No icon

பொதுக்காலத்தின் 21-ஆம் ஞாயிறு (25-08-2024)

யோசுவா 24:1-2,15-17,18; எபேசியர் 5: 21-32; யோவான் 6: 60-69

திருப்பலி முன்னுரை

நாள்தோறும் நமது காதுகளில் பல வார்த்தைகளைக் கேட்கிறோம். நன்மையான வார்த்தைகளும், கவர்ச்சியான வார்த்தைகளும், புரட்சிகரமான வார்த்தைகளும், வாழ்வை முன்நோக்கி நகர்த்தும் வார்த்தைகளும், வாழ்வைப் பின்னோக்கித் தள்ளும் வார்த்தைகளும் கேட்கிறோம். ஆனால், இறைவார்த்தை என்பது இறைவனின் இயல்பை எடுத்துரைக்கிறது; இறைவனின் குணநலனை வெளிப்படுத்துகிறது. “நமக்குப் பிடித்த இறைவார்த்தையை மட்டும் நம்பி, பிடிக்காத இறைவார்த்தையை ஒதுக்குவது இறைவார்த்தையே அல்லஎன்கிறார் புனித அகுஸ்தினார். இன்றைய நற்செய்தியில் இயேசு கூறிய வார்த்தையை நம்பாத சீடர்கள், அவருக்கு எதிராக முணுமுணுக்கிறார்கள்; அவரை விட்டு விலகிச் செல்கிறார்கள். நன்மையான காரியத்தை நம்பி வருவோரைவிட, நம்பாமல் விலகிச் சென்றவர்கள்தான் அதிகம். ‘யாரிடம் செல்வோம் இறைவா! வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளனஎன்று மொழிந்த பேதுருவைப் போல இறைவார்த்தையை நம்பி வந்தவர்கள் சிலர் மட்டுமே. இந்த உலகத்தை உருவாக்கியது இறைவார்த்தை, நம் வாழ்வுக்கு விளக்காக அமைவது இறைவார்த்தை. நம்பிக்கையோடு இறைவார்த்தையை எடுத்துரைக்கும்போது பெரிய மலைகூட நகர்ந்து செல்லும். எனவே, இறைவார்த்தையை நம்பி, அதனைக் கடைப்பிடித்து வாழ வரம் வேண்டி இத்தெய்வீகத் திருப்பலியில் இணைவோம்.

முதல் வாசக முன்னுரை

யோசுவா  மோசேவுக்கு உதவியாகவும், அவருக்குப்பின் மக்களை வழிநடத்தக்கூடிய அதிகாரத்தையும் பெற்றவர். அவர் மக்கள் அனைவரையும் ஒற்றுமைப்படுத்துகின்ற பணியை முதன்மையான பணியாகச் செய்தவர். ‘யாவே இறைவனுக்கு மட்டும் நானும் என் வீட்டாரும் பணி செய்வோம்என்று உரக்க அறிவித்தவர். அவரின் வழியில் மக்களும்ஒரே கடவுளுக்குப் பணி புரிவோம்என்று தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்திய முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

திரு அவையின் மேன்மையையும், குடும்பத்தின் மேன்மையையும் புனித பவுல் எபேசிய மக்களுக்கு எடுத்துரைக்கிறார். எவ்வாறு திரு அவையில் எல்லாரும் ஒற்றுமையாக இருக்கிறார்களோ, அதுபோல குடும்பம் என்கிற குட்டித் திரு அவையிலும் கணவனும், மனைவியும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்; இருவரும் சமமான மதிப்புப் பெற வேண்டும்; அன்பு செலுத்துவதில் சமத்துவத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று எடுத்துரைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. அனைத்தையும் ஆளும் இறைவா! எம் அண்டை மாநிலமான கேரளாவிலுள்ள வயநாட்டில் நடந்த நிலச்சரிவில் உயிர்களையும் உடைமைகளையும் இழந்து தவிக்கும் மக்களுக்கு நீரே அடைக்கலமாகவும் ஆதரவாகவும் நம்பிக்கையாகவும் இருந்து காத்திட வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

2. உணவாக வந்த தெய்வமே எம் இறைவா! அன்றாடம் பசியாலும், வறுமைப் பிடியாலும் துன்பப்படுகின்ற மக்களுக்கு நாங்கள் உணவளிக்கும் வண்ணம் எங்களுக்கு நல்மனத்தைத் தர வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

3. ‘உண்மையை எடுத்துரைப்பதே என் பணிஎன்று கூறிய இறைவா! எங்கள் நாவிலிருந்து புறப்படும் வார்த்தைகள் பிறரைப் புண்படுத்தாத வண்ணம், உண்மையை மட்டும் எடுத்துரைக்கும் வரத்தைத் தர வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

4. ‘நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம் தானே உள்ளனஎன்று கூறிய பேதுருவைப் போல நம்பிக்கை இழக்கும் வேளையில், உம் வார்த்தையை நம்பி வாழத் தேவையான அருளைத் தர வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

Comment