No icon

பொதுக்காலம் 24 -ஆம் ஞாயிறு (15-09-2024)

எசாயா 50:5-9; யாக்கோபு 2:14-18; மாற்கு 8:27-35

திருப்பலி முன்னுரை

யார் இந்த இயேசு?’ என்பது கேள்வியல்ல; அது ஒரு தேடல்! தம்மைப் பற்றிச் சுய ஆய்வு செய்து கொள்கிறார் நம் ஆண்டவர் இயேசு. ‘மக்கள் தம்மைப் பற்றிய சரியான புரிதலோடு இருக்கிறார்களா?’ என்ற தேடலை கேள்விகள் வழியாகக் கேட்கிறார். உண்மையான இறைமகன், பாடுகள் பல ஏற்க வேண்டும்; துன்பத்தைத் துணிந்து சுமக்க வேண்டும்; இறப்பின் வழியாகத்தான் உயிர்ப்பை அடைய முடியும் என்ற நம்பிக்கையை விதைக்கிறார். தொடக்கக்காலத் திரு அவையில் இயேசுவைப் புறக்கணிக்கிறவர் தன்னுயிரை இழந்தவர் என்றும், இயேசுவை அறிக்கையிடுபவர் உயிரைக் காக்கிறவர் என்றும், இயேசுவின் பொருட்டும், அவர் நற்செய்தியின் பொருட்டும் உயிரைக் கொடுப்பவர் நிலைவாழ்வைப் பெறுபவர் என்றும் நற்செய்தியாளர் மாற்கு காட்டுகிறார். எனவே, அனைத்தையும் கொடுத்த இறைவன், நம்பிக்கையின் வழியாக வாழ்வையும் கொடுக்கிறார். இறைவன்மீது அசைக்க முடியாத நம்பிக்கைக் கொண்டு வாழ இத்தெய்வீக திருப்பலியில் வரம் வேண்டி இணைவோம்.

முதல் வாசக முன்னுரை

இன்றைய முதல் வாசகத்தில் காட்டப்படும் தலைவர் பல சித்திரவதைகளைத் தன் கடவுளுக்காக ஏற்றுக்கொள்கிறார். அடிப்பதற்கு முகத்தைத் திறந்து வைத்தல் மற்றும் எச்சில்களை ஏற்றுக்கொள்ளுதல் அக்கால அரசர்களால் நினைத்துக்கூட பார்க்க முடியாதவை; அதனையும் இந்த ஊழியர் ஏற்றுக்கொள்கிறார். இந்த அவமானங்களை எப்படி இவர் தாங்கிக் கொள்கிறார் என்றால், ‘ஆண்டவர் என்னுடன் இருக்கிறார்என்ற நம்பிக்கை மட்டும்தான் என்று எடுத்துரைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

வழிபாட்டையும், வழிபாட்டுத் தலங்களையும் தாண்டி நம் நம்பிக்கை வளர வேண்டும். நம்பிக்கை என்பது கண்ணுக்குப் புலப்படாத காரியமில்லை; நம்பிக்கைக்குச் செயல் வடிவம் கொடுக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். நம்பிக்கை என்பது தொடக்கக்காலத் திரு அவையில், அதுவும் முக்கியமாக யாக்கோபின் திரு அவையில் நற்செயல்களுடன் தொடர்புபட்டிருந்தது என்பது இரண்டாம் வாசகத்தின் வழியாகப் புலப்படுகிறது. எனவே, நம்முடைய நம்பிக்கை செயல்வடிவம் பெற அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்

மன்றாட்டு

1. ‘உம் நம்பிக்கை உம்மை நலமாக்கும்என்று கூறிய ஆண்டவரே, எம் நம்பிக்கையை வளர்க்கும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரையும் ஆசிர்வதித்து, நம்பிக்கையின் முன்மாதிரியாக இருக்க அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. இன்று இந்தியா முழுவதும் பொறியாளர் தினத்தைக் கொண்டாடுகிறோம். நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றும் பொறியாளருக்குத் தேவையான அறிவையும், வல்லமையையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. நம்பிக்கை செயல் வடிவம் பெற வேண்டும் என்று கூறிய இறைவா, வழிபாட்டையும், வழிபாட்டுத் தலங்களையும் தாண்டி, எங்கள் நம்பிக்கை செயல் வடிவம் பெறும் ஆற்றலைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. சொந்த நாட்டை இழந்து அகதிகளாக இருக்கும் மக்களுக்காக மன்றாடுகிறோம். உரிமையிழந்து தவிக்கும் மக்களுக்கு உரிமையான வாழ்வைத் தந்து, துன்பத்திலிருந்து இன்பமான வாழ்வைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

Comment