No icon

பஹ்ரைன்

திருத்தந்தையின் 39வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணம்

திருத்தந்தை ஒருவர், பஹ்ரைனுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்வது இதுவே முதன்முறை. நவம்பர் 02 ஆம் தேதி, புதன் பிற்பகலில் உரோம் மாநகர் மேரி மேஜர் பெருங்கோவிலுக்குச் சென்று, அங்கு வீற்றிருக்கும் சாலஸ் பாப்புலி ரோமானி, அதாவது உரோம் மக்களுக்கு நலமளிக்கும் அன்னை மரியா திருப்படத்தின் முன்பாக, தான் மேற்கொள்ளவிருக்கும் 39வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தை அர்ப்பணித்து திருத்தந்தை பிரான்சிஸ் செபித்தார். வெளிநாடுகளுக்குத் திருத்தூதுப் பயணங்களை மேற்கொள்வதற்கு முன்பு அப்பயணங்களை அன்னை மரியாவிடம் அர்ப்பணிப்பதையும், அப்பயணங்களை முடித்துத் திரும்பும்போது அப்பெருங்கோவிலுக்குச் சென்று அவ்வன்னையிடம் நன்றி கூறுவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கின்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பஹ்ரைன் திருத்தூதுப் பயணத்திற்காகவும் செபித்தார். இந்நோக்கத்திற்காக திருத்தந்தை அப்பெருங்கோவிலுக்குச் சென்றது 100வது தடவையாகும்.

பஹ்ரைனில் கத்தோலிக்க சமுதாயம்

1930களில் பஹ்ரைனில் பெட்ரோலிய நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து வெளிநாட்டு நிறுவனங்களும், தொழிலாளர்களும், தூதரக அலுவலகர்களும் குடியேறத் தொடங்கினர். அதிலிருந்து அந்நாட்டில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியது. முதலில் அந்நாட்டிற்கு அருகிலுள்ள மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து கத்தோலிக்கர் குடியேறத் தொடங்கினர். ஆயினும் அந்நாடு இருக்கும் பகுதியில் எண்ணெய் வளம் அதிகரித்ததற்குப்பின்பு ஆசிய நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் அந்நாட்டில் வேலைசெய்வதற்காகச் சென்றனர். அதன் பயனாக தற்போது பஹ்ரைனில் ஏறத்தாழ எண்பதாயிரம் கத்தோலிக்கர் உள்ளனர். இப்போது பஹ்ரைன் மக்கள் தொகையில் எழுபது விழுக்காட்டினர் முஸ்லீம்கள். ஏறத்தாழ 15 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள். இக்கிறிஸ்தவர்களில் அதிகமானோர் வேலை செய்யும் நோக்கத்தில் அந்நாடு சென்ற வெளிநாட்டவர் ஆவர்.

சமய சகிப்புத்தன்மை

பஹ்ரைனில் இஸ்லாம் அதிகாரப்பூர்வ மதமாகவும், ஷாரியா இஸ்லாமியச் சட்டத்தை அடிப்படையாகக்கொண்ட சட்ட அமைப்பும் இருக்கின்றபோதிலும், கிறிஸ்தவ மற்றும் ஏனைய மதத்தவருக்கு வழிபாட்டுச் சுதந்திரம் அனுமதிக்கப்பட்டுள்ளது. உண்மையில் அந்நாட்டில் ஷியா மற்றும், சன்னி இஸ்லாம் மதப் பிரிவுகளைச் சார்ந்தவர்களுக்கு இடையே தொடர்ந்து பதட்டநிலைகள் இருக்கின்றபோதிலும் அந்நாடு சமய சகிப்புத்தன்மை மற்றும் பல்சமய உரையாடலுக்குத் திறந்தமனமும் கொண்டிருக்கிறது. இதற்கு அந்நாட்டிலுள்ள இரு கத்தோலிக்க ஆலயங்கள் உட்பட முஸ்லீம் அல்லாத மதத்தவர்க்கு பல வழிபாட்டுத்தலங்கள் உள்ளதே சான்றாகும்.

