01, செப்டம்பர் 2024 (இரண்டாம் ஆண்டு)
ஆண்டின் பொதுக்காலம் 22-ஆம் ஞாயிறு-இச 4:1-2, 6-8; யாக் 1:17-18,21-22,27; மாற் 7:1-8, 14-15, 21-23
கடவுள் விரும்புவது இதயத் தூய்மையே!
கடவுள் இல்லாத இடம் உண்டா? ஒருவேளை இறைவனிடம், “இறைவா! எல்லா இடங்களிலும் நீர் இருப்பதாகச் சொல்கிறார்கள். நீர் இல்லாத இடம் ஒன்று ஏதாகிலும் உண்டோ?” என்று கேட்டால் அவர் ‘ஆம்’ என்று சொல்வார். “நான் இல்லாத இடம் ஒன்று உண்டு. அது வழிபாட்டுத் தலங்கள்” என்பார். இன்று சடங்குகள், சம்பிரதாயங்கள், மரபுகள் கடவுளோடும் கோவிலோடும் இணைக்கப்பட்டு விட்டன. அவை மேலும் இறுகிப்போய் இம்மியளவும் மாற்றப்பட முடியாத மதச்சடங்குகளாக மாறிவிட்டன. இந்தச் சடங்குகளும், பாரம்பரியங்களும் சமய வாழ்வில் கடவுளைவிட முக்கியத்துவம் பெற்றுவிட்டதால், வெறுமையான சடங்குகளை மட்டுமே முன்னிறுத்தும் ஆலய வழிபாடுகளில் இறைவனுக்கு ஏது நாட்டம்? (ஆமோ 5:21).
கடவுள் தூயவர்! அவர் எத்தகைய தூய்மையை விரும்புகிறார்? அகத்தூய்மையையா? அல்லது புறத் தூய்மையையா? அவர் விரும்புவது சடங்குகளையும் மரபுகளையுமா? அல்லது அவரையும் பிறரையும் அன்பு செய்வதையா? கடவுள் நம்மிடம் எதிர்பார்ப்பது இதயத் தூய்மையா? அல்லது வெளிவேடச் செயல்களா? மனிதச் சட்டங்கள், சடங்குகள், மரபுகள் எல்லாம் எந்த மதிப்பீட்டைக் கட்டிக் காக்கின்றன? இவற்றால் மனிதம் மதிக்கப்படுகிறதா? மானிட மாண்பு காக்கப்படுகிறதா? இதுபோன்ற பல கேள்விகளுக்குச் சிறந்த விடயத்தை வழங்குகிறது ஆண்டின் பொதுக்காலம் 22 -ஆம் ஞாயிறு வழிபாடு.
முதல் வாசகத்திலிருந்து நமது சிந்தனையைத் துவங்கலாம். கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஓர் இனம் இஸ்ரயேல் (விப 19:6). அவர்கள் கடவுளுக்குச் சொந்தமானவர்கள்; சுதந்திர மக்கள். எனவே, அவர்கள் சிலை வழிபாட்டில் ஈடுபடாது, பிற மக்களின் தவறான மதிப்பீடுகளைப் பின்பற்றாது, தீய வழியில் நடவாமல் நல்ல மனிதராக வாழ வேண்டும் என யாவே கடவுள் விரும்பினார். அவர்கள் கடவுளை அறியவும், மற்ற மக்களைப் போல் அல்லாமல் தனிப்பட்ட முறையில் கடவுளுடன் உறவுகொள்ளவும் அழைக்கும் இறைவன், சீனாய் மலையில் மோசே வழியாகப் பத்துக் கட்டளைகளை வழங்குகின்றார் (விப 20:1-17). இவை அடிப்படைச் சட்டங்கள்; மக்கள் சுதந்திரமாக வாழ உதவும் நெறிமுறைகள்.
