No icon

16, ஜூன் 2024 (இரண்டாம் ஆண்டு)

ஆண்டின் பொதுக்காலம் 11-ஆம் ஞாயிறு (எசே 17:22-24; 2கொரி 5:6-10; மாற் 4:26-34)

இயேசு விரும்பும் இறையாட்சி சமூகம்!

இயேசுவின் இதயம் அன்பின் இதயம், நீதியின் இதயம், சமத்துவத்தின் இதயம். அவர் அன்பு, நீதி, நேர்மை, சமத்துவம், மன்னிப்பு போன்ற மதிப்பீடுகளால் ஒரு புதிய அல்லது மாற்றுச் சமூகத்தை உருவாக்க விரும்பினார். இந்த மாற்றுச் சமூகத்திற்கு இயேசு ‘இறையாட்சி சமூகம்’ எனப் பெயரிட்டார்.

இயேசு கனவு கண்ட இந்தப் புதிய அல்லது மாற்றுச் சமூகத்தை உருவாக்க உரோமை, யூத ஆதிக்கத்தை எதிர்க்க வேண்டியிருந்தது; யூதப் பாலஸ்தீன மண்ணில் சமத்துவச் சமூகத்துக்காக எதிர்சக்திகளோடு போராட வேண்டியிருந்தது; ஆதிக்கம் செலுத்திய படியமைப்புச் சமூகத்தைக் கடுமையாக எதிர்க்க வேண்டியிருந்தது. இதனால் இயேசுவின் இறையாட்சிப் பணியில் எதிர்ப்புகள் கிளர்ந்தன; மிரட்டல்கள் அதிகரித்தன; உயிருக்கே உத்திரவாதம் இல்லாத நிலை உருவானது. மோதல்களை இயேசு நேருக்கு நேர் சந்தித்தார். மோதல்கள், போராட்டங்கள் வழியாகத்தான் தமது இறையாட்சிக் கனவை நிறைவேற்ற முடியும் என்பதில் அவர் தெளிவாய் இருந்தார். இந்த மோதல்களின் காரணமாகத் தம் உயிரையே இழக்க வேண்டி வரும் என்பது அவருக்குத் தெரியும். இருப்பினும், அவர் தம் இறையாட்சிப் பணியிலிருந்து பின்வாங்கவில்லை; எதிர்ப்புகளைக் கண்டு நடுங்கவில்லை; போராட்டங்களைத் தவிர்க்கவில்லை. தாம் விரும்பியபடியே புதிய இறையாட்சி சமூகத்தைப் படைத்தார்.

தொடக்கத்தில் பன்னிரண்டு பேரைக்கொண்டு ஓர் இறையாட்சி இயக்கத்தை இயேசு தொடங்கினார். இந்த இறையாட்சியின் வருகை மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப ‘இறையாட்சி வரவில்லையே’ எனும் ஆதங்கம் பல சீடர்களிடையே இருந்தது. ‘கடவுள் விரைவில் செயல்பட்டு இறையாட்சியை மலர வைக்கவில்லையே’ என அவர்கள் வியப்புற்றனர். அவர்களுள் பலர் ‘உரோமையின் ஆட்சி இன்னும் தூக்கி எறியப்படவில்லையே’ என வருத்தமுற்றனர். வேறு சிலர் வெளிப்பட்டு இலக்கியப் பார்வையிலே, வானத்திலிருந்து ஓர் அருங்குறி தோன்றித் தீயோர், கொடுமைப்படுத்துவோர் இன்னும் தண்டிக்கப்படவில்லையே எனப் பொறுமை இழந்தனர். இயேசுவின் மெசியாப் பணியால் பெரிதாக மாற்றமேதும் இல்லையே எனச் சீடர்கள் கவலை கொண்டனர்.

