தான் மதவாதமும் வகுப்புவாதமும் உள்ளே நுழைந்து விடுகின்றன. கொள்கை இழப்பு கும்பல்வாதத்தை வளர்க்கிறது; கொள்கை இழப்பு, மானுடருக்கு எதிரான கொள்கையுடைய கட்சிகளுக்கு, அமைப்புகளுக்கு இடமளிக்கின்றது. இன்றைக்கு இந்திய அரசமைப்புக்கும், சனநாயகத்துக்கும் எதிரான வகுப்புவாதக் கருத்தியல் உச்சத்திலிருப்பதற்கு இதுவே காரணம்.

மீண்டும் தமிழ்நாட்டு அரசியலுக்கு வருவோம். திராவிட முன்னேற்றக் கழகத்தை விட்டு வெளியே வந்து அண்ணா தி.மு.க.வை ஆரம்பித்த எம்.ஜி.ஆர். மக்களின் ஆதரவைப் பெற்று ஆட்சியமைத்தபோது, தமிழ் நாட்டில் திராவிடக் கட்சிகளை எதிர்த்த சக்திகள் மகிழ்ந்தன. குறிப்பாக, தமிழ்நாட்டின் உச்ச வகுப்பினர் எம்.ஜி.ஆருக்குப் பெரும் மதிப்பளித்தனர். அரசமைப்பு உறுதி செய்த இட ஒதுக்கீட்டுக் கொள்கைகள் நீர்த்துப் போகும் வேலையும் செய்யப்பட்டன. எம்.ஜி.ஆர். வல்லவராக, மாபெரும் சக்தியாக, ஏழைகளின் நாயகனாகக் கட்டமைக்கப்பட்டார்.  முந்தைய அரசாட்சியில் நிலவிய இலஞ்சம் மட்டுமே மக்கள் முன் வைக்கப்பட்டு எம்.ஜி.ஆர். ஆட்சி நடத்தினார். இவரைத் தொடர்ந்து இவரால் ஆசிர்வதிக்கப்பட்டு, வளர்த்தெடுக்கப்பட்ட செயலலிதா ஆட்சியில் சனநாயகத்தின் சாயலே இல்லை. ஏதேச்சதிகாரத்தின் அனைத்து வடிவங்களும் இவ்வாட்சியில் நியாயப்படுத்தப்பட்டன.  திராவிடக் கட்சிகளின் எதிரணியினரின் நட்பு வட்டத்துள் இரு கட்சிகளுமே இணைந்தன. எம்.ஜி.ஆர். எப்போதும் வகுப்புவாதக் கட்சிகளைக் குறை கூறியதே இல்லை. செயலலிதா அம்மையார் இராமர் கோவிலுக்குச் செங்கல்லை அனுப்பி வைத்தார். ‘சிறுபான்மையினருக்கான உரிமைகள் பெரும்பான்மையினரைப் பாதிக்கக்கூடாது’ என்றார். மதமாற்றுத் தடைச்சட்டம் அறிமுகமானது; தன் ஒவ்வோர் அசைவிலும் வகுப்புவாதப் பாரதிய சனதா கட்சி தன் இயல்பான (Natural) கூட்டணி என்று நிரூபித்து வந்தார்.

கொள்கையற்ற கட்சி என்னவாகும் என்பதற்கு, திராவிடத்தின் கலைஞர் வகுப்புவாதக் கட்சியின் வலையில் வீழ்ந்து, வரலாற்றில் ஒரு பெரிய கரும்புள்ளியைக் குத்திக்கொண்டார். கலைஞர் குத்திக்கொண்ட கரும்புள்ளி மெல்லவே மாறிவருதலும் ஓர் ஆறுதலே.

எம்.ஜி.ஆர்., செயலலிதாவைத் தொடர்ந்து தமிழ்நாட்டை மிரட்டி வந்தோர் இருவர். ஒருவர் இரஜினிகாந்த், மற்றவர்  விஜயகாந்த். இரஜினி பொய்யாகக் கட்டமைக்கப்பட்ட ஒரு மாயமான ஆன்மிக அரசியல் என்று சொல்லி மக்களை ஏய்க்க வந்தவர். தமிழ்நாட்டின் ஒரு பெரிய இரசிகர் கூட்டம் மதுவருந்தியோர் போல் மயக்கத்தில் வீழ்ந்து கிடந்தது. இரஜினியைக் காக்கப் புறப்பட்ட வகுப்புவாதிகள் ஏமாந்து போயிருக்கலாம். ஏனோ தமிழ்நாடு பிழைத்தது.

விஜயகாந்த் - நல்லவர்! கொடை கொடுக்கும் வள்ளல்! ஏற்றுக்கொள்வோம். நாட்டில் நிலவும் இலஞ்சத்தை, அரசியல் நேர்மையின்மையை, போலித்தனத்தைக் குறிவைத்துப் பேசும் திறமையால் ஒரு கட்சி மாற்றுக்கட்சியாக மாற முடியுமா? ஆளும் கட்சி மீதான வெறுப்பு என்ற ஒன்று மட்டுமே மாற்று அரசியலுக்குக் கருவியாக முடியுமா? மாற்று தேடி அலையும் மக்களுக்கு ஓர் அவசர மருந்துபோல் தென்படும் ஒரு கட்சி நிலைப்பு உண்மையல்ல என்பதையே விஜயகாந்த் எனும் ஒரு மனிதர் உருவாக்கிய கட்சியின் இன்றைய நிலை நிரூபிக்கிறது.