வாங்கிய கடனைத் திரும்பக் கொடுப்பது, காணும் பொருளைக் களவாடாமல் இருப்பது, மற்றவர்களின் உரிமைகளை மதித்து நடப்பது என மக்களின் அன்றாட வாழ்வை நெறிப்படுத்தத் தேவையான கட்டளைகளைக் கடவுள் வழங்கினார். கடவுள் கொடுத்த சட்டங்கள் நல்லவையாகவும் நீதியுள்ளவையாகவும் இருந்தன. எடுத்துக்காட்டாக, எதிரியின் மாடு அல்லது கழுதை துன்பப்பட்டுக் கொண்டிருந்தால் அதன் துன்பம் போக்க அடுத்தவருக்குக் கடமை உண்டு. அதாவது, பகைமை இருந்தாலும்கூட பிறர் சொத்து அழிவதைப் பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது போன்ற மனிதநேயக் கருத்துகள் இறைவன் வகுத்துக் கொடுத்த சட்டங்களின் மையமாக இருந்தன (விப 23:4-5).
ஏறக்குறைய நாற்பது ஆண்டு காலப் பயணத்திற்குப் பிறகு, மோசே மோவாபு சமவெளிப் பகுதியில் புதிய தலைமுறை இஸ்ரயேல் மக்களுக்கு ஆண்டவராகிய கடவுள் வகுத்த சட்டம் குறித்தும், இறைமக்களின் மேன்மை குறித்தும் அவர்களுக்கு மீண்டும் எடுத்துரைக்கிறார். மக்கள் வாக்களிக்கப்பட்ட நாட்டை உரிமையாக்கிக் கொள்ளவும், அதில் நீடித்து வாழவும் வேண்டுமென்றால் கடவுள் வழங்கிய கட்டளைகளைக் கடைப்பிடித்தல் அவசியம். கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழ்வதன் நோக்கம் உடன்படிக்கை உறவில் நிலைத்து நிற்கும் வாழ்வாகும். இதையே, “மக்களுக்கு நெருங்கிய கடவுளைக் கொண்ட வேறு பேரினம் ஏதாகிலும் உண்டா?” என்று மோசே கேட்கிறார். மேலும், மிக முக்கியமாக கடவுளின் கைகளால் கொடுக்கப்பட்ட கட்டளைகளில் “எதையும் சேர்க்கவும் வேண்டாம்; அதிலிருந்து எதையும் நீக்கவும் வேண்டாம்” (இச 4:2) என அறிவுரை வழங்குகிறார். இதுதான் இன்றைய முதல் வாசகத்தின் சூழல்.
இறைவனின் கட்டளைகள் வழியாக அவரோடு இணைந்திருப்பதைத் தங்கள் அடையாளமாகவும் கலாச்சாரமாகவும் எண்ணினர் இஸ்ரயேல் மக்கள். காலப்போக்கில் இவர்கள் தங்கள் மூதாதையரின் மரபுகளை முன்னிறுத்தி, கடவுளின் கட்டளைகளைப் பின்னுக்குத் தள்ளினர். புதிய புதிய சட்டங்களும் மரபுகளும் பெருகப் பெருக கடவுளின் கட்டளைகளின் நோக்கம் மறைந்துபோனது. யூதச் சமூகத்தில் சட்டக் காவலர்களாகத் தங்களை முன்னிலைப்படுத்திய பரிசேயரும், மறைநூல் அறிஞரும் கடவுளின் பத்துக் கட்டளைகளைத் தங்கள் வசதிக்கேற்ப 613 சட்டங்களாகப் பிரித்து, பெரிதாக்கி அதைச் சாதாரண மக்கள்மீது திணித்தனர். தேவையற்ற மரபுகள், சடங்குகள் சார்ந்த சட்டங்கள் மக்களுக்குக் கடைப்பிடிப்பதில் பெரும் சுமையாகிவிட்டன. எனவே, கடவுளைவிட முக்கியமானதாகக் கருதப்பட்டு, கடைப்பிடிக்கப்பட்டு வந்த பொருளற்ற சடங்குகளையும் பரிசேயர் மற்றும் திருச்சட்ட அறிஞரின் வெளிவேடத்தை இயேசு இன்றைய நற்செய்தியில் தோலுரித்துக் காட்டுகிறார்.
