No icon

இறைவேண்டலின்  பரிமாணங்கள் – 18

இறைவேண்டலில் மன வலிமை

இறைவேண்டல் என்பது பன்முகத்தன்மை கொண்டது. அதில் பல்வேறு பரிமாணங்கள் உள்ளன. மனித ஆளுமையின் தளங்களான உடல், மனம், ஆன்மா, உணர்வுகள், மனவலிமை ஆகிய அனைத்துக் கூறுகளும் இறைவேண்டலில் இணையும்போதுதான், அது முழுமையானதாக மாறுகிறது. காரணம், இவை அனைத்துமே ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன. ஒன்று மற்றொன்றின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

எனவே, இறைவேண்டல் பற்றிய விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். தொடக்கத் திரு அவையினருக்குஇறைவனிடம் வேண்டுதல் செய்யுமாறு கட்டுப்பாடோடும் அறிவுத் தெளிவோடும் இருங்கள்” (1பேது 4:7) என்று பேதுரு அறிவுறுத்தியுள்ளார் என்பது இங்கே நினைவு கூரத்தக்கது.

கடவுள் நமக்குத் தந்த கொடைகளுள் ஒன்றுதான் மனவலிமை (will power).  உடல்நலம், படிப்பு, உறவுகள், பழக்கவழக்கங்கள் போன்ற நம் வாழ்வின் அனைத்துத் தளங்களிலும் நாம் இந்த மனவலிமையைப் பயன்படுத்துகிறோம். மனவலிமையின் உதவியால்தான் நாம் உணவில் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கிறோம், நேர மேலாண்மை செய்கிறோம், தொடங்கிய வேலையைத் தொய்வின்றிச் செய்து முடிக்கிறோம். “மன வலிமை நோயைத் தாங்கிக் கொள்ளும்; மனம் புண்பட்டால் அதைக் குணப்படுத்த யாரால் இயலும்?” (நீமொ 18:14) என்னும் நீதிமொழிகள் நூலின் வரிகள் இந்த அனுபவத்தை எடுத்துரைக்கின்றன.

சில நேரங்களில் மனவலிமை பற்றிய தன்னுணர்வு இன்றியே நாம் அதனைப் பயன்படுத்துகிறோம். ஒரே நோயினால் பாதிக்கப்பட்டிருப்போர் ஒரேவித மருந்துகளை எடுத்தாலும், ஒருசிலர் மற்றவர்களைவிட விரைவில் குணம் பெறுவதற்கு அவர்களின் மனவலிமையும் ஒரு காரணம் என்பதை மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

மன வலிமையைப் பற்றிய தன்னுணர்வில் வளர்ந்து, அதனை முழு முயற்சியுடன் பயன்படுத்துவோர் அனைவரும் வாழ்வில் வெற்றியாளர்களாகத் திகழ்கிறார்கள். அனைவருக்கும் இது கொடையாகத் தரப்பட்டாலும், உடல் வலிமையைப் போலவே, மன வலிமையும் ஆளுக்கு ஆள் மாறுபடுகிறது. உடற்பயிற்சி செய்து நம் உடலை நாம் வலிமைப்படுத்துவது போலவே, பயிற்சியின் வழியாக நம் மனவலிமையையும் வலிமைப்படுத்த நாம் கடமைப்பட்டுள்ளோம்.

மன வலிமை பற்றிய பல செய்திகளை நாம் திருவிவிலியத்தில் காண்கிறோம். “கடவுள் நமக்குக் கோழையுள்ளத்தினை அல்ல; வல்லமையும் அன்பும் கட்டுப்பாடும் கொண்ட உள்ளத்தையே வழங்கியுள்ளார்” (2திமொ 1:7) என்னும் பவுலடியாரின் சொற்கள், மன வலிமை ஒரு கடவுளின் கொடை என்பதைப் பறைசாற்றுகிறது.

