No icon

வாழ்வு வளம்பெற – 30

பொருத்தம் இல்லையேல் வருத்தம்

தான் காதலித்து மணந்த பெண்ணை, அவள் பிறந்த மூன்றாம் நாளிலேயே பார்த்த ஆண் இவர் என்றால் நம்புவீர்களா? ஜிம்மி கார்ட்டரின் தாய், இந்தப் பெண்ணின் தாய் பிரசவ வேதனையில் துடித்தபோது உடனிருந்து உதவி செய்து, எக்குறையுமின்றி குழந்தை பிறக்கச் செய்தவர். குழந்தை பிறந்த மூன்றாம் நாள், தன் மூன்று வயது மகன் ஜிம்மியை அழைத்துக் கொண்டு தாயும் பிள்ளையும் எப்படியிருக்கிறார்கள் என்று பார்க்க அவர்கள் வீட்டிற்குச் சென்றபோது ஜிம்மி ரோஸலினை முதன்முறையாகப் பார்த்தார்.

இருவரும் வளர்ந்து இளமை எய்தியபோது, ஜிம்மியின் தங்கை ரூத்தும், ரோஸலினும் நெருங்கிய சிநேகிதிகளாக இருந்ததால் ரோஸலின் அடிக்கடி ஜிம்மியின் வீட்டுக்கு வந்தார். ரூத்தின் அறையில் இருந்த ஜிம்மியின் புகைப்படத்தைப் பார்த்ததுமே காதல் அரும்பி விட்டது.

ஜிம்மிக்கு 21 வயதும், ரோஸலினுக்கு 19 வயதும் ஆனபோது அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். பின்னாளில், ஜிம்மி கார்ட்டர் அரசியலில் நுழைந்து 1976-இல் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்க ஜனாதிபதியாக ஆனார்நாட்டு மக்களின் மனங்களை வென்ற மிக நல்ல மனிதரான ஜிம்மி கார்ட்டர் நான்காண்டுகளுக்குப் பிறகு நடந்த தேர்தலில் தோற்று சொந்த ஊருக்குத் திரும்பினாலும், கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து பல்வேறு நற்பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டனர்.

அன்பு சிறிதும் குறையாத அதிசயத் தம்பதிகளாய் அவர்கள் இருந்தனர். அவர்களின் 77 ஆண்டுத் திருமண வாழ்வு 2023, நவம்பர் 19 அன்று ரோஸலின் இறந்தபோதுதான் முடிந்தது.

தனி மனிதராக, நாடாளுமன்ற உறுப்பினராக, அமெரிக்க அதிபராக அவர் செய்து முடித்த சாதனைகளிலே மிகச்சிறந்த சாதனை எது என்று யார் கேட்டாலும், தனது திருமண வாழ்வே தனது மிகப்பெரிய சாதனை என்று சொன்னவர் ஜிம்மி கார்ட்டர்.

இருவரும் சேர்ந்து எங்கு சென்றாலும் அவர்களைப் பார்த்தவர்கள் எல்லாம், ‘என்ன ஜோடிப் பொருத்தம்!’ என்று சொல்லி வியந்தனர்.

பொருத்தம் என்றால் சமயம், சாதி, சமூக அந்தஸ்து, வயது, உயரம், நிறம் ஆகியவற்றைச் சார்ந்தது என்று பலர் நினைக்கின்றனர். ஆனால், இவற்றில் எல்லாம் பொருத்தம் இருந்தாலும், திருமண வாழ்வில் தோற்றுப் போனவர்களை நாம் அறிந்திருப்போம். இவற்றில் உள்ள பொருத்தம் திருமணம் வெற்றி பெற ஓரளவுக்குத்தான் உதவ முடியும்.

திருமணம் வெற்றிபெற இன்றியமையாதது மற்றொரு பொருத்தம். அது மனப் பொருத்தம். இந்த மனப் பொருத்தம் சிறிதும் இல்லாமல் மற்றக் காரணங்களுக்காகத் திருமணம் செய்து கொள்வோர் அன்றாடம் சண்டை சச்சரவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். இவை ஏற்படுத்துகிற மன உளைச்சல் மணமுறிவுக்கு இட்டுச் செல்லக்கூடும்.

