No icon

28, ஜூலை 2024 (இரண்டாம் ஆண்டு)

ஆண்டின் பொதுக்காலம் 17-ஆம் ஞாயிறு - 2அர 4:42-22; எபே 4:1-6; யோவா 6:1-15

பகிர்தலே இறையாட்சியின் அடிப்படை!

நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2021 -ஆம் ஆண்டு, நம் நடுவில் கடவுளின் ஆசியாக விளங்கும் தாத்தா-பாட்டிகளையும், முதியோர்களையும் நினைவுகூர்ந்து இறைவனிடம் வேண்டும் வகையில் அவர்களுக்கென ஒருநாளைப் பணித்தார். ஒவ்வோர் ஆண்டும் நம் ஆண்டவராகிய இயேசுவின் தாத்தா-பாட்டியும் அன்னை மரியாவின் தாயும்-தந்தையுமான புனிதர்கள் சுவக்கீன் - அன்னாவின் நினைவுநாளை ஒட்டி வருகின்ற ஜூலை மாதத்தின் நான்காம் ஞாயிறைஉலக தாத்தா- பாட்டிகள்தினமாகக் கொண்டாடக் கேட்டுக்கொண்டார். அதன்படி இவ்வாண்டு ஜூலை மாதம் 28, ஞாயிறன்றுமுதிர் வயதில் என்னைத் தள்ளி விடாதேயும்” (திபா 71:9) என்ற மையப் பொருளில் சிந்திக்கவும், சிறப்பிக்கவும் திருத்தந்தை அழைப்பு விடுக்கின்றார்.

என்னிடம் வருபவரை நான் புறம்பே தள்ளிவிட மாட்டேன்” (யோவா 6:37) என்று கூறிய கடவுள், பசி என்று தம்மிடம் வருபவரையும் பசியாற்றி வாழ வைக்கிறார். உடல் உணவு எல்லாருக்கும் கிடைக்க வேண்டும் என்பதுதான் இறையாட்சியின் அடிப்படைச் செயல்பாடு. உடல் உணவு எல்லாருக்கும் கிடைக்க வேண்டுமெனில், இருப்பவர்கள் இல்லாதவர்களோடு பகிர்ந்து வாழவேண்டும். ஆண்டின் பொதுக்காலம் 17 -ஆம் ஞாயிறு, பகிர்வைப் பற்றிய அழகியதொரு பாடத்தை நமக்கு மிக அருமையாகக் கற்றுத்தருகிறது.

ஏழை-பணக்காரன், படித்தவன்-படிக்காதவன் என்று அனைவருக்கும் பொதுவாக இறைவன் வழங்கியிருப்பதுபசிஎன்ற ஒன்றுதான்ஆகவேதான், ஒவ்வொருவரும் பசியினைப் போக்குவதற்காக ஓடி ஓடி உழைக்கின்றோம். உடல் உணவு இல்லையெனில் இறப்பே மிஞ்சும். எனவேதான்உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்என்றனர் நம் முன்னோர். வயிற்றுப் பசி தீர்க்கும் இந்த உணவு இல்லாதபோது, மற்றச் செயல்கள் அனைத்தும் வீண். ஆகவேதான், ‘வயிற்றை நிரப்பிய பின் வார்த்தையைப் போதிஎன்றனர் நம் சான்றோர்கள். ‘வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் - இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்என்பார் மகாகவி பாரதி.

