No icon

பொதுக்காலம் 11-ஆம் வாரம் (16-06-2024)

எசேக்கியேல் 17:22-24; 2கொரிந்தியர் 5:6-10; மாற்கு 4: 26-34

திருப்பலி முன்னுரை

கடவுளின் பார்வையில் எதுவும் சிறியதல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் செய்யும் அனைத்தையும் அன்புடன் செய்யுங்கள். பொதுக்காலத்தின் 11-ஆம் வார திருவழிப்பாட்டினைச் சிறப்பிக்கின்றோம். உவமை என்பது நம் காதுகளைக் கண்களாய் மாற்றுகிறது, கேட்கும் செய்திகளை மனத்தில் கற்பனை செய்து, அவற்றைக் காட்சிகளாகப் பார்க்க உதவுகின்றன. நன்கு புரிந்துகொள்வதற்கு வார்த்தைகள் மனக்காட்சிகளாக மாறி, நம் நினைவை விட்டு நீங்காத இடத்தை அவை எடுத்துக்கொள்கின்றன. அதனால்தான் இயேசு உவமைகள் வழியாக நமக்கு நற்செய்தியை அறிவித்தார். எல்லா உவமைகளின் நோக்கமும் இறையரசு எவ்வாறு அமையப் போகின்றது என்ற நம்பிக்கையை நம் உள்ளத்தில் பதிக்கப் போதிக்கப்படுகின்றன. இன்றைய நற்செய்தியில் இயேசு ஆண்டவர் இரண்டு உவமைகளைப் பயன்படுத்துகின்றார். தானாக முளைக்கும் விதை உவமை, கடுகு விதை உவமை. விதைக்குள்ளே முளைக்கும் ஆற்றல் இருந்தால், யாருடைய ஒத்துழைப்பும், ஊக்கமும் இல்லாமல், அவை முளைத்துப் பலன் அளிக்கும். அதுபோல நம்முடைய வாழ்வில் இறைவன் இருந்தால், யாருடைய உதவியுமில்லாமல் இறைவனை அடைய நம்மால் முடியும்; யாரையும் எதிர்பார்க்காமல் பிறருக்காக உதவி செய்ய நம்மால் முடியும் என்ற நம்பிக்கையை இந்த உவமை நமக்குத் தருகின்றது. “ஒரு சிறிய தியாகம் செய்வதற்கான எந்த வாய்ப்பையும் தவறவிடாதீர்கள்; சிறிய புன்னகை பார்வையும், சிறிய கனிவான வார்த்தையும் நாம் அன்பில் வளர்வதற்குத் துணை புரியும்” என்கிறார் புனிதை சிறுமலர் தெரேசா. நம் வாழ்வில் மேற்கொள்ளும் சிறிய நல்ல செயல்கள், நம்மில் இருக்கும் இறைச்சாயலைப் பிறருக்கு வெளிக்காட்ட முடியும். சிறிய கடுகு விதை முளைத்து, கிளைவிட்டுப் பெரிய மரமாகி, வானத்துப் பறவைகள் தஞ்சம் அடைவதைப்போல, நாம் செய்யும் சிறிய உதவிகள், பிறர் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, இன்றைய திருப்பலியில் சின்னஞ்சிறிய உதவிகளைச் செய்ய, இறைவனின் ஆற்றலையும், வல்லமையையும் கேட்டு மன்றாடுவோம்,

முதல் வாசக முன்னுரை

உலகத்தைப் படைத்த ஆண்டவர், படைப்பின் நோக்கத்தை வெளிப்படுத்துகின்றார். ‘மலையுச்சியில் மரத்தை நடுவேன்; அந்த மரம் கனி தரும். அனைத்து வகை பறவைகளும் அதனைத் தம் உறைவிடமாக மாற்றும்’ என்கிறார். இறைவனின் படைப்பாகிய நாம், அனைவரையும் ஒன்றுகூட்டி, ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று கூறும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

நம்முடைய வாழ்வின் அடிப்படை நம்பிக்கை மட்டும்தான். நாம் உயிர் வாழ்ந்தாலும், உடலை விட்டு இறைவனின் பாதம் சென்றாலும், நம் வாழ்வின் நோக்கம் இறைவனுக்கு உகந்த வாழ்வை வாழ வேண்டும் என்று முழங்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டு

• அன்பே உருவான இறைவா! எம் திரு அவையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், பொதுநிலையினர் ஆகியோரை ஆசீர்வதித்தருளும். திரு அவையை நல்முறையில் வழிநடத்தத் தேவையான அருளையும், பலத்தையும் தர வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.

• இரக்கமே உருவான இறைவா! எம்மை வழிநடத்தும் அரசியல் தலைவர்களுக்காகவும் மன்றாடுகின்றோம். தங்கள் சுயநலத்தை விட்டு, மக்களின் நலனுக்காக அவர்கள் உழைக்க அருள்தர வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.

• அமைதியின் உருவே எம் ஆண்டவரே! இவ்வுலகில் போர்கள் நீங்கி, அமைதியான உலகத்தையும், வறுமை நீங்கி அழகான உலகத்தையும் உருவாக்க எங்களுக்கு வலுவைத் தர வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.

• வல்லமையான இறைவா! எங்கள் அன்றாட வாழ்வில் ஆன்மிகத்தை வளர்க்க, நாங்கள் எடுக்கும் சின்னஞ்சிறிய செயல்களை ஆசீர்வதித்து, அதன் வழியாக இறையரசை வளர்க்க வரத்தைத் தர வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.

Comment