No icon

பொதுக்காலத்தின் 20-ஆம் ஞாயிறு (18-08-2024)

நீமொ 9:1-6; எபே 5:15-20; யோவா 6:51-58

திருப்பலி முன்னுரை

நற்கருணை திரு அவையின் உயிர்நாடி. திரு அவையின் முழு ஆன்மிகச் செல்வமும் அதில்தான் அடங்கியுள்ளது. ஏனென்றால், நற்கருணை முழு கிறிஸ்தவ வாழ்க்கையின் ஆதாரமும், உச்சமும் ஆகும். திருப்பலியும் நற்கருணையும் ஒரு கிறிஸ்தவனின் வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாதவை. அழிந்துபோகும் உணவுக்காக உழைப்பதைவிட, அழியாத உணவுக்காக உழைப்பதே சிறந்த ஞானம். “ஞானம் பவளத்தைவிட விலைமதிப்புள்ளது; உன் அரும்பொருள் எதுவும் அதற்கு நிகராகாதுஎன்று நீதிமொழி தெளிவுபடுத்துகிறது. எனவே, ஞானம் என்பது இறைவனால் கொடுக்கப்பட்டது. “ஞானம், அறிவுக்கூர்மை, அனுபவம், தொழில்திறமை அனைத்தும் அவனுக்கு உண்டாகுமாறு நான் அவனை இறை ஆவியால் நிரப்பியுள்ளேன்” (விப 31:3) என்று விடுதலைப் பயண நூலில் கடவுள் விளக்கியுள்ளார். உண்மையான செபத்தாலும், நன்மையான எண்ணத்தாலும், உதவிகரமான வாழ்க்கையாலும், அழியாத நற்கருணையை உட்கொள்வதாலும் நாம் இறை ஆவியால் நிரப்பப்பட முடியும். இறை ஆவியால் நாம் ஒவ்வொருவரும் நிரம்பி, இறை ஞானத்தைப் பெற்றுக்கொள்ள இத்திருப்பலியில் பக்தியோடு இணைவோம்.

முதல் வாசக முன்னுரை

ஞானத்தையும், மதிகேட்டையும் பற்றி முதல் வாசகம் எடுத்துரைக்கின்றது. ஞானம் என்பது இங்கு ஒரு பெண்ணாக வர்ணிக்கப்படுகிறது. மதிகேடு திருவிவிலியத்தில் ஞானத்திற்கு எதிர்ப்பதமாகவும், தீயவர்களுக்கான வாழ்க்கை முறையாகவும் பார்க்கப்படுகிறது. ஞானம் கடவுளின் பண்பாகவும், கடவுளை அடைய எளிய முறையாகவும் அடையாளப்படுத்தப்படுகின்றபோது, மதிகேடு ஒருவரைக் கடவுளிலிருந்து விலகிச் செல்லும் எதிர்க்காரணியாகப் பார்க்கப்படுகிறது. ஞானத்தால் வாழ்நாள் கூடுகின்றது, நன்மைத் தனங்கள் பெருகுகின்றன என்ற நம்பிக்கை தரும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

எபேசியர்கள் தங்கள் நடத்தையில் கவனமாக இருக்க வேண்டும் என்று பவுல் கூறுகின்றார். இந்தக் கவனமாக இருக்கும் வாழ்வே ஞானமுள்ள வாழ்க்கை எனக் காட்டுகிறார். ஞானமற்ற வாழ்க்கை இருள் வாழ்க்கை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். கிறிஸ்தவ வாழ்வு, நன்றி செலுத்தும் வாழ்வாக இருக்க வேண்டும் என்பது பவுலின் விருப்பம். மேலும், கடவுளுக்கு நன்றி செலுத்த முடியும்; இருப்பினும், அதன் ஊடகமாகக் கிறிஸ்துவே இருக்க வேண்டும் என்பதில் பவுல் ஆணித்தரமாக இருக்கிறார் என எடுத்துக்காட்டும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டு

1. ஞானம் நிறைந்த ஆண்டவரே! எங்களை வழிநடத்தும் ஆன்மிகத் தலைவர்கள், அரசியல் தலைவர்களை ஆசிர்வதித்து, அவர்களுக்கு ஞானத்தைத் தந்து, மக்களை நல்முறையில் வழிநடத்தத் தேவையான அருளைத் தர வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

2. உயர்வான, உன்னதரான இறைவா! எங்கள் வாழ்வை உயர்வாக நினைத்து, படைப்பின் சிகரமாக இருக்கின்றோம் என்ற பெருமையில், நாங்கள் பார்க்கும் மனிதர் எல்லாரும் இறைவனின் சாயல் என்பதை ஞானத்தோடு அறிந்து செயல்பட அருளைத் தர வேண்டுமென்று ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.

3. ‘விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானேஎன்று கூறிய ஆண்டவரே, அழிந்து போகும் உணவுக்காக உழைக்காமல், அழியாத உணவுக்காக உழைக்க அருள்தர வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

4. தம்மையே தரணிக்குத் தந்த ஆண்டவரே எம் இறைவா! தம்மையே பலியாக்கி மக்கள் வாழ்வு பெற வேண்டுமென்று உழைக்கும் ஒவ்வொரு நல்ல உள்ளங்களுக்காகவும் மன்றாடுகிறோம். அவர்களுக்கு நல்ல உடல் சுகத்தைக் கொடுத்து, இன்னும் மக்களுக்காக உழைக்க அருளைத் தர வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

Comment