சிந்தனைச் சிதறல் – 18
அதிஷி மர்லேனா டம்மி முதல்வரா? டாப் முதல்வரா?
டெல்லி முன்னாள் முதலமைச்சரும், ‘ஆம் ஆத்மி’ கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்தார். நீண்ட சட்டப் போருக்குப் பிறகு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஜாமீனில் வெளியே வந்தார் கெஜ்ரிவால். மக்கள் தன்னை நேர்மையானவர் எனச் சான்றிதழ் வழங்கும் வரை நான் முதலமைச்சராகப் பதவி வகிக்கப் போவதில்லை எனத் தெரிவித்து, முதலமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார். அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் செப்டம்பர் 17 -ஆம் தேதி ‘ஆம் ஆத்மி’ சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் அதிஷி பெயரை முதலமைச்சர் தேர்வுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் முன்மொழிந்தார். அதற்கு ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களும் ஆதரவு தெரிவித்தனர். அதிஷி ஆம் ஆத்மி சட்டமன்றக் குழுத் தலைவராகவும் முதலமைச்சராகவும் தேர்வு செய்யப்பட்டார். செப்டம்பர் 21 -ஆம் தேதி முதலமைச்சராகப் பதவியேற்றார்.
இந்தியாவில் தற்போது இரண்டு பெண் முதலமைச்சர்கள் உள்ளனர். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, டெல்லியில் அதிஷி என்பது குறிப்பிடத்தக்கது. சுஷ்மா ஸ்வராஜ், ஷீலா தீட்சித் ஆகியோர் வரிசையில் டெல்லியின் மூன்றாவது பெண் முதலமைச்சர் பட்டியலில் அதிஷி இணைந்துள்ளார்.
இவர் ஜூன் 8, 1981 அன்று பிறந்தவர். அதிஷி மர்லேனா என்பதில் மர்லேனா என்பது மார்க்ஸ் மற்றும் லெனின் பெயர்களின் கலவையாகும். இவரது பெற்றோர்களான விஜய் சிங் மற்றும் திரிப்தா வாஹி இருவரும் டெல்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களாக உள்ளனர். இவரது கல்விப் பயணம் டெல்லியில் தொடங்கியது, அங்கு பூசா சாலையில் உள்ள ஸ்பிரிங்டேல்ஸ் பள்ளியில் உயர்நிலைப்பள்ளி கல்வியை முடித்தார். 2001-ஆம் ஆண்டில், புகழ்பெற்ற புனித ஸ்டீபன் கல்லூரியில் வரலாற்றில் இளங்கலைப் பட்டம் பெற்றார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தனது கல்வியை மேம்படுத்தினார். 2003 -ஆம் ஆண்டில் வரலாற்றுத் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
அதிஷியின் அரசியல் வாழ்க்கை ஜனவரி 2013 -இல் ‘ஆம் ஆத்மி’ கட்சியில் சேர்ந்தபோது தொடங்கியது. 2015 -ஆம் ஆண்டில் மத்தியப் பிரதேசத்தின் கந்த்வா மாவட்டத்தில் நடந்த ஜல் சத்தியாக்கிரகத்தின்போது இவரது செயல்பாடு முக்கியத்துவம் பெற்றது. அங்கு போராட்டங்கள் மற்றும் அடுத்தடுத்த சட்ட சவால்களின்போது ஆம் ஆத்மி தலைவர் அலோக் அகர்வாலை ஆதரித்தார் அதிஷி.
2019 மக்களவைத் தேர்தலுக்காக அதிஷி டெல்லியின் கிழக்கு மக்களவைப் பொறுப்பாளராகவும் வேட்பாளராகவும் நியமிக்கப்பட்டார். மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட இவர் பா.ச.க. வேட்பாளர் கவுதம் கம்பீரிடம் 4.77 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். 2020 டெல்லி சட்ட மன்றத் தேர்தலில் தெற்கு டெல்லியில் உள்ள கல்காஜி தொகுதியில் போட்டியிட்டவர், பா.ச.க. வேட்பாளர் தரம்பீர் சிங்கை 11,422 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்த வெற்றி டெல்லி அரசில் அவரை முக்கியத் தலைவராக்கியது.
தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, அதிஷி டெல்லி அரசாங்கத்தில் அமைச்சராகச் சேர்க்கப்பட்டார். 2022-23 காலகட்டத்தில் பொதுக்கணக்குக் குழுவின் தலைவராகப் பணியாற்றினார். பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன், சிறுபான்மையினர் நலன் மற்றும் கல்வி உள்ளிட்ட பல குழுக்களுடன் தொடர்பு கொண்டிருந்தார். துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் இராஜினாமா செய்த பிறகு காலியாக இருந்த பொறுப்புகளைக் கூடுதலாகக் கவனித்தார். நிதி, கல்வி, பொதுப்பணித்துறை, மின்சாரம் மற்றும் நீர் போன்ற 14 முக்கிய இலாகாக்களைக் கையாண்டார். இந்த விரிவான பொறுப்பு, அமைச்சரவையில் இவர் எவ்வளவு ஈடுபாடு காட்டியுள்ளார் என்பதைக் காட்டுகிறது.
டெல்லியில் உள்ள அரசுப் பள்ளிகளில் கற்பித்தல் தரத்தை அதிகரிப்பதில் பெரிய பங்கையாற்றியுள்ளார் அதிஷி. அரசு ஆசிரியர்களின் பயிற்சியை மேம்படுத்த முயற்சித்துள்ளார், இதனால் ஆசிரியர்கள் தரமான கல்வியை வழங்க சிறந்த நிலையில் உள்ளனர். கற்பவர்களுக்கு இலவசப் பாடப்புத்தகங்களும் சீருடைகளும் வழங்கத் திட்டமிட்டார். இது மாணவர்களுக்கான சீருடைகளின் செலவுகளைக் குறைக்க பெரிதும் உதவியது. எனவே, ஏழை எளிய மாணக்கர்கள் பள்ளிக்கு வருவது அதிகரித்தது. மாணவர்களின் நுண்ணறிவை மேம்படுத்த புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தினார் அதிஷி. அரசாங்கத்திற்கு நெருக்கடி வந்தபோது திறமையோடு கையாண்டார். கெஜ்ரிவால் சிறையிலிருந்தபோது நிர்வாகத்தைக் கவனித்துக் கொண்டார். டெல்லியில் தண்ணீர் நெருக்கடிக்கு எதிர்ப்பு தெரிவித்து, உண்ணாவிரதம் மேற்கொண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். 2024 -ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது ஆம் ஆத்மி கட்சி சார்பில் பிரச்சாரங்களுக்குத் தலைமை தாங்கினார்.
மர்லேனா ஒரு கல்வி பின்னணியில் இருந்து டெல்லியின் முதல்வராக ஆனது வரையிலான பயணம், எளிமையான பயணமோ, இலகுவான பயணமோ கிடையாது. ஏழை, எளிய இந்தியக் குடிமகனின் / குடிமகளின் உரிமையை நிலைநாட்ட வந்த பயணம். பணமும் அதிகாரமும் நிறைந்த இந்திய அரசியலில் எளிமையான பின்னணியிலிருந்து வந்து உயர்ந்திருக்கும் டெல்லி முதல்வர் அதிஷி அவர்களின் ஆளுமை மிகப்பெரியது.
“ஒரு பொம்மை நபரை தற்காலிக டெல்லி முதல்வராக்க அரவிந்த் கெஜ்ரிவால் விரும்புகிறார். அவருக்குத் தனது கட்சிமீது நம்பிக்கை இல்லை, அதனால்தான் கட்சியில் தன்னை விட பலவீனமான ஒருவரை முதல்வராக்க விரும்புகிறார்” என்று பா.ச.க. தேசியச் செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி தெரிவித்துள்ளார். பா.ச.க. செய்தித் தொடர்பாளர் கோபால கிருஷ்ண அகர்வால், “கெஜ்ரிவாலின் சொந்தக் கட்சிக்குள்ளேயே அவரது வாரிசான அதிஷி ஒரு தீவிர வேட்பாளராகக் கருதப்படுவதைவிட ஒரு ‘டம்மி’ என்று கருதப்படுகிறார். டம்மி முதல்வர் அதிஷியை நான் வாழ்த்துகிறேன். இதற்குப் பிறகும் டெல்லியில் நிலைமை மாறாது; ஊழல் உச்சத்தில் இருக்கும். முன்கூட்டியே தேர்தலைப் பரிந்துரைக்குமாறு அதிஷிக்கு நான் சவால் விடுக்கிறேன்” என்று பா.ச.க. தலைவர் ஹரீஷ் குரானா தெரிவித்துள்ளார். இப்படிப்பட்ட விமர்சனங்களுக்கு அதிஷி தன்னுடைய செயல்களால் பதில் அளிப்பாரா? காலம் பதில் சொல்லட்டும்.
Comment