No icon

கோஸ்மஸ் இண்டிகோ பிளாஸ்டஸ்

தமிழகத்தில் கிறிஸ்தவம்

சிரியன் மலபார் கிறிஸ்தவர்கள்

மலபாரில் கானாவூர்

தோமா வழிமரபினர்

திருத்தூதர் தோமா மலபார் மற்றும் சோழ மண்டல கடற்கரைப் பகுதிகளில் கிறிஸ்தவ குழுமங்களுக்கு அடித்தளமிட்டதை இந்திய - சிரிய மரபுகள் வழியாக அறிகின்றோம். மலபார் கிறிஸ்தவர்கள் சிரியா, பெர்சியாவை மையப்படுத்திய கிழக்கு திரு அவையோடு தொடர்பில் இருந்தனர். பாரசீகர்கள், அரேபியர்கள், கிரேக்கர்கள், யூதர்கள் மலபாரோடு வணிகத் தொடர்பு கொண்டிருந்ததை அறிய முடிகின்றது. கிறிஸ்தவத்திற்கும், இந்தியாவிற்குமான அதிகாரப்பூர்வ தொடர்பு குறித்த முதல் வரலாற்றுத் தகவலை கி.பி. 325 இல் கூடிய நீசேயா திருச்சங்கம் ஏடுகளில் அறியலாம். யோவான், பாரசீகம் மற்றும் பரந்த இந்தியாவின் ஆயர் என்ற அவரின் கையெழுத்தோடு அக்குறிப்பை காண முடிகின்றது. பரந்த இந்தியா என்ற சொல்லாடல் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. திருத்தூதர்கள் தோமா மற்றும் பார்த்தலோமியு நற்செய்திப்பணியோ அல்லது இந்தியாவில் கிறிஸ்தவம் பற்றிய எந்தக் குறிப்பும் அதில் இல்லை. சிரியன் மலபார் கிறிஸ்தவர்கள் தங்களை ‘தோமா கிறிஸ்தவர்கள்’ என்று மட்டும் அழைக்காமல் “நஸ்ராணி’’ கிறிஸ்தவர்கள் எனவும் அடையாளப்படுத்துகின்றனர். “நசரேயன்” என்ற எபிரேய சொல்லின் சிரிய மொழியின் திரிபுச் சொல்லே “நஸ்ராணி’’ அதாவது, நசரேயன் மறையைப் பின்பற்றுபவர்கள், கிறிஸ்தவர்களைக் குறிக்கின்றச் சொல்லாடல்.

கி.பி. 345 இல், பாபிலோனியாவின் உருகு நகரிலிருந்து, சிரிய மொழிப் பேசும் 400 யூத கிறிஸ்தவக் குடும்பங்கள் கானாவூரைச் சார்ந்த பெரும் நில வணிகர் ஞனாய் தோமா தலைமையில் மலபாரின் கிராங்கனூரில் குடியமர்ந்தனர். இவர்கள் பாக்தாத், நினிவே மற்றும் எருசலேம் போன்ற பகுதிகளிலிருந்து இங்கு குடியேறினர். கடற் வணிகத்தில் சிறந்து விளங்கிய சிரியாவின் கிறிஸ்தவர்களை, அன்றைய மலபார் தமிழ் அரசன் சேரமான் பெருமாள் அன்புடன் வரவேற்று, அவர்களுக்கான அனைத்து உதவிகளையும், உரிமைகளையும் வழங்கினான். கடற் வணிகரான கானாவூர், தோமாவுடன் எடசாவைச் சேர்ந்த யோசேப்பு என்ற ஆயர், பல குருக்கள் மற்றும் திருத்தொண்டர்கள் உடன் வந்தனர். இவர்களின் முன்னோர்கள் திருத்தூதர் தோமாவால் திருமுழுக்குப் பெற்றவர்கள் என, தங்கள் விசுவாசப் பெருமையைப் பறைசாற்றி, தங்களை தோமா நஸ்ரானிகள் (கிறிஸ்தவர்கள்) என அழைத்துக் கொண்டனர். அரசனின் ஆதரவு பெருமளவு கிடைத்ததால் வணிகத்திலும், தங்கள் கிறிஸ்தவ வாழ்விலும் சிறந்து விளங்கினர். ஏற்கனவே இங்கு வாழ்ந்ததாக கருதப்படும் தோமா கிறிஸ்தவர்களும், சிரியாவின் நஸ்ராணி கிறிஸ்தவர்களும் காலப்போக்கில் சிரியன் கிறிஸ்தவர்கள் என அழைக்கப்பட்டனர்.