இத்தகையோரின் எதிர்பார்ப்புகளுக்கு முற்றிலும் முரண்பட்டு, இயேசுவின் செயல்பாடு அமைந்திருந்தது. அவர் கண்டிப்பதற்குப் பதிலாக இரக்கம் காட்டினார்; தண்டிப்பதற்குப் பதிலாக அன்பு காட்டினார்; குற்றம் சுமத்துவதற்குப் பதிலாக மன்னிப்பு வழங்கினார். இயேசு கொண்டு வந்த இறையாட்சி இயக்கத்தின் தன்மை கண்கவர் காட்சியாக அமையவில்லை. இது பலருக்கு ஓர் ஏமாற்றமாகவே இருந்தது. சிலர் நம்பிக்கை இழந்து நின்றனர். “வரவிருப்பவர் நீர் தாமோ? அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா?” (லூக் 7:19) போன்ற கேள்விகளும் எழுந்தன.

இந்தப் பின்னணியில்தான் இயேசு தாம் புதிதாகத் தொடங்கி வைத்துள்ள இறையாட்சி இயக்கத்தின் தன்மையைக் குறித்தும், அதன் வளர்ச்சி எவ்வாறு இருக்கும்? அதை எப்படிப் புரிந்து கொள்வது? போன்ற கேள்விகளுக்கும் ‘முளைத்துத் தானாக வளரும் விதை’ மற்றும் ‘கடுகு விதை’ (மாற்கு 4:26-34) ஆகிய இரு உவமைகள் வழியாக எளிமையாக விளக்குகிறார். இனி இந்த உவமைகள் கூறும் இறையியல் செய்திகளைக் காண்போம்.

மாற்கு நற்செய்தியில் மட்டுமே நாம் காணும் முளைத்துத் தானாகவே வளரும் விதை உவமையில், விதை விதைக்கப்படுகிறது; அதன்பின் நாள்கள் நகர்ந்து செல்கின்றன. விதைத்தவருக்கு எதுவும் தெரியாமலேயே விதை முளைத்து வளர்கிறது. இப்போது முதலில் தளிர், பின்பு கதிர், அதன்பின் கதிர் நிறைய தானியம் என்று நிலம் தானாகவே விளைச்சல் அளிக்கிறது (மாற் 4:28). அவ்வாறே இயேசு தொடங்கி வைத்துள்ள இறையாட்சிப் பணியும் இருக்கும். ஆகவே, எதுவும் நிகழவில்லையே என அவசரப்பட வேண்டாம். சோர்வடைய வேண்டாம்; நம்பிக்கை இழக்க வேண்டாம்.

இறையாட்சியின் வளர்ச்சி எந்த ஆரவாரமும் இல்லாமல் அமைதியாக நடைபெறும். இறையாட்சியின் வருகை மனிதரின் செயல் அல்ல; அது முழுக்க முழுக்க இறைவனின் செயல். இந்த வளர்ச்சியை வழிநடத்தி, இறுதியில் அறுவடை செய்பவர் இறைவன்தாம். விதை தாமாக முளைத்து நிறை பயன் தருவதுபோல, இறையாட்சி சமூகமும் இறைவனின் செயலால் நிறுவப்படும் என இவ்வுவமை வழியாக இயேசு அழுத்தமாக எடுத்துரைக்கிறார்.

நம்மில் சிலர் ‘வாழ்வில் பல துன்பங்களை அனுபவிக்கிறேனே, என் சார்பாகக் கடவுள் செயல்படவில்லையே, துன்பங்கள் நடுவில் நன்மைகள் எதுவும் நடைபெறவில்லையே, முன்பு நான் இருந்தது போலவே எவ்வித மாற்றமுமின்றி இப்போதும் இருக்கிறேனே’ போன்ற அங்கலாய்ப்புகளுக்கு மாற்கு அழகிய பாடத்தை முன்வைக்கிறார். வாழ்க்கையில் எதுவும் நடவாததுபோல் தோன்றினாலும், காலம் வரும்போது எல்லாம் நிறைவாய் நடக்கும். எனவே, துன்பங்களைக் கண்டு சோர்வுறவோ அல்லது நம்பிக்கை இழக்கவோ தேவையில்லை என்பது அவர் தரும் பாடம்.

