No icon

வாழ்க்கையைக் கொண்டாடு – 59

தீர்க்க முடியாத தீர்மானங்கள்

‘புத்தாண்டு வந்தாலே ஏதாவது ஒரு தீர்மானத்தை எடுத்தே ஆகவேண்டும். இல்லையென்றால் நம் மானம் போய்விடும்என்று மனம் பதைபதைப்போர் உண்டு. அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவோமா? இல்லையா? என்பது இரண்டாவது.

எடுத்தே ஆகவேண்டும் என்று தீர்மானத்துக்கே ஒரு தீர்மானம் போடும் வகையறாக்கள் அதிகம் உண்டு. இதில் ஒரு பெரிய கூத்து என்னவென்றால், புத்தாண்டிற்கு மறுநாள் எடுத்த தீர்மானம் என்ன என்பது பலருக்கு மறந்து, பறந்து போயிருக்கும்.

ஒரே நாளில் ஒபாமா ஆகவேண்டும் எனும் ரேஞ்சுக்குச் சிலர் முடிவுகள் எடுப்பதுண்டு. எனக்குத் தெரிந்த ஒரு நண்பர், நாளையிலிருந்து குடிப்பது கிடையாது என முடிவெடுத்து, புத்தாண்டுக்கு முந்தைய நாளில், ஒரு வருடத்திற்குக் குடிக்க வேண்டிய மொத்த சரக்கையும் உள்ளே தள்ளிவிடுவதுண்டு. இது ஒவ்வொரு வருடமும் தொடர்கிறது. இதாவது பரவாயில்லை, மற்றொருவரோ அரிஸ்டாட்டில் அளவுக்குத் தத்துவத்தை அள்ளித் தெளித்து மறுநாளில் ‘இவரா அவர்?’ என நாம் ஆடிப்போகும் அளவுக்கு அளப்பறையை அளவில்லாமல் அளந்துவிடக்கூடியவர்.

மற்றொரு கூட்டமோ எடையைக் குறைக்கப் போகிறேன், இடையைக் குறைக்கப் போகிறேன் என்று சகட்டு மேனிக்கு முன்பணத்தைச் செலுத்தி இரண்டு நாள்கள் மட்டுமே சென்று, பிறகு ‘எதுக்காக இந்த முடிவை எடுத்தோம்?’ என அந்த முடிவுக்கே ஒரு முடிவு கட்டும் நிலைக்கு வந்து விடுவதுண்டு.

இந்த வருசம் முழுக்க நிறைய பேரு என்னையக் காயப்படுத்திட்டானுங்க; கொஞ்சமா நெஞ்சமா, சொல்ல முடியாத அளவுக்கு எனச் சொல்லி, புண்பட்ட மனத்தைப் புகைய விட்டு ஆற்றிக்கொண்டு சிலர் இருப்பர். விசாரித்துப் பார்த்தால் இவர்தான் நிறைய இடங்களில் பலரைப் புகைய விட்டிருப்பார். இவையெல்லாம் புத்தாண்டுப் புதிர்கள்! இதற்கு அந்தக் குறிப்பட்ட நபர்களைத் தவிர வேறெவரும் விடைதரவோ, முடிவு காணவோ முடியவே முடியாது.

ஏன் இப்படித் தீர்மானங்கள் வலுவிழந்து போய் விடுகின்றன? புத்தாண்டுத் தீர்மானங்கள் என்பது, புத்தாண்டுத் தொடக்கத்தில் நாம் அனைவரும் நம்மால் முடியும் என நினைக்கும் தீர்மானங்களை நிறைவேற்ற நினைக்கும் உறுதிமொழியாகும். நம்முடைய தனிப்பட்ட கடமைகள், இலக்குகள், சுயமுன்னேற்றம் மற்றும் வேலைவாய்ப்பில் முன்னேற்றம் இவற்றை அடிப்படையாகக் கொண்டு தீர்மானங்கள் முன்வைக்கப்படுகின்றன. இவையனைத்தும் பழைய பழக்கங்களை உடைத்து, புது மனிதனாக, புதுத்தெம்புடன் மேலெழ நமக்கு நாமே போட்டுக்கொள்ளும் விதிமுறைகள். பிறகு ஏன் இப்படி ஒரு பரிதாப நிலைக்கு அந்த முடிவுகள்/தீர்மானங்கள் தள்ளப்படுகின்றன?

இலக்கிற்கும், நடைமுறை உண்மைக்கும் இடையிலான இடைவெளிதான் காரணம். எதார்த்தத்தைக் கருத்தில் கொள்ளாமல் தீர்மானங்களை அமைப்பது எப்படிப் பலனைத் தரும்? அவசரக் கோலத்திலும், ஆனந்தத் தாண்டவத்திலும் நாம் எடுக்கும் முடிவுகள் எப்படிச் சமநிலை கண்டு முடிவுகள் காணும்? அது நிறைவேறும் வாய்ப்புக்கு வாய்ப்பில்லை எனும் நிலைதான் வரும்.

