No icon

தெய்வீகத்  தடங்கள் – 8

“எல்லாவற்றிலும் கடவுளைக் காணுதல்!”

மனித வாழ்க்கையின் நிகழ்வு நிலையில் இன்பமும்-துன்பமும், மகிழ்ச்சியும்-துக்கமும், உடல் நலமும்-வலியும் சேர்ந்தே இருக்கும். நமது வாழ்வின் வரைபடத்தில் இவை திரும்பத் திரும்ப வரும். ஒவ்வொரு தனிமனிதரின் வாழ்விலும் தொடர் நிகழ்வுகள் இவை. நாம் இந்தத் துன்பத்தின் தொடுவானத்தை எந்தக் கண்கொண்டு பார்க்கிறோம் என்பதுதான் முக்கியம்.

வரலாற்றின் பக்கங்கள், தங்கள் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்திய தெய்வீக உள்ளொளிகளை எண்ணற்ற ஆண்களும், பெண்களும் பெற்றதற்குச் சான்று பகர்கின்றன.

ஆழ்ந்த தியான நிலையில் நான் யோபுவின் திருநூலைப் படித்தபோது நான் உள்ளொளி பெற்றேன். ஒவ்வொரு நாளும் நான் வளர அறைகூவல் விடப்பட்டேன். துன்பம் எனும் ஒரு காட்சியைப் பல கோணங்களில் பார்க்க எனது ஆன்மிகமும், நம்பிக்கைகளும் வழிநடத்தின. அவ்வேளையில் இலயோலா இஞ்ஞாசியாரின் உலகக் கண்ணோட்டத்தைப் புரிந்துகொள்ள உள்ளார்வம் கொண்டேன்.

உள்ளொளி, ஆன்மிக, தெய்வீக அனுபவங்களின் துணைகொண்டு, புனித இஞ்ஞாசியார் வாழ்க்கையின் நிகழ்வு நிலையின் மொத்தத்தையும் புத்தாக்கம் பெற்ற முன்னோக்குடன் பார்க்க முடிந்தது. அவரது நம்பிக்கையால் உருவாக்கப்பட்ட இந்தப் புதுக் கண்ணோட்டம் அவருடைய வாழ்க்கைப் பயணத்தில் கடவுளின் காலடித் தடங்களை அடையாளம் காண உதவியது.

அவருடைய பயணத்தில், குறிப்பாக அவருடைய இருண்ட நாள்களில் ஒவ்வோர் அடி எடுத்து வைக்கும்போதும், கடவுள் அவரை வழிநடத்திக் காத்து வருகிறார் என்று அவர் உறுதியாக நம்பினார். அவர் நோயிலிருந்து மீண்டு தேறிவரும் வேளையிலும் அப்போது அவர் அனுபவித்த உடல், மனத் துன்பத்தில் கடவுளின் பிரசன்னம் இருந்தது என்பது அவரது நம்பிக்கை.

மேலும், கடவுள் தமது படைப்பிலும், அண்ட வெளிகளிலும், தெயார்டு தெ சார்தன் (Teilhard de Chardin) சொல்வதுபோல தெய்வீக ஒன்றிப்பின் கடைசி எழுத்துவரையில் தொடர்ந்து செயலாற்றிப் பிரசன்னமாயிருக்கிறார்என் தந்தை இன்றும் செயலாற்றுகிறார்; நானும் செயலாற்றுகிறேன்” (யோவான் 5:17) என்பதை அவர் உணர்ந்தார்.

இதன் விளைவாக வந்ததுஎல்லாவற்றிலும் கடவுளைக் காணுதல்என்ற தனி அருள்கொடை. இதனை இலயோலா இஞ்ஞாசியார் இயேசு சபையினருக்கு நன்கொடையாக அளித்தார். ஒவ்வொரு நாளும் இரண்டு முறை 15 முதல் 20 நிமிடங்களுக்கு மேற்கொள்ளப்படும்மனச்சான்றுச் சோதனைஇந்த நோக்கத்திற்காகச் செய்யப்படுகிறது. வலியில் நொந்துபோன சூழலில் இது பிறர்பால் அதிகம் கருணைகொள்ளுமாறு செய்தது.

முதியோர், காயப்பட்டோர், நோயுற்றோர், வாழ்வின் இறுதிக்கட்டத்தில் இருப்போர் ஆகியோரிடம் நான் நடந்துகொள்ளும் முறையில் என்னிடம் மாற்றம் ஏற்பட்டிருப்பதை நான் கண்டேன். நோயுற்றோரின் மனநிலையில் நேர்மறையான மாற்றம்  ஏற்படுத்துவது எப்படி என்றும், நியாயத் தீர்ப்பிடுவதைத் தவிர்ப்பதற்கும் கற்றுக் கொண்டேன். ஏழைகளும், சாதாரண மக்களும் அச்சத்தாலும், இயலாமையாலும் ஏற்படும் மனவெழுச்சிகளுக்கு உட்படுகிறார்கள் என்பதை அறிந்து கொண்டேன்.

