No icon

23, ஜூன் 2024 (இரண்டாம் ஆண்டு)

ஆண்டின் பொதுக்காலம் 12 -ஆம் ஞாயிறு - யோபு 38:8-11; 2கொரி 5:14-17; மாற் 4:35-41

புயல்காற்றைப் பூந்தென்றலாக மாற்றும் இறைவன்!

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் கைதட்டும் போட்டி ஒன்று நடைபெற்றது. அந்நகரில் ஓர் அரங்கத்தில் பலரை அமர வைத்து, தொடர்ந்து கைதட்டுகின்றவர்களுக்குப் பரிசு என்று அறிவித்தனர். போட்டியும் ஆரம்பமானது. அந்த அரங்கத்தில் இருந்த எல்லாருமே கைதட்டி சோர்ந்து, கரங்களைத் தட்டுவதை நிறுத்தி விட்டனர். கடைசியாக ஐந்து மணி நேரம் தொடர்ந்து கைதட்டல் கேட்ட இடத்தில் இருந்தவரை மேடைக்கு வருமாறு பரிசுக் குழுவினர் அழைத்தனர். ஆனால், ஒருவர் எழுந்து வராமல், இருவர் எழுந்து நின்றனர். ஏனெனில், அந்த இருவரில் ஒருவருக்கு வலது கையும், மற்றொருவருக்கு இடது கையும் இல்லை. இந்த நிகழ்வை மேடைப்பேச்சு ஒன்றில் கூறிய திரு. சுகி சிவம் அவர்கள், ‘கைதட்டும் போட்டியில் இரு கைகளும் இல்லாமல் இருவர் கலந்துகொள்வோம் என்று தீர்மானித்ததே வெற்றிபெற்றதை விட மேலானது. ஒருவர் வலக்கை இன்றியோ, இடக்கை இன்றியோ வாழலாம்; ஆனால், நம்பிக்கை இன்றி ஒரு நொடிகூட வாழ முடியாது என்பதை இந்த நிகழ்வு உணர்த்துகிறதுஎன்று சொன்னார்.

பகலினை அலங்கரிப்பது பகலவன் என்றால், இரவினை அலங்கரிப்பது சந்திரன் என்றால், கடவுளின் ஊழியனை அலங்கரிப்பது அவர்மீது அவன் கொண்டிருக்கும் நம்பிக்கையேஎன்பார் துறவியும், கவிஞருமான துளசிதாசர். கிறிஸ்தவ வாழ்வின் தொடக்கம் என்பது, இயேசுவில் நம்பிக்கை கொள்வது! இயேசுவில் நம்பிக்கை கொள்வது என்பது, தந்தையாகிய இறைவனிலே நம்பிக்கை கொள்வதாகும் (யோவா 1:12). துன்பச் சூறாவளி நம்மைத் தாக்கும்போது, வேரோடு பிடுங்கப்பட்ட மரத்தைப்போல... சுழல்காற்றில் சிக்கிய ஒரு சருகைப் போல... புயலில் தத்தளிக்கும் படகைப் போல... துன்பங்களால் நிலைகுலையும்போது, ஆண்டவரைப் பழிக்காமல், அவர்மீது நமது நம்பிக்கையைப் பதிக்க அழைக்கிறது ஆண்டின் பொதுக்காலம் 12 - ஆம் ஞாயிறு வழிபாடு.