நீதிமன்றம் தருகிற மணமுறிவைத் தேடாவிட்டாலும், மனம் முறிந்து வாழும் இணையர் பலர். எப்போதும் தங்கியிருக்கும் மனக் கசப்போடும், விரக்தியோடும் அவர்கள் காலம் தள்ளுகின்றனர். ‘இனிமேல் இந்தத் திருமணத்தில் எனக்கென்று எதிர்பார்ப்பதற்கு ஒன்றுமில்லை. குழந்தைகளுக்காக இந்த நபரை விட்டுப் பிரிந்து போகாமல் இதே வீட்டில் இருப்பேன்என்று தீர்மானிப்போர் இருக்கிறார்கள். ‘என்மீது அக்கறை கொண்டோர் யாருமில்லை. பெற்றோர், உடன்பிறந்தோர் இருந்தாலும் இந்தத் திருமணத்தை முறித்துக் கொண்டு அவர்களிடம் போனால், என்னை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்’, ‘யார் இந்த வயதில் எனக்கு வேலை தருவார்கள்?’, ‘நான் எப்படிப் பிழைப்பேன்?’ என்று பல்வேறு காரணங்களுக்காக மண முறிவு தேடாவிட்டாலும், முறிந்த மனத்தோடு கசந்த வாழ்வு வாழ்வோர் பலர்.

இந்த இரண்டு முறிவுகளையும் தவிர்க்க திருமணத்திற்கு முன் இளையோரும், அவர்களைச் சார்ந்தோரும் மற்றொரு முக்கியமான பொருத்தம் இருக்கிறதா என்று தேட வேண்டும். அதுதான் மனப் பொருத்தம்.

மனப் பொருத்தம் எதைச் சார்ந்தது? இலட்சியங்கள் நமது வாழ்வின் இலக்குகளாக நாம் கருதுபவை. இவற்றை அடைவதே நமது வாழ்வின் குறிக்கோள் என நாம் எண்ணுகிறோம். எனவே மனப் பொருத்தம் முதலில் இருவரது இலட்சியங்களைச் சார்ந்தது. ‘எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம், எவ்வளவு சொத்தும் பணமும் சேர்க்க முடியுமோ அவ்வளவு சேர்த்து, எல்லா வசதிகளோடு செல்வச் செழிப்பில் வாழ்வதே என் இலட்சியம்என ஆண் இருக்கலாம். அவனை மணந்து கொண்ட பெண், ‘எதுக்குங்க இவ்வளவு சொத்து? உங்களுக்கு நான். எனக்கு நீங்க. நமக்கு ரெண்டு குழந்தைங்க. அதனால ஒரு சிறிய வீடு, தேவைகளை நிறைவேற்ற கொஞ்சம் பணம்இது போதாதா? ஏன் பணம், பணம்னு ஓடியோடி ஓய்ஞ்சு போகணும்? இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியா இருப்போமே!’ என்று நினைப்பவளாகப் பெண் இருந்தால் இவர்களுக்கிடையே மனப் பொருத்தம் இல்லை.

அடுத்து விழுமியங்கள். இவை நாம் எந்நாளும் கடைப்பிடிக்க வேண்டும் என்று நினைக்கும் அளவுக்கு முக்கியமான கோட்பாடுகள். எந்த ஒரு செயலும் உகந்ததா, இல்லையா என்பதை நமது விழுமியங்களின் அடிப்படையில்தான் நாம் தீர்மானிக்கிறோம்.

ஆணுக்கு நேர்மை ஒரு முக்கியமான விழுமியம் என்றால், ஒருபோதும் கையூட்டு தேட மாட் டான். வலிய வந்து பிறர் கொடுத்தாலும் இலஞ்சம் வாங்க மாட்டான். பெண்ணுக்கு நேர்மை ஒரு விழுமியமே இல்லை என்றால், இத்தகைய கணவனைப் பற்றி என்ன நினைப்பாள்? ‘இப்படிப் பிழைக்கத் தெரியாத ஓர் ஆளைப் போய்க் கல்யாணம் பண்ணியிருக்கேனே! இந்த ஆளோட தம்பி வீட்டைப் போய்ப் பார்த்துட்டு வந்து பேசுங்க. அரண்மனை மாதிரி வீடு கட்டியிருக்கான். எப்படிக் கட்டினான்? அவ்வளவும் கிம்பளம், இலஞ்சம்என்று பொருமிக் கொண்டே கணவரைப் பார்க்கும் போதெல்லாம் அவரை ஏளனம் பேசி, இகழ்ந்துகொண்டே இருப்பாள்.