பஹ்ரைனுக்குப் பயணம்

அமைதி, உடன்பிறந்த உணர்வு, நாடுகளுக்கு இடையே, மதங்களுக்கு இடையே, மக்களுக்கு இடையே உரையாடல், நல்லிணக்க வாழ்வு போன்ற உயரிய பண்புகள் இந்த அவனியில் என்றென்றும் தழைத்தோங்க நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அடிக்கடி குரல் கொடுத்து வருகிறார், அவற்றுக்காக உழைத்தும் வருகிறார் என்பது உலகறிந்த உண்மை. இதே இலக்குடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பஹ்ரைன் நாட்டுக்குச் செல்வதற்காக, நவம்பர் 03 ஆம் தேதி, வியாழன், இத்தாலி நேரம் காலை 8.50 மணிக்கு, அதாவது இந்தியா-இலங்கை நேரம் பகல் 1.20 மணிக்கு வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்திலிருந்து உரோம் பியுமிச்சினோ பன்னாட்டு விமான நிலையத்திற்கு காரில் புறப்பட்டார்.

கார்பன் டை ஆக்சைடை வெளியிடாத வகையில் அமைக்கப்பட்டுள்ள ITA இத்தாலிய விமான நிறுவனத்தின் A330 விமானத்தில் வியாழன் காலை 9.40 மணிக்கு திருத்தந்தை பிரான்சிஸ் பஹ்ரைனுக்குப் புறப்பட்டார். 4 நாள்கள் கொண்ட பஹ்ரைன் திருத்தூதுப் பயண நிகழ்வுகள் குறித்து சுடச்சுட செய்திகளை வெளியிடுவதற்காக தன்னோடு பயணம் செய்த பன்னாட்டு ஊடகவியலாளர்களையும் திருத்தந்தை வாழ்த்தினார். 4,228 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இப்பயணத்தின்போது, தான் வழியில் கடந்துசென்ற இத்தாலி, கிரீஸ், சைப்ரஸ், எகிப்து, ஜோர்டன், சவுதி அரேபியா ஆகிய நாடுகளின் அரசுத்தலைவர்களுக்கு தனது நல்வாழ்த்தையும் ஆசீரையும் தெரிவிக்கும் தந்திச் செய்திகளையும், அந்தந்த நாடுகளைக் கடந்துசெல்கையில் அனுப்பினார். 5 மணி 5 நிமிடங்கள் விமானப் பயணம் மேற்கொண்டு, நவம்பர் 3 ஆம் தேதி வியாழன், பஹ்ரைன் நேரம் மாலை 4.45 மணிக்கு அவாலியின் சாஹிர் விமானத்தளம் சென்றடைந்தார்.

