No icon

பொதுக்காலம் 22 -ஆம் ஞாயிறு (01-09-2024)

இச 4:1-2,6-8; யாக் 1:17-18,21-22,27; மாற்கு 7:1-8,14-15,21-23

திருப்பலி முன்னுரை

அரசியலமைப்பு தவறாகப் பயன்படுத்தப்படுவதைக் கண்டால், அதை எரிக்கும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன்என்கிறார் இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கர். மிருகத் தன்மையிலிருந்து மனிதத்தன்மைக்குக் கடந்துவர நமக்கு உதவியாக இருப்பது சட்டங்கள். நம்மை நெறிப்படுத்தவும், பிறருடன் இணக்கமான வாழ்வை வாழ உதவி செய்வதும் சட்டங்கள் மட்டும்தான். தற்காலத்தில் இயற்கையான சட்டங்கள், மனிதனால் உருவாக்கப்பட்ட சட்டங்கள் எனப் பலவகையான சட்டங்களை நாம் பின்பற்றி வருகிறோம். அதில், இன்றும் மிகவும் உயர்ந்து இருப்பது இறைச்சட்டம்துன்புறும் அனாதைகளையும், கைம்பெண்களையும் கவனிப்பதற்கும், எதிரிகளை நேசிப்பதற்கும், கறைபடியாத வாழ்வு வாழச் செய்ய உதவியாக இருப்பது இறைச்சட்டம். இன்றைய முதல் வாசகம்நான் உங்களுக்குக் கட்டளையிட்டுச் சொல்பவற்றோடு எதையும் சேர்க்க வேண்டாம்; அதிலிருந்து எதையும் நீக்கவும் வேண்டாம்என்கிறது. இரண்டாம் வாசகம் இறைவார்த்தையான திருச்சட்டத்தைக் கடைப்பிடிக்கின்ற மக்களாக வாழ அழைப்பு கொடுக்கிறதுமரபுகளைப் பின்பற்றி மனிதர்களைக் கைவிடக்கூடாது என்கிறது இன்றைய நற்செய்தி. எனவே, இறைச்சட்டத்தைக் கற்று, அதனைக் கடைப்பிடிக்கின்ற மக்களாக வாழ வரம் வேண்டி செபிப்போம்.

முதல் வாசக முன்னுரை

பலதரப்பட்ட இனங்களைவிட இஸ்ரயேல் இனம் சிறந்து விளங்குகிறது. காரணம், அவர்களிடத்தில் உள்ள நியமங்கள். அந்த நியமங்கள் கடவுளால் கொடுக்கப்பட்டவை. சட்டங்கள், விதிமுறைகள், நியமங்கள் அனைத்தும் மக்களை ஒழுங்குபடுத்தவும் நெறிப்படுத்தவும் கொடுக்கப்பட்டவை. அதற்கும் மேலாக, கடவுள் இஸ்ரயேல் மக்கள்மீது அளவற்ற அன்பு கொண்டுள்ளார் என்பது அவர் கொடுத்த நியமங்களில் வெளிப்படுத்தப்படுகிறது. கடவுள் கொடுத்த சட்டத்தைத் திருத்தவோ, மாற்றவோ யாருக்கும் அனுமதியில்லை. இறைவன் கொடுத்த சட்டத்தைக் கடைப்பிடிப்போர் யாவரும் ஞானமிக்கவர்கள் என்று வெளிப்படுத்தும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

ஒரு பொய்யைக் காப்பாற்ற பல பொய்கள் தேவைப்படும். ஆனால், உண்மையைக் காப்பாற்ற ஒரே ஓர் உண்மை மட்டும் போதும். உண்மையே இறைவன். அவரிடம் வெளிப்படும் வார்த்தையும் உண்மையே. இறைவார்த்தையை நாள்தோறும் பல்வேறு வடிவங்களில் கேட்கின்ற நாம், இறைவார்த்தையின்படி நம் வாழ்வு அமைந்திருக்கின்றதா? என்று உள்ளத்தில் கேள்வி கேட்க உதவி செய்யும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டு

1. இறைவார்த்தையை எம் உள்ளத்தில் ஊன்றிய ஆண்டவரே! வாழ்வு தரும் இறைவார்த்தையை நாள்தோறும் வாசிக்கவும், அதனைக் கடைப்பிடிக்கவும் ஆற்றலும் வல்லமையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அன்பையும் பண்பையும் எம்முள் விதைத்த ஆண்டவரே! உம்மைப்போல படைப்பு அனைத்தையும் அன்பு செய்யவும், அதனைப் பாதுகாக்கவும், நேசிக்கவும் தடையாய் இருக்கும் காரணிகளை அகற்றி, உம்மைப்போல் வாழ அருளைத் தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. தலைமுறைதோறும் ஆசிர்வதிப்பவரே எம் இறைவா! எம் பிள்ளைகளுக்காகச் செபிக்கிறோம். எம் பிள்ளைகளுக்குத் தேவையான உடல்நலனையும், மனநலனையும், நல்ல எண்ணங்களையும், இறை உணர்வையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. அன்பே உருவான இறைவா! நாங்கள் வாழும் பகுதியில் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக மன்றாடுகிறோம். விளிம்பில் இருக்கும் மக்கள் மையத்தை நோக்கி வரத் தடையாக இருக்கும் காரணிகளை நீக்கி, சுயமரியாதையோடு வாழ அருளைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

Comment