பிரான்சிஸ் கனிச்சிக்காட்டில் என்பவரின் ஆய்வின்படி, பெர்சியக் கிறிஸ்தவர்கள்தான் சிரியத் திருவழிபாட்டுச் சடங்கு முறையை பாபிலோனியாவிலிருந்து, மலபாரில் அறிமுகப்படுத்தினர் என்கின்றார். உலகளாவிய உரோமை கத்தோலிக்கத் திரு அவையுடன் எவ்வித உறவுமின்றி, கிழக்கத்திய சிரியத் திரு அவையோடு மட்டுமே ஞான உறவைக் கொண்டிருந்தது. எனவே, சிரியத் திரு அவையில் ஏற்பட்ட குழப்பங்கள் மலபார் திரு அவையையும் பாதித்தது. மலபார் சிரியன் திரு அவை நீண்ட, நெடிய பாரம்பரியம் கொண்டிருந்தாலும், தமக்கென்று ஓர் இறையியலையும், வழிபாட்டு முறையையும் உருவாக்கிக் கொள்ளாதது பெரும் வரலாற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஆனால், அதே நேரத்தில் அந்தியோக்குத் திரு அவை, அலெக்சாந்திரியத் திரு அவை, கார்த்தேக் திரு அவை போன்றவை தங்களின் மரபுக்கேற்ற தனித்தனி இறையியலை வளர்த்துக் கொண்டது கவனிக்கத்தக்கவை.

தொடக்கக்கால வரலாற்றுக் குறிப்புகள்

கி.பி. 6 ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வருகை புரிந்த கோஸ்மஸ் இண்டிகோ பிளாஸ்டஸ் என்ற அலெக்சாந்திரியப் பயணி, இந்தியா மற்றும் இலங்கையில் கிறிஸ்தவ ஆலயங்களையும், கிறிஸ்தவர்களையும், குருக்களையும் சந்தித்ததாகப் பதிவு செய்கின்றார். மேலும், மலபார் பகுதியில் மிளகு அதிகம் சாகுபடி செய்யப்படுவதாகக் கூறுகின்றார். கிபி. 325 முதல் 1503 வரை மலபார் கிறிஸ்தவர்கள் தங்களுக்கான ஆயர்களை பெர்சியா மற்றும் மெசபடோமியாவிலிருந்து பெற்றுக் கொண்டனர். 1200 ஆண்டுகளில் 10 ஆயர்கள் மட்டுமே மலபார் திரு அவையைக் கண்காணித்துள்ளனர். புனித தூர் நகர் கிரகரி (590) இந்தியாவிற்கு சென்று வந்த தியோடர் என்பவரின் அனுபவங்களைப் பகிர்ந்துக் கொள்கின்றார். “திருத்தூதர் தோமா, இந்தியாவில் மறைசாட்சியாக மரித்து, அடக்கம் செய்யப்பட்டார். பின்னாட்களில் அவரது உடல் சிரியாவின் எடசா நகருக்கு கொண்டு வரப்பட்டது. இந்தியாவில் தோமா அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், அழகு வேலைப்பாடுகளுடன் எழுப்பப்பட்ட ஆலயம் மட்டும் இருப்பதாக கூறுகின்றார்’’. ஏறக்குறைய கி.பி. 590 இல், தியோடர் இந்தியாவிற்கு வந்திருக்கக் கூடும் என நம்பப்படுகிறது. கி.பி. 841 இல், முகமதிய வணிகர் சுலைமான் தனது நாட்குறிப்பில் இந்தியா, சீனா, மலபார், கொல்லம் போன்ற பகுதிகளைப் பற்றி பேசுகின்றார். கொல்லம் துறைமுகத்திற்கு அடிக்கடி அரபு, சீனா, எகிப்திய கடற் வணிகர்கள் அலெக்சாந்திரியாவிலிருந்து வந்துச் சென்றதாக குறிப்பிடுகின்றார். மேலும், ரெனோதொ என்ற பிரெஞ்சுக்காரர் தோமா இல்லத்தை அடையாளம் கண்டார் என்றார் - அது மயிலையிலுள்ள தோமாவின் கல்லறையாக இருக்கலாம்.