பஹ்ரைனில் முதல் நாள் திருத்தூதுப் பயண நிகழ்வுகள்

அவாலிக்கு தென்மேற்கே 5.5 கிலோ மீட்டர் தூரத்தில் 2010 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட சாஹிர் விமானத்தளம், முக்கிய அதிகாரிகள், வெளிநாட்டு உயர் அரசு அதிகாரிகள், நாடுகளின் தலைவர்கள் ஆகியோரின் வருகைக்காகப் பயன்படுத்தப்படுகிறது. பஹ்ரைன் அரசரும் அத்தளத்தைப் பயன்படுத்துகிறார். திருத்தந்தை சென்றிறங்கிய அவாலி, பஹ்ரைனின் ஏறத்தாழ மத்தியில், பாரசீக வளைகுடாவில் அமைந்துள்ள சிறிய தீவாகும். அந்நாட்டில் பெட்ரோலியம் இருப்பது இங்குதான் முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. அரேபியாவின் நமதன்னை பேராலயமும், வட அரேபியாவின் திருத்தூது நிர்வாக மையமும் அமைந்துள்ள அவாலியில் ஏறத்தாழ 1800 பேர் வாழ்கின்றனர். இத்தகைய பல்வேறு சிறப்புகளைக் கொண்ட அவாலியின் விமானத்தளத்தைச் சென்றடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, பஹ்ரைன் வாரிசு இளவரசர், பிரதமர், பஹ்ரைன் அரசரின் மூன்று மகன்கள், ஒரு பேரப்பிள்ளை ஆகியோர் வரவேற்றபோது, மரபு ஆடைகளை அணிந்திருந்த சிறார் திருத்தந்தை மீது மலர்களைத் தெளித்தனர். சிவப்புக் கம்பள விரிப்பு வழியாக நடந்துசென்று இராணுவ அணிவகுப்பு மரியாதையையும் பெற்றபின்னர், அவ்விமானத்தளத்தின் முக்கிய விருந்தினர் அறையில் சிறிதுநேரம் திருத்தந்தையும் அரசக்குடும்பத்தினரும் உரையாடினர். அதற்குப்பின்பு எகிப்தின் கெய்ரோவிலுள்ள சன்னி இஸ்லாம் பிரிவின் புகழ்பெற்ற அல்-அசார் பல்கலைக்கழகத்தின் இஸ்லாம் பெரிய குரு அகமது அல்-தாயேப் அவர்களைத் தனியே சந்தித்து உரையாடினார். மனித உடன்பிறந்த உணர்வுநிலைக்கு அழைப்புவிடுக்கும் ஏட்டில் அபு தாபியில் 2019 ஆம் ஆண்டில் இவ்விருவரும் கையெழுத்திட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர், அங்கிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள சாஹிர் அரண்மனைக்கு திருத்தந்தை பிரான்சிஸ் காரில் சென்றார். பஹ்ரைனின் மேற்கே, சாஹிர் பாலைவனப் பகுதியில் அமைந்துள்ள இந்த அரண்மனையில் அந்நாட்டு அரசர் ஹமது பின் இசா அல் கலிப்ஃபா அவர்களும், வாரிசு இளவரசரும், பிரதமரும் மற்ற முக்கிய அரசு பிரமுகர்களும் திருத்தந்தையை வரவேற்றனர். அந்த அரண்மனையில் பஹ்ரைன் அரசரையும் திருத்தந்தை பிரான்சிஸ் தனியே சந்தித்துப் பேசினார். அந்த அரண்மனை வளாகத்தில் 21 துப்பாக்கிகள் முழங்க, அரசு மரியாதையுடன் திருத்தந்தைக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதற்குப்பின்னர், அந்த சாஹிர் அரண்மனையில் அரசு அதிகாரிகள், தூதரக அதிகாரிகள், பொதுநிலை அமைப்புகளின் பிரதிநிதிகள் போன்றோரைச் சந்தித்தார். அவர்களுக்கு ஆற்றிய உரையோடு பஹ்ரைன் நாட்டின் முதல் நாள் நிகழ்வுகள் முடிவடைந்தன.

2வது நாள் திருத்தூதுப் பயண நிகழ்வுகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இந்த 39 வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தின் இரண்டாவது நாளான நவம்பர் 4 ஆம் தேதி வெள்ளி உள்ளூர் நேரம் காலை 7.30 மணிக்கு, அவாலியின் திருத்தூது நிர்வாகத் தலைமையிடத்தில் அவர் தனியாக திருப்பலி நிறைவேற்றினார். அதற்குப்பின்பு, சாஹிர் அரச மாளிகையின் அல்-பிதா வளாகத்திற்குச் சென்ற திருத்தந்தையை, பஹ்ரைன் அரசர், எகிப்தின் அல்-அசார் முஸ்லீம் பெரிய குரு ஆகியோர் வரவேற்றனர். பின்னர் அம்மூவரும், அங்குள்ள தோட்டத்தில் அமைதியின் மரம் ஒன்றை நட்டனர். அதற்குப்பின்னர், கிழக்கு மற்றும் மேற்குக்கும் இடையே மனித நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்காக, பஹ்ரைன் அரசரின் முயற்சியால், உரையாடலுக்கான பஹ்ரைன் மன்றம் நடத்திய இரண்டு நாள் மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள திருத்தந்தை பிரான்சிஸ் சென்றார். இறைவேண்டலோடு தொடங்கிய இம்மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில், முதலில் பஹ்ரைன் அரசர் அல் கலிஃபா அவர்களும், அவருக்குப்பின், அல்-அசாரின் பெரிய குரு அகமது அல் தாயிப் அவர்களும் உரையாற்றினர். அவரைத் தொடர்ந்து திருத்தந்தையும் உரையாற்றினார். சாஹிர் அரச மாளிகையின் அல்-பிதா வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த, தங்கப் புத்தகம் எனப்படும் விருந்தினர் நோட்டிலும் கையெழுத்திட்டார். அல்-பிதா வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்குப்பின்னர், திருத்தூது நிர்வாகத் தலைமையகம் சென்று மதிய உணவருந்தி சிறிதுநேரம் திருத்தந்தை பிரான்சிஸ் ஓய்வெடுத்தார். நவம்பர் 04 ஆம் தேதி, வெள்ளி உள்ளூர் நேரம் மாலை 4 மணிக்கு, அதாவது இந்திய இலங்கை நேரம், வெள்ளி மாலை 6.30 மணிக்கு, அதே மையத்தில், எகிப்தின் அல் அசார் மசூதியின் பெரிய குருவை தனியே சந்தித்து திருத்தந்தை பிரான்சிஸ் உரையாடினார்.

