No icon

எதிர்மறை எண்ணங்களுக்கு கைதிகளாக வேண்டாம் -திருத்தந்தை

ஜூன் 16 ஞாயிறன்று, மூன்று ஆண்டு களுக்கு முன், இத்தாலியின் காமெரீனோ பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் தங்கள் வீடுகளை இழந்து, இன்னும் தற்காலிக
வீடுகளில் வாழ்ந்துவரும் மக்களைச்  சந்திக்கச் சென்ற திருத்தந்தை, அவர்களுக்கு நிறை வேற்றிய திருப்பலியில்,  ‘ஒன்றை மீண்டும் துவக்குவது, அதிக சக்தியை எதிர்பார்க்கும் ஒரு செயல், ஆனால், இறைவன் அதற்குத் தேவையான சக்தியை எப்போதும் தன் மக்களுக்கு வழங்கியவண்ணம் இருக்கிறார்’ என்று மறையுரை வழங்கினார்.
காமெரீனோ மக்களுக்கு மூவொரு கடவுள் பெருவிழாத் திருப்பலியை நிறை வேற்றியத் திருத்தந்தை பிரான்சிஸ், "இறைவனை நாடிச் செல்வோருக்கு, எப் பணியையும் மீண்டும் துவக்குவதில் மனத்தளர்ச்சியோ, சிரமமோ இருக்காது" என்று தன் மறையுரையில் எடுத்துரைத்தார். மேலும், கடந்த கால எதிர்மறை எண்ணங்களுக்கு நாம் கைதிகளாக இருப்பதிலிருந்து நமக்கு விடுதலையளிக்கும் இறைவன், நம் சுமைகளை நாம் தாங்கி நடக்க, நமக்கு உள்ளிருந்து உதவிகள் செய்கிறார் என்று திருத்தந்தை கூறினார்.
சக்தியற்ற நிலையை நாம் உணரும் வேளையில், இறைவன், நம் சுமைகளை அகற்றுவதில்லை, மாறாக, நமக்கு ஆறுதல் வழங்கும் தூய ஆவியாரை வழங்குகிறார் என்பதை திருத்தந்தை, தன் மறையுரையில் வலியுறுத்தினார். நம் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புபவராக தூய ஆவியார் விளங்குகிறார் என்பதை, தன் மறையுரையில் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ், தூய ஆவியார் வழங்கும் நம்பிக்கையே, நமக்குள் அமைதியையும், மகிழ்வையும் தருகிறது என்று எடுத்துரைத்தார்.

Comment