மனப் பொருத்தத்தின் மற்றோர் அம்சம் உணர்வுகள் சார்ந்தது. உணர்வுகளில் பொருத்தம் இருந்தால் ஒரு நிகழ்வு அல்லது ஓர் அனுபவம் ஒரே மாதிரியான உணர்வை ஏற்படுத்தும். உணர்வுப் பொருத்தம் இல்லாத இணையருக்கு ஒரே நிகழ்வு முற்றிலும் எதிரான உணர்வுகளைத் தோற்றுவிக்கும்.

ஒரே நிகழ்ச்சி, ஒரே அனுபவம் இணையர் இருவரில் மாறுபட்ட உணர்வுகளைத் தோற்றுவிப்பதற்கு ஒரு காரணம் அவர்களின் அடிப்படைக் குணநலன்கள் மாறுபட்டதாக இருக்கலாம். ஆண் சின்னச் சின்னக் காரியங்களுக்குக் கூட எரிச்சலும் கோபமும் கொள்கிறவன்; பெண் நல்லதே நடக்கும் என்று நம்பி பொறுமையாய், அமைதியாய் இருப்பவள் என்று வைத்துக்கொள்வோம். போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு கார் ஓரிடத்திலேயே பதினைந்து நிமிடம் நிற்கிறது. கணவன் எரிச்சலடைந்து அனைவரையும் திட்டத் தொடங்குகிறான். மனைவி, “ஏங்க, நீங்கள் எரிச்சல்பட்டு இப்போ என்ன ஆகப் போகுது? இந்தாங்க. இந்தப் பென்ட்ரைவைப் போடுங்க. எல்லாம் அருமையான பாட்டு. கேட்டிருக்கவேமாட்டீங்க. பாட்டு கேட்குறதுக்குக் கடவுள் கொடுத்த வாய்ப்புன்னு நினைச்சுட்டு அமைதியா கேளுங்க. பாட்டு முடியறதுக்கு முன்னாடி போக்குவரத்து சரியாயிடும்என்கிறாள்.

மற்றொரு வீட்டில் பெண் எல்லாவற்றிற்கும் பதறுபவள், ஆண் நிதானமிழக்காதவன் என்றால் என்ன நிகழும்? மகளுக்கு உடல் நலமில்லையென்று மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்கள். “ஏங்க, கொஞ்சம் வேகமா ஓட்டமாட்டீங்களா? என் பிள்ளைக்கு என்ன ஆகப் போகுதோ?’ என்று புலம்பத் தொடங்க, கணவன் என்ன சொல்லுவான்? “இங்க பாரு, நம்ம பிள்ளைக்கு ஒன்றும் ஆகாது. நம்மளைக் கடவுள் கைவிட மாட்டார். இப்படிக் கதறிக் கூப்பாடுபோட்டு, ஆஸ்பத்திரியில ஒரு கலவரத்தை ஏற்படுத்திடாதே!”

இப்படி அடிப்படைக் குணநலன்கள் மாறுபட்டிருப்பதால் உணர்வுகள் வேறுபடுகின்றன என்றால் அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை. ஒருவரை நெறிப்படுத்த, அமைதிப்படுத்த மற்றொருவர் உதவலாம். ஆனால், உணர்வுகள் வேறுபடுவதற்கு விழுமியப் பொருத்தம் இல்லை என்றால், அது ஆபத்தானது. ‘வல்லுறவு என்பது பெண்ணுக்கெதிரான பெருங்குற்றம்என்று பெண்ணும், ‘இது ஒன்றும் பெரிய விஷயமே இல்லைஎன்று ஆணும் நினைத்தால் அவர்களின் விழுமியங்களில், அறநெறிக் கண்ணோட்டங்களில் பெரும் வேறுபாடு உள்ளது எனப் பொருள். இதனால் அடுத்தவரின் மீதுள்ள மதிப்பும் அன்பும் குறைந்துகொண்டே வந்து, மனதளவில் அவரை விட்டு விலகத் தொடங்குவார்கள்.

