அருளடையாளங்கள் - உளவியல் ஆன்மிக தொடர் – 4
அருளின் அடையாளக் கருவிகள்
(தந்தை அன்பு செல்வன், தாய் மார்த்தா, மகன் அகஸ்டின், மகள் கிறிஸ்டினா இவர்களோடு அருள்பணியாளர் தாமஸின் உரையாடல் தொடர்கிறது)
அகஸ்டின்: “தந்தையே, கடந்த வாரம் ‘நம் கையில் என்ன இருக்கிறது என்பதைவிட, நாம் யாராக இருக்கிறோம் என்பது முக்கியமானது’ என்று நீங்கள் சொன்னது என்னைச் சிந்திக்க வைத்தது.”
மார்த்தா: “பாதர்! எனக்கு ஓர் உதாரணம்கூட தோன்றியது. அருள்செல்வத்தை அதிகரிக்காமல், பொருள்செல்வத்தை மட்டும் அதிகமாக்குவது, ஒரு குழந்தையின் கையில் தங்கத்தையும் வைரத்தையும் கொடுப்பது போன்றது. அக்குழந்தைக்கு அவற்றால் எந்தப் பயனும் இல்லை என்பதோடு, அது அவற்றை வீணாக்கத்தான் செய்யும். ஏன், பிறரைக் காயப்படுத்தக்கூட செய்யலாம்.”
கிறிஸ்டினா: (கிண்டலோடு) “எப்படிம்மா! இப்படியெல்லாம் நல்லா யோசிக்கிற?”
மார்த்தா: “பாதர்! ஆலயத்திற்கு அருள்செல்வத்தை நாடித்தான் வரவேண்டும் என்று சொன்னீர்கள். ஆனால், எங்களில் பலர் பொருள்செல்வத்தை மையப்படுத்திதானே மன்றாடுகிறோம். அது ஏன்?”
அருள்பணி: “மனித மனத்தின் மாயையான எண்ணத்தின் வெளிப்பாடு இது. பொருளாதாரம் சரியாகிவிட்டது என்றால், எல்லாம் சரியாகிவிடும் என்ற மாயையான எண்ணம். இறைமகன் இயேசு நமக்குக் கற்றுக்கொடுத்த செபத்தை உற்றுநோக்கினோம் என்றால், அங்கு பொருளாதாரத் தேவைக்காகக் கொடுக்கப்பட்டிருப்பது ஒரு மன்றாட்டு மட்டுமே; ‘எங்கள் அன்றாட உணவைத் தந்தருளும்’ என்ற வரி மட்டுமே நம் பொருளாதாரத் தேவைகளுக்கான வரியாக இருக்கிறது. மற்ற அனைத்துமே நம் அகத்தைச் சரியாக வைத்திருப்பதற்கான வழி முறைகளே!”
அகஸ்டின்: “தந்தையே, பொருள்செல்வத்திற்காக மன்றாடுவதில் தவறு ஒன்றும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. வள்ளுவரே, ‘அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை; பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு’ (குறள் 247) என்று சொல்லியிருக்கிறார். ‘இவ்வுலகத்தில் (பூலோகத்தில்) மகிழ்ச்சியாக இருப்பதற்குப் பொருள் தேவை; அவ்வுலகத்தில் (மோட்சத்தில்) மகிழ்ச்சியை அனுபவிப்பதற்கு அருள் தேவை’ என்று வள்ளுவரே சொல்லியிருக்கிறார். எனவே, மகிழ்ச்சியைக் கொடுக்கும் பொருள்செல்வத்தைக் கடவுளிடம் கேட்பது தவறாகத் தெரியவில்லையே!”
