No icon

இறைவேண்டலின்  பரிமாணங்கள் – 24

இயேசுவின் திருப்பெயர் மன்றாட்டு

பல நூற்றாண்டுகளாக உலகத் திரு அவையால் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு குறுமன்றாட்டைத் தமிழகத் திரு அவை போதுமான அளவு பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றால் நீங்கள் வியப்படைவீர்களா? அதுதான் இயேசுவின் திருப்பெயர் மன்றாட்டு (Jesus Prayer). “இயேசுவே, தந்தையின் திருமகனே, பாவி என்மேல் இரக்கமாயிரும்என்னும் சொற்களை மீண்டும் மீண்டும் ஒரு மந்திரம்போல உதட்டிலும், உள்ளத்தின் ஆழத்திலும் மன்றாடுவதே இயேசுவின் திருப்பெயர் மன்றாட்டு.

ஐந்தாம் நூற்றாண்டில் எகிப்திய வனாந்தரங்களில் தவ முனிவர்களால் பயன்படுத்தப்பட்ட தொன்மையான மன்றாட்டு இது. புனித ஜான் கிறிஸ்சோஸ்தமின் கடிதத்தில்ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, கடவுளின் திருமகனே, எம்மேல் இரக்கமாயிரும்என்னும் இம்மன்றாட்டு காணப்படுகிறது.

இயேசுவின் திருப்பெயரை மீண்டும் மீண்டும் அறிக்கையிடுவதே இம்மன்றாட்டின் தனித்துவம்இயேசுவின் திருப்பெயருக்குப் பல சிறப்புகள் உள்ளன.

1. பேய்களை ஓட்டுகிறது: இயேசுவுக்கு மட்டுமல்ல, அவரது பெயருக்கே பேய்களை விரட்டும் ஆற்றல் இருக்கிறது என்பதை நற்செய்தி நூல்களில் காண்கிறோம். இயேசு தம் சீடர்களை நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பியபோது, நம்பிக்கை கொண்டோர் செய்யும் அரும் அடையாளங்களுள் முதன்மையானதாகக் குறிப்பிடுவதுஅவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்” (மாற் 16:17) என்பது. இயேசுவின் பணிவாழ்வில் நிகழ்ந்த மற்றொரு சுவையான நிகழ்வும் இந்த ஆற்றலை வெளிப்படுத்துகிறது. ஒருமுறை யோவான் இயேசுவிடம்போதகரே, ஒருவர் உமது பெயரால் பேய்கள் ஓட்டுவதைக் கண்டு, நாங்கள் அவரைத் தடுக்கப் பார்த்தோம். ஏனெனில் அவர் நம்மைச் சாராதவர்” (மாற் 9:38) என்கிறார். என்னே ஒரு வியப்பான செய்தி! இயேசுவின் சீடரல்லாத ஒரு மனிதர்கூட இயேசுவின் பெயரைச் சொல்லிப் பேய்களை விரட்டியிருக்கிறார் என்றால், அந்தப் பெயர் எத்தனை ஆற்றல் வாய்ந்தது!

2. நோய்களைப் போக்குகிறது: இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்என இயேசுவின் பெயரை உரக்கக்கத்தி இறைஞ்சிய பார்வையற்ற பர்த்திமேயு மீண்டும் பார்வை பெற்றார் (மாற் 10:47-52). இயேசுவின் விண்ணேற்புக்குப் பிறகு, திருத்தூதர்கள் இயேசுவின் பெயரைச் சொல்லி வல்ல செயல்கள் பல நிகழ்த்தினர். பிறவியிலேயே கால் ஊனமுற்றிருந்த மனிதர் ஒருவரைத் திருத்தூதர் பேதுரு, “வெள்ளியும் பொன்னும் என்னிடமில்லை. என்னிடம் உள்ளதை உமக்குக் கொடுக்கிறேன். நாசரேத்து இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நடந்திடும்” (திப 3:6) என்று சொல்லி, அவரை நடக்க வைத்தார். அந்த நிகழ்வுக்கு விளக்கம் கூறிய பேதுரு, “இயேசுவின் பெயரே இவருக்கு வலுவூட்டியது. அவர் பெயர்மீது கொண்டிருந்த நம்பிக்கையால்தான் இது நடந்தது” (திப 3:16) என்று இயேசுவின் பெயருக்குள்ள ஆற்றலை மீண்டும் தெளிவுபடுத்தினார்.

3. மீட்புப் பெறுவதற்கான ஒரே பெயர்: இயேசுவின் திருப்பெயர்தான் மீட்பு பெறுவதற்கான ஒரே பெயர் என்கிறது திருத்தூதர் பணிகள் நூல். “இவராலேயன்றி வேறு எவராலும் மீட்பு இல்லை. ஏனென்றால், நாம் மீட்புப் பெறுமாறு வானத்தின் கீழ், மனிதரிடையே இவரது பெயரன்றி வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை” (திப 4:12) என்று பேதுருதூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு’ (4:8) உரைத்தார்.

4. இந்தப் பெயரால் கேட்பதையெல்லாம் தந்தை அருள்வார்:நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார்” (யோவா 15:16) என்பது இயேசு தந்த வாக்குறுதி.

5. இந்தப் பெயர் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது:நீங்கள் என் பெயரால் கேட்பதையெல்லாம் நான் செய்வேன். இவ்வாறு தந்தை மகன் வழியாய் மாட்சி பெறுவார்” (யோவா 14:13) என்பது இயேசுவின் மற்றோர் உறுதிமொழி.

6. இயேசுவின் பெயருக்கு அனைவரும் மண்டியிடுவர்: இயேசு சிலுவைச் சாவை ஏற்கும் அளவுக்கு இறைத்தந்தைக்குக் கீழ்ப்படிந்ததால், தந்தை அவரைப் பெருமைப்படுத்தினார் என்று கூறும் பவுலடியார், “எனவே, கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார். ஆகவே, இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர். தந்தையாம் கடவுளின் மாட்சிக்காகஇயேசு கிறிஸ்து ஆண்டவர்என எல்லா நாவுமே அறிக்கையிடும்” (பிலி 2:9-11) எனக் கூறுகிறார்.

இத்தகைய சிறப்புகள் மிக்க இயேசுவின் திருப்பெயரை நம் நாவிலும், இதயத்திலும் அடிக்கடி ஒலிக்கச் செய்வதே இயேசுவின் திருப்பெயர் மன்றாட்டு.

இம்மன்றாட்டை நாம் மூன்று தளங்களில் பயன்படுத்தலாம். முதலில், இதனை வாய்மொழி மன்றாட்டாகத் தொடங்கி சொற்களைப் பயன்படுத்தி மன்றாடலாம். இரண்டாம் தளத்தில், இதையே ஒருமனவல்லியமன்றாட்டாக மாற்றி, மனத்தில் மீண்டும் மீண்டும் ஒலிக்கச் செய்து, நமது மனத்தை இயேசுவின் திருப்பெயரால் நிரப்பலாம். மனத்தையும் தாண்டி, நம் உள்மனத்தின் ஆழத்தில் இயேசுவோடு ஒன்றிப்பதே மூன்றாவது தளமாகும்.

எளிமையே சிறப்புஎன்னும் உண்மையின் அடிப்படையில் இந்த எளிய, சிறிய இறைவேண்டலைப் பயன்படுத்தி உடல் நலம், மன அமைதி, இறைவனோடு ஆன்ம ஒன்றிப்பு ஆகிய கனிகளைப் பெற்றுக்கொள்ளலாம். வாருங்கள், இன்றே தொடங்கலாம்!

Comment