No icon

21, ஜூலை 2024 (இரண்டாம் ஆண்டு)

ஆண்டின் பொதுக்காலம் 16-ஆம் ஞாயிறு-எரே 23:1-6; எபே 2:13-18: மாற் 6:30-34

இயேசுவின் கரிசனையும், கனிவுமிக்க செயல்களும்!

ஒருமுறை புனித அன்னை தெரேசா அவர்கள் சிறப்பு வசதிகளுடன் இயங்கும் உடல்நலம் குன்றி முதிர் வயதில் தங்கியிருப்போரின் இல்லத்தைச் சந்திக்கச் சென்றார். அங்குள்ள அனைவர் முகங்களிலும் சிரிப்பும், புன்முறுவலுமின்றி இருப்பதைக் கண்டு வியப்புற்றார். ‘எல்லா வாய்ப்புகளும், வசதிகளும் இருந்தும் ஏன் இவர்களின் முகத்தில் கவலை?’ என்ற கேள்வி அவருக்குள் எழுந்தது. தான் அவர்களைத் தொட்டு, அவர்கள் அருகில் அமர்ந்து பேசியதும் எல்லார் முகத்திலும் இனம் புரியாத மகிழ்ச்சி மேலிட்டதைக் கண்டார். இருந்தாலும், பலருடைய கண்களில் ஏதோ ஓர் ஏக்கம் தென்பட்டதை அன்னை தெரேசா உணர்ந்தார். ‘ஏன் இவ்வாறு இவர்கள் இருக்கிறார்கள்?’ என்று அவர்களைக் கண்காணித்து உதவி செய்வோரிடம் விசாரித்தார்.

இங்குப் பிறந்த நாள் மற்றும் சிறப்பு நாளுக்கு மட்டும் சிலர் வந்து இவர்களைச் சந்திப்பது உண்டு. சிலர் உணவு கொடுத்துச் செல்வதுமுண்டு. மற்ற நாள்களெல்லாம் தங்களைச் சந்திக்க யாராவது வரமாட்டார்களா? என ஆயனில்லா ஆடுகளைப்போல இவர்கள் சிதைந்திருக்கின்றார்கள்என்று அவர்கள் பதில் கூறினர். அன்னை தெரேசா இவர்களுக்கு இங்கு அனைத்துக் கவனிப்பு, வசதிவாய்ப்புகள் இருந்தாலும், இவர்களின் பெரிய ஏக்கம் பரிவும், உடனிருப்புமே என்று எடுத்துரைத்தார்.

ஆயனில்லா ஆடுகளாகச் சிதைந்து, சிதறியிருக்கின்ற மக்களின் உள்ளங்களைத் தேற்றவும், அவர்களின் காயங்களை ஆற்றவும் நம்மை அழைக்கிறது ஆண்டின் பொதுக்காலத்தின் 16-ஆம் ஞாயிறு வழிபாடு.

இன்றைய முதல் வாசகத்திலிருந்து நம் சிந்தனையைத் துவங்குவோம். இறைவாக்கினர் எரேமியா கி.மு. 7-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 6-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்தவர். தென்னாடான யூதாவின் யோசியா, யோவகாசு, யோயாக்கிம், யோயாக்கின், செதேக்கியா போன்ற அரசர்களுடைய காலத்தில் வாழ்ந்தவர். இவர் நாற்பது ஆண்டுகளாக இறைவாக்குரைத்தவர்; மென்மையான அன்புள்ளம் படைத்தவர்; ஆயினும், மக்களுக்கு எதிராகத் தண்டனைத் தீர்ப்பு உரைக்குமாறு இறைவனால் பணிக்கப்பட்டார். தலைவர்கள் எரேமியாவை எதிரியாகவே பார்த்தனர், அவரை எதிர்மறையான சிந்தனையாளர் எனக் குற்றம்சாட்டினர். எரேமியா தன்னுடைய இறைவாக்கின் பொருட்டு பல துன்பங்களைச் சந்தித்தார். எரேமியாவின் இறுதிக்காலங்கள் இறுக்கமாகவே இருந்தன. தன்னுடைய இறைவாக்கின் பொருட்டு அவர் உடல்-உள ரீதியாகத் துன்புறுத்தப்பட்டார். கடவுள் தந்த அழைப்பிற்காக ‘துன்புறும் மனிதரானார்.