இன்று சுயநலமும், பேராசையும் கட்டுப்பாடின்றி வளர்ந்துவிட்டதால், இருப்பவர்கள் தேவைக்கும் மிக மிக அதிகமாகச் சேர்த்துக்கொண்டே உள்ளனர். இதனால் இல்லாதவர்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளையும் இழந்து தவிக்கின்றனர். இருப்பவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் இடையே நினைத்துப் பார்க்கவும் முடியாத ஒரு பெரும் பாதாளம் உருவாகிவிட்டது. இன்று நாம் காண்பது இருப்பவர்-இல்லாதவர் என்ற இணைக்க முடியாத இரு வேறு உலகங்கள். இப்படிப் பிளவுபட்டு நிற்கும் இந்த இரு வேறு உலகங்களை இணைக்கும் வழி பகிர்வு மட்டுமே. இருப்பது சிறிதளவேயாயினும், அதை இல்லாதவர்களோடு பகிர்ந்தால், இந்த உலகம் பல வியப்புக்குரிய செயல்களைக் காணும் அன்றோ! மக்களின் பசியைப் போக்க, தங்களிடம் இருக்கும் உணவு போதுமா? என்ற கேள்வி அரசர்கள் இரண்டாம் நூலில் எழுப்பப்பட்டாலும், இறைவனை நம்பி உணவுப் பரிமாற்றம் ஆரம்பமாகிறது. பாகால் சாலிசாவைச் சார்ந்த ஒரு மனிதர் புது தானியத்தில் செய்யப்பட்ட இருபது வாற்கோதுமை அப்பங்களையும், தன் கோணிப் பையில் முற்றிய தானியக் கதிர்களையும் கடவுளின் அடியவரான எலிசாவிடம் கொண்டு வருகிறார். ஆண்டவரை நம்பி, அந்த உணவு ஒரு நூறு பேருக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறது. மக்கள் உண்ட பின்பு மீதியும் இருந்தது என்கிறது இன்றைய முதல் வாசகம்.

பகிர்வைப் பற்றிய அழகிய பாடத்தை இயேசு இன்றைய நற்செய்தியில் நமக்குச் சொல்லித் தருகிறார். தமது சொற்களைக் கேட்டும், தமது செயல்களைக் கண்டும், ஆயரில்லா ஆடுகளைப் போல தம்மைப் பசியோடு பின்தொடர்ந்த தம் மக்கள்மீது பரிவு கொண்டு உணவளிக்க விரும்புகிறார் இயேசு. அந்திரேயா ஐந்து வாற்கோதுமை அப்பங்களும், இரண்டு மீன்களும் வைத்திருந்த ஒரு சிறுவனை இயேசுவுக்கு அறிமுகம் செய்கிறார். இருப்பினும், முதல் வாசகத்தில் எழுப்பப்பட்டுள்ளதுபோல, ‘இத்தனை பேருக்கும் இவை எப்படிப் போதும்?’ என்ற கேள்வி எழுகிறது. அந்தச் சிறுவன் தந்த உணவு அங்கு நிகழ்ந்த வல்ல செயலைத் துவக்கி வைக்கிறது. அனைவரும் வயிறார உண்டபின், மீதமும் வருகிறது.

இந்த இரண்டு நிகழ்வுகளையும் பற்றிச் சிந்திக்கும்போது உலகில் பசித்திருப்போரின் பசியைப் போக்க அல்லது வறுமையை ஒழிக்க ஆண்டவரே நேரில் வந்து வல்ல செயல்கள் ஆற்றுவார் என்ற எண்ணம் எழலாம். ஆனால், இவ்விரு வாசகங்களையும் சற்று ஆழமாகச் சிந்தித்தால், இந்த உணவை இறைவன் ஒன்றுமில்லாமையிலிருந்து உருவாக்கி, பலுகிப் பெருகச் செய்யவில்லை. கூட்டத்திலிருந்து ஒரு மனிதரும், ஒரு சிறுவனும் கொண்டு வந்து கொடுத்த உணவே இவ்விரு வல்ல செயல்களின் அடித்தளமாக அமைந்ததைப் பார்க்கலாம். எனவே, இருப்பவர்கள் பகிர்ந்து கொண்டால், இல்லாதவர் நிலை உயரும் என்பதைக் குழந்தைகளிடமிருந்து நமக்குக் கற்றுத் தருகிறார்.

