No icon

செபமாலை: மனிதப் பரிமாணங்களின் படிக்கட்டுகள்

. ஆன்மிகப் பரிமாணம்

1. விசுவாசத்தின் அருளடையாளம்: உரோமை கத்தோலிக்கத் திரு அவையின் ஆன்மிகப் பரிமாணத்தின் தனிப்பெரும் அருளடையாளமாகச் செபமாலை விளங்குகிறது. பிறப்பு முதல் இறப்பு வரை நமது விசுவாச வாழ்வின், செயல்களின் அடித்தளம் செபமாலை. குழந்தை பிறந்தவுடன் செபமாலையைக் கையில் கொடுத்தபின் தொட்டியில் கட்டிவிடுவதும், இறந்தபின் நமது கரங்களில் சுற்றி  இறுதிவரை நம்மோடு பயணிக்கும் அருள் அடையாளமே ஆகும். நோய்வாய்ப்பட்டு பாதுகாப்பிற்காக வேண்டுகின்றபோது, நமக்கு நோய் தீர்க்கும் புதுமையின் அடையாளமாகத் திகழ்கிறது. மாதா கோவிலுக்கு வரம் வேண்டி பாதயாத்திரை செல்லும்போது, அன்னை நம்முடன் பயணிக்கும் உடனிருப்பின் செயல் அடையாளமாக விளங்குகிறது. முதல் முறையாக வீட்டை விட்டு விடுதிகளுக்குச் சென்று வாழ்கின்றபோது, நமது பெற்றோர் இறைப் பாதுகாப்பின் அருளடையாளமாகத் தருவது இந்தச் செபமாலையே! குழந்தைகள் பயந்து உளவியல் ரீதியான பிரச்சினைகளில் தவிக்கிறபோது, கழுத்தில் அணிந்துகொண்டு வாழ்வைத் தொடர்ந்திட சக்தி தரும் அருள் அடையாளமாகத் திகழ்கிறது.

கைகளில் ஏந்தி செபமாலை காட்சித் தியானமாய் செய்கின்ற வேளையில், இறைவனின் மீட்புத் திட்டத்தில் பங்குபெறத் தூண்டும் அருள்சின்னமாகத் திகழ்கிறதுதிரு அவையின் விசுவாசிகளை அடையாளப்படுத்தி, அருள் வளங்களைப் பெற்றுத்தரும் தனிப்பெரும் ஆன்மிக அருளடையாளமே செபமாலை.

2. விசுவாசத்தை அறிக்கையிடல்: செபமாலை சொல்வது வெறும் சொல்லாடலாய் அமைந்துவிடக் கூடாது. மாறாக, அதைத் தியானித்து, சிந்தித்து, மறையுண்மைக் காட்சிகளில் பங்கேற்று ஆன்மிக விழிப்புணர்வுடன் பங்கேற்கும்போது விசுவாசத்தை அறிக்கையிடும் புனித செயலாக உள்ளது. முதலாவதாக, ‘செபமாலை சொல்வோம்என்ற சொற்றொடரைப் பயன்படுத்துவதை விடுத்து, ‘செபமாலை தியானிப்போம்என்று அழைப்பு விடுவதே சாலச் சிறந்தது. காரணம், செபமாலை சொல்வது வார்த்தைகளின் ஜாலமோ, அணிவகுப்போ அல்ல; மாறாக, மனித வாழ்வின் பற்பல பரிமாணங்களில் நம்மை வளர்த்தெடுக்கும் செயல்பாடுகளின் தொகுப்பே செபமாலை என்ற புரிதல் அவசியம். எனவே, காட்சித் தியானமாக உணர்வு ரீதியாகப் பங்கெடுப்பதே சரியான அணுகுமுறையாகும்.

இரண்டாவதாக, ‘இறைவார்த்தையை நாம் பயன்படுத்துவது இல்லைஎனப் பிரிவினைச் சகோதரர்கள் சொல்கிறார்கள். ஆனால், செபமாலையில் முற்றிலும் இறைவார்த்தையையே மீண்டும் மீண்டும் நாம் சொல்கிறோம். இறைவன் இவ்வுலகை மீட்க, இறைமகன் இயேசுவை மரியிடம் பிறந்தவராக அனுப்பியதையும், அவரின் மீட்புப் பாதையைத் தேவ இரகசியங்களாக, மறையுண்மைகளாகக் காட்சிப்படுத்தித் தியானித்தும், அத்துடன் நாம் கர்த்தர் கற்பித்த செபமும், விசுவாசச் செபமும் கூறும்போது, நாம் விசுவாசத்தை அறிக்கையிடுகிறோம். இறைவார்த்தையை முழுமையாக அறிக்கையிட்டு செபமாலையின் வழியாக விசுவாசச் சாட்சிகளாகிறோம்.

3. விசுவாசத்தை வாழ்வாக்குதல்

இறைவனின் வார்த்தை உயிருள்ளது; ஆற்றல்மிக்கது. இருபக்கமும் வெட்டக் கூடிய எந்த வாளினும் கூர்மையானது (எபி 4:12) என்ற பவுல் அடியாரின் வாக்கிற்கிணங்க, இறைவார்த்தையை மீண்டும் மீண்டும் சொல்கிறோம், தியானிக்கிறோம். அப்போது இரு பக்கமும் கூர்மையான இறைவார்த்தையினால் ஆன்மிகப் பலத்தைப் பெற்றுநம்மை மனமாற்ற வாழ்விற்கு அழைக்கிறது. மரியாவைப் போல நாமும் இறைத்திட்டத்தை ஏற்றிட தூண்டுகிறது. ‘இதோ உமது அடிமைஎன்று முற்றிலுமாகச் சரணடைந்திட நம்மைப் பணிக்கிறது. “கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லைஎன்ற விசுவாசச் சத்தியத்தை வாழ்வாக்கிட உதவுகிறது.                