இப்படிப்பட்ட மென்மையுள்ளம் கொண்ட இறைவாக்கினர் எரேமியா வழியாக ஆண்டவராகிய கடவுள், இஸ்ரயேலின் மந்தைகளைச் சிதறடிக்கும் ஆயர்களைக் கடுமையாகச் சாடுகிறார். இங்கே மந்தைகள் மக்களையும், ஆயர்கள், அரசியல்-சமயத் தலைவர்களையும் குறிக்கின்றன.

இதுவரை இஸ்ரயேல் மக்களை ஆட்சி புரிந்த அரசர்கள்மேல் இறைவன் இரண்டு குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றார்: 1. அவர்கள் மந்தையைச் சிதறடித்தார்கள். 2. அவர்கள் மந்தையின்மேல் அக்கறை காட்டவில்லை. எனவே, இவர்களின் தவறான செயல்களால், சிலை வழிபாட்டால் ஒட்டுமொத்த மக்களும் சிதறடிக்கப்பட்டனர்; நாடு கடத்தப்பட்டனர். அவர்கள் திகிலுற்றனர்; அச்சமுற்றனர்; காணாமல் போயினர் (எரே 23:4).

ஆயர்கள் மந்தையைச் சிதறடித்து விட்டார்கள் (23:2) என்ற சொல்லாடல் இஸ்ரயேல் மக்கள் நாடு கடத்தப்பட்டதையே குறிக்கின்றது. அரசர்கள் தங்களை உயர் நிலையில் வைத்துக்கொண்டு மக்களை நீதிவழியில் ஆளத் தவறியதால் அடிமைத்தன வாழ்வுக்கு ஆளாக்கப்பட்டனர் (எசே 34:1-6). எனவே, ‘மக்களைச் சிதறடிக்கும் மேய்ப்பர்களை அகற்றி விட்டு, பேணிக்காக்கும் மேய்ப்பர்களை ஆண்டவரே நியமிப்பார். அவரே மக்களின் தன்னிகரில்லா மேய்ப்பனாய் இருப்பார் (எசே 34:11-16; எரே 23:3); ‘அவரது ஆட்சியில் விடுதலையும், பாதுகாப்பும் விளங்கும் (எரே 23:6) என்ற நம்பிக்கையை விதைக்கிறார் இறைவாக்கினர் எரேமியா.

தாவீதின் தலைமுறையில் தளிர் ஒன்றை உருவாக்குவேன்என்ற ஆண்டவரின் வாக்கு மெசியாவிற்கான முன்னறிவிப்பாகத் திகழ்கிறது. இயேசுவே அந்த மெசியா! அவர் ஆயனைப்போல தம் மந்தையை மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தம் கையால் ஒன்றுசேர்ப்பார்; அவற்றைத் தம் தோளில் தூக்கிச் சுமப்பார்; சினையாடுகளைக் கவனத்துடன் நடத்திச் செல்வார் (எசா 40:11); அவர் ஞானமுடன் செயல்பட்டு நாட்டில் நீதியையும், நேர்மையையும் நிலைநாட்டுவார் (எரே 23:5); மக்களின் தேவைகளை அறிந்து அவற்றை நிவர்த்தியும், நிறைவும் செய்வார்; மக்கள் பசியைப் பரிவோடு போக்குவார்; துயர் கண்டு உடனிருப்பார்; உண்பதற்குக் கூட நேரம் கிடைக்காத வகையில் மக்களுக்காக உழைப்பார்; பணியாற்றுவார்; அவர் ஆயராய் இருக்கும்போது மந்தைக்கு என்ன குறை? (திபா 23).

