No icon

இறைவேண்டலின் பரிமாணங்கள் - 12

முழந்தாளிட்டு இறைவேண்டல்!

நாம் இறைவேண்டல் செய்யும்போது உடல், உள்ளம், ஆன்மா அனைத்தும் இணைந்து இறைவனைத் தொழவேண்டும். குறிப்பாக, மனம், ஆன்மா இரண்டையும்விட, உடலைப் பயன்படுத்தி இறைவேண்டல் செய்வதே நமக்கு எளிதானது. காரணம், மனத்தை, ஆன்மாவை நாம் உணரத்தான் முடியுமே தவிர, புலன்களால் உய்த்துணர முடியாது. எனவே, நமது வாய், கண்கள், கைகள், கால்கள் ஆகியவற்றை நமது இறைவேண்டலில் நாம் நிறைவாக ஈடுபடுத்த வேண்டும். கால்களைப் பொறுத்தவரையில், முழந்தாளிட்டு மன்றாடுவதை ஒரு நல்ல மதிப்பீடாக முன்வைக்கிறது திருவிவிலியம். பழைய ஏற்பாட்டில் சாலமோன், எஸ்ரா, தானியேல் ஆகியோர் முழந்தாளிட்டு மன்றாடியக் காட்சிகளை நாம் காண்கிறோம்.

முழந்தாளிட்ட சாலமோன்: கடவுள் முன் முழந்தாளிட்டு மன்றாடிய முதல் இஸ்ரயேலர் என்னும் பெருமையைச் சாலமோனுக்குத் தருகிறது திருவிவிலியம். “சாலமோன் வானத்தை நோக்கிக் கைகளை உயர்த்தி, முழந்தாளிட்டு ஆண்டவரிடம் இந்த வேண்டுதல், விண்ணப்பத்தை எல்லாம் கூறி மன்றாடினார். வேண்டி முடித்தபின் ஆண்டவரது பலிபீடத்தின் முன் எழுந்து நின்றார்” (1அர 8:54). தான் ஓர் அரசனாயிருந்தும், தன்னைத் தாழ்த்தி, தன்னை அரசராக்கிய ஆண்டவர்முன் மண்டியிட்டு வேண்டியது சாலமோனை உயர்த்திக் காட்டுகிறது.

முழந்தாளிட்ட எஸ்ரா: கடவுள்முன் முழந்தாளிட்டு மன்றாடிய இன்னொரு மக்கள் தலைவர் எஸ்ரா. இஸ்ரயேல் மக்களின் பாவங்களுக்காக மன்னிப்புக் கோரிய அவர் மாலைப் பலி நேரத்தில் நோன்பை முடித்து, கிழிந்த ஆடையோடும், மேலுடையோடும் முழந்தாளிட்டுக் கடவுளாகிய ஆண்டவரை நோக்கி கைகளை விரித்து மன்றாடினார் என்று எஸ்ரா நூல் பதிவு செய்துள்ளது (எஸ் 9:5).

முழந்தாளிட்ட தானியேல்: இறைவாக்கினரான தானியேல் முழந்தாளிலிருந்து மன்றாடும் பழக்கத்தைக் கொண்டிருந்தார் என்பது நமக்கு வியப்பூட்டும் ஒரு தகவல். “தானியேல் தனது வழக்கப்படி நாள்தோறும் மூன்று வேளையும் தன் கடவுளுக்கு முன்பாக முழந்தாளிலிருந்து மன்றாடி அவருக்கு நன்றி செலுத்துவார்” (தானி 6:10) என்பது நமக்கெல்லாம் ஒரு பாடமாக அல்லவா விளங்குகிறது!

திருப்பாடல்களின் அழைப்பு: வழிபாட்டுப் பாடல்களின் தொகுப்பாகிய திருப்பாடல்கள் நூல் உடலையும், உடல் உறுப்புகளையும் பயன்படுத்தி ஆண்டவரை வழிபட அழைப்பு விடுக்கிறது. “வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் முழந்தாளிடு வோம்என்பது திருப்பாடலின் அழைப்பு (95:6).

இயேசு முன் முழந்தாளிட்டவர்கள்: பழைய ஏற்பாட்டின் தொடர்ச்சியாகப் புதிய ஏற்பாட்டிலும் முழந்தாளிட்டு மன்றாடுவது ஒரு வழிபாட்டு மதிப்பீடாகத் திகழ்ந்தது. இயேசுவை வல்ல இறைவாக்கினராகவும், மெசியாவாகவும் அடையாளம் கண்டவர்கள் அவர் முன் முழந்தாள்படியிடத் தயங்கவில்லை.

நலம்பெற விரும்பிய தொழுநோயாளர் இயேசுவிடம்நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்என்று முழந்தாள்படியிட்டு வேண்டினார் (மாற்கு 1:40). தொழுநோயிலிருந்து நலம் பெற்றுக்கொண்டார். அதுபோலவே, பேய் பிடித்திருந்த தன் மகனைக் குணமாக்கும்படி இயேசுவிடம் வந்த ஒருவர் அவரை அணுகி அவர் முன் முழந்தாள்படியிட்டு (மத்17:14) மன்றாடினார். இயேசு அந்தச் சிறுவனைக் குணமாக்கினார். எனவே, இயேசுவிடமிருந்து வல்ல செயல்களைப் பெற விரும்புவோர் அவர்முன் முழந்தாளிட்டு, தாழ்ச்சியோடு மன்றாடுவது உகந்தது.