அருள்பணி: “கடவுளிடம் பொருள்செல்வத்தைக் கேட்பது தவறு என்று நான் சொல்லவில்லை. அதை மட்டுமே கேட்பதுதான் தவறு என்று சொல்கிறேன். மேலும், வள்ளுவரின் குறளுக்கு நீ கொடுக்கின்ற விளக்கத்தில் பிரச்சினை இருப்பதாக நான் நினைக்கிறேன். ஏராளமான பணமும் பொருளும் தற்போது கொண்டிருக்கின்ற எல்லா மனிதர்களும், இப்பூலோக வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்ற கேள்வியைக் கேட்டால் ‘நிச்சயமாக இல்லை’ என்கின்ற பதில்தான் வரும். எனவே, வள்ளுவர் சுட்டிக்காட்டும் இவ்வுலகம், அவ்வுலகம் என்ற வார்த்தைகளைப் பூலோக வாழ்வு, மோட்ச வாழ்வு என்று பொருள் கொள்ளாமல், தற்போதைய வாழ்விலேயே இருக்கின்ற இரு பரிமாணங்களாக நாம் புரிந்துகொள்ள வேண்டும். அவற்றைப் புற உலகம், அக உலகம் என்று புரிந்துகொள்வது சிறப்பானதாகவும், சரியானதாகவும் இருக்கும் என்று நான் எண்ணுகின்றேன். பொருள்செல்வம் நம் புற வாழ்வில் ஒருவிதமான திருப்தியைக் கொண்டு வருகிறது என்பது உண்மை. மனித அங்கீகாரம், பெருமை, பாராட்டு ஆகியவற்றைக் கொண்டு வருகிறது. ஆனால், இவை எதுவுமே ஒரு மனிதரை அவரது ஆழத்தில் தொடுவதில்லை; அகத்தில் மகிழ்ச்சியைக் கொண்டு வருவதில்லை. புற உலகில் வசதியைக் கொண்டு வரும் பொருள், அக உலகின் மகிழ்ச்சியை அதிகப்படுத்துவதில் எந்தப் பங்கும் வகிப்பதில்லை. அக உலகின் மகிழ்ச்சியை அருள்செல்வமே தீர்மானிக்க முடியும்.”
அகஸ்டின்: “சரி தந்தையே, அருள்செல்வத்தைப் பெற்றுக்கொள்வதற்காக ஆலயத்திற்கு வருகிறோம் என்று சொல்கிறீர்கள்; ஆனால், அத்தகைய ஒன்று நடப்பது போன்று எதுவும் தெரியவில்லையே! ஆலயத்திற்கு வரும் பலரின் வாழ்வு அருள்செல்வத்தைப் பெற்ற வாழ்வாக இருப்பதுபோல தெரியவில்லையே!”
அருள்பணி: “இதில் இரண்டு பிரச்சினைகள் உள்ளன. ஒன்று, பொருள்செல்வத்தைப் பெற்றுக்கொள்வதுபோல அருள்செல்வத்தைப் பெற்றுக்கொள்வதை நம் கண்களால் நாம் உடனே பார்க்க இயலாது. இரண்டு, கோவிலுக்கு வந்து சில செபங்களைச் சொல்வதாலே நாம் அருளைப் பெற்றுக் கொண்டு விடுகிறோம் என்று தவறாக எண்ணிவிடுவது.”
அகஸ்டின்: “அப்படியென்றால் நாம் இறைவனின் அருளைப் பெற்றுக்கொள்கிறோம் என்பதற்கான அடையாளம்தான் என்ன?”
அருள்பணி: “நம் வாழ்க்கைமுறைதான்! உடனடி மாற்றம் நம்மில் நிகழவில்லையென்றாலும், நீண்டகாலக் கண்ணோக்கில் பார்க்கும்போது. நாம் ஆலயத்திற்கு வருவது நம் வாழ்வில் சில மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும். எதைத் தேடுகிறோம், எத்தகைய மனநிலையுடன் பிறரோடு உறவுகொள்கின்றோம், நம் உணர்ச்சிகளை எப்படிக் கையாள்கிறோம், வாழ்வை எத்தகைய அர்த்தத்தோடு வாழ முயற்சி செய்கின்றோம் போன்றவற்றில் மாற்றம் நிகழ்ந்தது எனில், நாம் இறைவனின் அருளைப் பெற்றுக்கொள்கின்றோம் என்று அர்த்தம்.”