‘கழுவுதல்’ என்ற மரபு பற்றிய விவாதம் எழுவதை இன்றைய நற்செய்தியில் காண்கிறோம். ‘மூதாதையர் மரபுப்படி’ இயேசுவின் சீடர்கள் கழுவாத கைகளால் உண்பதைக் கேள்விக்கு உள்ளாக்குகின்றனர் பரிசேயரும் மறைநூல் அறிஞரும். சம்பிரதாயக் கழுவுதல் என்பது யூதர்கள் மத்தியில் மிகக் கவனமாகப் பின்பற்றப்பட்ட ஒரு சடங்கு. இன்றைய நற்செய்தியில் காணப்படும் வரிகள் இதனை உறுதி செய்கின்றன (மாற் 7:3-4). உணவுக்கு முன் கைகளைக் கழுவுவதையும் கிண்ணங்கள், பரணிகள், செம்புகள் ஆகியவற்றைக் கழுவுவதையும் கடந்து, கடவுளின் கட்டளைகள் கற்றுத் தரும் மனிதநேய மதிப்பீடுகளின்படி வாழ இயேசு அழைக்கிறார். ‘மூதாதையர் மரபு’ என்பது கடவுள் கட்டளை அல்ல; அது காலப்போக்கில் சில சட்ட அறிஞர்கள் உருவாக்கிய வாய்மொழி மரபுகள். பரிசேயர் மற்றும் மறைநூல் அறிஞர் உருவாக்கிய இந்த வாய்மொழி மரபுகள் சாமானிய மக்கள்மேல் ஆதிக்கத்தையும் அதிகாரத்தையும் செலுத்த பயன்பட்டதே தவிர, இறை அனுபவத்தையோ, மனித மாண்பு செயல்களையோ உருவாக்கவில்லை என்பதே இயேசுவின் குற்றச்சாட்டு.
தூய்மை - தீட்டு என்பதற்குப் பரிசேயரும் மறைநூல் அறிஞரும் முன்னோர் மரபு சார்ந்த விளக்கம் கொண்டிருக்கையில், இயேசு மனிதம் சார்ந்த புதிய விளக்கம் தருகிறார். ‘தீட்டு’ என்பது சட்டத்தை மீறி கை கழுவாததால் வருவதல்ல; அது பிறரைக் குற்றப்படுத்துவதாலும், அடுத்தவர்களின் குறைகளைப் பெரிதுபடுத்துவதாலும், பிறருடைய தேவைகளை உணராதிருப்பதாலும், தாங்கள் மட்டுமே தூய்மையானவர்கள் என்ற எண்ணத்தாலும் வருவது என உரைக்கிறார். நோன்பு கடைப்பிடித்தல், கோவில் வரி செலுத்துதல், வழிபாட்டுத் தூய்மை, ஓய்வுநாள் சட்டத்தைப் பின்பற்றுதல், தொழுகைக்கூடங்களில் தவறாமல் பங்கெடுத்தல் போன்ற புறச்செயல்களைச் செய்வதால் தாங்கள் மட்டுமே நல்லவர்கள் என்றும், மற்றவர்கள் பாவிகள் என்றும் சொல்லிக் கொண்டனர் பரிசேயக் கூட்டத்தினர். உணவு அருந்தும் முன் கை கழுவாத தம் சீடர்களைவிட, சமுதாயத்தில் எளியவரின் நிலையைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல் ‘வெளிவேடக்காரராய்’ வாழும் பரிசேயர், மறைநூல் அறிஞர் போன்றோரே தீட்டானவர்கள் எனக் கடுமையாகச் சாடுகிறார் இயேசு.
இன்று ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் அழுக்கானவர்கள், அவர்களைத் தொட்டால் தீட்டு என்று கூறித் தீண்டாமையைக் கடைப்பிடிக்கும் கொடுமை நம் நாட்டில்தான் நடக்கிறது. மனிதர்களிடையே உயர்வு-தாழ்வு கற்பிப்பவர்கள் சமூக எதிரிகள் மட்டுமல்லர், சமய எதிரிகளும்கூட. அவர்கள் கடவுளுக்கும் எதிரானவர்கள். எல்லா உயிர்களையும் இறைவன்தாமே படைத்தார்; அப்படியிருக்க, தீட்டானதை இறைவன் எப்படிப் படைத்திருக்க முடியும்? (சாஞா 11:24). சக மனிதர்களை அன்பு செய்யத் தெரியாதவர்களால் எப்படிக் கடவுளிடம் அன்பு செலுத்த முடியும்? (1யோவா 4:20).