மனப் பொருத்தத்தின் நான்காவது அம்சம் பழக்கவழக்கங்களைச் சார்ந்தது. மனப் பொருத்தம் இருந்தால் ஆண், பெண் இருவருக்கும் அதே நல்ல பழக்கங்கள் இருக்கும். ‘அவரிடம் உள்ள நல்ல பழக்கம் என்னிடம் இல்லையே, அதை நானும் வளர்த்துக்கொள்ள வேண்டாமாஎன்ற முனைப்பு வரும். மனப் பொருத்தம் இல்லாத இணையரின் பழக்கங்கள் முற்றிலும் மாறுபட்டிருக்கும். இருவரும் ஒரே கூரையின் கீழ் வாழ்ந்தாலும், முற்றிலும் மாறுபட்ட பழக்கங்களால் தனித்தனி வாழ்வை வாழ்ந்து கொண்டிருப்பர்.

இதனால்தான் திருமண வாழ்விற்குத் துணை அல்லது இணை தேடும் இளையோரும், அவர்களைச் சார்ந்தோரும் மனப் பொருத்தம் இருக்கிறதா எனத் தேடிக் காண வேண்டும். உயரம், நிறம், எடை இவை சார்ந்த பொருத்தத்தைப் பார்த்தவுடன் தெரிந்து கொள்ளலாம். ஆனால், மனப் பொருத்தத்தைக் கணிப்பது எளிதல்ல. அவசரப்பட்டுச் செய்கிற திருமணங்களில் இதைக் கணிக்க வாய்ப்பே இல்லை. ஆண், பெண் இருவரின் பேச்சு, செயல்கள், பழக்கங்கள் இவற்றைக் கவனமாகப் பார்த்துதான் மனப் பொருத்தத்தைக் கணிக்க முடியும்.

கவனிக்க வேண்டிய முக்கியமான ஒன்று என்ன தெரியுமா? திருமணத்திற்கு முன்பு எப்படிப் பொருத்தம் பார்க்க வேண்டுமோ அப்படித் திருமணத்திற்குப் பிறகு பொருத்தம் வளர்க்க வேண்டும். ‘இவளது இந்த இலட்சியம் எனது இலட்சியமாகவும் மாறினால் என்ன? இவரது இந்த நல்ல விழுமியம், என் விழுமியமாக ஆனாலென்ன? இவரது இந்த நல்ல பழக்கம் எனக்கும் இருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்!’ என்று முயன்று, முனைந்து மற்றவரைப் போல் மாறுவதன் மூலமே மனப் பொருத்தத்தை வளர்க்க முடியும்.

எனது இலட்சியங்கள், விழுமியங்கள், பழக்க வழக்கங்களில் எந்தக் குறையும் இல்லைஎன்ற எண்ணத்தை இருவரும் கைவிட்டு, மற்றவரிடம் உள்ள நல்லவற்றைத் தானும் அடைய முயன்று கணவருக்கேற்றவராய் மனைவியும், மனைவிக்கேற்றவராய் கணவனும் நாளுக்கு நாள் மாறுவது வெற்றி பெறும் திருமணங்களில் நிகழும் மகிழ்ச்சியான அதிசயம்.

ஜிம்மி கார்ட்டர்-ரோஸலினைப் போன்று உலகெங்கும் பல தம்பதிகள் இருக்கிறார்கள். அவர்களின் திருமணம் நிலைப்பதற்கும், வாழ்வின் வலிகளையும் சுமைகளையும் தாண்டி அவர்கள் மகிழ்ச்சியில் திளைப்பதற்கும் காரணம் அவர்களின் மனப் பொருத்தம்தான்.

(உங்கள் கருத்துகளை +91 9445006852 என்ற எண்ணிற்கு வாட்சாப் மூலம் எழுத்து வடிவிலோ அல்லது வாய்ஸ் மெசெஜ் வடிவிலோ அனுப்புங்கள்)

Comment