திருவிவிலியம் காட்டும் மன வலிமையற்ற ஓர் அரசன் சாலமோனின் மகனான ரெகபெயாம். “ரெகபெயாம் மன வலிமையற்ற இளைஞனாய் இருந்தான்” (2குறி 13:7). எனவே, அவனால் எதிரிகளை எதிர்த்து நிற்க முடியவில்லை என்று குறிப்பேடு நூலில் எழுதப்பட்டுள்ளது. நேர்மாறாக, மனவலிமை பெற்ற ஓர் இளைஞனாகத் திரு முழுக்கு யோவானைப் புதிய ஏற்பாட்டில் காண்கிறோம். “குழந்தையாயிருந்த யோவான் வளர்ந்து மனவலிமை பெற்றார். இஸ்ரயேல் மக்களுக்குத் தன்னை வெளிப்படுத்தும் காலம் வரை அவர் பாலை நிலத்தில் வாழ்ந்து வந்தார்” (லூக் 1:80). பாலை நிலத்தில் வாழ்வதற்கு மனவலிமை தேவையல்லவா!

மனவலிமை என்னும் கொடையை நம் வாழ்வின் அனைத்துத் தளங்களிலும் பயன்படுத்த வேண்டும். நம் வாழ்வின் சோதனைகளைப் பற்றிப் பேசும் பவுலடியார், “கடவுள் நம்பிக்கைக்குரியவர். அவர் உங்களுடைய வலிமைக்குமேல் நீங்கள் சோதனைக்குள்ளாக விடமாட்டார். சோதனை வரும்போது அதைத் தாங்கிக்கொள்ளும் வலிமையை உங்களுக்கு அருள்வார்” (1கொரி 10:13) என்று நம்மை ஊக்கப்படுத்துகிறார்.

இப்போது நாம் இறைவேண்டலுக்கு வருவோம். இறைவேண்டலின்போது நாம் உடல் களைப்பு, மனச் சோர்வு, ஆர்வமின்மை போன்றவற்றை எதிர்கொள்ளும்போதெல்லாம், மனவலிமை என்னும் கொடையைப் பயன்படுத்தி நமது இறைவேண்டலை வெற்றிகரமாக முடிக்கலாம். உடலும், உள்ளமும் சோர்ந்திருந்தாலும், இறைவேண்டல் செய்ய ஆர்வமோ, ஆற்றலோ இல்லாவிட்டாலும், ‘நான் செபிக்க விரும்புகிறேன்என்று நம் உள்ளத்தில் சொல்வதே ஓர் இறைவேண்டல்தான். எத்தனையோ புனிதர்கள் தங்கள் செப வாழ்வில் மனவலிமை என்னும் கொடையைப் பயன்படுத்தி இறைவேண்டலில் நிலைத்திருக்கிறார்கள். அத்தகைய வேளைகளில் குறைபாடுள்ள நம் இறைவேண்டல் ஆண்டவரின் பார்வையில் மதிப்பு மிக்கதாயிருக்கும்.

மனவலிமை தூய ஆவியாரின் தன்னடக்கம் என்னும் கனியோடு தொடர்புடையது. அது திரு அவையில் தொண்டாற்றுவதற்கு அவசியமாகத் தேவைப்படுகிறது. எனவேதான், திரு அவைப் பொறுப்பாளர்கள்விருந்தோம்பல், நன்மையில் நாட்டம், கட்டுப்பாடு, நேர்மை, அர்ப்பணம், தன்னடக்கம் ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும்” (தீத்து 1:8) என்று வலியுறுத்தினார் பவுலடியார்.

நாம் இறைவேண்டல் செய்யும்போது, அலகை அதனை முறியடிக்க முயல்வதை நாம் உய்த்துணர்ந்துள்ளோம். அத்தகைய வேளைகளில் ஆண்டவர் தந்துள்ள மனவலிமை என்னும் ஆயுதத்தை நாம் பயன்படுத்த வேண்டும். “நீங்கள் ஆண்டவரோடு இணைந்து, அவர் தரும் வலிமையாலும் ஆற்றலாலும் வலுவூட்டப் பெறுங்கள். அலகையின் ஏமாற்று வழிகளை எதிர்த்து நிற்கும் வலிமையைப் பெறும்படி கடவுள் அருளும் எல்லாப் படைக்கலன்களையும் அணிந்து கொள்ளுங்கள்” (எபே 6:10-11) என்னும் பவுலடியாரின் அறிவுரைக்கேற்ப, மனவலிமை என்னும் படைக்கலனையும் அணிந்துகொண்டு நாம் இறைவேண்டல் செய்வோமாக! மன வலிமை என்னும் கொடையை ஆண்டவரிடமிருந்து வேண்டிப் பெற்றுக் கொள்வோமாக!         

(தொடரும்)

Comment