No icon

கர்தினால் தூமியின் மறைவுக்கு திருத்தந்தையின் இரங்கல் செய்தி

கர்தினால் தூமியின் மறைவுக்கு திருத்தந்தையின் இரங்கல் செய்தி

ஏப்ரல் 2 ஆம் தேதி, புனித வெள்ளியன்று, காமரூன் நாட்டில் இறையடி சேர்ந்த கர்தினால் கிறிஸ்டியான் வியாக்கான் தூமி  (Christian Wiyghan Tumi)  அவர்களின் மறைவையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டின் டவோலா  (Douala) உயர் மறைமாவட்டத்தின் பேராயர் சாமுவேல் கிளேடா அவர்களுக்கு இரங்கல் செய்தியை அனுப்பியுள்ளார்.
குடியரசு மற்றும் மனித உரிமை ஆகிய விழுமியங்களை, துணிவுடன் காத்ததன் வழியே, கர்தினால் தூமி அவர்கள், காமரூன் நாட்டின் அரசியல் மற்றும் சமுதாய வாழ்வில் மறக்கமுடியாத தாக்கத்தை உருவாக்கிச் சென்றுள்ளார் என்று திருத்தந்தை இச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அவரது பிரிவால் துயருறும் உறவினர்கள், நண்பர்கள், ஆகியோருக்கு தன் செபங்களையும், அருகாமையையும் வெளியிட்டுள்ள திருத்தந்தை, உயிர்ப்பின் நம்பிக்கையுடன், அவரது அடக்கத் திருப்பலியில் கலந்துகொண்ட அனைவரோடும் தானும் ஆன்மீக வழியில் ஒன்றித்திருப்பதாக இச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
காமரூன் நாட்டின் கிக்காய்கேளாக்கி என்ற ஊரில் 1930ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதி பிறந்த கிறிஸ்தியான் தூமி அவர்கள், 1966ஆம் ஆண்டு அருள்பணியாளராக அருள்பொழிவு செய்யப்பட்டார்.1980 ஆம் ஆண்டு, சனவரி  6 ஆம் தேதி, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில், அருள்பணி தூமி அவர்கள், திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் அவர்களால் ஆயராக திருப்பொழிவு பெற்றார். 1984 ஆம் ஆண்டு Garoua உயர் மறைமாவட்டத்தின் பேராயராகப் பொறுப்பேற்ற தூமி அவர்களை, 1988 ஆம் ஆண்டு, திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் அவர்கள், கர்தினாலாக உயர்த்தினார். 1991ஆம் ஆண்டு முதல் னுடிரயடய உயர் மறைமாவட்டத்தின் பேராயராகப் பணியாற்றி வந்த கர்தினால் தூமி அவர்கள், 2009 ஆம் ஆண்டு, தன் 79வது வயதில் பணி ஓய்வு பெற்றார். காமரூன் நாட்டின் முதல் கர்தினாலாக பணியாற்றிய கர்தினால் தூமி அவர்கள், 2021ஆம் ஆண்டு, ஏப்ரல் 2, புனித வெள்ளியன்று, தன் 91வது வயதில் இறையடி சேர்ந்தார்.

Comment