No icon

சிந்தனைச் சிதறல்

ஜென்னி கரிக்னன் (நடனக் கலைஞர் முதல் இராணுவ லெப்டினன்ட் ஜெனரல் வரை)

எவரையும் அடக்கி ஆள ஆசையும் இல்லை; எவருக்கும் அடங்கிப் போக வேண்டிய அவசியமும் இல்லைஎன்கிறார் புரட்சிக் கவிஞர் பாரதியார். பெண்கள் பல நூற்றாண்டுகளாக அடிமைகளாக இருந்தார்கள். கல்வியானது அவர்கள் காணாத விடுதலையைக் கொடுத்தது. அவர்கள் உடல் வலிமையற்றவர்கள் என்றார்கள்; 1917-ஆம் ஆண்டு அமெரிக்க இராணுவத்தில் இணைந்த முதல் ஆயுதப் படை பெண் லோரெட்டா. இவரே முதல் இராணுவக் கடற்படை வீரராகத் தன்னை இணைத்துக்கொண்டார். 1993-ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தில் இணைந்த முதல் பெண் பிரியா ஜிங்கன். அன்று, பெண்கள் கடைநிலை பணியாளராக இராணுவத்தில் இணைந்தவர்கள், அப்படையின் தளபதியாக உயர நூற்றாண்டு தேவைப்பட்டது. 2024 -ஆம் ஆண்டு கனடா நாட்டின் இராணுவத் தளபதியாக முதல் பெண்ணாக ஜென்னி கரிக்னன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜென்னி கரிக்னன் கனடா நாட்டில் கியூபெக்கில் உள்ள அஸ்பெஸ்டாஸில் பிரெஞ்சு மொழி பேசும் குடும்பத்தில் பிறந்தார். எட்டு வயதிலிருந்தே பாலே நடனம், பாடல் மற்றும் ஜாஸ் நடனம் ஆகியவற்றைக் கற்றுக்கொண்டதால், அவர் கருதிய ஒரே தொழில் நடனம். நடனத் தொழிலில் சிறந்து விளங்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அது நிறைவேறாத ஆசையாக இருக்கின்றது. ‘நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்என்பார்கள், அதுபோல தன்னுடைய ஆசையை விட்டு விட்டு, காலம் தனக்குக் கொடுத்த பணியைச் செய்ய ஆரம்பித்தார்.

கரிக்னன் 1986 -ஆம் ஆண்டு கனடிய ஆயுதப் படையில் சேர்ந்தார். தான் விரும்பிய நடனத் தொழில் கிடைக்கவில்லை; எனவே, கிடைத்த இராணுவப் பணியை விரும்பி ஏற்றுக்கொண்டார். தன் நாட்டை எதிரியிடமிருந்து காப்பாற்ற, தன்னை நம்பி உறங்கிக் கொண்டிருக்கும் தன் நாட்டு மக்களுக்காக விழித்திருந்து நாட்டைப் பாதுகாக்க முன்வந்தார்.

1993 -ஆம் ஆண்டில் கோலன் ஹைட்ஸில் உள்ள ஐக்கிய நாடுகளின் வெளியேற்றக் கண்காணிப்பாளர் படையில் அமைதிக் காப்பாளராகப் பணியாற்றினார். இவர் 1995 -இல் போஸ்னியாவில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் படையில் அனுப்பப்படவிருந்தார். ஆனால், கர்ப்பமடைந்த பின்னர் விலக வேண்டியிருந்தது. பின்னர் கரிக்னன் 1999 -இல் மேஜராகப் பதவி உயர்வு பெற்று லாவல் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். இவர் அமெரிக்க இராணுவக் கட்டளை மற்றும் பொது பணியாளர் கல்லூரியில் இடைநிலை கற்றல் கல்வித் திட்டத்தையும் முடித்துள்ளார். மேலும், கல்லூரியின் மேம்பட்ட இராணுவ ஆய்வுகள் பள்ளியில் இராணுவக் கலை மற்றும் அறிவியல் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். 2002 -ஆம் ஆண்டில் போஸ்னியாவுக்கு விவசாயிகளின் வயல்களில் இருந்து, வெடிக்கும் ஆயுதங்களை அகற்ற அனுப்பப்பட்டார்.