கடுகு விதை உவமையில் இயேசு தொடங்கிய இறைவார்த்தைப் பணி, கடுகு விதையைப்போல மிகச் சிறிய தொடக்கத்தைக் கொண்டிருந்தாலும் காலப்போக்கில் அது வளர்ந்து, படர்ந்து உலக மக்கள் அனைவரையும் தன் நிழலில் ஏற்றுக்கொள்ளக் கூடிய பெரிய மரம் போன்று விளங்கும் என்ற நம்பிக்கையூட்டும் செய்தி இவ்வுவமையில் சொல்லப்படுகிறது. எனவே, மிகச் சிறியதாகத் தொடங்கி இருக்கும் இந்த இறையாட்சி சமூகம் வளர்ந்து, பெரிதாகி, உலக மக்கள் அனைவரும் அதன் அரவணைப்பில் வாழும் காலம் வரும் என்பதை விளக்க இயேசு கடுகு விதை உவமையை இங்கு எடுத்துக் காட்டுகிறார்.

இங்கே மரத்தின் நிழலில் தங்குதல் என்பது இறைவனின் பாதுகாப்பில் வாழ்வது என்று பொருள் கொள்ளலாம். இந்த மரத்தின் கிளைகளில் பறவைகள் கூடுகட்டி வாழ்வதுபோல, இன்று மிகப்பெரிய மரமாக வளர்ந்துள்ள இறையாட்சி இயக்கமாகிய திரு அவை எனும் மரத்தின் கிளைகளில் பறவைகளாகிய மக்கள் வந்து தங்க வேண்டும்; அதன் கனிகளை உண்டு வாழவேண்டும். இவ்வாறு தங்க வைப்பதும், வாழ வைப்பதும் இறையாட்சி சமூகமாகிய திரு அவையின் இயல்பு என்ற மதிப்பீட்டை இயேசு இன்றைய கால இறையாட்சி சமூகமாகிய நமக்குக் கற்றுத் தருகிறார்.

சிறிய இறையாட்சி இயக்கம் மிகப்பெரிய இறையாட்சி சமூகமாக மாறும் எனும் நம்பிக்கையை இரு உவமைகள் வழியாக இயேசு எடுத்துக்காட்டியது போல, இன்றைய முதல் வாசகத்திலும் இறைவாக்கினர் எசேக்கியேல் ஒருசில உவமைகள் வழியாக நம்பிக்கை தரும் வாக்குறுதியை இஸ்ரயேல் மக்களுக்கு வழங்குகிறார்.

கி.மு. 597 மற்றும் கி.மு. 586-ஆம் ஆண்டுகளில் பாபிலோனியர் யூதாவின்மீது படையெடுத்து அதன் நகர்களைக் கைப்பற்றி அழித்தனர். வலிமையானவர்களைப் பாபிலோனுக்கு நாடு கடத்தினர். யூதா நாட்டின் அரசர் யோயாக்கிம், அவருக்குப் பின்வந்த அவரது  மகன்  யோயாக்கின் கி.மு. 597-ஆம் ஆண்டு பாபிலோனிய அரசர் நெபுகத்நேசரால் நாடு கடத்தப்பட்டார்கள் (2அர 24). அதன்பின் எருசலேமில் பதினோர் ஆண்டுகள் ஆட்சி செய்த அரசர் செதேக்கியாவும் முந்தைய அரசர்களைப்போல ஆண்டவர் பார்வையில் தீயது செய்ததன் காரணமாக (2அர 24:19) கி.மு.586-இல் பாபிலோனிய படையெடுப்பின்போது கொல்லப்பட்டார். இவ்வாறு பாபிலோனிய அடிமைத்தனத்தில் பல ஆண்டுகளாய் இஸ்ரயேல் மக்கள் அவதிப்பட்ட சூழலில், எசேக்கியேல் இறைவாக்கினர் ‘கேதுரு மரமாக இஸ்ரயேல் திகழும்’ (எசே 17:23) என்ற நம்பிக்கையை வழங்குகிறார்.