அரேபியா நமதன்னை பேராலயத்தில் கிறிஸ்தவ ஒன்றிப்பு வழிபாடு

நவம்பர் 4 ஆம் தேதி, வெள்ளி, உள்ளூர் நேரம் மாலை 5.45 மணிக்கு, திருத்தந்தை, பஹ்ரைனின் அவாலியிலுள்ள அரேபியாவின் நமதன்னை பேராலயத்திற்குச் சென்றார். 2021 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட அப்பேராலயத்தில் அமைதிக்காக கிறிஸ்தவ ஒன்றிப்பு வழிபாடு ஒன்றை திருத்தந்தை தலைமையேற்று நிறைவேற்றினார். மேலும், திருத்தந்தை, அரேபியாவின் அன்னை மரியாவிடம் செபித்துக்கொண்டிருந்தபோது, மூன்று சிறார் அன்னை மரியாவுக்கு மலர்களை அர்ப்பணித்தனர். இவ்வழிபாட்டில் கான்ஸ்தாந்திநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும்தந்தை முதலாம் பர்த்தலோமேயோ அவர்கள் உட்பட பல்வேறு கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகளோடு உலகின் அமைதிக்காக திருத்தந்தை இறைவேண்டல் செய்தார். இவ்வழிபாட்டில் பன்மைத்தன்மையில் ஒற்றுமை, சான்று வாழ்வு ஆகிய இரண்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, திருத்தந்தை மறையுரை ஒன்றும் ஆற்றினார். பின்னர் அசிசி நகர் புனித பிரான்சிஸ் அமைதிக்காகச் செபித்த செபம் பாடலாகப் பாடப்பட்டு செப வழிபாடு நிறைவுபெற்றது. இவ்வாறு திருத்தந்தையின் 2வது நாள் நிகழ்வுகள் நிறைவடைந்தன.

3வது நாள் திருத்தூதுப் பயண நிகழ்வுகள்

நவம்பர் 05 ஆம் தேதி, சனிக்கிழமை, பஹ்ரைன் நாட்டில் தனது மூன்றாவது நாள் திருத்தூதுப் பயண நிகழ்வுகளைத் தொடங்கினார்.  சனிக்கிழமை உள்ளூர் நேரம் காலை 7.40 மணிக்கு, அதாவது, இந்திய-இலங்கை நேரம் காலை 10.10 மணிக்கு, பஹ்ரைனின் திருத்தூது நிர்வாகத் தலைமையகத்திலிருந்து ஏழு கிலோ மீட்டர் தூரத்திலுள்ள அந்நாட்டின் தேசிய அரங்கத்திற்கு திருத்தந்தை பிரான்சிஸ் காரில் புறப்பட்டார்.

பஹ்ரைனின் ரிஃபா நகரிலுள்ள தேசிய அரங்கம், பொதுவாக கால்பந்து விளையாட்டுக்கெனப் பயன்படுத்தப்படுகிறது. 24 ஆயிரம் பேர் அமரக்கூடிய இவ்வரங்கம் 1982 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. நவம்பர் 5 ஆம் தேதி, சனிக்கிழமை உள்ளூர் நேரம் காலை 8.30 மணிக்கு, பஹ்ரைன் தேசிய அரங்கில் திருத்தந்தை பிரான்சிஸ் திருப்பலியைத் தொடங்கினார். வட அரேபியாவின் திருத்தூது நிர்வாகத்தைச் சேர்ந்த பஹ்ரைன், குவைத், கத்தார், சவுதி அரேபியா ஆகிய நாடுகளிலிருந்தும், ஏனைய வளைகுடாப் பகுதி மற்றும் பிற பகுதிகளிலிருந்தும் ஏறத்தாழ முப்பதாயிரம் பேர் இத்திருப்பலியில் பங்குகொண்டனர். ஆங்கில மொழியில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. திருத்தந்தை பிரான்சிஸ், இஸ்பானியத்தில் மறையுரையாற்றினார். மறையுரைக்குப்பின்னர், தமிழ், மலையாளம், கொங்கணி, தகாலோ, ஆங்கிலம், சுவாகிலி ஆகிய மொழிகளில் நம்பிக்கையாளர் மன்றாட்டு இடம்பெற்றது. திருப்பலியின் இறுதியில் வட அரேபியாவின் திருத்தூது தலைமை நிர்வாகி ஆயர் பவுல் ஹின்டர் அவர்கள் திருத்தந்தைக்கு நன்றி தெரிவித்தார்.