சக மனிதரைப் பிறப்பால் ‘தீட்டானவர்’ என்று கூறுபவர், தனது சிந்தனையால் தீட்டானவர் ஆகிறார். புற அழுக்கைவிட, அக அழுக்கு அசிங்கமானது! இதைத்தான் இயேசு ‘மனிதர் உள்ளத்திலிருந்து வெளிவரும் தீய எண்ணங்கள், சொற்கள், செயல்கள் போன்றவையே ஒருவரைத் தீட்டுப்படுத்தும்’ என்கிறார் (7:14). இன்று சமயவாதிகளில் பலர் மூளையில் அழுக்கைச் சுமக்கிறார்கள். அவர்கள் அதை அழுக்கென்று ஒப்புக்கொள்வதில்லை. மாறாக, அழுக்குகளுக்கு அர்த்தமுண்டு என்று வாதாடுகிறார்கள், பரிசேயர் மற்றும் மறைநூல் அறிஞரைப்போல.
இயேசு ஏற்படுத்திய இறையாட்சி என்பது நாம் வெளியரங்கமாகக் கடைப்பிடிக்கும் சில சட்டங்களால் உருவானதல்ல; அது உள்ளார்ந்த மனமாற்றத்தாலும், இறைத்திட்டத்தைச் செயலாக்குவதாலும் அமைவது. இன்றைய இரண்டாம் வாசகத்தில் தூய யாக்கோபு, இறைவார்த்தையைக் கேட்கிறவர்களாக மட்டும் இராமல், அதன்படி நடப்பவர்களாக இருக்க வேண்டும் (யாக் 1:22) என்கிறார். துன்புறும் அனாதைகள், கைம்பெண்களைக் கவனித்துக்கொள்வதோடு தம் வாழ்வின் தவறுக்கு ஏதுவான செயல்களைத் தவிர்த்தலே நேரிய சமய வாழ்வின் அடையாளங்கள் (1:27).
யாக்கோபு வரையறுத்த இந்தத் தூய வாழ்வை, தன் சொந்த வாழ்வாக மாற்றி, ஏழையரோடு தன்னை இணைத்துக்கொண்டவர் செப்டம்பர் 5 ஆம் நாள் சமய பேதமின்றி நாம் கொண்டாடும் புனித அன்னை தெரசா. ஒருமுறை ஓர் ஊடகவியலாளர் அன்னை தெரசாவின் பணியைக் கண்டு வியந்து, “எப்படி உங்களால் இவ்வளவு மகிழ்வாக இப்பணிகளைச் செய்ய முடிகிறது? என்று கேட்டபோது, அன்னை தெரசா பணிவோடு அவரிடம், “நான் 18 வயதில் என் குடும்பத்தினரை விட்டு துறவற வாழ்வில் இணைந்தபோது, ‘இயேசுவின் கைகளில் உன் கைகளை இணைத்துக் கொள்... அவருடன் நடந்துசெல்’ என்று சொல்லி என் அம்மா என்னை வழியனுப்பி வைத்தார்கள். அம்மா அன்று சொன்ன வார்த்தைகளே என்னை இதுவரை மகிழ்வுடன் வைத்துள்ளது” என்று கூறினார். இந்தச் சமூகம் சாக்கடை, அழுக்கு, தீட்டு என முத்திரை குத்திய இடங்களில்தான் இந்தத் தூய இதயம் தன்னை இணைத்துக்கொண்டது. அந்த இதயத்தில்தான் இறைவனும் குடிகொண்டார்!
நாம் உணர்ந்துகொள்ள வேண்டியவை:
• ‘உதட்டினால் மட்டும் கடவுளைப் போற்றுகிறவர்களாக இராமல்’ (எசா 29:13), கடவுளின் கட்டளைகளைப் பின்பற்றி (இச 4:6) நாம் உண்மையான சமயப் பற்றோடு வாழ்வோம்.
• சடங்குகள், சட்டங்கள், மரபுகள் இவற்றைக் கடவுளைவிட முக்கியமான நிலைக்கு உயர்த்திவிடும்போது, நாம் கடவுளையே மறந்துவிடுகிறோம் என்னும் ஆபத்தை உணர்வோம்.
• இதயத் தூய்மைக்கு முக்கியத்துவம் அளித்து, ‘மனத்துக்கண் மாசிலனாய்’ வாழ்ந்து கடவுளுக்கு உகந்த காணிக்கையாக நாளும் நம்மையே ஒப்புக்கொடுப்போம் (திபா 15).
Comment