வாணிகம் செய்வதற்காகச் சிலர் படகில் பயணம் மேற்கொள்கின்றனர். பெரும் அலை மற்றும் புயலால் அந்தப் படகு மேலும் கீழுமாகத் தூக்கி வீசப்படுகிறது. படகில் பயணம் செய்தவர்களோ நிலைகுலைந்து போயினர். தங்கள் முழு ஆற்றலையும் பயன்படுத்தி, எப்படியாவது கரைசேர்ந்து விடலாம் என எண்ணினர். ஆனால், அவர்களின் திறனெல்லாம் பயனற்றுப் போயிற்று. தங்கள் நெருக்கடியான சூழலில் தற்போது ஆண்டவரைக் கூவியழைத்தனர். புயல்காற்று பூந்தென்றலாக மாறியது; கடல் அலைகள் ஓய்ந்தன; அமைதி உண்டானது. ஆண்டவர் நெருக்கடியிலிருந்து அவர்களை விடுவித்தார். அவர்கள் மகிழ்ச்சியோடு, கடவுளுக்கு நன்றி செலுத்தியவாறு கரை வந்து சேர்ந்தனர். மேற்குறிப்பிட்ட கடவுளின் வியத்தகு ஆற்றலை இன்றையத் திருப்பாடலில் (107:23-31) நாம் கண்டு வியக்கிறோம். திருப்பாடல் 107-இன் பின்னணியில் இன்றைய நற்செய்திப் பகுதியை நாம் வாசிக்கும்போது, நற்செய்தியாளர் மாற்கு கூற வரும் முக்கிய இறையியல் மற்றும் கிறிஸ்தியல் கருத்துகளைத் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.

பழைய ஏற்பாட்டுப் பின்னணியில், மூன்று முக்கிய இறையியல் கருத்துகளை இன்றைய நற்செய்தி வெளிப்படுத்துவதைக் காணலாம்.

யாவே கடவுளே காற்றையும், இரைச்சலையும் அடக்க வல்லவர் (திபா 89:8-9; 106:8-9; எசா 51:9-10). எனவே, இயற்கை சக்திகள்மீது அதிகாரம் கொண்டுள்ளவர் கடவுள் ஒருவரே.

கடல் கொந்தளிப்பும், சுழற்காற்றும் மனிதரை அழிக்க உருவாகும் தீய சக்திகள் (திபா 69:1-2, 14-15). எனவே, இவற்றிடமிருந்து துன்புறும் மக்களைக் காப்பாற்ற வல்லவர் கடவுள் மட்டுமே.

இறைநம்பிக்கை கொண்ட மனிதர் வாழ்வில் பெரும்புயல்கள் அடித்தாலும், அவற்றின் நடுவில் கடவுள் எப்போதும் செயலாற்றுகிறார் (எசா 43:2; திபா 46:1-3; 65:5-8).

மேற்கண்ட பழைய ஏற்பாட்டு இறையியல் சிந்தனை இன்றைய நற்செய்தியில் மாற்கு தரும் கிறிஸ்தியல் சிந்தனையோடு மிகவும் பொருந்தி வருவதை நாம் காணலாம்.

காற்றையும் கடலையும் அடக்கிய இயேசு கடவுளின் வல்லமை பெற்றவராகவும், இயற்கை சக்திகள்மீது அதிகாரம் கொண்டுள்ளவராகவும் இருக்கிறார்.

சாகப்போகிறோமேஎன்று வாழ்வின் விளிம்பில் நின்று புலம்பும் மக்களைக் காக்கும் கடவுளின் ஆற்றலாக இயேசு வருகின்றார்.

 இறைநம்பிக்கை கொண்ட மனிதர்கள் துன்புறும்போது, இயேசு நம் அருகில் அமர்ந்து நம்பிக்கையைத் தருபவராக இருக்கிறார்.

இந்தச் சிந்தனைகளோடு இன்றைய நற்செய்தியை இன்னும் ஆழ்ந்து சிந்திப்போம். ‘அக்கரைக்குச் செல்வோம், வாருங்கள்’ (மாற் 4:35, லூக் 8:22) என்ற இயேசுவின் அழைப்போடு இன்றைய நற்செய்தி ஆரம்பிக்கிறது. இங்கேஅக்கரைஎன்பது பிற இனத்து மக்கள் வாழ்ந்த கெரசேனர் பகுதி (மாற் 5:1) ஆகும். மனிதநேய அடிப்படையில் பிற இனத்து மக்களைக் கொண்ட கெரசேனர் பகுதிக்கும் சென்று பணியாற்ற தம் சீடர்களை அக்கறையோடு அழைத்துச் செல்கிறார் இயேசு. இங்கே இயேசுவின்அக்கறைஎன்பது தேவையில், பிரச்சினையில், வாழ்க்கைப் போராட்டத்தில் இருப்போரை இலக்காகக் கொண்டு, அவர்களின் விடுதலை மற்றும் நல்வாழ்வு சார்ந்த பணி நிலைப்பாடே ஆகும். யூத மரபுகள், கோட்பாடுகளுக்குள் புதையுண்டுபோன சீடர்களும் இயேசுவின்அக்கறையில்இணைந்து கொள்கின்றனர்.