அவாலி திருஇருதயப் பள்ளியில் இளையோர் சந்திப்பு

நவம்பர் 05 ஆம் தேதி, சனிக்கிழமை உள்ளூர் நேரம் மாலை 4.45 மணிக்கு, அதாவது, இந்திய-இலங்கை நேரம் இரவு 7.15 மணிக்கு, பஹ்ரைனின் திருஇருதயப் பள்ளியில் இளையோரைச் சந்திக்கச் திருத்தந்தை பிரான்சிஸ் சென்றார். 1953 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இப்பள்ளி, பிரித்தானிய கல்விமுறையில் இருபாலாருக்குமென நடத்தப்படுகிறது. அவ்வாண்டு முதல் 2003 ஆம் ஆண்டு வரை கொம்போனி மறைப்பணி அருள்சகோதரிகள் இப்பள்ளியை நடத்தி வந்தனர். அதற்குப்பின்னர் அப்போஸ்தலிக்க கார்மேல் சபை அருள்சகோதரிகள் அப்பள்ளியை நடத்தி வருகின்றனர். ஏறத்தாழ 800 மாணவர்கள் கல்வி பயிலும் இப்பள்ளியில் ஆங்கிலம் தவிர, அராபியம், பிரெஞ்சு, இந்தி, தகாலோ போன்ற மொழிகளும் கற்பிக்கப்படுகின்றன. இத்திருஇருதயப் பள்ளிக்குச் சென்ற திருத்தந்தையை, இளையோர், ஆடல் பாடல்களோடு வரவேற்றனர். இச்சந்திப்பில் முதலில் அப்பள்ளியின் இயக்குனர் அருள்சகோதரி ரோஸ்லின் தாமஸ் அவர்கள் திருத்தந்தையை வரவேற்றுப் பேசியவுடன், சையத் என்ற முஸ்லீம் மாணவர் தனது சாட்சியத்தைப் பகிர்ந்துகொண்டார். பின்னர் மெரினா ஜோசப் மோத்தா என்ற கத்தோலிக்க மாணவியும், திருஇருதயப் பங்குத்தளத்தைச் சேர்ந்த நெவின் வர்க்கீஸ் பெர்னான்டெசும் தங்களின் எண்ணங்களை திருத்தந்தையிடம் எடுத்துரைத்தனர். இளையோரின் இப்பகிர்வுகளைக் கேட்டபின்னர் திருத்தந்தை தன் உரையையும், ஆசீரையும் வழங்கினார். இவ்வாறு திருத்தந்தையின் 3வது நாள் நிகழ்வுகள் நிறைவடைந்தன.

4வது நாள் திருத்தூதுப் பயண நிகழ்வுகள்

நவம்பர் 06 ஆம் தேதி, ஞாயிறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 39 வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயண நிறைவு நாள். பஹ்ரைனின் அவாலியில் திருத்தந்தை தங்கியிருந்த திருத்தூது நிர்வாகத் தலைமையகத்தில்  ஞாயிறு உள்ளூர் நேரம் காலை 6.30 மணிக்கு தனியாக திருப்பலி நிறைவேற்றினார். பின்னர், அத்தலைமையகத்தில் பணியாற்றும் அனைவருக்கும் நன்றிசொல்லி, பெரிய விருந்துகளின்போது தண்ணீர் வைக்கப் பயன்படுத்தப்படும், அழகிய கலைவேலைப்பாடுகளாலான வெள்ளிப் பாத்திரம் ஒன்றை அவ்வில்லத்திற்கு திருத்தந்தை அன்பளிப்பாக அளித்தார். அதற்குப் பின்னர் அங்கிருந்து 27 கிலோ மீட்டர் தூரத்தில் மனாமா நகரில் அமைந்திருக்கின்ற இயேசுவின் திருஇருதய ஆலயத்திற்குச் சென்றார்.  ஞாயிறு இந்திய - இலங்கை நேரம், பகல் 12 மணியளவில் பஹ்ரைனின் மனாமாவிலுள்ள இயேசுவின் திருஇருதய ஆலயத்திற்குச் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கு ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவியர், அருள்பணித்துவ பயிற்சி மாணவர்கள், மேய்ப்புப்பணிக்கு உதவுவோர் ஆகிய எல்லாருக்கும் திருவழிபாடு ஒன்றை தலைமையேற்று நிறைவேற்றினார். பாடலோடு தொடங்கிய இவ்வழிபாட்டில், முதலில் வட அரேபியாவின் திருத்தூது தலைமை நிர்வாகி ஆயர் பவுல் ஹின்டர் அவர்கள் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார். ஆயர் உரையாற்றியதற்குப்பின்னர், மேய்ப்புப் பணியாளர்கள் கிறிஸ் நோரோன்ஹா அப்போஸ்தலிக்க கார்மேல் சபையின் அருள்சகோதரி ரோஸ் செலின் ஆகிய இருவரும் தங்களின் அனுபவங்களைத் திருத்தந்தையிடம் எடுத்துரைத்தனர்.

