No icon

இறைவேண்டலின் பரிமாணங்கள் – 10

சொல்லால் இறைவேண்டல்!

இறைவனோடு உரையாடுவதும், உறவாடுவதுமே இறைவேண்டல். இந்த உரையாடல், உறவாடல் பல்வேறு பரிமாணங்களில் வெளிப்படுத்தப்படவேண்டும். உண்மையில், இறைவன் ஒரு மறைபொருள்! அவரோடு எப்படி உரையாட வேண்டும்? உறவாட வேண்டும்? என்பதை நாம் முழுமையாக அறிந்துகொள்ள முடியாது. இருப்பினும், இறைவார்த்தை, திரு அவை மரபு, மானிட அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில்தான் நாம் இறைவேண்டல் செய்து வருகிறோம்.

மனித உரையாடல்களில், உறவாடல்களில் நாம் பயன்படுத்தும் உத்திகள், பரிமாணங்கள், வெளிப்பாடுகள் அனைத்தையும் இறைவேண்டலிலும் நாம் பயன்படுத்தலாம். மானிட உறவாடல்களில் மிகவும் அடிப்படையானது என்ன? சொற்கள்தானே! பேச்சின் வழியாகத்தான் நமது பெரும்பான்மை உறவுப் பரிமாற்றங்கள் நிகழ்கின்றன. இறைவேண்டலிலும் முதன்மையாகச் சொற்களே நமது உதவிக்கு வருகின்றன. எனவே, நமது தனி வேண்டல், குழும வேண்டல், திரு அவை வேண்டல் மூன்றிலும் நாம் வாய் திறந்து, சொற்களைப் பயன்படுத்தி இறைவேண்டல் செய்கிறோம்.

இந்த மூவகை வேண்டல்களிலும் வாயையே திறவாமல் கலந்துகொள்ளும் மனிதர்களையும் நாம் பார்க்கத்தான் செய்கிறோம். இவர்களை எப்படிப் புரிந்துகொள்வது? இவர்கள் ‘வாய் திறவாமலே செபிக்கலாம்’ என்னும் சிந்தனை கொண்டவர்களா? அல்லது ‘நான் மௌனமாகச் செபிப்பது கடவுளுக்குக் கேட்காமலா போகும்?’ என்று நினைப்பவர்களா? ஆனால், நாம் வாய் திறந்து ஆண்டவரைப் போற்ற வேண்டுமென இறைமொழி கற்பிப்பதைத் திருவிவிலியத்தின் பல இடங்களில் பார்க்கிறோம். “என் நீதியை, நீர் நிலைநாட்டிய நற்செய்தியை மாபெரும் சபையில் அறிவித்தேன்; நான் வாயை மூடிக் கொண்டிருக்கவில்லை; ஆண்டவரே, நீர் இதை அறிவீர்” (திபா 40:9) என்னும் வரிகளை வாசித்து நாம் வியப்படைகிறோம். வழிபாட்டு நேரங்களில் வாயை மூடிக் கொண்டிருப்போர் இதை உணரட்டும்.

யோவானின் தந்தையான செக்கரியா வாய்பேச இயலா நிலையில் இருந்தபோது, குழந்தைக்கு ‘யோவான்’ என்று பெயரிட வேண்டும் என்று எழுதிக் காட்டினார். அடுத்து நிகழ்ந்ததை நெகிழ்ச்சியுடன் வர்ணிக்கின்றார் லூக்கா. “அப்பொழுதே அவரது வாய் திறந்தது; நா கட்டவிழ்ந்தது; அவர் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்” (லூக் 1:64). நாவின் கட்டு அவிழ்ந்ததும் அவர் செய்த முதல் செயல் கடவுளைப் போற்றிப் புகழ்ந்ததுதான் என்பது நமக்கு ஓர் இறைவேண்டல் பாடம்.

உண்மையில், வாய் திறந்து கடவுளைப் போற்றுவது ஓர் ஆசி. அந்த ஆசியைப் பெறுவதற்குக்கூடக் கடவுளின் அருள் தேவை என்பதை இறையடியார் தாவீது உணர்ந்திருந்தார். எனவேதான், அவர் “என் தலைவரே! என் இதழ்களைத் திறந்தருளும்; அப்பொழுது, என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும்” (திபா 51:15) என்று கடவுளிடம் விண்ணப்பித்தார்.