ஆக, பழைய ஏற்பாட்டில் இறைவாக்கினர் எசாயா, எசேக்கியேல் மற்றும் எரேமியா முன்னுரைத்த மேய்ப்பன் இயேசுவே (யோவா 10). இந்த மேய்ப்பன் இரக்கமுள்ள, பரிவுமிக்க ஆயனாகத் தம்மை வெளிப்படுத்துகிறார்.

இன்றைய நற்செய்தியில், மக்கள் மத்தியில் ஆர்வமாகப் பணிசெய்து திரும்பி வந்த சீடர்கள், தங்களுக்கு நிகழ்ந்தவற்றை ஆர்வத்துடன் பகிர்ந்து கொள்ளும்போது இயேசுவோ “நீங்கள் பாலைநிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள் (மாற்கு 6:31) என்று கூறுகிறார்.

மக்கள் மத்தியில் மிகச் சிறப்பாகப் பணிபுரிந்து திரும்பி வந்துள்ள சீடர்களை இயேசு பாராட்டி இருக்கலாம் அல்லது இன்னும் பல இடங்களுக்குச் சென்று நற்செய்தியை அறிவியுங்கள் என்று சொல்லியிருக்கலாம். தன் சுயநலத்திற்காகப் பிறரைப் பயன்படுத்தும் தன்னலமிக்க ஒரு சராசரித் தலைவர், தன்னுடைய தொண்டர்களிடம் இவ்விதம் சொல்லலாம். ஆனால், நல்லாயனாம் இயேசு தம் சீடர்கள் மேல் பரிவு காட்டுகிறார். பரிவின் பொருட்டு ‘சற்று ஓய்வெடுங்கள்என்று இயேசு சொல்கிறார்.

தனிமையான இடத்துக்கு இயேசு சீடர்களை அழைத்துச் சென்றார்என நாம் நற்செய்தி வாசகத்தில் இரண்டு இடங்களில் காண்கிறோம். தனித்திருத்தல் என்பது சமூகத்திலிருந்தும், சக மனிதருடைய உறவிலிருந்தும் உறவை முறித்துக்கொள்வது அல்ல; அல்லது உறவையும், தொடர்பையும் அறுத்துக்கொண்டு தங்களின் சுயநலக் கூண்டுக்குள் வாழ்வது அல்ல; மாறாக, உறவைத் தொடர்வதாகும். இங்கே தனிமை என்பது இறைவனோடு உறவை உருவாக்கிக்கொள்வது; அவரோடு ஒன்றித்திருப்பது; உலக மாயையிலிருந்து விடுபட்டு இறைச் சந்திப்புக்கான உறவைத் தொடர்வதாகும். தனது தனிப்பட்ட வாழ்வை, தன் அழைத்தலை, தனது இறை உறவு நிலையை, தனிமையில் இறைத் துணையோடு ஆய்வு செய்யும் நேரமே இந்தத் தனிமை. இறைத் துணையில் ஓய்வெடுக்க இயேசு தம் சீடர்களை அழைத்துச்செல்கிறார்.

எனவே, இந்த ஓய்வு என்பது எதற்காக? மரத்தடியில் அயர்ந்து தூங்குவதற்காகவா? இயேசு ஓய்வுக்காகச் சீடர்களை அனுப்பிய இடம் பாலைநிலம் ஆயிற்றே! அங்கு ஏது மரம்? பாலைநிலத்தில் ஏது உணவு? இயேசு குறிப்பிடும் ஓய்வு என்பது ‘ஓர் ஆன்மிக இளைப்பாறுதல். இந்த ஆன்மிக ஓய்வில் இருப்பவர்கள் மன அமைதியும், ஆறுதலும், மனத் திடமும், ஊக்கமும், புத்தெழுச்சியும் பெற்று மகிழ்வார்கள். எனவே, தனிமையில் பெற்ற இறையனுபவத்தை, வாழ்வைப் பற்றித் தனிமையில் அறிந்து கொண்ட தெளிவுகளை மீண்டும் மக்களிடம் பகிர்ந்து கொள்ளவே அந்த ஆன்மிக ஓய்வு. இதை மாற்கு நற்செய்தியின் இறுதிப் பகுதி அழகாக விவரிக்கிறது.

