No icon

07, ஜூலை 2024 (இரண்டாம் ஆண்டு)

ஆண்டின் பொதுக்காலம் 14-ஆம் ஞாயிறு - எசே 2:2-5; 2கொரி 12:7-10; மாற் 6:1-6

எதிர்ப்பும், ஏற்பின்மையும் இறைப்பணியின் அனுபவங்கள்!

1972-ஆம் ஆண்டு அமெரிக்காவின் மார்க் மாஸ்கோவிட்ச் (Mark Moskowitz) என்ற ஓர் இளைஞன் டவ் மோஸ்மேன் (Dow Mossman) என்ற எழுத்தாளரின் ‘The Stones of Summerஎன்ற நாவலைப் பற்றிக் கேள்விப்பட்டு, படிப்பதற்காக அதை வாங்குகிறான். ஏதோ காரணத்தால் அந்நாவலை அவனால் உடனடியாகப் படிக்க முடியவில்லை. வாழ்க்கை நெருக்கடி, குடும்பப் பிரச்சினைகள் என வாழ்க்கை ஓடியதில், அவன் அந்த நாவலையே மறந்துவிடுகிறான்.

சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நாவல் அவன் கண்ணில் படுகிறது. ஆசையாக வாங்கிய நாவலை இத்தனை ஆண்டுகள் படிக்காமல் விட்டுவிட்டோமே என்று ஆதங்கப்பட்ட அவன் உடனடியாகப் படிக்க ஆரம்பிக்கிறான். மூன்றே நாள்களில் அந்த நாவலைப் படித்து முடித்து விடுகிறான்.

இப்படி ஓர் அழகான நாவலை இத்தனை ஆண்டுகள் படிக்காமல் இருந்துவிட்டேனேஎன்ற குற்ற உணர்வு அவனுக்குள் உருவாகிறது. டவ் மோஸ்மேன் வேறு ஏதாவது நாவல் எழுதி இருக்கிறாரா? என்று தேடிப் பார்க்கிறான். எதுவுமே கிடைக்கவில்லை. அவரை எப்படியேனும் சந்திக்க வேண்டும் என எண்ணி, புத்தக வெளியீட்டு நிறுவனத்தைத் தொடர்பு கொள்கிறான். ‘டவ் மோஸ்மேன் இந்த ஒரே ஒரு நாவலைத்தான் எழுதினார். அதன் பிறகு எதையுமே அவர் எழுதவில்லை. எழுத்துலகைவிட்டே விலகிப் போய்விட்டார்என்று அவர்கள் வழியாகத் தெரிந்துகொள்கிறான்.

எப்படியாவது டவ் மோஸ்மேனைத் தேடிக் கண்டுபிடித்துவிட வேண்டும் என்ற ஏக்கத்தோடு அந்த நாவலின் அட்டைப் படம் வரைந்த ஓவியர், விமர்சனம் எழுதியவர், அச்சிட்டோர் என எல்லாரையும் தேடிப் பார்த்து விவரம் கேட்டறிகிறான் மார்க் மாஸ்கோவிட்ச். ஆனால், யாருக்குமே டவ் மோஸ்மேனைப் பற்றிய எந்தத் தகவலும் தெரியவில்லை. கிழிந்துபோன அந்த நாவலைக் கையில் ஏந்தியபடி, ஊர் ஊராக அலைந்து திரிந்த அந்த இளைஞன் மனச்சோர்வுற்றுத் தனிமையில் வாழும் முதியவராக டவ் மோஸ்மேனைச் சந்திக்கிறான். தன் விருப்பமான எழுத்தாளரைச் சந்தித்த மகிழ்ச்சியில், அவர் ஏன் அந்த ஒரு நாவலோடு எழுதாமலே போனார் என்று கேட்கிறான் மாஸ்கோவிட்ச். அதற்கு மௌனமே பதில்! எது அவரை இப்படி ஆக்கியது? குடும்பமா? உளப்பிரச்சினையா? எதிர்ப்பா? புறக்கணிப்பா? காரணம் தெரியவில்லை. காலம் மறந்த இந்த எழுத்தாளர் மறுபடியும் கண்டுபிடிக்கப்பட்டதை மையமாக வைத்து மாஸ்கோவிட்ச் 2002-ஆம் ஆண்டு எடுத்த ஓர் ஆவணப் படமே ‘ஸ்டோன் ரீடர் (Stone Reader).