நாமும் அவ்வாறே மன்றாடி, இறைப்புகழ்ச்சி என்னும் கொடையைப் பெற்றுக் கொள்வோமாக.

இறைவேண்டலில் வாய் திறக்கப்பட வேண்டும் என்பதற்கு மற்றொரு திருவிவிலிய ஆதாரமாக “அவரிடம் மன்றாட என் வாய் திறந்தது; அவரை ஏத்திப் புகழ என் நா எழுந்தது” (திபா 66:17) என்னும் வரிகளும் முன்வருகின்றன. உண்மையில், நமது நாவின் முதன்மை நோக்கம் உணவு உண்பதோ, பேசுவதோ அல்ல; மாறாக, கடவுளைப் போற்றுவதே என்னும் ஞானத்தை உணர்ந்துகொண்ட இறையடியார், “ஆண்டவர் எனக்கு நாவைப் பரிசாகக் கொடுத்தார். அதைக் கொண்டு நான் அவரைப் புகழ்வேன்” (சீஞா 51:22) என்று சொல்லியிருக்கிறார்.

அதுபோலவே, திருப்பாடல் ஆசிரியரும் “ஆண்டவரின் பேரன்பைப் பற்றி நான் என்றும் பாடுவேன்; நீர் உண்மையுள்ளவர் எனத் தலைமுறைதோறும் என் நாவால் அறிவிப்பேன்” (திபா 89:1) என்று உரைத்துள்ளார். எனவே, நாமும் தாவீதுடன் சேர்ந்து, “அறுசுவை விருந்தில் நிறைவடைவதுபோல என் உயிர் நிறைவடையும்; என் வாய் மகிழ்ச்சிமிகு இதழ்களால் உம்மைப் போற்றும்” (திபா 63:5) என்று சொல்வோமாக.

வாய் திறந்து இறைவேண்டல் செய்ய வேண்டும் என்பதற்கான இத்தனை திருவிவிலிய ஆதாரங்களைக் கண்டு வியக்கிறீர்களா? இதற்கே இப்படி என்றால், இன்னும் இருக்கிறதே?

வாய் திறந்தால் மட்டும் போதாது, உரத்தக் குரலில் ஆண்டவரைப் போற்ற வேண்டும் என்னும் அழைப்பையும் திருவிவிலியத்தில் நாம் காண்கிறோம். “உரத்தக் குரலில் உமக்கு நன்றிப்பா பாடுகின்றேன்; வியத்தகு உம் செயல்களை எல்லாம் எடுத்துரைக்கின்றேன்” (திபா 26:7) என்கிறார் திருப்பாடல் ஆசிரியர்.

புதிய ஏற்பாட்டில் இயேசுவால் நலம் பெற்ற மனிதர்களுள் ஒருவர் தம் பிணி தீர்ந்திருப்பதைக் கண்டு உரத்தக் குரலில் கடவுளைப் போற்றிப் புகழ்ந்துகொண்டே இயேசுவிடம் திரும்பி வந்தார் (லூக் 17:15) என்று வாசிக்கிறோம். நலம் பெற்றவர்கள் மட்டுமல்ல, இயேசுவின் சீடர்களும் “தாங்கள் கண்ட எல்லா வல்ல செயல்களுக்காகவும் உரத்தக் குரலில் மகிழ்ச்சியோடு கடவுளைப் புகழத் தொடங்கினர்” (லூக் 19:37) என்னும் லூக்காவின் கூடுதல் பதிவும் நம்மை வியக்க வைக்கிறது.

ஆம், நாம் இயேசுவின் சீடர்கள் என்றால், இறைவனின் வியத்தகு செயல்களை நம் வாழ்வில் அனுபவித்திருக்கிறோம் என்றால், நாமும் வாய் திறந்து, உரத்தக் குரலில் இறைவனைப் போற்றிப் புகழ வேண்டும். அப்போதுதான், நமது இறைவேண்டல் முழுமையடையும்.

(தொடரும்)

 

Comment