இயேசுவின் சொல்லைக் கேட்டு திருத்தூதர்கள் பாலைநிலத்தை நோக்கித் தனிமையான இடம் தேடி படகேறுகிறார்கள். இவர்கள் செல்வதை மக்கள் காண்கின்றனர். அவர்களைச் சீடர்கள் எனவும் அடையாளம் கண்டுகொள்கின்றனர். அத்தோடு கலிலேயக் கடற்கரையின் அக்கரை வழியாக ‘கால்நடையாகவே கூட்டமாக ஓடி (மாற் 6:33), இந்த மக்கள் அக்கரையை அடைவது மிகவும் ஆச்சரியமே. இயேசு தம் சீடர்களோடு கரையில் இறங்கியபோது, தங்களுக்கு முன்னதாகவே ஓடிவந்த பெருந் திரளான மக்களை அவர் ஆயரில்லா ஆடுகளாகக் காண்கிறார். இதனால் அவர்கள்மீது பரிவு கொள்கிறார். அவர்கள்மீது மனமிரங்கிப் போதிக்கிறார்.

ஓய்வுக்காகச் சென்ற இடத்தில் மக்கள் தங்களைத் தேடி வந்துள்ளனர் என்பதை அறிந்ததும், அவர்கள்மேல் ஆத்திரப்படாமல் ஆறுதல் வழங்குகிறார்; கடிந்து கொள்ளாமல் கனிவு காட்டுகிறார். இரக்கமுள்ள இதயம் கொண்டவராக அம்மக்களை அள்ளி அணைக்கிறார். தமது தேவைகள், தம் சீடர்களின் தேவைகள் ஆகியவற்றைப் புறந்தள்ளி, மீண்டும் மக்களின் தேவைகளை நிறைவேற்றும் பணியைத் துவங்குகிறார். மக்களின் பரிதாப நிலையும், இயேசு அவர்கள்மீது கொண்டிருந்த மனிதநேயமும்தான் அப்பம் பகிர்ந்த வல்ல செயலின் அடித்தளம் (மாற் 8:3). ‘ஓய்வுஎன்ற வார்த்தைக்குள் பரிவையும் பொதித்து வைத்துள்ளார் இயேசு.

இயேசுவின் இரக்கம் நமக்கு உணர்த்தும் செய்தி என்ன?

காலையில் எழுந்தது முதல், இரவு தூங்கச் செல்லும்வரை பல நூறு வேலைகளால் நமது நாள்கள் நிறைந்திருந்தாலும், ஒவ்வொரு நாளும் சிறிது நேரம் ஒதுக்கி இறைவனுக்கும், நம்முடைய நலனுக்கும் தகுந்த இடத்தை வழங்குவோம்.

நமது தேவைகளுக்காக, ஓய்வுக்காக ஒதுக்கும் நேரங்களிலும், அடுத்தவரின் தேவை அதிகம் என்பதை நாம் உணர்ந்து, அடுத்தவருக்கு உதவிக்கரம் நீட்டும் தாராள மனத்தைப் பெற இறைவனிடம் வேண்டுவோம்.

நாம் இயேசுவின் கரிசனையையும், கனிவுமிக்க செயல்களையும் உணர்ந்து, நமது வீடுகளில், பணி செய்யும் தளங்களில் அயராது உழைத்துக் கொண்டிருப்பவர்களிடம் அன்பை வழங்குவோம். சிதறுண்ட மக்களை உறவாக ஏற்றுக் கொள்வோம்.

Comment