No icon

சிறுகதை

வலியின் அன்னை!

அன்னை, நோயாளிகள் நிறைந்த அந்த அறைக்குள் நுழைந்தாள். அவள் முகம் ஏதோ சிறுமி வரைந்த ஓவியம் போல் இருந்தது. சேலையின் கலைந்த மடிப்பைப்போல அவள் முகங்களில் அலை அலையாய் வரிகள் இருந்தன. அவள் கண்கள் அந்த முகத்துக்கு ஒளியூட்டின. அவள் உதட்டில் புன்னகை இல்லை; அவள் முகமே ஒரு புன்னகைபோல இருந்தது. சாந்தமான ஒரு துறவியைப்போல அல்லாமல், ஒரு செயல் வீரனைப்போல அவள் நடை இருந்தது.

நாற்பது படுக்கைகள் இருந்த அந்த அறை மருந்தின் நெடியால் நிறைந்திருந்தது. அவளுக்கு அந்த நெடி ஒரு பொருட்டல்ல. அவள் சாக்கடைகளில் கிடந்தவர்களை மீட்டிருக்கிறாள். தோலும் சதையும் அழுகிய மனிதர்களைச் சுத்தம் செய்திருக்கிறாள். சேரிகளில் பணி செய்திருக்கிறாள். அவள் உடலில் அழுக்கு ஏற ஏற, அவள் ஆன்மா தூயதாகிக் கொண்டிருந்ததை உணர்ந்திருக்கிறாள்.

அறையின் கடைசிப் படுக்கையருகே வந்தாள் அன்னை. அவர் பெயர் அலோக். ஷாலிமார் இரயில் நிலைய அதிகாரி அன்னையை அழைத்து “இங்கே ஒருவன் கிடக்கிறான், வந்து எடுத்துச் செல்லுங்கள், நீண்ட நாள்கள் தாங்கமாட்டான்” என்றார். அன்னை அவரை எடுத்து வந்து பத்து மாதங்கள் ஆகிவிட்டன. அலோக் அதிகம் பேசவில்லை. அவர் உடல் முழுவதும் புண்கள். கழுத்தில் கிரிக்கெட் பந்து அளவில் ஒரு கட்டி. வயது அறுபது இருக்கும். உடல் மெலிந்து சருகுபோல இருந்தார்.

காப்பகத்துக்கு வந்த சில நாள்களில் புண்கள் குணமாகிவிட்டிருந்தாலும், தொண்டையின் கட்டியால் அவரால் அதிகம் பேச முடியவில்லை. பேசும்போது காற்றுபோல ஒலிக்கும் அவரது குரல். அருகே நின்றால் அவர் சொல்வது தெளிவாகக் கேட்கும். கடந்த மூன்று மாதங்களாக மீண்டும் உடலில் புண்கள் தோன்ற ஆரம்பித்தன.

அன்னை அவர் அருகே அமர்ந்தார். அவர் கண்விழித்து அன்னையைக் கண்டார். ‘வலி.. வலி..’ எனக் காற்றில் சொன்னார். அன்னை அவரது முகத்தைத் தொட்டுத் தடவினாள். அவர் ஒருகணம் தாயின் கையில் குழந்தையைப்போல உணர்ந்தார். அன்னை அவர் கைகளைப் பிடித்தபடி கண்மூடிச் செபித்தாள். பின்னர் அவரிடம் “அலோக், வலியை இன்பமாக்கும் வழியை உனக்குச் சொல்லவா!” என்றாள். அலோக்கின் முகத்தில் சிறு குழப்பமும் அலட்சியமும் தெரிந்தது. “அதோ பார்!” என்று எதிர் இருந்த சுவற்றைக் காட்டினாள் அன்னை. அங்கே சிலுவையில் இயேசு தொங்கும் சுரூபம் இருந்தது. “வலியின் வலிமை அந்தச் சிலுவையில் வெளிப்பட்டது” என்றாள் அன்னை. அலோக் அதைப் புரிந்துகொண்டது போலத் தெரியவில்லை. ஆனால், அவர் அந்தச் சிலுவையைப் பார்த்துக் கொண்டிருந்தார். அன்னை தொடர்ந்தாள்... “ஆணியால் அறையப்பட்ட அந்தக் கைகள் விடுதலையை அளித்தன. அந்த முள்முடி வல்லமை மிக்க அரச கிரீடம் ஆனது. சாட்டையால் கிழிக்கப்பட்ட அந்த உடல் ஆன்ம உணவானது. துளைக்கப்பட்ட கால்கள் உலகை வழிநடத்திச் சென்றன. சிதைந்த அவரது வாயிலிருந்து மன்னிப்பை அவர் வழங்கினார்.”