இடைக்கால வரலாற்றுக் குறிப்புகள்

புகழ்பெற்ற வெனிசியன் வரலாற்றுப் பயணி மார்க்கோ போலோ 1292 இல், இந்தியாவிற்கு வருகை புரிந்தார். தனது குறிப்பில் திருத்தூதர் தோமாவின் உடல் மலபாரில் ஒரு சிறிய நகரில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. கிறிஸ்தவரும், முகமதியரும் அவரது கல்லறையை புனித தலமாக கருதி, இங்கு வந்துச் செல்கின்றனர். தோமா கொல்லப்பட்ட இடத்தின் மண்ணை கிறிஸ்தவர்கள் புனிதப் பொருளாக எடுத்துச் செல்கின்றனர் என பதிவு செய்துள்ளார். 1305 இல், ஜான் மோந்தே கொர்வினோ என்ற பிரான்சிஸ்கன் துறவி கூறுவது “நான் 1292 ஆம் ஆண்டு, 13 மாதங்கள் இந்தியாவிலுள்ள திருத்தூதர் தோமா கல்லறையில் தங்கி, நற்செய்தி பணியாற்றினேன், அப்போது நூற்றுக்கணக்கானவர்களுக்கு திருமுழுக்களித்தேன்’’. மேலும், கி.பி. 1306 ஆம் ஆண்டு எழுதும்போது, மலபாரில் குறைந்த எண்ணிக்கையில் கிறிஸ்தவர்கள் மற்றும் யூதர்கள் உள்ளனர். அவர்களை அங்குள்ள மாற்று சமயத்தார் அச்சுறுத்தி, கொடுமைப்படுத்துவதாக கூறுகின்றார்.

பிரான்சின் துலூஸ் நகரைச் சார்ந்த தொமினிக்கன் குரு ஜோர்டன் கத்தலானி கி.பி. 1302 இல் இந்தியாவிற்கு வேறு சில குருக்களுடன் வந்ததாகவும், அவர்களில் சிலர் மராத்தாவின் தானா நகரில் முகமதியர்களால் கொலை செய்யப்பட்டார்கள் என்கின்றார். சிரியன் கிறிஸ்தவர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, அவர்கள் புனித தோமாவை, கிறிஸ்துவைவிட மேலானவராக கருதுகின்றனர் எனக் குறிப்பிடுகின்றார். 1348 இல், குருத்து ஞாயிறு அன்று, கொல்லம் வந்த ஜான் தெ மரிஸ்போலி என்ற திருப்பீடத்தூதர், மலபார் மற்றும் தோமா கிறிஸ்தவர்களைப் பற்றிக் கூறுகின்றார். “மிளகு காடுகளில் விளைவதாக எண்ணினேன், ஆனால், வீட்டுத் தோட்டங்களில் விளைவதைக்கண்டு, ஆச்சரியமடைந்தேன். அதன் உரிமையாளர்கள் முகமதியராக இருப்பர் என்று எண்ணிய வேளையில், தோமா கிறிஸ்தவர்கள் மிளகுத் தோட்ட உரிமையாளர்கள் எனக் கண்டு மகிழ்ந்தேன். அங்குள்ள புனித ஜார்ஜ் இலத்தீன் ரீதி ஆலயத்தில் தங்கி, பணியாற்றினேன். தோமா கிறிஸ்தவர்கள் என்னை மிகுந்த மதிப்புடன் நடத்தினர்’’ என, தனது அனுபவத்தைப் பகிர்ந்துக் கொள்கின்றார்.

