No icon

14, ஜூலை 2024

ஆண்டின் பொதுக்காலம் 15-ஆம் ஞாயிறு  (2-ஆம் ஆண்டு) ஆமோ 7:12-15; எபே 1:3-14; மாற் 6:7-13

அழைத்தலும் அனுப்பப்படுதலும் அருள்பணியின் அடையாளங்கள்!

2021-ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 5-ஆம் நாள் இயேசு சபை அருள்பணியாளர் ஸ்டான் லூர்துசாமி சே.. அவர்கள் மும்பை திருக்குடும்ப மருத்துவமனையில் இறையடி சேர்ந்தார். திருச்சியில் பிறந்த இவர் ஜார்கண்ட் மாநிலம் சென்று பழங்குடியின மக்களுக்காகப் பல ஆண்டுகளாகப் போராடியவர். ஸ்டான் சாமி அவர்கள் செய்த குற்றம் என்ன என்பதை நிரூபிக்காமல், வழக்கு எதையும் நடத்தாமல், அவர் மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டார். அன்றைய தினம் ஸ்டான் அவர்கள் இறக்கவில்லை; அவர் ஒன்றிய அரசால், இந்திய நீதித்துறையால் கொல்லப்பட்டார் என்ற கருத்து மிக அதிகமாக ஓங்கி ஒலித்தது.

மும்பையில் அருள்பணியாளர் ஸ்டான் அவர்களின் அடக்கத் திருப்பலி நடைபெற்ற ஜூலை 6-ஆம் நாளன்று, ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவர் கர்தினால் சார்ல்ஸ் மாங் போ அவர்கள்காந்தியடிகளின் வன்முறையற்ற அகிம்சை வழியைப் பின்பற்றிய அருள்பணி ஸ்டான் சாமி, இந்தியாவின் வறியோர் நடுவே வாழ்ந்த இன்றைய புனிதர்என்று தன் அறிக்கையில் கூறினார்.

சக்தியும், செல்வமும், சுயநலமும் மிகுந்தவர்களால் புறக்கணிக்கப்பட்ட ஓர் இறைவாக்கினராக, அதே வேளையில் ஒடுக்கப்பட்டோரின் பிரதிநிதியாக, நீதியின் சாட்சியாக, இயேசுவின் உண்மைச் சீடராக ஸ்டான் லூர்துசாமி வாழ்ந்தார்; இறந்தார்; இன்னமும் நம் இதயங்களில் வாழ்கிறார். இறைவாக்கினர்களையும், இறைவாக்கை ஏந்திச்செல்லும் இறைப்பணியாளர்களையும் பற்றிச் சிந்திக்க இன்று மீண்டும் நமக்கு ஒரு நல்வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் ஆமோசை இறைவன் அழைத்து இறைமக்களிடம் இறைவாக்குரைக்க அனுப்புகிறார். யார் இந்த ஆமோஸ்? தென்னாடான யூதாவில் பிறந்தவர்; வட நாடான இஸ்ரயேலுக்குச் சென்று இறைவாக்கு உரைக்க அழைக்கப்பட்டவர். இவர் சிறிய இறைவாக்கினருள் ஒருவராகக் கருதப்பட்டாலும், மிக உக்கிரமாக எறிந்த ஒரு தீப்பிழம்பு. இரண்டாம் எரோபோவாம் (கி.மு. 793-753) என்ற வட நாட்டு அரசரின் காலத்தில் ஆமோஸ் சமாரியாவில் இறைவாக்குரைத்தார். அப்போது வட நாடான இஸ்ரயேல் கொழுத்த பொருளாதாரத்தில் சீரும், சிறப்புமாய் இருந்தது. ஆனால், வளமும், வாழ்வும் செல்வருக்கும், வலியோருக்கும் மட்டுமே இருந்தன. ஏழை, எளியவர்கள் நசுக்கப்பட்டுத் தாழ்வுற்றுக் கிடந்தனர். எனவே, வலியோரை வாழ்த்தி, எளியோரை வாட்டும் அநீதியும், பொய்மையும் நிறைந்த சமுதாயத்தைக் கண்டு சீறியவர் ஆமோஸ். இறைவாக்கினர் ஆமோஸ் அரசாளும் மன்னர்களுக்கும், அவர்தம் ஆலோசகர்களுக்கும் எதிராக உண்மையைப் பேச வேண்டியிருந்தது. ஆள்வோரின் பாவங்களையும், அடாவடிகளையும் பகிரங்கப்படுத்துவோரை ஆள்பவர்கள் சும்மா விடுவார்களா என்ன? ஆமோஸ் கூறிய கசப்பான உண்மைகளைக் கேட்க முடியாத பெத்தேல் மாநகரத்துப் பெரிய கோவிலின் தலைமைக் குரு அமட்சியா, பெத்தேல் பகுதியை விட்டு ஆமோசை ஓடிப்போகச் சொல்கிறார். வட நாட்டின் சமயத் தலைநகரமான இந்தப் பெத்தேல் தீமைகளின் மையப் புள்ளியாக இயங்கிச் செயல்பட்டது. எருசலேமிற்கு எதிராக இந்தக் கோவில் கட்டப்பட்டது. தலைமைக் குரு அமட்சியாதான் இஸ்ரயேலின் அதிகாரப்பூர்வமான சமயத்தின் குருவாகவும் நியமிக்கப்பட்டவர்.