வரலாற்றில் இறைவாக்கினர் எசேக்கியேல் கூறியது உடனடியாகச் சாத்தியப்படவில்லை எனினும், இஸ்ரயேல் மக்கள் இறைவாக்கினர் முன்னறிவித்ததன் அடிப்படையில் இறையாட்சி பற்றிய நம்பிக்கையையும் அந்த இறையாட்சி மெசியா காலத்தில் நிலைநிறுத்தப்படும் என்னும் கனவையும் வளர்த்துக்கொண்டனர். இஸ்ரயேல் மக்களின் இறையாட்சிக் கனவை, அவர்களின் நம்பிக்கையை நனவாக்க இயேசு கொண்டிருந்த திட்டம்தான் ‘இறையாட்சி இயக்கம்’. இந்த இயக்கம் உண்மை, வாழ்வு, புனிதம், அருள், நீதி, அன்பு, அமைதி ஆகிய மதிப்பீடுகளை உள்ளடக்கிய இயக்கம் ஆகும். இந்த இயக்கத்தில் ஏழைகளுக்கு முன்னுரிமை இருக்கும். எவ்விதப் பாகுபாடுகளும் இல்லாமல், அனைவரும் ஒன்றாய் இருப்பர். இங்கே அனைவரும் ஒன்றாய் அமர்ந்து விருந்துண்பர். இந்த இறையாட்சி இயக்கத்தில் இருப்பவர்களின் கண்கள், காண்பவைகளின்மேல் பற்றற்று, விண்ணுலக வாழ்வை எதிர்நோக்கி இருக்கும். இவர்கள் நம்பிக்கையின் அடிப்படையில் வாழ்வர்; ஆண்டவருக்கு உகந்தவராக இருப்பர் என்ற சிந்தனைகளைத் திருத்தூதர் பவுல் இன்றைய இரண்டாம் வாசகம் வழியாக நமக்கு நினைவூட்டுகிறார்.

ஆகவே, இறையாட்சியின் மக்கள் செழித்து வளரும் பேரிச்சை மரம்போல, தழைத்து வளரும் லெபனோனின் கேதுரு மரம்போல இருப்பர். அவர்கள் முதிர் வயதிலும் கனி தருவர். ஏனெனில், கடவுள் இறையாட்சியின் மக்களோடு இருக்கின்றார் என்பது இன்றைய திருப்பாடல் நமக்குத் தரும் நம்பிக்கைச் செய்தி (திபா 92:12-14).

இறையாட்சியின் மக்களாகிய நாம் என்ன மனநிலையைக் கொண்டிருக்க வேண்டும்?

• இறையாட்சியின் மக்கள் கடவுளின் திருவுளத்தை அறிந்து, இயேசுவின் இறையாட்சி மதிப்பீடுகளின்படி வாழ்வது இன்றியமையாததாகும். இறையாட்சியின் விழுமியங்களான அன்பு, மகிழ்ச்சி, அமைதி, நீதி, சமத்துவம், சகோதரத்துவம், கனிவு, பரிவு, நன்மைத்தனம், நம்பிக்கை போன்றவற்றை வாழ்ந்து காட்டுவதுதான் கனி தரும் வாழ்வு.

• இறையாட்சி என்பது இறைவனின் திட்டம்; செயல்பாடு. அதன் உருவாக்கத்திலும், வளர்ச்சியிலும் மனிதருக்குப் பங்குண்டு என்றாலும், அது இறைவனின் செயலே. நம் செயல்கள் அதன் வளர்ச்சிக்கு உதவலாமே தவிர, நாமாக மட்டும் இறையாட்சியை மலரச் செய்யவோ, வளர்ச்சியுறச் செய்யவோ இயலாது.

• ஒருவர் ஒருவரோடும், இறைவனோடும் உள்ள உறவின் அடிப்படையில் கட்டியெழுப்பப்படுவதுதான் இறையாட்சி சமூகம். ஆனால், இன்று இறையாட்சி சமூகம் ‘நானும், கடவுளும் மட்டுமே’ என்ற போக்கில் இருக்குமேயானால், அது தன் தன்மையை இழந்து நிற்கிறது எனக் கருத வேண்டும்.

Comment