No icon

இரு துருவங்கள்

தட்... தட்... தட்...’ என்று ஒருங்கிணைந்த பூட்ஸ் சத்தங்கள் தெருக்கள் எங்கும் கேட்டன. சீனப் படைவீரர்களின் கூட்டம் ஒன்று வீடு வீடாகப் புகுந்துஇரகசிய கத்தோலிக்கர்களைத்தேடிக் கொண்டிருந்தது. ஏரோதுவின் படைவீரர்கள் மாசில்லாக் குழந்தைகளைத் தேடி அலைந்தபோது தெருக்களில் கேட்ட இரைச்சல்களின் எதிரொலிகள்போல சத்தங்கள் எழுந்து கொண்டிருந்தன. பெண்களும், ஆண்களும், குழந்தைகளும் கதறிக்கொண்டு தப்பி ஓடினர். பிடிபட்ட சிலர் மண்டியிட்டு மன்றாடினர். படைவீரர்களிடம் அல்ல; கடவுளிடம் மன்றாடினர்.

வாரம் ஒரு வீட்டில் அல்லது ஒரு மறைவான காட்டுப்பகுதியில், குகைகளுக்குள் அல்லது பாழடைந்த கட்டடங்களுக்குள்  கூடி திருப்பலியில் பங்கெடுத்தனர். இயேசு சபை மிஷனரிகள் சீனாவில் கத்தோலிக்கம் பரவ ஆதாரமானவர்கள். அவர்களால் துவக்கத்தில் வெளிப்படையாகச் செயல்பட முடிந்தது என்றாலும், சீனாவின் பல பகுதிகளில் இராணுவம் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அரசின் அசைவுகளுக்கு ஏற்ப கெடுபிடிகள் கூடியும், குறைந்தும் இருந்தன.

சீன அரசின் ஆதரவு பெற்ற ஒரு சபை அங்கே செயல்பட்டு வந்தது. அவர்களின் தலைவர்களை சீன அரசு நியமித்தது. அதை வத்திக்கான் ஏற்கவில்லை. உண்மையான கத்தோலிக்கர்கள்அண்டர் கிரவுண்ட் கத்தோலிக்கர்கள்என அழைக்கப்பட்டனர்.

இரகசிய அறைக்குள் அருள்தந்தை பங்கிராஸ் நடுப்பூசையை முடித்திருந்தார். அவரைத் தவிர அந்த அறையில் பன்னிரண்டு பேர்கள் இருந்தனர். தூரத்துச் சத்தங்கள் அவர்களை அடைந்தபோது, அருள்தந்தை செபத்தைச் சற்று நிறுத்தியதும் அனைவரும் புரிந்துகொண்டனர். விரைவாகச் செபங்கள் சொல்லப்பட்டு, நற்கருணை வழங்கப்பட்டு, அவசரமாகத் திருப்பலி நிறைவேறியது.

இராணுவத்தின் கூச்சல் அருகிலேயே கேட்டது; தெருமுனைக்கு அவர்கள் வந்திருக்கக்கூடும். தந்தை பங்கிராஸ், மீதமிருந்த சில நற்கருணை அப்பங்களைச் சிறிய வட்ட வடிவ தங்க நிறச் சிமிழுக்குள் வைத்தார். ஏதோ யோசித்தவராய் ஜான் சங்கிடம் அதைக் கொடுத்துபத்திரம்என்றார். ஜான் சங் அதை இரு கரங்களில் ஒரு குழந்தையை வாங்குவதுபோல வாங்கி கைகளில் மூடிக்கொண்டான். அதைப் பத்திரமாக வைத்து அடுத்த வாரம் அவன் எடுத்துவர வேண்டும். அனைவரும் அவசரமாய்க் கலைந்தனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையை நோக்கி பதுங்கியும், ஓடியும் சென்றனர்.

ஜான் சங் தந்தை பங்கிராஸால் திருமுழுக்குச் செய்யப்பட்டவன். இரண்டு வருடங்களுக்கு முன்பு அருள்தந்தை ஒரு விபத்தில் சிக்கியிருந்தபோது அவருக்கு உதவிய ஜான், அவருடன் நட்பாகி, பின்னர் திரு அவைக்குள்ளும் வந்து சேர்ந்தான். அன்று முதல் ஒவ்வொரு வாரமும் என்ன தடைகள் வந்தாலும், திருப்பலிக்குச் சென்று நற்கருணையைப் பெறும் வழக்கம் கொண்டிருந்தான்.

சிதறி ஓடியவர்களை இராணுவம் ஒவ்வொருவராகப் பிடித்தது. அவர்கள் அனைவரும் அங்கிருந்த இராணுவ வண்டியில் ஏற்றப்பட்டனர். சில நாள்கள், வாரங்கள், மாதங்கள் அல்லது சில ஆண்டுகள்கூட அவர்கள் சிறையில் இருக்கக்கூடும். ஒளிந்திருந்த ஜான் சங்கை ஒரு வீரன் தேடிப் பிடித்தான். இராணுவ வண்டியில் இருந்தவன்வண்டி நிரம்பி விட்டது, அவனை விடுஎன்று கத்தினான். ஜானைப் பிடித்த வீரன் அவன் கன்னத்தில் அறைந்து கீழே தள்ளி மிதித்தான்.