ஆமோசின் இடித்துரைக்கும் செய்தி அரசரின் காதுகளை எட்டினால் தன் பதவிக்கு ஆபத்து வந்து விடுமே என்கிற அச்சம் அந்தத் தலைமைக் குருவை நடுங்க வைத்தது. எனவேதான், ‘அரசனின் இடமான பெத்தேலில் இறைவாக்கு உரைக்காதே; வேண்டுமெனில், யூதேயா நாட்டுக்கு ஓடிப்போய், அங்கு இறைவாக்கு உரைத்து, உன் பிழைப்பைத் தேடிக்கொள்என்று ஆமோசை விரட்டுகிறார். ‘அரசரின் புனித இடம்என்று அமட்சியா சொல்வதிலிருந்து அவர் அரசனைத் துதி பாடினாரே தவிர, கடவுளின் வார்த்தையைக் கேட்டு அதன்படி நடக்க வேண்டுமே என்பது பற்றிய கவலை அவருக்கில்லை.

அமட்சியாவின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும், ஆமோஸ்நான் இறைவாக்கினன் அல்ல; அரசனுக்குத் துதிபாடும் இறைவாக்கினர் குழுவில் உறுப்பினனும் அல்ல; பூசி மெழுகிப் பேச வேண்டிய தேவையும் இல்லை. ஆடு மேய்த்துக்கொண்டிருந்த என்னை ஆண்டவர் தேர்ந்தெடுத்து இறைவாக்கு உரைக்க அனுப்பியுள்ளார்என்று ஆணித்தரமாகச் சொல்கிறார். ஆடுகளின் தோல்மீது அமர்ந்து, இரத்தத்தை உறிஞ்சும் பூச்சிகளை அகற்றும் பணிகளில் ஈடுபடும் ஓர் இடையனைப்போல, ஏழைகளின் தோளின்மேல் அமர்ந்து அவர்களது இரத்தத்தை உறிஞ்சும் மூர்க்கமான மனிதர்களுக்கு எதிராகச் சூளுரைக்க கடவுள் ஒதுக்கப்பட்ட என்னை இப்பணிக்கென ஒதுக்கியுள்ளார் எனத் தன் அழைப்பின் வரலாற்றை விளக்குகிறார் ஆமோஸ்.