அன்னை சற்று நிறுத்தினாள். அலோக்கின் பார்வை சிலுவையின்மீது இருந்தது. அவர் முகம் சற்றுத் தீவிரமடைந்திருந்தது. அன்னை தொடர்ந்தாள்: “வலியால் என்னென்ன சாத்தியம் பார்த்தீரா அலோக்! நீர் முதலில் உம்மை மன்னியும்; உம்மையே நீர் மன்னித்ததைப்போல பிறரையும் மன்னியும். அப்போது இந்த வலி இன்னும் அர்த்தமுள்ளதாக மாறும்” என்றாள் அன்னை.

அலோக்கின் கண்களிலிருந்து நீர் நிறைந்து வழிந்து கன்னங்கள் வழியே ஓடியது. அன்னை அதைத் தன் கைகளால் துடைத்தாள்.

“என் ஆன்மாவிலும் ஒரு முள் தைத்த வலி இருந்துகொண்டே இருக்கிறது அலோக்” என்றாள் அன்னை.

அலோக் கண்களைத் திருப்பி அவளை வியந்து பார்த்தார்.

“ம்ம்ம்... நெடு நாள்களாக அந்த வலி என்னுள் பெருகிக்கொண்டே இருந்தது. அதை நான் எப்படிக் கடந்தேன் தெரியுமா?”

அலோக் அசைவின்றிக் கிடந்தாலும், அவரது முகத்தில் ஆர்வம் தெரிந்தது.

“கல்கத்தாவிற்கு நான் வந்த புதிதில் ஏழைகளின் குடியிருப்பில் ஒரு வீட்டில் பல நாள்கள் சாப்பிடாமல் பட்டினி இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டு அவர்களுக்குச் சாப்பாடு எடுத்துச் சென்றேன். உடலின் வலிகளைவிட மிகுந்த வேதனையான வலி என்ன தெரியுமா? தன் குழந்தைகள் பட்டினியில் வயிறு வற்றி, மூச்சு விடக்கூடத் தெம்பு இல்லாமல் கிடப்பதைக் காண்பதுதான். அந்த வீட்டின் தாய் அப்படிப்பட்ட வலியில் அமர்ந்திருந்தாள். உணவைக் கண்டதும் குழந்தைகளை எழுப்பி ஆளுக்குக் கொஞ்சம் தட்டில் வைத்துக் கொடுத்தாள். அவர்கள் சாப்பிட ஆரம்பித்ததும், மீதிச் சாப்பாட்டை எடுத்துக்கொண்டு என்னிடம் சொல்லிக் கொண்டு வெளியே கிளம்பினாள். நான் அவளிடம் ‘எங்கே போகிறாய்?’ என்று கேட்டேன். ‘அவர்களும் பசியாய் இருக்கிறார்கள்’ என்று பக்கத்து வீட்டை கைகாட்டினாள்.”

இதைக் கேட்ட அலோக்கின் முகத்தில் அமைதியான புன்னகை ஒன்று திடீரென வந்த வால் நட்சத்திரம் போலத் தோன்றியது. அவரது முகத்தின் இறுக்கம் தளர்ந்தது.

அன்னை தொடர்ந்தாள்:

“என் ஆன்மாவில் தைத்த அந்த முள் அவ்வப்போது அசைந்து என்னைச் சோதித்து வலி உண்டாக்கும்போது, நான் அந்தத் தாயை நினைவுகூர்வேன். நான் எனக்குக் கட்டளையிடப்பட்ட கடமையைச் செய்தேன்; ஆனால், அவள் தன் வலியிலும் பிறரைப் பற்றியே நினைத்தாள். அலோக், வலியை வெல்ல மற்றொரு வழி, அந்த வலியைப் பிறருக்காக ஒப்புக் கொடுப்பது. நம்மைப் பற்றி யோசிக்க யோசிக்க வலி அதிகரிக்கும். பிறருக்காக அதை நீர் ஏற்றுக் கொண்டால் அது அர்த்தமுள்ளதாக மாறும்.”

அலோக்கின் முகத்தில் இப்போது ஒரு தெளிவு தெரிந்தது. அவர் தன் சக்தியைத் திரட்டி “முள்.. முள்” என்று முனகினார். அன்னை புரிந்து கொண்டாள்.

“என் ஆன்மாவில் தைத்த முள் எது என்றுதானே கேட்கிறீர்? அதை நான் வெளியே யாரிடமும் சொன்னதில்லை. உம்மிடம் மட்டும் சொல்கிறேன்.”

அன்னை குனிந்து அவரின் காதருகே சென்று தன் மனத்தைத் திறந்து தாழ்ந்த குரலில் அந்த உண்மையைச் சொன்னாள்.

சொல்லி முடித்து நிமிர்ந்து அமர்ந்த அன்னை விழி நிலைத்து, புன்னகையுடன் இறந்துபோன அலோக்கின் முகத்தைப் பார்த்தாள்; கண்களை மூடி, கைகளைக் குவித்துச் செபிக்க ஆரம்பித்தாள்.

Comment