நற்கருணைச் சிமிழ் உடைந்துவிடாதபடிக்கு ஜான் தரையில் குவிந்து படுத்திருந்தான். அவன் முகமும், உடலும், ஆடைகளும்  புழுதியால் நிறைந்திருந்தன. அங்கிருந்து இராணுவ வண்டியைப் பார்த்தபோது, அவனைத் தவிர மீதிப் பேர்கள் அங்கே இருந்ததைக் கண்டான். வண்டி கிளம்பும்போது தந்தை பங்கிராசின் முகமும் தெரிந்தது. அவர் நிச்சயம் சீனாவிலிருந்து வெளியேற்றப்படுவார். தன் கையிலிருந்த சிமிழ் உடையாமல், அழுக்கடையாமல் இருப்பதைப் பார்த்து, ஒரு வலி மிகுந்த புன்னகை செய்தான் ஜான் சங். அவன் கண்களில் நீர் சுரந்து முகத்தில் அப்பியிருந்த மண்ணை அரித்துக்கொண்டு ஓடியது.

ஆறு வருடங்கள் கழிந்தன. விதைகள் முளைப்பதைப் போலவும், மலர்கள் மலர்வதைப் போலவும் யாரும் சொல்லாமலே, யாரும் அறியாமலே உலகம் மாறிக்கொண்டிருந்தது.

தந்தை பங்கிராஸ், அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோ மறைமாவட்டத்தில் பங்குத் தந்தையாக இருந்தார். ஜான் சங் அமெரிக்கா வந்து மூன்று  வருடங்கள் ஆகின்றன. தந்தை பங்கிராஸ் அவன் அமெரிக்கா வந்து சேர முயற்சிகளைச் செய்திருந்தார். அவனை விமான நிலையத்தில் அழைக்கச் சென்றபோது, அவன் கைகளில் அழகிய வேலைப்பாடுகளைக் கொண்டிருந்த சிறிய மரப் பெட்டி ஒன்றை வைத்திருந்தான். தந்தை பங்கிராஸ் அருகே சென்றதும், முழந்தாளிட்டு அதை அவரிடம் வழங்கினான்.

அன்றிலிருந்து ஜான் அமெரிக்காவில் வாழத் துவங்கினான். திருமணம், வீடு, குழந்தை என அவன் வாழ்க்கை விரைந்து ஓடிக்கொண்டிருந்தது. தேவைக்கு அதிகமாகச் சம்பாதித்தான்; ஆனாலும், தேவைகள் அதிகமாகிக் கொண்டே இருந்தன. தினம் இரண்டு இடங்களில் வேலை செய்தான். காலையில் அங்கிருந்த ஒரு பல்பொருள் அங்காடியில் சரக்கு மேற்பார்வையிடுபவராகவும், மாலை ஒரு சீன உணவகத்தில் சிப்பந்தியாகவும் வேலை பார்த்தான். கடன் அவனைத் துரத்திக் கொண்டிருந்தது. தன் நண்பர்களைப்போல வசதிகளைப் பெருக்க ஒரு கடிகாரத்தைப்போல சுழன்றுகொண்டேயிருந்தான்.

அந்த ஞாயிற்றுக்கிழமை ஜானைப் பற்றி நினைத்த தந்தை பங்கிராஸ், தொலைபேசியில் அவனை அழைத்தார். அவன் எடுக்கவில்லை. பின்னிரவில் அவன் திரும்ப அழைத்தான். தந்தை பங்கிராஸ் அவனிடம்ஜான், எப்படி இருக்கிறாய்? உன்னைப் பார்க்க முடிவதில்லையே! திருப்பலிக்குக்கூட நீ வருவதில்லையேஎன்று கேட்டார். ஜான் சற்றுத் தயக்கத்துடன் பதில் சொன்னான்பாதர்... என்னை மன்னியுங்க; சீனாவின் சர்வாதிகாரத்தை எதிர்க்க முடிந்த என்னால், அமெரிக்காவின் தாராள வாதத்தை எதிர்க்க முடியவில்லை. நான் அதற்கு அடிமைப்பட்டு விட்டேன். என்னால் இதிலிருந்து விடுபட முடியவில்லை. சீனாவில் இருந்ததைவிட வசதியாக இருக்கிறேன். அதிக சுதந்திரத்துடன் இருக்கிறேன். ஆனால், அது வேண்டும், இது வேண்டும் என என் ஆசைகளும், தேவைகளும், கனவுகளும் பெருகிக் கொண்டிருக்கின்றன. அதற்காக ஓடி ஓடி உழைக்கின்றேன். இதிலிருந்து எப்படி விடுபடுவது என்று எனக்குத் தெரியவில்லை. என்னை மன்னியுங்கள். எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள்என்று சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்தான்.

பதுங்கி மறைந்து வாழ்ந்தபோது கடவுளை, நற்கருணையை இறுகப் பற்றிக்கொண்ட ஜான், சுதந்திரமாய் வசதிகளுடன் வாழும்போது  கைவிட்டது ஏன் என்பதைத் தந்தை பங்கிராஸ் உணர்ந்து கொண்டார். திருவிவிலியம் முழுக்க அவர் வாசித்த கதைகளைப் போலத்தானே இதுவும்!

(அருள்தந்தை ஒருவர் இணையத்தில் பகிர்ந்த உண்மைக் கதையின் அடிப்படையில் எழுதப்பட்ட கதை இது.)

Comment