இரஜினிகாந்த், விஜயகாந்த் எனும் இரு பிரபல நடிகர்களுமே ஆழமான மதப்பற்றுடையோர். இருவருமே எச்சூழ்நிலைகளிலும் நம் நாட்டில் நிலவும் சாதிய மேலாதிக்கத்தை, சாதியின் பெயரால் நடக்கும் வன்கொடுமைகளைச் சாடியதே இல்லை. குறிப்பாக, ஒன்றிய அரசின் மதவாதப் போக்கினையோ, மதவாதக் கொள்கையால் நாளும் பாதிக்கப்படும் மதச்சிறுபான்மையினர், தலித் மக்கள் பாதுகாப்புப் பற்றியோ பேசியதே இல்லை.

இவர்களின் வரிசையில் இன்னொருவர் பற்றி பேசாமல் இக்கட்டுரை முழுமை பெறாது. ‘தமிழ்த் தேசியம்’ என்ற பெயரில் நாளும் பொழுதும் பகை எனும் நச்சினை உமிழ்ந்து, பல்லாயிரம் இளைஞர்களைத் திசைதிருப்பிக் கட்சி நடத்தும் சீமான்! இவர் தமிழ்த் தேசியம் பற்றிப் பேசுவதை நாம் எதிர்க்கவில்லை. பா.ச.க.வின் இந்து தேசியம் தமிழ்த் தேசியத்திற்கு எதிர் என்பதே உண்மையாயிருக்க, திராவிடக் கொள்கை மட்டுமே தமிழ்த் தேசியத்திற்கு எதிரானதாகக் காட்டிப் பிழைப்பு நடத்திவரும் இவரிடம் தமிழர்கள் விழிப்பாக இருக்க வேண்டும். பெரும்பான்மைவாதச் சித்தாந்தத்தைக் கொண்டு பகை அரசியல் நடத்தும் மதவாதப் பாரதிய சனதாவின் உற்றத் தோழனாக, பெரும்பான்மை மத அடையாளத்தைச் சிதறாமல் காத்து வரும் இவர் எப்படித் தமிழ்த் தேசியத்தை வளர்க்கப் போகிறார்?

அண்மை ‘ஆனந்த விகடன்’ வார இதழில் பிரபல சமூகச் செயல்பாட்டாளர் யோகேந்திர யாதவ் அருமையான கட்டுரை ஒன்று எழுதி வருகிறார். இன்றைய நிலையை ‘அரசியல் சிந்தனையின் அவலச் சிதைவு’ என்றும், ‘அரசியல் தலைவர்களின் அறிவுசார் வறட்சி’ என்றும், ‘அரசியல் நேர்மையும் நெறியும் இல்லை’ என்றும், ‘இன்று அரசியல் சிந்தனை மரணித்து விட்டது’ என்றும் கவலையோடு கூறுகிறார்.

இச்சூழலில் தளபதி விஜய் என்ன தரப்போகிறார்? இவர் முன்வைக்கும் மாற்று அரசியலுக்கான சித்தாந்தம் என்ன? இவர் கருணை உள்ளவராக இருக்கலாம். அப்படியாயின், இவர் ஒரு கருணை இல்லம் நடத்தட்டும். மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் அக்கறை உள்ளவராக இருக்கலாம். அப்படியானால் கல்வி நிறுவனங்களைத் துவங்கி இலவசக் கல்விச் சேவை செய்யட்டும்.

விஜய் அவர்களே, இன்று இந்தியா மிகக் கடுமையான சூழலைச் சந்தித்து வருகிறது. சனநாயகமா? சர்வாதிகாரமா? சமயச் சார்பின்மையா? மதவாதமா? நீவிர் தெளிவாக இல்லையெனில், நடுநிலைத் தவிர்த்து, எதார்த்தங்களைக் கண்டுகொள்ளாமல், நீங்கள் எடுக்கும் முடிவுகள் மிக முக்கியமானவை. ஒரு திரைப்படத்திற்கு நீங்கள் பெறும் பெருமளவிலான பணத்தை வீணடித்து விடாமல், தனித்தக் கொள்கையுடைய அரசியலுக்குத் துணை நில்லுங்கள். இல்லையெனில், கர்ஜிக்கும் சிங்கம் போன்ற வகுப்புவாதச் சக்திகள் உங்களை விழுங்கிவிடும்... எச்சரிக்கை!

மேலே சுட்டிக்காட்டிய கட்சிகளின் வரலாறு உங்களுக்குப் பாடமாகட்டும். இளையவரான நீங்கள் அவசரப்பட வேண்டாம். கொள்கையெனும் நங்கூரம் உங்கள் கட்சியின் கவசமாகட்டும்.

‘கொள்கையா? அது என்ன?’ என்கிறீர்களா... தயவுசெய்து என்னவென்று கேளுங்கள். மற்றொரு வெற்று அரசியலில் சிக்கி வீழ மக்கள் தயாரில்லை.

Comment