திருத்தந்தையின் தூதராக கி.பி.1442 இல், மலபார் வந்த அசமான் என்பவர், பாலியார்ட்ஸை மலபார் கிறிஸ்தவர்களின் முதல் கிறிஸ்தவ அரசன் எனக் கூறுகின்றார். ஆனால், தந்தை பிராங்க் டிசோசா இக்கூற்றை மறுத்து, பாலியார்ட்ஸ் கிறிஸ்தவன் அல்ல; மாறாக, கிறிஸ்தவர்களை முகமதியரிடமிருந்து காப்பாற்றியதால் கிறிஸ்தவர்கள் அவனை பெரிதும் கொண்டாடினர். மலபாரில் போர்த்துக்கீசிய ஆதிக்கம் கி.பி. 1500 இல் ஆரம்பமானது. போர்த்துக்கீசிய வருகைக்குப்பின், தோமா கிறிஸ்தவர்களின் வாய்மொழி மரபை எழுதி வைத்தனர். அதே நேரத்தில், அவர்களின் பல விசுவாச தடங்களை அழித்தனர் என, தோமா கிறிஸ்தவர்கள் குறைப்பட்டுக் கொண்டனர். தோமா கிறிஸ்தவர்கள் திருத்தூதர் தோமாவை அறிந்த அளவிற்கு, கி.பி. 16 ஆம் நூற்றாண்டு வரை கிறிஸ்துவை அறிந்திருக்கவில்லை என்பது உண்மை.

சாதிய வேற்றுமைகள்

மலபார் கிறிஸ்தவர்களிடையே துவக்கம் முதல் சமூக வேறுபாடுகள் இருந்து வந்துள்ளன. 4 ஆம் நூற்றாண்டில், சிரியாவிலிருந்து மலபாரில் குடியேறிய கானாவின் தோமா குழுவினருக்கும், ஏற்கனவே இங்கு திருத்தூதர் தோமாவால் திருமுழுக்குப் பெற்றவர்கள் எனக் கருதப்படுகின்ற உள்ளூர் கிறிஸ்தவர்களுக்கும் இடையே வேற்றுமைகள் நிலவின. எனவே, மலபார் கிறிஸ்தவர்கள் வடக்கும்பகர் மற்றும் தெக்கும்பகர் என இருப்பிரிவுகளாக வாழ்ந்தனர். இப்பிரிவுகள் எப்போது தோன்றின என்பது பற்றிய தெளிவு கிடைக்கவில்லை. இந்த இரு குழுக்களும் தங்களது இனக்குழுக்களின் தூய்மையைப் பாதுகாக்கும் விதத்தில், தங்கள் இனங்களுக்குள்ளே மட்டும் திருமணம் போன்ற உறவுகளை ஏற்படுத்திக் கொண்டனர். கலப்பின உறவால் தங்கள் இரத்தம் தீட்டுப்படாதபடி பார்த்துக் கொண்டனர். இன்றுவரை அவர்கள் தனி இனக்குழுக்களாகத்தான் வாழ்ந்து வருகின்றனர்.

கி.பி. 825 இல், மருவின் சபிர் ஈசோ என்ற பெர்சியாவின் பெரும் கடல் வணிகன் மார் சபோர் மற்றும் மார் புரோத் என்ற இரண்டு பெர்சியன் ஆயர்கள், சில கிறிஸ்தவர்களுடன் மலபாரின் கொல்லம் கடற்கரை நகரை வந்தடைந்தான். அன்றைய சேர மன்னன் அய்யன் அடிகள் திருவடிகள் அவர்களை அன்புடன் வரவேற்று, கொல்லம் பகுதியில் வணிகம் செய்வதற்கும், கிறிஸ்தவ மறையை அறிவிப்பதற்கும் அரசு ஆணை பிறப்பித்தான். இவ்வரசு ஆணைகளை தரிசாப்பள்ளி செப்பேடுகளில் காணலாம். எபிரேயம், பகல்வி மற்றும் குல்பி மொழிகளில், எழுதப்பட்ட செப்பேடுகள் யூத, பெர்சியன் மற்றும் அராபிக் கிறிஸ்தவர்கள் சேர நாட்டோடு செய்து கொண்ட உடன்படிக்கையைப் பற்றி பேசுகின்றன. இந்த கொல்லம் சிரியன் செப்பேடுகளை மலங்கரா பழமைவாத சிரியன் திரு அவையும், மலங்கரா மார்தோமா சிரியன் திரு அவையும் பாதுகாத்து வருகின்றன.