கரிக்னன் 2003 முதல் 5-வது காம்பாட் இன்ஜினியர் ரெஜிமென்ட்டின் துணை கட்டளை அதிகாரியாகவும், பொறுப்புத் தளபதியாகவும் இருந்தார். கனடியத் தரைப்படை கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியில் பயிற்றுவிப்பாளராகப் பணியாற்றினார். அதே ஆண்டில், CAF வரலாற்றில் ஒரு போர் ஆயுதப் பிரிவுக்குக் கட்டளையிட்ட முதல் பெண்மணி இவர்.

2009 மற்றும் 2010-க்கு இடையில் இவர் ஆப்கானிஸ்தானில் உள்ள காந்தகார் பொறியாளர் படைப்பிரிவின் பணிக்குழுவிற்குத் தலைமை தாங்கினார். இவர் திரும்பியதும் கனடிய இயந்திரமயமாக்கப்பட்ட படைப்பிரிவின் துணைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.

கரிக்னன் 2011 -இல் கர்னலாகப் பதவி உயர்வு பெற்று, கூட்டுப் பணிக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். மேலும், அதே ஆண்டில் பெண்கள் நிர்வாக வலையமைப்பால் கனடாவின் 100 சக்தி வாய்ந்த பெண்களில் ஒருவராகப் பெயரிடப்பட்டார். சர்வதேச உறவுகளில் சிறந்து விளங்கியதற்காக மேஜர் ஜெனரல் ஹான்ஸ் ஸ்க்லப் விருதையும் பெற்றார்.

ஜூலை 2013-இல் கரிக்னன், இராயல் மிலிட்டரி கல்லூரி செயிண்ட் ஜூனின் தளபதியாக ஆனார். அதே ஆண்டில் நிர்வாகத்தில் சிறந்து விளங்கியதற்காக ஹெர்மெஸ் விருதைப் பெற்றார். அனைத்து அதிகாரிகளுக்கும் பாலியல் நடத்தைப் பயிற்சியை அறிமுகப்படுத்தியது. மேலும், 1990-களில் நிறுத்தப்பட்ட நடன வகுப்புகளை மீண்டும் அறிமுகப்படுத்தியது இவரது அயராத உழைப்புக்குச் சான்று.

கரிக்னன் ஜூன் 15, 2016 அன்று பிரிகேடியர் ஜெனரலாகப் பதவி உயர்வு பெற்று இராணுவ நடவடிக்கைகளின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். ஆகஸ்டு 15, 2019 அன்று மேஜர் ஜெனரல் பதவிக்கு உயர்த்தப்பட்டார். இராணுவத்தில் பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்கும் பொறுப்புடன் புதிதாக உருவாக்கப்பட்ட தொழில்முறை நடத்தை மற்றும் கலாச்சாரத் தலைவராக நியமிக்கப்பட்ட பின்னர், 2021 -ஆம் ஆண்டில் லெப்டினன்ட் ஜெனரலாகப் பதவி உயர்வு பெற்றார்.

இவ்வாறு லெப்டினன்ட் ஜெனரல் ஜென்னி கரிக்னனின் கனடா மற்றும் கனேடிய சேவையில் 35 ஆண்டுகளுக்கும் மேலாகத் தன்னுடைய சேவையை ஆற்றியுள்ளார். இறுதியாக, கனடாவின் புதிய இராணுவத் தளபதியாக முதல் முறையாகப் பெண் இராணுவ அதிகாரியாக ஜென்னி கரிக்னன் நியமிக்கப்பட்டுள்ளார்.

எந்த மனிதனும் எனக்குக் கீழானவன் அல்ல; அதுபோல எவனும் எனக்கு மேலானவனும் அல்லஎன்கிறார் பெரியார். சுயமரியாதை இயக்கத்தோடு இணைந்து பெண் விடுதலைக்காகவும் போராடியவர் இவர். இன்று பெண்கள் பல்வேறு துறைகளிலும் முயன்று கொண்டிருக்கிறார்கள்.

முயன்று வருவோரை உந்தித் தள்ளுவோம். பாலின வேறுபாட்டை ஒழித்து, அனைவரும் இணைந்து செல்வோம்.

Comment