குழந்தைப் பருவத்தில் பகிர்வதன் அழகைக் குறித்துப் பாடங்கள் பல கற்றுக்கொண்ட நாம், வளர வளர பகிர்வதற்குப் பதில் சேர்ப்பதைக் குறித்து அதிகப் பாடங்களைக் கற்றுக்கொள்கிறோம், கற்றுக் கொடுக்கிறோம். என்னே முரண்பாடு!

இயேசுவின் இந்த வல்ல செயலை இரு வேறு கண்ணோட்டங்களில் சிந்திக்கலாம்: 1. இயேசுஅப்பங்களைப் பலுகச் செய்தார்எனச் சிந்திப்பது. 2. ‘இயேசு அப்பங்களைப் பகிர்ந்து கொடுத்தார்எனச் சிந்திப்பது.

முதலில், இயேசு ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் தம்முடைய ஆற்றலால், வல்லமையால் பலுகச் செய்தார் என்ற சிந்தனை மேலோங்குகிறது. இயேசு அப்பங்களைப் பலுகச் செய்து, மக்கள் அனைவரின் பசியையும் போக்கினார் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை. இறந்த இலாசரை, யாயிரின் மகளை உயிர்ப்பித்த இயேசுவுக்கு அப்பம் பலுகச் செய்தது ஒன்றும் பெரிதாக இருந்திருக்காது. ஒன்றுமில்லாமையிலிருந்து உலகையே படைக்கும் சக்தி கொண்ட கடவுளின் மகனுக்குகானாவூர் திருமண வீட்டில் எழுந்த இரசப் பற்றாக்குறையைப் போக்கி, சுவைமிக்க இரசத்தைப் பரிமாறச் செய்த இயேசுவுக்கு இது இயலாத ஒன்றா என்ன!? எனவே, ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் ஐயாயிரம் பேர்கள் உண்டு, பன்னிரண்டு கூடைகள் நிறைய மீதியும் எடுக்க வேண்டுமானால், அவ்வளவு அப்பம் பலுகச் செய்யாமல் இருந்தால் இது எப்படி நிகழ முடியும்? எனவே, நிச்சயமாக இயேசு அப்பங்களைப் பலுகச் செய்திருக்க வேண்டும் என்னும் கருத்து இயல்பானதே.

இருப்பினும், மற்றொரு கண்ணோட்டம்பகிர்தல்என்ற வல்லசெயலை இயேசு பாலைநிலத்தில் துவங்கி வைத்தார் என்பதுஇந்தக் கண்ணோட்டத்தில் நம் சிந்தனையைத் துவங்கி வைப்பது சிறுவன் கொண்டு வந்த உணவு (6:1-3). பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேம் நோக்கிச் சென்று கொண்டிருந்த யூத மக்கள், செல்லும் வழியில் நிச்சயமாக உணவு கிடைக்க வாய்ப்பில்லை என்பதைத் தெரிந்து, பயணத்தின்போது உண்ண பலரும் உணவு எடுத்துக்கொண்டு சென்றிருக்க வேண்டும்இயேசுவின் போதனைகளால் மிகவும் உந்தப்பட்டு, அவரின் வார்த்தைகளில் தம்மையும் மறந்து இருந்த மக்கள் கூட்டத்தினர் ஒரு கட்டத்தில், உணவு எல்லாருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தாங்கள் கொண்டு வந்த உணவை இயேசுவிடம் கொடுத்திருக்க வேண்டும். முதலில் கொடுத்தவன் யோவான் குறிப்பிடும் சிறுவனாக இருந்திருக்கலாம் (6:9). ஏனெனில், அடுத்து என்ன நடக்கும் என்பதைப் பற்றிச் சிந்திக்காமல் கள்ளம் கபடமற்ற புன்னகையுடன் செயல்படுபவர்கள் குழந்தைகள்தானே! குழந்தையின் செயலால் தூண்டப்பட்ட மற்றவர்களும் ஒவ்வொருவராகக் கொடுத்திருப்பார்கள்.