உலகிலேயே மிகக் கடுமையான தண்டனை புறக்கணிப்புதான். நாம் அனைவரும் வாழ்வில் சந்தித்திருக்கும் அல்லது சந்திக்கவிருக்கும் அந்த வருத்தமான அனுபவமே புறக்கணிப்பு. மனித அனுபவங்களிலேயே மிக ஆழமான காயங்களை உருவாக்குவதும் இந்தப் புறக்கணிப்பே. புறக்கணிப்பு என்பது ஆற்ற முடியாத ஓர் ‘உறவுக் காயம். ஆண்டின் பொதுக்காலம் 14-ஆம் ஞாயிறு இறைவன் இயேசு மற்றும் இறைவாக்கினர்கள் புறக்கணிக்கப்பட்டதையும், இந்தப் புறக்கணிப்புகளுக்கு மத்தியில் இவர்கள் ஆற்றிய இறைவாக்குப் பணியைப் பற்றியும் சிந்திக்க நம்மை அழைக்கின்றது.

இன்றைய முதல் வாசகத்தில், எசேக்கியேல் இறைவாக்கினராக அழைக்கப்படுகின்றார். பாபிலோனிய அடிமைத்தனத்தின்போது வாழ்ந்த எசேக்கியேலைக் கடவுள் அழைத்து, தமது ஆவியின் ஆற்றலைக் கொடுத்து, தம்மைப் புறக்கணித்த மக்களிடமே அனுப்புகிறார் (எசே 2:2). கடவுளுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்யும் இஸ்ரயேல் மக்கள் செவி சாய்த்தாலும், சாய்க்காவிட்டாலும் அவர் இறைவாக்கினராகச் செயல்பட வேண்டுமெனப் பணிக்கிறார் (2:3). ‘வன்கண்ணும், கடின இதயமும்கொண்ட மக்களிடம் கடவுள் அவரை அனுப்புகிறார்.

இதிலிருந்து ‘இறைப்பணி இடர் நிறைந்த பணிஎன்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆயினும், ஆவியின் ஆற்றல் தன்னுள் இருப்பதை உணர்ந்து இறைப்பணியைத் தொடர்ந்தாற்றினார் இறைவாக்கினர் எசேக்கியேல்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில், பிற இனத்தின் திருத்தூதராக அழைக்கப்பட்ட பவுல் மக்களின் இகழ்ச்சிக்கும், பழிச்சொல்லுக்கும் ஆளானார். ‘பவுலும் போலி, அவரது போதகமும் போலிஎன்று அவரைத் தூற்றினர். அவரைத் தனிப்பட்ட முறையில் இழித்தும், பழித்தும் பேசத் தொடங்கினர். எடுபடாத தோற்றமும், ஏமாற்றுப் பேச்சும் கொண்டவர் என்னும் முறையில் அவரது தனி வாழ்வை விமர்சனம் செய்யத் துணிந்தனர். பவுலே தான் பட்ட இன்னல்களை எடுத்துக் கூறுவார் (2கொரிந்தியர் 11:23-28).

இத்தனை இன்னல்களுக்கு இடையிலும் உண்மையும், நீதியும் நிறைந்த ஓர் இறைவாக்கினராகத் திகழ்ந்த திருத்தூதர் பவுல், ‘உடலில் தைத்த முள்போல்தன்னை வதைக்கும் துன்பத்தை எதிர்கொண்டாலும், கிறிஸ்துவின் வல்லமை தன்னுள் தங்கி, எல்லா இன்னல்களையும், வலுவின்மையையும் முறியடித்து உள்ளின்று ஊக்கமூட்டுவதாக உணர்கிறார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், தம் சொந்த ஊருக்கு வந்த இயேசுவின் போதனையையும், செயல்களையும் பார்த்து அவரது ஊர் மக்கள் “என்னே இவருக்கு அருளப்பட்ட ஞானம்! என்னே இவருடைய கைகளால் ஆகும் வல்ல செயல்கள்!” (மாற் 6:2) என்று வியப்பில் ஆழ்ந்தாலும், அவரை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயங்கினார்கள் (6:3). தந்தையை வைத்து அடையாளப்படுத்தும் யூத மரபில், இவர் தச்சர், மரியாவின் மகன் எனத் தொழிலையும், தாயையும் கொண்டு இயேசுவை விமர்சித்தனர்.

