No icon

பொதுக்காலம் 25-ஆம் ஞாயிறு (22-09-2024)

சாஞா 2:17-20; யாக்கோபு 3: 16-4:3; மாற்கு 9: 30-37

திருப்பலி முன்னுரை

சுயநலம் என்பது ஒவ்வொருவரும் தமது நலன்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து செயல்படுவதைக் குறிக்கிறது. சுயநலவாதிகள் தங்களுக்கு மட்டுமே நல்லவர்களாக இருக்கிறார்கள். மற்றவர்களைப்  பற்றி நினைப்பதில்லை. நம் வாழ்க்கை எப்போதும் சுயநலமாக இருந்தால் நீடித்த மகிழ்ச்சி இல்லை. சிறுவன் ஆபேலின் காணிக்கையானது சுயநலமற்றக் காணிக்கையாக இருந்தது. அதனால் இறைவன் ஏற்றுக்கொண்டார். சிறுவன் தாவீது தனது உயிரைப் பெரிதாக நினைக்காமல் மக்களின் விடுதலைக்காக, கோலியாத்தை எதிர்த்துப் போராடினார். சிறுவன் சாமுவேல் தன் வாழ்வை இறைப் பணிக்காக அர்ப்பணித்தார். ஐயாயிரம் மக்களுக்கு உணவைப் பகிர்ந்து கொடுக்கும்போது, பெயர் பதிவு செய்யப்படாத சிறுவன், தான் வைத்திருந்த ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் கொடுத்தான். இப்படியாக, சுயநலமற்றச் சிறுவர்களைத் திருவிவிலியம் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. இன்றைய நற்செய்தியிலும்யார் பெரியவர்?’ என்று இயேசுவின் சீடர்கள் சுயநலத்தோடு வாதாடிக் கொண்டிருக்கும்போது சிறுபிள்ளையை முன்நிறுத்தி, சுயநலமற்ற வாழ்வை வாழ அழைப்புக் கொடுக்கின்றார் இயேசு. எனவே, நாமும் சுயநலமுள்ள வாழ்வின் முறையை விட்டுவிட்டு, பொதுநலத்தோடு வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசக முன்னுரை

இறைப்பற்றில்லாதவர்கள் தங்கள் உள்ளத்தில் எப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள் என்பதை முதல் வாசகம் எடுத்துரைக்கின்றது. சாலமோனின் ஞானம் கிரேக்கர்களுக்கு எழுதப்பட்டமையால், கிரேக்கக் கலாச்சாரத்தின் தீமைகளை மறைமுகமாகச் சாடுகின்றார். நீதிமான்களுக்குத் துன்பம் வருகிறது, பொல்லாப்புகள் வருகின்றது, பகைவர்களிடம் துன்பப்படுகிறார்கள். ‘யார் அவர்களைப் பாதுகாப்பார்?’ என்ற இறைப்பற்றில்லாதவர்களின் கிண்டல் பேச்சு முதல் வாசகமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. அதனைக் கவனமுடன் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

சுயநலம் இன்று மட்டுமல்ல, தொடக்கக் காலத் திரு அவையிலும் இருந்துள்ளது. சுயநலம் அனைத்து விதமான தீமைகளுக்கும் காரணமாக இருந்திருக்கிறது. சுயநலமற்ற உலகம் அமைதியான உலகம் என்பார்கள். அந்த அமைதிக்கும் நீதிக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. தற்கால மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் மானிடவியலாளர்கள், அமைதி ஏற்படுத்த நீதிதான் மிகப்பெரிய ஆயுதம் என்கிறார்கள். சிற்றின்பம் தரும் வேண்டுதலைத் தவிர்த்து, சண்டை சச்சரவில்லா அமைதியான வாழ்வைப் பெற முயல வேண்டுமென்று எடுத்துரைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா! இவ்வுலகத்தில் இயற்கையோடு வாழ நீர் எங்களைப் படைத்தீர். இயற்கை வளங்களைச் சுரண்டும் பகைவர்களிடமிருந்து, இயற்கை வளத்தைக் காப்பாற்ற எங்களுக்குத் தேவையான அருளைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. உண்மையை எடுத்துரைக்கும் ஆண்டவரே! சுயநல உள்ளத்தோடு வாழும் எங்களுக்குப் பிறரை அன்பு செய்து, பிறரின் உரிமைகளை மதிக்கவும், பிறருக்கு உதவி செய்து வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. வல்லமையான தலைவராம் எம் இறைவா! எங்களை ஆண்டு நடத்தும் ஆன்மிகத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், சமூகத் தலைவர்கள் சுயநலமின்றி, பொதுநலத்துடன் வாழ அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. வழிநடத்தும் வள்ளலே எம் இறைவா! எம் குடும்பத்தை வழிநடத்தும் எம் பெற்றோர்களை ஆசிர்வதித்து, நல்வழியில் எங்களை வழிநடத்தத் தேவையான அருள் வரத்தைத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

Comment