ஓர் இறைவாக்கினர் எவ்வாறெல்லாம் வாழக் கூடாது என்பதை அமட்சியாவின் வார்த்தைகளிலும், ஓர் இறைவாக்கினர் எப்படி வாழவேண்டும் என்பதை ஆமோசின் வார்த்தைகளிலும் நாம் கற்றுக் கொள்ளலாம். ஆமோசை இறைவாக்குரைக்க இறைவன் அழைத்ததுபோல, இன்றைய நற்செய்தியில் இறைவாக்குப் பணியாற்ற இயேசு சீடர்களையும் அழைக்கிறார். இயேசு தமது சொந்த ஊரில் புறக்கணிக்கப்பட்ட பிறகு தமது சீடர்களை நற்செய்திப் பணிக்கு அனுப்புவதாக இன்றைய பகுதி அமைகிறது. இங்கே புறக்கணிக்கப்பட்டது இயேசு அல்ல; அவருடைய சொந்த ஊரார்தாம். அவர்கள் இயேசுவைப் புறக்கணிக்க எண்ணி, தங்களையே இயேசுவிடம் இருந்து புறக்கணித்துக் கொண்டனர் என்பதுதான் கண்கூடு.

இயேசு இறையாட்சி பற்றிய நற்செய்தியை அறிவிக்க திருத்தூதர்களை இருவர் இருவராக அனுப்புகிறார். இயேசுவின் இந்தச் செயல்முறை தனித்துவமானதாகவே இருக்கின்றது. திருவிவிலியப் பார்வையில் எந்த ஒரு செய்தியையும் ஒருவர் சொன்னால் அது வெறும் தகவல். அதற்கு எந்த மதிப்பும் இல்லை. அதையே இருவர் சேர்ந்து சொன்னால் அது சாட்சி. யூதச் சட்டத்தின்படி, ஒரு செய்திக்கு இருவர் சாட்சியாக இருந்தால்தான் இது உண்மை என ஏற்கப்படும். இந்தப் பார்வையில் இயேசு சீடர்களை இருவர் இருவராக அனுப்பி இருக்கலாம். ஆனால், நற்செய்திப் பணி என்பது குழும வாழ்க்கையை மையப்படுத்தும் ஒரு பணி. இது தனி மனிதர் ஆற்றும் பணி அல்ல; இது ஒரு கூட்டுப்பணி என்பதை இயேசு இங்கே உணர்த்துகிறார்.

மேலும், இருவராகச் செல்லும்போது, ஒருவர் மற்றொருவருக்கு உதவியாக இருக்க முடியும்; ஒருவர் மற்றொருவரின் மனச்சாட்சியாகச் செயல்பட முடியும்; நற்செய்தி அறிவிக்கச் செல்லும்போது மனிதர்களாலோ அல்லது விலங்குகளாலோ ஆபத்துகளை எதிர்கொண்டால் இருவர் எளிதாக எதிர்த்து நிற்க முடியும் (காண். சஉ 4:9-12). இருவர் என்பது எப்போதுமே கூடுதல் பலம்தான் என்பதை இச்செயல் காட்டுகிறது. இன்று நாம் கலந்துரையாடும் இணைந்து பயணித்தலின் முக்கியத்துவத்தை அன்றே இயேசு கற்றுத் தந்துள்ளார். தனித்துச் சாதிப்பதே சிறந்தது என்று இன்றைய போட்டி உலகம் கற்றுத் தரும் வேளையில், இணைந்து சாதிக்க, பயணிக்க இயேசு அழைப்பு விடுக்கிறார்.

அனுப்பப்படும் சீடர்களின் வாழ்வு மிக எளிதான வாழ்வாக இருக்க வேண்டுமெனில்பயணத்திற்குக் கைத்தடி தவிர உணவு, பை, இடைக் கச்சையில் செப்புக்காசு முதலிய வேறு எதையும் நீங்கள் எடுத்துக்கொண்டு போக வேண்டாம்” (மாற் 6:8-9) என்று போதிக்கின்றார். இயேசுவின் இந்த வார்த்தைகள் இரண்டு உண்மைகளைத் தெளிவாக்குகின்றன. ஒன்று, உலகத் தேவைகளைக் குறித்துக் கவலைப்பட தேவையில்லை. அதைக் கடவுள் பார்த்துக் கொள்வார். இரண்டு, நற்செய்தி மட்டும்தான் முக்கியம்; அதுவே நாம் பெறும் ஒப்பற்ற செல்வம் என்று இயேசு போதிப்பது இறைப்பணியாளர்கள் எல்லாருக்குமான பொதுவான ஒரு நல்ல பாடம்.