பிறகு தனது உரைக்குப்பின், மூவேளை செபத்தை எல்லாருடனும் சேர்ந்து செபித்து தன் ஆசீரையும் திருத்தந்தை பிரான்சிஸ் அளித்தார். பின்னர் அவ்வாலயத்தின் அருள்பணியாளர் இல்லத்தில் சிறிதுநேரம் ஓய்வெடுத்தார். அங்கு, இத்திருத்தூதுப் பயண தயாரிப்புக் குழுவின் தலைவரான பஹ்ரைனின் வெளியுறவு அமைச்சரைச் சந்தித்துப் பேசினார். பின்னர் பாரசீக வளைகுடாப் பகுதியின் மற்ற பகுதிகளிலிருந்து வந்திருந்த ஒரு சிறிய கத்தோலிக்க குழுவையும் திருத்தந்தை சந்தித்துப் பேசினார்.

பஹ்ரைனில் திருத்தூதுப் பயண நிறைவு

திருத்தந்தை பிரான்சிஸ், மனாமாவின் தொன்மைமிக்க இயேசுவின் திருஇருதய ஆலயத்தில் வழிபாட்டை நிறைவுசெய்து, அங்கிருந்து 27 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள அவாலியின் சாஹிர் விமானத்தளம் சென்றார். அங்கு அரச குடும்பத்தினரின் அறையில் பஹ்ரைன் அரசர் ஹமத் பின் இசா அல் கலீஃபா, அரசுரிமை இளவரசரான பிரதமர் சல்மான் பின் ஹமத் அல் கலீஃபா, அரசரின் மூன்று மகன்கள், பேரப்பிள்ளை, அல் அசார் மசூதியின் பெரிய குரு அல் தாயிப் போன்ற பலர் திருத்தந்தைக்குப் பிரியாவிடை அளித்தனர். அரசு மரியாதையுடன் திருத்தந்தையை அனைவரும் உரோம் நகருக்கு வழியனுப்பி வைத்தனர். கல்ப் விமானம் போயிங் 787 இல் உள்ளூர் நேரம் பகல் 1.16 மணிக்கு உரோம் நகருக்கு திருத்தந்தை புறப்பட்டார்.  ஞாயிறு உரோம் நேரம் மாலை 4.36 மணிககு உரோம் பியுமிச்சினோ பன்னாட்டு விமானத்தளம் வந்து சேர்ந்தார். விமானத்தளத்திலிருந்து வத்திக்கானுக்குத் திரும்பும் போது, உரோம் மேரி மேஜர் பெருங்கோவில் சென்று அன்னை மரியாவுக்கு நன்றி தெரிவித்தார்.  ஞாயிறு மாலை திருத்தந்தை அப்பெருங்கோவிலுக்குச் சென்றது 101 வது தடவையாகும்.

எல்லாரையும் ஏற்கும் பஹ்ரைனின் திறந்த மனநிலைக்கு பாராட்டு

பஹ்ரைன் முடியாட்சி நாட்டில், இனம், மதம், மொழி என்ற வேறுபாடின்றி அனைவரும் மதிக்கப்படுவதற்குத் தேவையான திறந்தமனது இருப்பதையும், இந்நாட்டில் பிலிப்பீன்ஸ், இந்தியாவின் கேரளா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பலர் வாழ்வதையும் பணியாற்றுவதையும் கண்டு வியந்தேன் என திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செய்தியாளர்களிடம் கூறினார்.

Comment