No icon

2024, ஜூலை 7 முதல் 11 வரை

தமிழ்நாடு - புதுவை ஆயர் வேரவைக் கூட்டம்

தமிழ்நாடு - பாண்டிச்சேரி மேய்ப்புப்பணிப் பேரவைக் கூட்டமும், தமிழ்நாடு ஆயர் பேரவைக் கூட்டமும் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில்  இம்மாதம் ஜூலை 7 முதல் 11 வரை நடைபெற்றது.

ஜூலை ஏழாம் நாள் கூடிய தமிழ்நாடு - பாண்டிச்சேரி மேய்ப்புப்பணிப் பேரவையின் கூட்டத்தில், திருத்தந்தையின் இந்த ஆண்டுக்கான தொலைத்தொடர்பு நாள் செய்தியான ‘செயற்கை நுண்ணறிவும், இதயத்தின் ஞானமும்’ என்ற கருத்தின் வழி நின்று ‘செயற்கை நுண்ணறிவும், திரு அவையின் கரிசனைகளும்’ என்ற தலைப்பில் அமர்வுகள் நடைபெற்றன.

இவ்வமர்வில் தொடக்க உரையாற்றிய தமிழ்நாடு ஆயர் பேரவையின் தலைவர் மேதகு பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி ஆண்டகை அவர்கள், செயற்கை நுண்ணறிவின் அவசியத்தையும், அதை அறநெறி வழிநின்று கையாளும் வழி முறைகளையும் எடுத்துக் கூறினார். “சிறப்பாக அறிவியல் முன்னேற்றம் அசுர வளர்ச்சி காணும் இந்த நவீன தொழில்நுட்ப உலகில் திரு அவையும், அதன் நம்பிக்கையாளர்களும் செயற்கை நுண்ணறிவு பற்றிக் குறைந்தபட்ச புரிதலும், தெளிவும் கொண்டிருக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். இரண்டாம் வத்திக்கான் திருச்சங்க ஏடு ‘இன்றைய உலகில் திரு அவை’ குறிப்பிடும் “மாறிவரும் சூழலுக்கு ஏற்ப நம்பிக்கையாளர்களின் சான்று வாழ்வை நெறிப்படுத்தி வழிகாட்ட திரு அவை ஆவன செய்ய வேண்டும்” என்பதற்கு இணங்க, நாம் சில முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது எனவும் பேராயர் குறிப்பிட்டார். “அறிவியலும், ஆன்மிகமும் தொடர்பில்லாதது என்ற நிலைப்பாட்டைச் சற்றே நாம் மறு ஆய்வு செய்து, அறநெறி சார்ந்து அறிவியலையும், அறிவியல் கண்டுபிடிப்புகளையும் நாம் பயன்படுத்த அழைக்கப்படுகிறோம்” எனவும் வழிகாட்டினார்.

“கடந்த பத்து ஆண்டுகளில் உலகமெங்கும் அறிவியல் தளத்தில் நாட்டுத் தலைவர்கள் மத்தியில் விவாதிக்கப்பட்ட ‘செயற்கை நுண்ணறிவு’ (A.I - Artificial Intelligence) என்னும் தலைப்பை நாம் இன்று சிந்தனைக்குக் கருப்பொருளாக எடுத்திருக்கிறோம்” என்று குறிப்பிட்ட பேராயர் அவர்கள், அண்மையில் நிகழ்ந்த ‘ஜி 7’ என்னும் உலக நாடுகளின் தலைவர்கள் கூட்டமைப்பில் உரையாற்றிய போது நம் திருத்தந்தை இந்தச் செயற்கை நுண்ணறிவைப் பற்றி உரையாற்றினார் என்பதையும் நினைவூட்டினார். ‘எத்தகைய முறையில் நாம் இதைக் கையாள்வது?’ எனக் குறிப்பிட்ட பேராயர், “இதனால் மனித மாண்பு எந்தச் சூழலிலும் குறைவுபடாது காக்கப்பட வேண்டும் என்றும், தனிமனிதத் தரவுகள் முறையாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், மனிதனே படைப்பின் சிகரம் என்பதால், மனிதனால் உருவாக்கப்பட்ட இச்செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் ஒருபோதும் மனிதனுக்கு இணையாகவோ, உயர்வானதாகவோ கருதப்படக் கூடாது என்பதையும் மேலும், இந்தச் செயற்கை தொழில்நுட்பக் கருவிகளால் மனித உழைப்பு ஒருபோதும் விலைபோய்விடக் கூடாது என்றும், மனித உழைப்பு சுரண்டப்படக்கூடாது” எனவும் எச்சரித்தார்.

“மனித வாழ்வு பலவீனம் கொண்டது; இதுவே இறைவனின் படைப்பின் திட்டமாக இருப்பதால், முழுமை பெறும் எண்ணத்தோடு செயற்கை நுண்ணறிவைக் கொண்டு இறப்பைக் கடக்க முயற்சிகள் மேற்கொள்ளக் கூடாது; அதைத் தாழ்ந்து ஏற்றுக் கொள்ள வேண்டும்” எனவும், இறுதியாக, “அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதர்களுக்கிடையே, மனிதனை இயற்கையோடும், இறைவனோடும் உறவுகொள்ள வழிகாட்ட வேண்டும்” எனவும் வலியுறுத்தினார்.

கலந்துரையாடல்களுடன் கூடிய இந்த அமர்வை, இந்திய ஆயர் பேரவையின் விவிலியப் பணிக்குழுச் செயலர் அருள்முனைவர் இயேசு கருணாநிதி அவர்களும், திருச்சி சலேசிய மாநில ‘அலைகள் மீடியா’வின் இயக்குநர் தந்தை செல்வக் குமார் அவர்களும் வழிநடத்தினார்கள்.

ஆயர் பேரவையின் ஆண்டுக் கூட்டத்தில் ஒவ்வொரு பணிக்குழுவின் செயல்பாடுகள் பற்றிய அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. ஆயர் பேரவையின் ஆலோசனைகளும், வழிகாட்டுதலும் ஒவ்வொரு பணிக்குழுவிற்கும் வழங்கப்பட்டன.

இச்சூழலில், ‘இல்லந்தோறும் இறையாட்சி’ என்ற இலக்கோடு கடந்த பத்து ஆண்டுகளாகப் பயணித்து, மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் இடம்பிடித்திருக்கும் மாதா தொலைக்காட்சியின் பத்து ஆண்டு நிறைவுவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு ஆயர் பேரவை தலைவர் மேதகு பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமை ஏற்க, அனைத்து ஆயர்களும், பணிக் குழுச் செயலர்களும், மறைமாவட்ட ஊடகப் பணிக்குழுவின் செயலர்களும், தஞ்சை மறைமாவட்டக் குழுக்களும், இன்னும் சிறப்பாக வேளை நகர் திருத்தலப் பேராலயத்தின் அதிபர், பங்குத்தந்தை மற்றும் அருள்பணியாளர்கள் இணைந்து நன்றித் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

ஏறக்குறைய நான்காயிரம் மக்கள் கலந்து கொண்ட இந்த நன்றித் திருப்பலியில், மாதா தொலைக்காட்சியையும், ஊடகப் பணியையும், சிறப்பாக இந்தச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி ஆக்கப்பூர்வமான அறநெறி வாழ்வு கொண்ட பணிகளை இன்னும் மேற்கொள்ள வேண்டும் எனவும் உறுதி ஏற்கப்பட்டது.

 

Comment