ஒருவரது பிறப்பையும், அவர் செய்யும் தொழிலையும் வைத்து நாம் உருவாக்கிக்கொள்ளும் அவலமான எண்ணங்கள், ஆதாரமற்ற முடிவுகள் எவ்வளவு தூரம் நமது சமுதாயத்தைப் பாதித்துள்ளன என்பதை நாம் விளக்கத் தேவையில்லை. இயேசுவினுடைய தாழ்வுற்றக் குடும்பப் பின்னணி அவர் மெசியா என்பதை ஏற்க ஒரு தடையாக இருந்தது. மெசியா அரசத் தோரணையில் பிறந்து, ஆரவாரத்துடன் செயல்படுவார் என்ற யூத எதிர்பார்ப்புகள் நாசரேத்து இயேசுவிடம் பொய்த்துவிட்டதாகவே அவர்கள் கருதினர். ஆகவே, அவருக்குச் சொந்த ஊரிலே ஏற்பு இல்லை. ஏற்பின்மையையும், எதிர்ப்பையும் தம் சொந்த மக்களால் எதிர்கொண்டாலும், தந்தையின் வல்லமையைத் தம் கரங்களில் உணர்கிறார் இயேசு.

காரணங்கள் எதுவும் இல்லாமல் அல்லது நமக்குப் புரியாத காரணங்களுக்காக நாம் புறக்கணிக்கப்படும்போது, அந்த வேதனை மிகக் கொடுமையாக இருக்கும். எதிர்ப்பும், புறக்கணிப்பும் இரண்டு சகோதரர்கள் போலும். இரண்டும் ஒன்றாகவே வருகின்றன அல்லது ஒருவர் வந்தவுடன் மற்றவர் இணைந்துவிடுகிறார். தாழ்ச்சிக் குணமும், நன்மைகள் செய்ய வேண்டும் என்ற மனமும் இயேசு கொண்டிருந்ததால்தான் புறக்கணிக்கப்பட்டாரோ என்னவோ!

காலம் கருணையற்றது. அது கண்முன்னே உன்னதங்களைக் குப்பையில் வீசி எறிகிறது. ஏன் நம்மைச் சுற்றியுள்ள எத்தனையோ நல்ல மனிதர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்? ஏன் பல நல்ல உள்ளங்களை எளிதாக மறந்துவிடுகிறோம்? ஏன் காரணம் இல்லாமல் ஒரு மனிதரைப் புறக்கணிக்கிறோம்? தூய்மைப்பணியாளர்கள், புலம் பெயர்ந்தோர், புதுமை பாலினத்தோர், விளிம்பு நிலையினர், வயது முதிர்ந்த பெற்றோர் இவர்களைக் காலம் எப்போதுமே புறக்கணிப்பின் பிடிக்குள்ளாகவே வைத்திருக்கிறது!

பழைய ஏற்பாட்டில் இறைவாக்கினர்கள் அனைவரும் ஏற்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டனர் (2குறி 24:19; 36:16; நெகே 9:26-30; எரே 35:15; எசே 2:5). புதிய ஏற்பாட்டில் நற்செய்தியாளர் லூக்கா இயேசுவைப் ‘புறக்கணிக்கப்பட்ட ஓர் இறைவாக்கினராகவிவரிக்கிறார். ஏழைகளுக்கு நற்செய்தி அறிவித்ததும், விளிம்புநிலையிலிருந்தோரை இறையாட்சியில் சொந்தமாக்கியதும் (லூக் 4:8-21), பிற இனத்தவர்கள், நோயுற்றோர் இவர்களுக்காகத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டதுமே இயேசு புறக்கணிக்கப்படக் காரணமாயிற்று. ஆனால், தம் சொந்த மக்களால் இயேசு புறக்கணிக்கப்பட்டதுதான் வியப்பு.