கிறிஸ்டினா: “அத்தகைய ஒன்றுதான் நடைபெறுவதுபோல தெரியவில்லை என்று சொல்கிறேன்.”
அருள்பணி: “அப்படி ஒட்டுமொத்தமாகச் சொல்லிவிட முடியாது. இறைவனின் அருளைப் பெற்று, தங்களது வாழ்வை உயர்த்துகிறவர்கள் எத்தனையோ பேர் உண்டு. தற்போதைய இளையோர்களாகிய நீங்கள் ‘உடனடி கலாச்சாரத்தில்’ (instant culture) வாழ்கிறீர்கள். Instant coffee, instant chappati, instant noodles. இந்த மனநிலை ஆன்மிகத்திலும் பிரதிபலிக்கிறது. ஆன்மிக மாற்றம் உடனுக்குடன் நடைபெறவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். ஆனால், அது சரியான எதிர்பார்ப்பல்ல!”
அகஸ்டின்: “தந்தையே! ஆலயத்திற்கு வந்தாலே நமக்கு அருள் கிடைத்துவிடுமா?”
அருள்பணி: “இறைவனின் அருளைப் பெறுவதற்கு ஆலயத்திற்கு வருவது அவசியம் என்றாலும், சில அர்த்தமிக்கச் செயல்பாடுகள் தேவைப்படுகின்றன. அவற்றை நாம் நம் தாய்த் திருச்சபையில் ‘அருளடையாளங்கள்’ என்று சொல்கின்றோம். சில காலங்களுக்கு முன்புவரை நாம் அவற்றைத் ‘திருவருள்சாதனங்கள்’ என்று அழைத்தோம்.”
மார்த்தா: “திருவருள்சாதனங்கள்’ என்றால் இறைவனது அருளைப் பெற்றுத் தருகின்ற சாதனங்கள், அதாவது கருவிகள் என்று அர்த்தம். அப்படித்தானே தந்தையே!”
அருள்பணி: “ஆம், ஆங்கிலத்தில் இவற்றை ‘Sacraments’ என்கின்றோம். உரோமை இராணுவத்தில் ஒரு நபர் படைவீரராக ஆகும் நிகழ்வானது sacramentum என்று அழைக்கப்பட்டது. அந்நிகழ்வில் அவர், தான் பணி செய்யும் அரசருக்கும் அரசுக்கும் மட்டும் பிரமாணிக்கமாக இருப்பதாக உறுதி மொழி எடுத்துக்கொள்வார். திரு அவை இந்த வார்த்தையை எடுத்துக் கொண்டதன் நோக்கம், நாம் கிறிஸ்துவுக்கும், அவரது இறையரசுக்கும் பிரமாணிக்கமுள்ளவர்களாக வாழவேண்டும் என்பதற்காகவே! நாம் இறைவனுக்குப் பிரமாணிக்கமாக இருப்பது இறைவனுக்குத் தேவை என்பதைவிட, நாம் நமது முழுமனித வாழ்வைக் கண்டுகொள்ள வேண்டும் என்பதற்கான வழியாக இருக்கிறது. நாம் இறைவனுக்குப் பிரமாணிக்கமாக இருப்பதால், நமக்குத்தான் அதிக நன்மை. அதாவது, நாம் இறைவன்மீது கொள்ளும் அன்பின் பொருட்டு, இறைவன் நம்மீது தம் அருள்வளங்களைப் பொழிகிறார்.”
அன்புச்செல்வன்: “தந்தையே, Sacrament என்கின்ற வார்த்தை ‘sacred, moment’ (புனித நேரம்) என்ற இரு ஆங்கில வார்த்தைகளைச் சுருக்கி எழுதப்பட்டுள்ளது போலவும் தெரிகிறது.”
அருள்பணி: “நல்லதொரு சிந்தனை! அருளின் நேரம் என்பது புனித நேரம்தானே!”
(தொடரும்)
Comment