நலம்பெற விரும்புவோர் மட்டுமல்ல, இயேசுவைப் பின்பற்ற விரும்பியவர்களும் இயேசுவின் முன் மண்டியிட்டனர். “இயேசு புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தபோது வழியில் ஒருவர் அவரிடம் ஓடிவந்து முழந்தாள்படியிட்டு, “நல்ல போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?” என்று அவரைக் கேட்டார் (மாற்கு 10:17).

இயேசுவே முழந்தாளிட்டார்: இயேசுவின் முன்பு பிறர் முழந்தாளிட்ட நிகழ்வுகளையும் தாண்டி, நம் கவனத்தை ஈர்ப்பது இயேசுவே முழந்தாளிட்டு மன்றாடினார் என்பது. ஆம், தம் வாழ்வின் மிக நெருக்கடியான தருணத்தில், தாம் காட்டிக் கொடுக்கப்படுவதற்குச் சற்று முன்பு இயேசு வானகத் தந்தையிடம் இறைவேண்டலில் ஈடுபட்டபோது அவர்முழந்தாள்படியிட்டு இறைவனிடம் வேண்டினார்’ (லூக் 22:41) என்னும் பதிவு முழந்தாளிடத் தயங்குவோரை நாணச் செய்கிறது.

முழந்தாளிட்ட ஸ்தேவான்: இயேசுவின் சாவை அப்படியே பின்பற்றிய திருத்தொண்டர் ஸ்தேவான், சாவதற்கு முன் முழந்தாள்படியிட்டு உரத்தக் குரலில், “ஆண்டவரே, இந்தப் பாவத்தை இவர்கள்மேல் சுமத்தாதேயும்என்று சொல்லி உயிர்விட்டார் (திப 7:60).

முழந்தாளிட்ட பேதுருவும், பவுலும்: தொடக்கத் திரு அவையின் தூண்களாக விளங்கிய பேதுருவும், பவுலும் இந்த மரபைத் தவறாது பின்பற்றி முழந்தாள்படியிட்டு மன்றாடினர். இறந்துபோன தபித்தாவை உயிர்ப்பெற்றெழச் செய்த போது, ‘பேதுரு அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு முழந்தாள்படியிட்டு இறைவனிடம் வேண்டினார்’ (திப 9:40). எபேசு நகர மூப்பர்களிடமிருந்து விடைபெற்றபோது பவுல்முழந்தாள்படியிட்டு அவர்களெல்லாரோடும் சேர்ந்து இறைவனிடம் வேண்டினார்’ (திப 20:36). தீர் நகரிலுள்ள சீடர்களோடு பவுல் ஏழு நாள்கள் தங்கியிருந்து, பின் எருசலேம் புறப்பட்டபோது, பவுலை வழியனுப்ப நகரின் எல்லைவரை அவர்கள் வந்தார்கள். “கடற்கரையில் நாங்கள் முழந்தாள்படியிட்டு இறைவனிடம் வேண்டினோம்” (திப 21:5) என்று பதிவு செய்துள்ளது திருத்தூதர் பணிகள் நூல்.

தொடக்கத் திரு அவையில் முழங்காலிடும் பழக்கம்: இயேசுவே முழந்தாள்படியிட்டு மன்றாடினார், திருத்தூதர்களும் முழந்தாளிட்டு மன்றாடினர் என்பதை நற்செய்தியாகப் பெற்றுக்கொண்ட தொடக்கத் திரு அவை இப்பழக்கத்தை விடாது தொடர்ந்தது.

பவுல் தன் திருமடல்களில் இப்பழக்கத்தை ஊக்குவித்தார். “ஒவ்வொரு குடும்பமும் உண்மையிலேயே குடும்பமாய் விளங்குவதற்குக் காரணமாய் இருக்கிற தந்தையிடம் நான் மண்டியிட்டு வேண்டுகிறேன்” (எபே 3:15) என்று எபேசியருக்கும், “இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்” (பிலி 2:10) என்று பிலிப்பியருக்கும் எழுதினார். ‘முழங்கால் அனைத்தும் எனக்கு முன் மண்டியிடும். நாவு அனைத்தும் என்னைப் போற்றும் என்று மறை நூலில் எழுதியுள்ளது அன்றோ!’ என்று எசாயா இறைவாக்கினரை (எசா 45:23) மேற்கோள் காட்டி உரோமையருக்கு எழுதினார் பவுல் (உரோ 14:11).

முழங்காலில் இருப்பது எத்துணை சிறப்பு வாய்ந்தது என்பதை அறியும் நாமும் முழந்தாளிட்டு மன்றாடும் பழக்கத்தை மீண்டும் பின்பற்றுவோம். இல்லத்திலும்கோவிலிலும் முழந்தாளிட்டு மன்றாடுவோமாக

(தொடரும்)

Comment