No icon

பொருளாதார, மற்றும், சமூக நெருக்கடி

சிறு, நடுத்தர வணிகங்களின் தியாகத்திற்கு திருத்தந்தை பாராட்டு

கோவிட்-19 பெருந்தொற்று மற்றும், போர்களின் எதிர்விளைவுகளால் இவ்வுலகம், கடுமையான சமூக-பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுவருவதற்கு மத்தியில், துணிச்சல், முயற்சி, தியாகம் ஆகியவற்றுடன் தொடர்ந்து செயல்பட்டுவரும் சிறு மற்றும், நடுத்தர வணிகங்களை திருத்தந்தை பிரான்சிஸ் பாராட்டியுள்ளார்.

ஆகஸ்ட் 2, செவ்வாயன்று, தனது ஆகஸ்ட் மாதப் பொதுக் கருத்து குறித்த சிந்தனைகளை காணொளி வழியாக விளக்கியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிறு மற்றும், நடுத்தர தொழில் முனைவோர், பொருளாதார மற்றும், சமூக நெருக்கடிகளுக்கு இடையே தொடர்ந்து செயல்படுவதற்கும், தங்கள் சமுதாயங்களுக்குத் தொண்டாற்றுவதற்கும் வழிகளைக் காண நாம் மன்றாடுவோம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இக்கால பொருளாதார, மற்றும், சமூக நெருக்கடிகளால், சிறு மற்றும், நடுத்தர வணிகங்கள் எதிர்கொள்ளும் எதிர்விளைவுகளையும், இதனால் உலகில் நான்கு நிறுவனங்களுக்கு ஒன்று, தங்களது மொத்த விற்பனையில் பாதியை இழந்துள்ளது என்று, 2021ஆம் ஆண்டில் உலக வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களையும் திருத்தந்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

கடைகள், பணிமனைகள், சலவைத் தொழில்கள், சரக்குகளைப் பரிமாற்றம் செய்யும் தொழில்கள் போன்ற, சிறு மற்றும், நடுத்தர வணிகங்கள், உலகின்  செல்வமிக்க மற்றும், சக்திபடைத்த தொழில்கள் பட்டியல்களில் இடம்பெறுவதில்லை, இருந்தபோதிலும், அவை சமுதாயத்திற்கு ஆற்றவேண்டிய தங்களின் கடமையை நிறைவேற்றுகின்றன எனவும் திருத்தந்தை கூறியுள்ளார்.

சிறு மற்றும், நடுத்தர வணிகங்கள், வரி என்ற புகலிடங்களில் தங்களை மறைத்துக்கொள்ளாமல், பொது நலனுக்காக முதலீடு செய்கின்றன என்றும், துணிவு, தியாகம் ஆகியவற்றோடு, வாய்ப்புக்கள் மற்றும், வேலைகளை உருவாக்கி அவை சமுதாய வாழ்வில் தங்களை ஈடுபடுத்துகின்றன என்றும், அவை விளிம்புநிலையில் உள்ளவர்களுக்கு உதவி வருகின்றன என்றும், திருத்தந்தை எடுத்துரைத்துள்ளார்.

ஆதலால், சிறு மற்றும், நடுத்தர வணிகங்கள், பொருளாதார மற்றும், சமூக நெருக்கடிகளுக்கு இடையே தொடர்ந்து செயல்படுவதற்கும், தங்கள் சமுதாயங்களுக்குத் தொண்டாற்றுவதற்கும் வழிகளைக் காண, இந்த ஆகஸ்ட் மாதத்தில் நாம் கடவுளை மன்றாடுவோம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்புவிடுத்துள்ளார். 

Comment