கங்கா மருத்துவமனையில் படுத்திருந்தபோது மருத்துவர்களும், செவிலியரும் ஏழைகளை மரியாதையோடும், கண்ணியத்தோடும் நடத்துவதைப் பார்த்தேன். இது என்மேல் பெருமளவு தாக்கம் ஏற்படுத்தி, எனக்கு உள்ளறிவு தந்தது. நம்மைத் தவறான வழிக்கு இட்டுச்செல்லும் சுயநலத்தை வெற்றிகொள்ள இறையருளுக்காக மன்றாடினேன்.

இவ்வாறு புனித இஞ்ஞாசியாரின் வாழ்க்கையிலிருந்து நான் உள்ளாற்றல் பெற்றேன். எனக்கு ஏற்பட்ட துயரத்திலிருந்து மீண்டு தேறி வந்த காலகட்டம் எனது வாழ்க்கையைப் பற்றி ஆழ்ந்து தியானிப்பதற்கு அளிக்கப்பட்ட வரம். இந்த இறை அனுபவங்கள் வாழ்க்கையைத் தாழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ள என்னை வலுப்படுத்தின.

எனது வாழ்க்கையில் நான் நாற்பது ஆண்டுகள் நல்ல உடல் நலத்தோடு இருந்திருக்கிறேன். கடவுள் எனக்கு எப்போதும் நல்லதே செய்து வந்திருக்கிறார். இப்போது என் வாழ்வின் இக்காலக் கட்டத்தினை மகிழ்ச்சியோடு ஏற்று ஆண்டவர் புகழ்பாடுவேன். ஆழமான நம்பிக்கையுடன் புனித பவுல் உரைத்தது போலநான் வலுவற்று இருக்கும்போது வல்லமை பெற்றவனாக இருக்கிறேன்” (2கொரி 12:10).

பல நல்ல உள்ளங்களின் மன்றாட்டுகள் நான் விரைவாக நலமடைய உதவின, காயங்கள் ஆறின. செபக் கோபுரங்களிலிருந்தும், சிற்றாலயங்களிலிருந்தும் மன்றாட்டுகள் விண்ணப்பிக்கப்பட்டன. உலகெங்கும் என் உடல்நலனுக்காகத் திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டன. புனித இஞ்ஞாசியார் நம்பியதுபோல நற்கருணைக்குப் பிரமாண்டமான குணமாக்கும் அதிசயச் சக்தி இருக்கிறது என்ற நம்பிக்கையில் நான் வளர்ந்தேன்.

நாள்கள் செல்லச் செல்ல வாழ்வில் ஆண்டவரை ஏற்று நம்பிக்கையில் வளர்ந்தேன். தூய ஆவியானவரின் கொடையை வேண்டி மன்றாடினேன். செபமாலை செய்தல், பக்திப் பாடல்களைக் கேட்டல், ஆன்மிக நூல்களை வாசித்தல், ஆண்டவரின் திருபெயரை உச்சரித்தல் ஆகியவை என்னுடைய பக்தியைப் பெருக்கின. இறைவனின் காக்கும் சக்தி மிக்கக் கரத்திற்கு மரியாதை அதிகரித்தது.

நோயினாலோ காயத்தாலோ நரம்பு மண்டலம் சேதம் அடையும்போது அல்லது சரியாக இயங்காதபோது ஏற்படும் நரம்பு மண்டலம் சார்ந்த வலியும் (neuropathic pain), மற்ற வலிகளும் சேர்ந்து என்னை முடக்கிப்போட்டன. நரம்பு மண்டல வலிக்கும், எனது ஆன்மிக மண்டலத்துக்கும் இடையே போர். என் மனக்குரல் என்னிடம் கூறியது:

பாருங்கள், வாழ்க்கை தரும் அனைத்தையும் மனத்துணிவும், உறுதியும் எனக்கு நெருப்பாகப் பற்றவைக்கும் கடவுளின் ஆவி என்னுள்ளே ஏற்படுத்தும் உணர்வை உணர்ந்தேன். நமது அன்னை என்னைக் கைவிடவில்லை என்பது என்னுள்ளே ஆழமான நம்பிக்கையாக வளர்ந்தது. ஒவ்வொரு நாளும் ஆரோக்கிய அன்னையின் மேலுள்ள பக்தி வளர்ந்தது. வாழ்க்கையின் இந்தத் திருப்புமுனையில் துணிவைக் கைவிடாமல் நிற்க நான் அழைக்கப்படுகிறேன்” (எபி 10:32-39).            

(தொடரும்)

Comment