இயேசுவும், அவருடைய சீடர்களும் மாலை நேரத்தில் படகில் பயணம் மேற்கொள்ளும்போது புயல் வீசுகிறது. அப்போது இயேசு தூங்கிக் கொண்டிருந்தார் (8:24) என்று மத்தேயுவும், அவர் ஆழ்ந்து தூங்கிவிட்டார் (8:23) என்று லூக்காவும், மாற்கு இன்னும் சிறிது கூடுதலாக, அவரோ படகின் பிற்பகுதியில் தலையணை வைத்துத் தூங்கிக் கொண்டிருந்தார் (4:38) என்றும் வெவ்வேறு சொற்களில் இக்காட்சியைப் பதிவு செய்கின்றனர். புயலுக்கு நடுவிலும் ஒருவரால் தூங்க முடியுமா? முடியும்! எப்படி? நாள் முழுவதும் தம் சொல்லாலும், செயலாலும், மக்களுக்கு நல்லனவற்றையே செய்து வந்த இயேசு, உடலளவில் களைத்திருந்தாலும், உள்ளத்தளவில் நிறைவுடன் இருந்தார். எனவேதான் அவரால் ஆழ்ந்து தூங்க முடிந்தது. இன்று பலருக்குப் போதிய தூக்கமின்மை என்பது பெரும் பிரச்சினை. தூக்க மாத்திரைகளும், மதுபானங்களும் இன்று தூக்கத்திற்கான தீர்வுகளாகி விட்டன. மனப்பாரங்களைக் கடவுள் பாதத்தில் இறக்கி வைப்போம்! நல்ல தூக்கத்தை இறைவன் தருவார்.

இயேசு அமைதியாகப் படகில் தூங்கிக் கொண்டிருந்தபோது, அலைகள் படகின்மேல் தொடர்ந்து மோதியது (மாற் 4:37). இதனால் சீடர்கள் நிலை தடுமாறினர்; அலறித் துடித்தனர். இவர்கள் தங்கள் அச்சத்தைப் பல வார்த்தைகளில் வெளிப்படுத்தினர். மனத்தளவிலும், உடலளவிலும் நிலை தடுமாறிய சீடர்கள், தங்கள் பிரச்சினையை மட்டும் கூறினர் என்பதை, “ஆண்டவரே, ஆண்டவரே, சாகப் போகிறோம்” (8:24) என்ற சொற்களாக நற்செய்தியாளர் லூக்காவும், சீடர்கள் தங்கள் பிரச்சினையைக் கூறி இயேசுவை உதவிக்கு அழைத்தனர் என்பதை, “ஆண்டவரே, காப்பாற்றும், சாகப்போகிறோம்” (8:25) என்ற சொற்களில் மத்தேயுவும் தங்கள் பிரச்சினையைக் கூறுவதுடன், இயேசுவின்மீது பழி சுமத்துவதுபோல், “போதகரே, சாகப்போகிறோமே! உமக்குக் கவலையில்லையா?” (4:38) என்ற கேள்வியைச் சீடர்கள் எழுப்பியதாக மாற்குவும் பதிவு செய்கின்றனர்.

போதகரே, சாகப்போகிறோமே! உமக்குக் கவலையில்லையா?” என்ற சீடர்களின் புலம்பல், சில வேளைகளில் நம் வாழ்வில் புயல் போன்ற பெருந்துன்பங்கள் நம்மை அச்சுறுத்தும்போது, ‘ஆண்டவரே, நாங்கள் துன்பப்படுவது உமக்குத் தெரியவில்லையா? உமக்குக் கண்ணில்லையா? காதில்லையா? கவலையில்லையா? இரக்கமில்லையா?’ என்ற பாணியில் இவ்வுலகிலிருந்து ஒவ்வொரு நாளும் நாம் விண்ணை நோக்கி எழுப்பும் கேள்விக் கணைகளை நினைவுறுத்துகிறது. பிரச்சினைகள் வரும்போது கடவுளைத் தூற்றுவதும், பிரச்சினைகள் தீராது தொடரும்போது கடவுளைக் குறை சொல்வதும் நாம் எளிதாகப் பின்பற்றும் வழிகள்தானே!