 இன்னும் சொல்லப்போனால் பல தீர்மானங்கள் தனிப்பட்ட ஆசைகளைவிட சமூக அழுத்தங்களால் அல்லது உடன் பயணிக்கும் நண்பர்களின் விருப்பங்களால் எடுக்கப்படுகின்றன. இதன் விளைவு என்பது நாம் எதிர்பார்த்த முடிவுகளைத் தராது; ஏனெனில், அந்தத் தீர்மானங்களில் அர்ப்பணிப்பு இல்லாமல் இருப்பதுதான் முழுமுதல் காரணம். விடாமுயற்சியை விட, அந்தத் தீர்மானங்களை விடும் முயற்சியைச் சில நேரங்களில் நாமே எடுத்து விடுவதுண்டு, காரணம், சலிப்புதான். 

சில நேரங்களில் எடுத்த தீர்மானங்கள் நிறைவேறாமல் போகும்போது மனதளவில் நாம் சொல்லிக்கொள்ளும் ஆறுதல், செயல் அளவில் எவ்வித உற்சாகத்தையும் தரப்போவதில்லை. ‘இதற்காகத்தான் நான் தீர்மானமே எடுப்பதில்லைஎன நைசாக நழுவ வேண்டாம்.

நமக்கு அதில் உடன்பாடு உண்டோ, இல்லையோ... சில தீர்மானங்களைக் கடந்தே ஆகவேண்டும். திட்டமிடுதல் சரியாகும்போது, நம்மை யாரும் திட்டும் எண்ணமும் குறைவுதான்.

நம் சொந்த நலனுக்காக மற்றும் வாழ்க்கைக்கு எடுக்கப்படும் தீர்மானங்கள் சில நேரங்களில் நிறைவேற்ற இயலாது போனால், அதில் ஒரு பெரிய நட்டம் ஏதும் இல்லை. பிறகு நாம் எப்படியாவது சரிசெய்து கொள்ளலாம். ஆனால், நிறுவனம் சார்ந்து அல்லது ஒரு நாடு சார்ந்து எடுக்கப்படும் தீர்மானங்கள் தோல்வியில் முடிந்தால், அது பலவித பாதிப்புகளை நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏற்படுத்தும். பல்வேறு ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் தோல்வி குறித்து அண்மையில் வெளிவந்த ஆய்வின்படி, அவர்கள் முறையான தீர்மானங்கள் ஏதும் எடுத்து, அதை நிறைவேற்றவில்லை; மாறாக, எடுத்தோம் கவிழ்த்தோம் எனும் நிலையில் அவர்களது செயல்பாடுகள் இருந்தன என அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

பல நிறுவனங்கள் சரியான திட்டமிடலோடு அவர்கள் எடுக்கும் தீர்மானங்கள் மூலம் பல்வேறு படிநிலைகள் கண்டு வெற்றிபெற முடிகிறது என்றால், அந்த முடிவுகளின் மீது அவர்கள் வைத்த தீவிரப் பற்றும் தொலைநோக்கும்தான் காரணம்.

புத்தாண்டின் தொடக்கத்தில் நாம் எடுக்கும் சில முடிவுகள் போல ஒவ்வொரு நிறுவனங்களும் அதன் நிதி ஆண்டின் தொடக்கத்தில் சில முடிவுகள்/தீர்மானங்கள் எடுப்பதுண்டு. அவை சரிவர அமைய எல்லாரின் ஒத்துழைப்பும் அவசியம் ஆகும்.

தீர்க்க முடியாதத் தீர்மானங்கள் என்று எதுவும் இல்லை... தீர்வு காணும் எண்ணம் நமக்குள் இருக்கும் வரை!

நம் தனிப்பட்ட தீர்மானங்களுக்கு நாம்தான் முழுப்பொறுப்பு. நிறைய தீர்மானங்கள் தொடக்கத்தில் நன்றாகவும், போகப்போக ஆர்வம் குறைந்தும் போவதால் ‘கடைப்பிடிக்காமல் நிறுத்திவிட்டேன்எனப் பலர் கூறுவதுண்டு. உடல்நலத்தைப் பேணும் வகையில் நல்ல உணவுமுறை, அன்றாடப் பழக்கங்களை மேற்கொள்ள நாம் எடுக்கும் சிறு சிறு முடிவுகள் பலவித மாற்றங்களை நமக்குத் தரும். தீர்மானங்கள் எடுத்து, அதனைக் கடைப்பிடிக்காமல் விடுவது கேலிப்பொருளாக மாறியிருந்தாலும், அத்தீர்மானங்கள் பல புதிய தொடக்கத்தை நோக்கி அடியெடுத்து வைக்க வேண்டிய விதையை நம்முள் விதைக்கிறது என்பதில் நாம் எப்போதும் உறுதியாக இருப்போம்.

விடாமுயற்சியை விடாது முயற்சிப்போம்; மாற்றம் நம்முள் இருந்து ஆரம்பமாகட்டும்.

தொடர்ந்து பயணிப்போம்...

Comment