பெர்சியன் ஆயர்கள் மார் சபோர் மற்றும் மார் புரோத் இருவரும் உடன்பிறந்த சகோதரர்கள் ஆவர். இவர்கள் இருவரும் இக்காலக் கட்டத்தில் கொல்லம் பகுதியில் பல்வேறு ஆலயங்களை எழுப்பினர். எனவே, இவர்களை மக்கள் ஆலயக் கட்டுநர்கள் என அழைத்தனர். இவர்களின் பல்வேறு பணிகளுக்கு உதவிட வேளாளர்கள் (விவசாயம்), ஆசாரிகள் (தச்சர்),  கள் இறக்குபவர்கள் (ஈழவர்கள்) மற்றும் உப்பு சேகரிப்பவர்கள் (இருவையர்) போன்ற பூர்வீகக் குடிகளை அரசன் பணித்தான். ஆயர் மார் சபோர் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்ந்த கிராமம் முழுவதையும், கிறிஸ்தவ மெய்மறையில் சேர்த்தார். மேலும், சிரியன் வழிபாட்டுமுறை மற்றும் தோமா சிலுவை ஆகியவற்றை மலபார் கிறிஸ்தவர்களிடையே அறிமுகப்படுத்திய நபராக நம்பப்படுகின்றார். மேலும், அக்கம்பரம்பு பகுதியில் வாழ்ந்த புதிய கிறிஸ்தவரை வேதியராக (கத்தனராக) நியமித்தார். அவர் கடமுட்டத்து அதாவது, புகழ்பெற்ற கத்தனராக உயர்ந்தார். பின்னாட்களில் கத்தனார் என்பது, சிரியன் மலபார் அருட்பணியாளர்களைக் குறிக்கும் சொல்லாடலாக மாறியது. இவ்வாறு, போர்த்துக்கீசியர்கள் வரும் வரை 1500 ஆண்டுகள் மலபார் கிறிஸ்தவம் கல்தோக்கியன் (சிரியன்-பெர்சியன்) திரு அவையோடு மட்டும் தொடர்புடைய கிறிஸ்தவ மரபைக் கொண்டிருந்தது. இவர்கள் பல்வேறு இனக்குழுக்களாக வாழ்ந்தாலும், மலபார் நஸ்ராணி - சிரியன் கிறிஸ்தவர்கள், தோமா கிறிஸ்தவர்கள் என்ற ஒற்றை அடையாளத்தோடு ஒரே விசுவாசக் குடையின்கீழ் வாழ்ந்தனர்.

மலபாரில் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவம்

1324 இல் பிரெஞ்சு தொமினிக்கன் குரு ஜோர்டன் தெ செவராக் கத்தலானி, நான்கு பிரான்சிஸ்கன்  துறவிகளுடன் மும்பை பகுதியிலுள்ள தானாவில் நற்செய்தி பணியாற்றினார். அப்போது, மராத்தா பகுதியில் மும்பை, சொப்பாரா மற்றும் பாரூக் என மூன்று கிறிஸ்தவக் குழுமங்கள் வாழ்ந்தன. தந்தை கத்தலானி சொப்பாரா பகுதியில் 10,000க்கும் மேற்பட்டோரை கிறிஸ்தவ மறையில் சேர்த்து, கொங்கன் கடற்கரை வழியாக கொல்லம் வந்து, இங்கு வாழ்ந்த தோமா கிறிஸ்தவர்களிடையே பணியாற்றினார். இங்கிருந்து பிரான்ஸ் சென்ற ஜோர்டன் கத்தலானி, அப்போது பிரான்சின் அவிஞ்னியோவில் தங்கியிருந்த திருத்தந்தை 22 ஆம் யோவானை (1316-1334) சந்தித்து, மலபார் கிறிஸ்தவர்களைப் பற்றி தெரிவித்து, போதுமான மறைப்பணியாளர்களை அனுப்பக் கேட்டுக் கொண்டார். திருத்தந்தை 22 ஆம் யோவான், 1329 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 9 அன்று கொல்லம் மறைமாவட்டத்தை உருவாக்கி, அதன் முதல் ஆயராக ஜோர்டன் கத்தலானியை நியமித்தார். ஆனால், ஆயர் ஜோர்டன் கத்தலானி மீண்டும் இந்தியா வந்தாரா? அல்லது அவரது பொறுப்பிற்கு மற்றவர் அனுப்பப்பட்டாரா? என்ற தகவல் இன்றளவும் தெரியவில்லை. கொல்லம் இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் மறைமாவட்டம் என்ற பெருமையைப் பெற்றது.