அன்றும் இன்றும் என்றுமே ஓர் இறைவாக்கினராக வாழ்வது என்பது சவால்கள் நிறைந்த வாழ்க்கை. ஓர் இறைவாக்கினருக்கு இருக்கும் சவால்களிலேயே மிகப்பெரும் சவால் இறைவனின் குரலுக்குச் செவிமடுத்து, அதன்படி செயல்படுவதுதான். எப்போதும், எந்நிலையிலும், என்ன விலை கொடுத்தாகிலும் இறைவனின் விருப்பத்தை நிறைவேற்றுவதுதான் இறைவாக்கினரின் மிகப்பெரும் பணி.

திருத்தந்தை பிரான்சிஸ் கூறுவதுபோல, “இயேசுவைப் பின்பற்ற விரும்பினால் உலகின் வெறுப்பை நாம் எதிர்கொள்ள வேண்டும். இதனால் இறைவாக்கினர் தன் வாழ்வின் பெரும்பாலான நேரங்களில் தனித்தே நிற்க வேண்டியிருக்கும். தனித்து நிற்பதால் மற்றவர்களின் தாக்குதல்களுக்கு எளிதான இலக்காகி விடுவோம். இந்நேரத்தில் ‘கூட்டத்தோடு கூட்டமாக வாழ்வதே பாதுகாப்புஎன்று மனம் சொல்லும். ‘ஊரோடு ஒத்து வாழ்என இன்றைய சமூகம் அறிவுரை வழங்கும். ஆனால், கூட்டத்தோடு கூட்டமாகக் கரைந்து வாழாமல், ஆயிரத்தில் ஒருவராகத் தனித்து நிற்பதுதான் இறைவாக்கினர்களின் அழகு!

ஆகவே, இறைவாக்கினர் எசேக்கியேலைப் போல, திருத்தூதர் பவுலைப்போல, இறைமகன் இயேசுவைப்போல இறைவனின் அருளை மட்டுமே நம்பி, எதிர்ப்பின் நடுவிலும் உலகம் காட்டும் வழிகளில் ஓடிக்கொண்டிருக்காமல் இறைவன் காட்டும் வழியில், அவரின் விருப்பத்தை நிறைவேற்றும் ஒரு புறக்கணிக்கப்பட்ட இறைவாக்கினராக வாழ முயற்சி மேற்கொள்ளலாம்.

எனவே, நாம் செய்ய வேண்டியது:

சமூகத்தில் நிலவும் தீமைகளையும், அநீதிகளையும் கண்டும் காணாமல் செல்வதைவிட, கனன்று எழும் உள்ளம் வேண்டும். ஒருவேளை கடவுளுக்கு எதிரானவற்றைக் கண்டு ஒதுங்கிக் கொள்கிறோம் எனில், அநீதியான அமைப்புகளுக்குத் துணை போகிறோம் என்ற உணர்வு வேண்டும்.

நலிவுற்ற சமூகம் நலம்பெறச் செய்வதும், சமூக விளிம்பில் இருக்கும் புறந்தள்ளப்பட்டவர்கள் சார்பாய் பேசுவதும், அவர்கள் சார்பாய் நிலைப்பாடு எடுத்துச் செயல்படுவதும் ஓர் இறைவாக்கினரின் பணி என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

கடவுள் விரும்பும் அன்பும், நீதியும் நிறைந்த உலகை உருவாக்க உழைக்கும் நல்ல மனிதர்களோடு நாமும் கரம் கோர்த்து உழைக்க வேண்டும். இறையாட்சி உருவாக்கத்தில் எதிர்ப்பும், ஏற்பின்மையும் இறைப்பணியின் அனுபவங்கள் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

Comment