தூக்கத்திலிருந்து விழித்தெழுந்த இயேசு காற்றையும், கடலையும் அடக்கியபின் தம் சீடர்களை நோக்கிஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?” (4:40) எனக் கேட்கிறார். இயேசு தம் சீடர்களை நோக்கிக் கேட்ட இந்தக் கேள்வி இன்று நமக்கும் பொருந்துவதாகவே அமைகின்றது. நாம் அனுபவிக்கும் புயல் போன்ற துன்பத்தையும், இறைவன்மேல் நாம் வைத்துள்ள நம்பிக்கையையும் சேர்த்துச் சிந்திக்க ஒரு வாய்ப்பை உருவாக்குகிறது. நம் வாழ்வில் பெரும் புயல் வீசும் வேளையில் நம் நம்பிக்கை எங்கே இருக்கிறது? ‘புயல் வரும் வேளையில் பூவுக்குச் சுயம்வரமோ?’ என்ற கவிஞர் வைரமுத்துவின் வரிகள் என் நினைவுக்கு வருகின்றன. புயல் வரும்போது சுயம்வரத்தைப் பற்றி அல்லது மற்ற நல்ல செயல்களைப்பற்றி நினைத்துப் பார்க்க முடியுமா? முடியும்! இந்தப் புயல் போய்விடும், அமைதி வரும் என்று நம்புகிறவர்கள் சுயம்வரம், திருமணம் என்று திட்டமிடலாம். ஆனால், புயலை மட்டும் மனத்தில் பூட்டி வைத்துப் போராடும் போது வாழ்க்கையும் புயலோடு சேர்ந்து அடித்துச் செல்லப்படும்.

புயல் போன்ற துன்பங்களை மனத்தில் பூட்டி வைக்காமல், கடவுளிடமே முறையிட்ட யோபுவை இன்றைய முதல் வாசகத்தில் சந்திக்கிறோம். இறைவனே துணையாக வந்து அவரோடு பேசுகிறார். யோபுவின் கேள்விகளுக்கு நேரடியாகப் பதில் தராமல், அவரிடமே யாராலும் பதில் கூற முடியாத கேள்விகளை இறைவன் எழுப்புகிறார். இயற்கையின் தலைவரும், அதன் இயக்குநரும் இறைவனே எனவும், யோபுவின் தலைவரும், அவரது வாழ்வை இயக்குபவரும் இறைவனே என்பது இவ்வாசகம் உணர்த்தும் முக்கியச் செய்தி.

எனவே, நம் வாழ்வை இயக்கும் இயக்குநரான இயேசுவை நம் வாழ்க்கைப் படகில் ஏற்றிக்கொண்டு பயணம் மேற்கொள்வோம். “அக்கரைக்குச் செல்வோம் வாருங்கள்என அக்கறையோடு தம் சீடர்களைப் படகில் அழைத்துச் சென்ற இயேசு, நம் குடும்பங்களில் வீசும் புயல்காற்றைப் பூந்தென்றலாக மாற்றுவார் என முழுமையாக நம்புவோம். நெருக்கடியான சூழ்நிலைகளில் ஆண்டவரில் குறையைக் காண்பதைத் தவிர்த்து விட்டு, உதவிக்கு அவரை அழைப்போம். அச்சம் தவிர்த்து ஆண்டவர்மீது நம் நம்பிக்கையை ஆழப்படுத்துவோம்.

வன்முறைகளாலும், நோய்களினாலும், காய்ந்த சருகுகள் போல புயலில் சிக்கித் தவிக்கும் குடும்பங்களை, குழந்தைகளை இன்று சிறப்பாக நினைவுகூர்ந்து, அவர்களுக்காக இறைவனிடம் உருக்கமாக வேண்டுவோம்.

Comment