1498 இல், வாஸ்கோடகாமாவின் இந்திய வருகைக்குப் பிறகு, ஏராளமான போர்த்துக்கீசிய கிறிஸ்தவர்கள் மலபாருக்கு வந்தனர். பிரான்சிஸ்கன் மற்றும் இயேசு சபை குருக்கள் மலபார் - கொச்சின் - திருவிதாங்கோடு என கேரளாவின் அனைத்து பகுதிகளிலும், மறைப்பணியில் ஈடுபட்டனர். இலத்தீன் வழிபாட்டு முறையை பின்பற்றும் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களான போர்த்துக்கீசியர்கள், சிரியன் வழிபாட்டு முறையை பின்பற்றும் மலபார் கிறிஸ்தவர்களைத் தப்பறைவாதிகளாக (நெஸ்டோரியர்கள்) பார்த்து, அவர்களை கிறிஸ்தவர்களாக ஏற்றுக் கொள்ளத் தயங்கினர். மேலும், போர்த்துக்கீசியர்கள் தங்களின் வழிபாட்டு முறை, திருத்தந்தை தங்களுக்கு அளித்த பதுரவாதோ விசுவாச ஆட்சி முறை ஆகியவற்றை தோமா கிறிஸ்தவர்கள் ஏற்றுக்கொள்ள 1599 இல், நடைபெற்ற உதயம் பேரூர் உடன்படிக்கை மூலம் வலியுறுத்தி, தங்கள் ஆளுகைக்குள் கொண்டு வந்தனர். ஆனால், 50 ஆண்டுகளுக்குப் பிறகு, 1653 இல் கூனன் சிலுவை உறுதிமொழி மூலம் மலபார் கிறிஸ்தவர்கள் போர்த்துக்கீசியரின் ஆளுகையை எதிர்த்தனர்.

இதனால் 1500 ஆண்டுகளாக ஒன்றுபட்ட மலபார் கிறிஸ்தவம் போர்த்துக்கீசியரின் ஆளுமை ஆதரிப்பு, எதிர்ப்பு என இரு பிரிவுகள் உருவாகினர். ஆதரித்தோர் பழையாக்கூர், எதிர்ப்பாளர்கள் புத்தன்கூர் என அழைக்கப்பெற்றனர். பழையாக்கூர் திருத்தந்தையின் ஞான அதிகாரத்தை ஏற்றனர். இவர்கள் சிரோ மலபார் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் ஆவர். கார்மேல் துறவியரின் அரும்பணியால் பல எதிர்ப்பாளர்கள் புத்தன்கூர் பிரிவிலிருந்து, பழையாக்கூர் பிரிவில் இணைந்து, திருத்தந்தையின் ஞான அதிகாரத்தை ஏற்றனர். புத்தன்கூர் பிரிவினர் 5 குழுக்களாக உள்ளனர் (மார்தோமா, ஆர்த்தோடாக்ஸ், மலங்கரா ஜேக்கோபைட் சிரியன், கல்தோக்கியன் சிரியன், மார்தோமா ஆங்கிலிக்கன் சபைகள் மற்றும் மலங்கரா சிரியன் திரு அவை) மலங்கரா சிரியன் திரு அவை மட்டும் கத்தோலிக்கத் திரு அவையோடு இணைந்து செயல்படுகிறது. இவ்வாறு, கிறிஸ்தவம் இன்று கேரளாவில் கத்தோலிக்கர், ஆர்த்தோடாக்ஸ், புரோட்டஸ்டாண்ட் என பல்வேறு பிரிவுகளாக இயங்குகிறது. கத்தோலிக்கர்கள் மட்டுமே சிரியன் மலபார், சிரியன் மலங்கரா மற்றும் ரோமன் கிறிஸ்தவர்கள் என, மூன்று பிரிவுகளாக வாழ்கின்றனர். 30க்கும் மேற்பட்ட மறைமாவட்டங்களில் 50 இலட்சத்திற்கும் மேலான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தங்கள் அழகிய நீண்ட, பாரம்பரிய வரலாற்று கிறிஸ்தவ மரபோடு வாழ்வது சிறப்பு.

(தொடரும்)

Comment