No icon

அக்டோபரில் அன்னை மரியாவோடு!

செபமாலை பக்தி என்பது அன்னையின் கண்கள் வழியாக, ஆண்டவரின் அழகு முகத்தைத் தியானிக்கும் ஒரு பக்தி வழிபாடு!

- திருத்தந்தை 2ஆம் ஜான்பால்”

அக்டோபர் மாதம் செபமாலை பக்திக்குரிய மாதம். ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் ஏழாம் தேதி செபமாலை அன்னை விழாவாக நம் திரு அவை கொண்டாடி மகிழ்கின்றது.

செபமாலை பக்தி என்பது அன்னையின் கண்கள் வழியாக, ஆண்டவரின் அழகு முகத்தைத் தியானிக்கும் ஒரு பக்தி வழிபாடுஎன்கிறார் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர். இம்மாதத்தில் ஒறுத்தல் முயற்சிகளோடு ஒன்றிணைந்து செபமாலை செபிக்க நமது திருத்தந்தை பிரான்சிஸ் அழைப்பு விடுக்கின்றார்.

செபமாலை பக்தி என்பது திருவிவிலியத்தில் சொல்லப்படவில்லையேஎன்று சிலர் கேட்கலாம். ஆனால், செபமாலை பக்தியில் திருவிவிலியமே அடங்கியுள்ளது. திருவிவிலியம் கூறும் மீட்பின் வரலாற்றின் சுருக்கமே செபமாலை. அன்னை மரியாவோடு இணைந்து மூவொரு கடவுளைப் புகழ்கின்ற செபமே செபமாலை. கடவுளின் தாயான அன்னை மரியாவின் உள்ளத்தைத் தொடும் செபம் செபமாலை. எனவே, தினமும் செபமாலை சொல்லுங்கள் என்கிறார் திருத்தந்தை 10-ஆம் பத்திநாதர்.

ஒரு நாளைக்கு 35 முறை 153 மணி செபமாலை சொல்லி அன்னையின் மேல் வைத்த அன்பால் மெழுகாகக் கரைந்தவர் புனித பியோ. “உலகத்தின் தீமைகளைக் களைய சிறந்த ஆயுதம் செபமாலைஎன்று கூறுகின்றார் புனித  பியோ.

செபமாலைப் பக்தி முயற்சியில் நாம் பங்கெடுக்கும்போது மரியன்னையின் அரவணைப்பில் நாம் இருக்கின்றோம்என்கிறார்செபமாலையின் திருத்தந்தைஎன அழைக்கப்படும் 13-ஆம் சிங்கராயர்.

செபமாலை வழியாகச் செபிப்பதே மிகச்சிறந்த முறையில் செபிப்பதற்கு வழிஎன்கிறார் புனித பிரான்சிஸ் சலேசியார்.

செபமாலை என்பது அமைதியின் செபம்; குடும்பத்தின் செபம்; குழந்தைகளின் வளர்ச்சிக்கும், உயர்வுக்கும் உதவுகின்ற செபம்என்றும், “மாலை வேளைகளில் கூடிச் செபிக்கும் குடும்பம் எத்துணை அழகானது!” என்றும் வியக்கின்றார் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்கள்.

செபமாலையினால் தீர்க்க முடியாத தனிமனித, குடும்ப, சமூக, உலகப் பிரச்சினைகள் ஏதுமில்லைஅதனால்தான் திருத்தந்தை 13-ஆம் சிங்கராயர்செபமாலை எல்லாத் தீமைகளுக்குமான தீர்வு, எல்லா ஆசிர்வாதங்களுக்கும் வேர்என்கிறார்.

இன்றைய பரபரப்பான உலகில் ஒரு குடும்பத்தில் உள்ளவர்கள் சேர்ந்து அமர்ந்து பேசவோ, உணவருந்தவோ நேரம் கிடையாது. ஏதாவது ஒன்றைத் தேடி ஓடிக்கோண்டே நம் வாழ்க்கைப் பயணம் செல்கிறது. ஆனால், கடவுளைத் தேடுவது அரிதாகிவிட்டது. குடும்ப செபம் இல்லாத வீடு கூரையில்லாத வீடு; பாதுகாப்பற்றது. விஷப்பூச்சிகளும், திருடர்களும், இன்னும் பல ஆபத்துகளும் நாம் அழைக்காமலே உள்ளே வந்துவிடும். அது போல்தான் குடும்ப செபமில்லாத வீட்டில் பல பிரச்சினைகளும், துன்பங்களும் எளிதில் தாக்கும். குடும்பங்களில் சமாதான குறைபாடுகள் ஏற்படும்.