எனவே, ஒரு சிறுவன் செய்த சிறிய செயலால் ஒரு பெரிய விருந்தே நிகழ்கிறது. அனைவரும் வயிறார உண்டனர், மீதியும் வந்தன. தனியொருவராய் இயேசு அப்பங்களைப் பலுகச் செய்தார் என்று எண்ணிப் பார்ப்பதும், இயேசு தம் படிப்பினைகளால் மக்களின் மனத்தை மாற்றி, உணவுகளைப் பிறருடன் பகிரத் தூண்டினார் என்ற இரு செயல்களுமே மாபெரும் வல்ல செயல்கள்தாமே!

இந்த வல்ல செயலின் இறுதியில்ஒன்றும் வீணாகாதபடி, எஞ்சிய துண்டுகளைச் சேர்த்து வையுங்கள்என்று இயேசு கற்றுத்தரும் வேளையில், திரு அவையின் விலைமதிப்பில்லா நம்பிக்கையின் அடையாளமாக விளங்கும் தாத்தா-பாட்டிகளையும்வீண்என்று ஒதுக்கிவிடக்கூடாது என்பதையும் மனத்திலே ஏற்போம்.

திருத்தந்தை பிரான்சிஸ் உணவை வீணாக்குவதைக் குறித்து, “வீணாக்கும் கலாச்சாரம் உலகில் பெருகியுள்ளது; உணவை வீணாக்குவது பெரும் வேதனையைத் தருகிறது; குறிப்பாக, உலகில் பல கோடி மக்கள் உண்ண உணவின்றித் துன்புறும்போது, உணவை வீணாக்குவது பெரும் குற்றம்என்கிறார். அதுபோல, தாத்தா-பாட்டியைத் தூக்கி எறியும் போது, கடவுளின் நான்காவது கட்டளையை மீறுகிறோம் என்றும் நமக்கு அறிவுறுத்துகிறார். மேலும், “உணவைத் தூக்கி எறிவது அல்லது வீணாக்குவது வறியோரிடமிருந்து உணவைத் திருடுவது ஆகும்என்கிறார்.

அப்பம் பகிர்ந்த நிகழ்வு நமக்குச் சொல்லும் வாழ்வுக்கான பாடம்:

இறையாட்சியின் முக்கியக் கூறான உணவளிக்கும் செயலுக்கு அடிப்படையாக விளங்கும் அவருடைய பரிவை நாம் அனைவரும் பெற வேண்டும். ஒருவர் பசியுற்ற நிலையில் அவரைக் கண்டும், காணாமல் இருப்பது நம் பொறுப்பற்ற நிலை என்பதை உணர வேண்டும்.

சிறுவன் வழியாக இயேசு நமக்குச் சொல்லும் மற்றொரு படிப்பினை, நம் ஒவ்வொருவராலும் பகிர முடியும் என்பதுதான். பிறருக்கு நன்மை செய்ய பெரும் பொருள் என்கிற முதலீடு தேவையில்லை; இருக்கிற குறைவான பொருளும், மனிதநேயமும் இருந்தால் போதும்

இயேசு வானத்தை அண்ணார்ந்து பார்த்து, இறைவனுக்கு நன்றி கூறி, அப்பத்தைப் பிட்டு, உணவைப் பகிர்ந்தளிக்கும் செயல், இறைவேண்டலோடு நாம் செய்யும் எந்தச் செயலும் வெற்றி பெறும், மகிழ்வைத் தரும் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.

நிறைவாக, பகிர்வதால் பாசம் வளரும், பட்டினி ஒழியும், மகிழ்ச்சி பன்மடங்காகும். பதுக்குதல் அழிந்தால் யாவருக்கும் போக, தாராளமாக உணவும் மிஞ்சும். இன்று குழந்தைகள் வழியாக இயேசு கற்றுத் தரும் பகிர்வுப் பாடங்களை மனத்தில் ஏற்போம். ‘பெறுவதெல்லாம் எனக்குதான்எனும் பேராசையின்றி, ‘பகிர்ந்து வாழவே பெற்றேன்என்ற பண்பான உள்ளத்தை இறைவனிடம் கேட்போம்!

Comment