No icon

பொதுக்காலத்தின் 29 ஆம் ஞாயிறு (20-10-2024)

எசாயா 53:10-11; எபிரேயர் 4:14-16; மாற்கு 10:32.35-45

திருப்பலி முன்னுரை

இறைவன் விரும்பித் தரும் அருளை யாரும் தடுக்க முடியாது. இறைவன் தர விரும்பாத அருளை யாரும் வலிந்தும் பெற்றுக்கொள்ள முடியாது என்பது ஆன்மிகத்தின் அனுபவம். இன்று மறைப் பணி ஞாயிறை நாம் கொண்டாடுகிறோம். மறைப்பணி என்பது நம் அனைவருக்குமான இறைத்திட்டம். இறைத்திட்டம் எப்போதும் சிறந்தது. சில நேரங்களில் அத்திட்டம் கடினமாக இருந்தாலும், வலியைக் கொடுத்தாலும் இறுதியாக, இறைத்திட்டம் நன்மை பயக்கும். இயேசு ஆண்டவர் தலைமைக் குருவாக இருந்து சிலுவைச் சாவின் வழியாகப் பாவம் போக்கும் பலியை நிறைவேற்றினார். சிலுவைச் சாவு வலியைக் கொடுத்தாலும், வேதனையைத் தந்தாலும் அதனை ஏற்றுக் கொண்டார். அதனால் சிலுவைச் சாவின் நிறைவாக நமக்கு மீட்புக் கிடைத்தது. இன்றைய நற்செய்தியிலும் இயேசு ஆண்டவர், ‘என் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமரும்படி அருள்வது’ இறைவனின் செயல் என்பதை எடுத்துக்காட்டுகிறார். ‘இதோ ஆண்டவரின் அடிமை’ என்று இறைத்திட்டத்திற்குத் தன்னையே அர்பணித்த அன்னை மரியாவைப் போல, இறைத்திட்டத்தைத் தம் வாழ்வால் நிறைவேற்றிய இயேசுவைப் போல வாழ வரம் வேண்டி, இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசக முன்னுரை

துன்புறும் ஊழியன் தன்னுடைய துன்பத்தைக் குற்றநீக்கப் பலியாகக் கருதுகிறார். அதாவது, அவருடைய துன்பத்திற்குப் பலன் கிடைக்கும் என்கிறார். குற்றநீக்கப் பலியால் மக்கள் மீட்பு என்ற பலனை அடைவார்கள் என்று எடுத்துரைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

பாவம் போக்கும் பரிகாரச் சடங்கை நிறைவேற்றுபவர் தலைமைக் குரு. அத்தகைய தலைமைக் குருவின் பணியை நிறைவேற்றி, பாவமற்ற வாழ்வை வாழ்ந்த, உன்னதக்குரு நம் இயேசு ஆண்டவர் என்று இயேசு கிறிஸ்துவின் குருத்துவத்தின் மேன்மையை எடுத்துக்காட்டும் இரண்டாம் வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.            

மன்றாட்டுகள்

1. ஞானம் நிறைந்த இறைவா! உம் பிள்ளைகளாகிய நாங்கள் அறிவிலும், ஞானத்திலும், இரக்கத்திலும் உம்மைப் போல வாழவும், உம்முடைய இறையாட்சிக் கனவுகளை நிறைவேற்ற வரம்தர வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. ஒருவருக்கொருவர் நன்மை செய்து பரிவு காட்டுங்கள், கடவுள் உங்களைக் கிறிஸ்து வழியாக மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவரை ஒருவர் மன்னியுங்கள் என்று வழிகாட்டிய ஆண்டவரே! எங்களோடு உடன் இருப்பவர்களை மன்னித்து வாழ அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. ‘நல்ல ஆயன் நானே, நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார்’ என்று கூறிய ஆண்டவரே! எம்மை வழிநடத்தும் ஆன்மிகத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், சமூகத் தலைவர்களை ஆசிர்வதித்து, நல்ல மனத்தைத் தர வேண்டுமென்று  இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. ‘நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன்’ என்று மொழிந்த இறைவா! உம்மை விட்டு நாங்கள் பிரியாமல் வாழ வல்லமை தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

Comment