அதேநேரத்தில், செபிக்கின்ற இல்லங்களில் துன்பங்கள், துயரங்கள் வராது. அப்படியே வந்தாலும் அவற்றைத் தாங்கக்கூடிய சக்தியையும், நீக்கக்கூடிய சந்தர்ப்பங்களையும் கடவுள் தருவார். எனவே, குடும்பங்களில் நாள்தோறும் குடும்பச் செபம் சொல்வோம்.

நாம் புனிதர்களாவதற்கு இரத்தச் சாட்சியாக மரிக்கத் தேவையில்லை. ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம்  செபமாலையின் மறையுண்மைகளைத் தியானித்தாலே புனிதர்களாவோம்என்கிறார் புனித பிரான்சிஸ் சலேசியார். ஆம், ‘அருள் நிறைந்த மரியேஎன்று அன்னையைப் புகழ்ந்து செபமாலை ஆரம்பித்ததும், அன்னை மரியா நம்மோடு வந்து அமர்கிறார். அன்னை வந்ததும் அவர் மகன் இயேசுவும் வந்துவிடுவார். அவரைத் தொடர்ந்து பிதாவும், தூய ஆவியானவரும் வந்து விடுவார்கள். பின்னர் புனிதர்களும், வானதூதர்களும் நம் இல்லத்திற்கு வர, நம் வீடு விண்ணக வீடாக மாறிவிடும். விண்ணக வீட்டில் அமர்ந்திருக்கும் நாமும், நம் குடும்பத்தாரும் புனிதர்கள்தானே! எனவே, செபமாலை சொல்லும் பழக்கத்தை அதிகப்படுத்திக் கொள்வோம். இத்தகு செபமாலைப் பக்தியை அனுசரிப்பவர்கள் தூய்மையான உள்ளத்தோடு, முழுபக்தியோடு இதயத்தின் ஆழத்திலிருந்து ஒருமுறை முத்தி செய்பவர்கள் 500 நாள்கள் பரிபூரணப் பலன்களைப் பெறலாம். மேலும், ஐந்து தேவ இரகசியங்களைத் தியானித்துச் செபமாலை செபிக்கும் போது பத்து வருடப் பரிபூரணப் பலனையும், இடுப்பில், மணிக்கட்டில் அல்லது கழுத்தில் பக்தியோடு செபமாலையை அணிந்தால், 100 நாள்கள் பலனையும், ஆலயப் பவனிகளின்போது செபமாலை சொல்பவர்கள் 7 ஆண்டுகள் பரிபூரணப் பலனையும் பெறலாம். அப்படியென்றால், செபமாலையைப் பலமுறை முத்தமிடுபவர்கள், செபமாலையை எப்போதும் அணிந்து கொண்டிருப்பவர்களுக்கு நன்மைகள் எவ்வளவு பெரியதாக இருக்கும்! இந்தப் பலன்களால் நமது பரலோக வங்கிக் கணக்கு நிரம்பி வழியும் அல்லவா!

இந்தப் பலன்கள் எல்லாம் நமது கடைசித் தீர்ப்பு நாளில் நமக்கு உதவும். மாறாக, இந்த உலக வங்கிகளில்  நாம் சேர்த்து வைக்கும் பணம், நகை, சொத்துப் பத்திரங்கள், புகழ், செல்வாக்கு, பட்டம், பதவி எதுவும் நம் மீட்பிற்கு உதவாது. எனவே, அள்ள அள்ளக் குறையாத அட்சயப் பாத்திரமாகிய அருள் வரங்களின், ஆசிர்வாதங்களின் களஞ்சியமுமாகிய செபமாலையை நாள்தோறும் சொல்லி, நமக்கும் பிறருக்கும் தேவையான அருள்வரங்களை அன்னை மரியாவிடமிருந்து பெற்று மகிழ்வோம்!

Comment