) உளவியல் பரிமாணம்

இறைவார்த்தையை மீண்டும் மீண்டும் சொல்கின்றபோது இறுக்கம் குறைந்து, தளர்வான நிலை உருவாகிறது. இறுக்கமான உலகில் பயணிக்கும் நமக்கு உளவியல் மருந்தாகச் செயல்படுகிறது. இரண்டாவதாக, இறைவனோடு நாம் ஏற்படுத்தும் உறவு புதுப்பிக்கப்பட்டு இறைப் பாதுகாப்பு உணர்வு கிடைக்கிறது. செபமாலையை நாம் பையில் வைத்துள்ளபோது, பயம் நீங்கி துணிந்து விசுவாச வாழ்வில், பிறரன்புச் செயல்களில் இறங்கிட உதவுகிறது. பாவிகள் என்று நம்மை ஏற்றுக்கொள்கின்ற வேளையில், தாழ்மையான மனநிலையை ஏற்படுத்துவதுடன், தூய்மையான வாழ்விற்காக இறைவனை நாடும் மனப்பக்குவம் அளிக்கிறது. அத்துடன் பிறரின் பலவீனத்தை ஏற்றுக்கொண்டு மன்னிக்க, உளவியல் பலம் தருகிறது.

மறையுண்மைகளைத் தொடர்ந்து தியானிப்பதால் மீட்பின் திட்டத்தில் பங்கெடுத்து, நம் வாழ்வில் வரும் சிலுவைகளை விரும்பிச் சுமந்திட திடமான மனத்தைத் தருகிறது. இறைவன் மனுவுருவானதைத் தியானிப்பதால் தேவைகள் நிறைந்த உலகில் நாமும் சேவைகள் செய்திட ஆன்மிக உளவியல் தூண்டுதலைத் தருகிறது

நான் பல நாள்களாகச் செபமாலை தியானிப்பது மாதாவிற்கு நான் அணிவிக்கும் புகழ்மாலை என்றே நினைத்தேன். உண்மைதான். ஆனால், அது சொல்பவரின் வாழ்வின் பற்பல பரிமாணங்களை வளப்படுத்தும். அவரது கழுத்தில் விழும் ஓர் அற்புத மாலையாகவும், ஓர் உளவியல் மாலையாகவும் திகழ்கிறது என்ற உண்மையை உணர்ந்துள்ளேன்.

. சமூகப் பரிமாணம்

குடும்பமாக, திருச்சமூகமாக, அன்பியக் குழுமமாக, பங்காக அனைவரும் சேர்ந்து எவ்வித வேற்றுமையும் இல்லாமல் முழுமையாகப் பங்கேற்கும் சிறந்த வழிபாட்டு பக்தி முயற்சியாக அமைகிறது. வயது வேறுபாடு இன்றி, சாதி வேறுபாடு இன்றி, இல்லறம்-துறவறம், குரு-பொதுநிலையினர் என்றெல்லாம் வேறுபாடு இல்லாமல், அனைவரும் சமத்துவமாய் பங்கேற்கும் பக்தி முயற்சி செபமாலை ஆகும். எனவே, சமத்துவம் என்ற விழுமியம் மலர்ந்து, சமூக ஒற்றுமை என்ற விழுமியம் மணம் பரப்பிட உதவும் சிறந்த பக்தி முயற்சியாகும். உரோமை கத்தோலிக்கச் சமூகமாக நம்மை ஒருமுகப்படுத்தும் அருளடையாளமாகும். சேர்ந்து, உயர்வு தாழ்வின்றி ஒருமித்துத் தியானிக்கப்படுவதால் நம்மிடையே கூட்டு ஒருமைப்பாடு என்ற விழுமியம் தழைத்தோங்கிட உதவுகிறது.

. உணர்வுப் பரிமாணம்

பல நாடுகளைக் கடந்து, கலாச்சாரங்களைக் கடந்து விசுவாசச் சத்தியங்களை உணர்வு ரீதியாகத் தியானிக்கும் ஒப்பற்ற பக்தி முயற்சியாகும். லூர்து நகரில் தமிழில் செபமாலை சொல்கின்ற வேளையில், அதில்  உணர்வுப்பூர்வமாகப் பங்கேற்று ஆன்ம பலம் பெறுகின்ற விசுவாசிகளில் நானும் ஒருவன். அந்தச் செபமாலையினைக் கேட்டு அதோடு உணர்வு ரீதியாகப் பங்கெடுக்கும் வேளையில், பல புதுமைகள் என் வாழ்வில் நடைபெறக் கண்டுள்ளேன். இதற்கு நானே சாட்சி!

மகிழ்வின் மறையுண்மைகள், துக்க மறையுண்மைகள், ஒளியின் மறையுண்மைகள், மகிமை மறையுண்மைகள் என்று வாழ்வின் பல்வேறுபட்ட உணர்வுப் பரிமாணங்களில் நம்மைப் பங்கெடுக்கச் செய்கிறது. எனவே, உணர்வுப்பூர்வமான ஓர் ஈடுபாடுள்ள பக்தி முயற்சியாகச் செபமாலை திகழ்கிறது. இவ்வாறு மனித வாழ்வின் அனைத்துப் பரிமாணங்களையும் வளப்படுத்தி, வாழ்விக்கும் படிக்கட்டுகளாக அமைந்து நம்மை உயர்த்தும் திரு அவையின் வாழ்வியல் அருள் அடையாளமாகத் திகழ்கிறது.

செபமாலை தினமும் சொல்லிடுவோம்!

நம் வாழ்வின் பரிமாணங்களில் வளர்ந்திடுவோம்!

Comment