இறுதியாக, மக்கள் செவிசாய்க்காவிட்டால்உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள்என்று அறிவுரை வழங்குகிறார் இயேசு. ஏன் இந்தக் கடினமான சொற்கள்? யூதர்கள் மனம்மாற பழைய ஏற்பாட்டில் பல வாய்ப்புகள் தரப்பட்டன. அவற்றை அவர்கள் அலட்சியப்படுத்தினர். எனவே, இயேசு கொடுக்கும் இந்த இறுதி வாய்ப்பை அவர்கள் பயன்படுத்திக்கொள்ளாவிட்டால், இனி அதற்கான தண்டனையை அவர்கள் பெறுவார்கள் என்பதை உணர்த்தவே இத்தகைய செயல்! இயேசுவின் இந்தப் போதனையை மற்றுமொரு கோணத்திலும் எண்ணிப் பார்க்கலாம். பணிசெய்யச் செல்லுமிடத்தில் சரியான வரவேற்பு இல்லையென்றால், அந்தக் கசப்பான எண்ணங்களைச் சுமந்துகொண்டு சோர்வடைவதைவிட, காலில் படிந்த தூசியைத் தட்டுவதுபோல, நம் உள்ளத்தில் தேங்கியுள்ள கசப்பான எண்ணங்களைத் தட்டிவிட்டுப் புறப்படும்போது இன்னும் ஊக்கத்தோடு நற்செய்தியைப் பறைசாற்ற முடியும் என எண்ணிப்பார்ப்பது நிறைந்த பயன் தரும்.

இன்றைய இறைவாக்கு நமக்கும், திரு அவைக்கும் கற்றுத்தரும் பாடம் என்ன? நற்செய்தியை அறிவிப்பவர்கள் எளிமையானவர்களாகவும், எளியவர்கள்பால் வேட்கை கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும். தெய்வீக வாழ்வு என்பது ஏழை, எளியோரின் கண்ணீரைத் துடைத்து, அவர்களைத் தலைநிமிரச் செய்வதில் வெளிப்பட வேண்டும். கடவுளின் பெயரால்ஆன்மிக வணிகம்செய்வோர் ஆன்மிகவாதியாக இருக்க முடியாது. தீப, தூப ஆராதனைகளுடன் சமயச் சடங்குகளை மட்டுமே பின்பற்றிவிட்டுச் சமூக அவலங்களுக்குத் தூபம் போடுவோர் இறைவாக்கினராக இருக்க முடியாது. கடவுள் நமக்கும், இந்தப் பூவுலகப் படைப்புகளுக்கும் ஆற்றி வரும் அரும்பணிகளைத் திரும்பத் திரும்ப நினைவுப்படுத்துவதாக இறைவாக்கி னர்களின் பணிகள் அமைய வேண்டும்.

திருத்தூதர் பவுல் இன்றைய இரண்டாம் வாசகத்தில் குறிப்பிடுவது போல, நாம் கடவுளது சொந்தப் பிள்ளைகளாக மாறவேண்டும்; அதற்கு நம்மிடம் திறந்த மனமும், அவரோடு நெருங்கிய உறவும் வேண்டும். சுருங்கக் கூறின், இறையாட்சிப் பணியாற்றஇயேசு மைய அனுபவம்வேண்டும். நாம் விரும்புவதை அல்ல; இயேசு விரும்புவதையும், அவர் மறையுடலாம் திரு அவை விரும்புவதையும் நாம் செயல்படுத்த வேண்டும். ஒரு குழுமமாக இணைந்து நற்செய்தி அறிவிப்பது மிக முக்கியம். நாம் வாழும் காலச் சூழலுக்கேற்ப நற்செய்தி பணியாற்றுவது மிக அவசியம். தீய ஆற்றல்களை அழிக்க முயல்வதும், நோயுற்றவருக்கு நலமளிப்பதுமே சீடத்துவத்தின் மையம். இறுதியாக, எத்தகைய நெருக்கடிகள் மற்றும் எதிர்ப்புகளுக்கு நடுவிலும் துவண்டு போகாமல் தொடர்ந்து இறைவாக்கினராக, சீடர்களாகத் துணிவுடன் பணியாற்ற முன்வர வேண்டும்.

Comment