இரண்டாம் பகுதி : தென் சூடான்
காங்கோ மற்றும் தெற்கு சூடானுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 40வது திருத்தூதுப் பயணம்
- Author குடந்தை ஞானி --
- Wednesday, 22 Feb, 2023
திருத்தந்தையின் நீண்டகால காத்திருப்பு நிஜமாகிய தருணமாக தென் சூடான் பயணம் அமைந்தது. பிப்ரவரி 3, வெள்ளிக்கிழமை காங்கோவின் கின்ஷாசாவிலிருந்து புறப்பட்டு தென்சூடானின் ஜூபாவை நோக்கிப் பயணமானத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தென் சூடானின் ஜூபா பன்னாட்டு விமான நிலையத்தை உள்ளூர் நேரம் நண்பகல் 3.00 மணிக்கு வந்தடைந்தார்.
2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஏற்பாடு செய்யப்பட்ட தென் சூடான் திருத்தூதுப் பயணம் திருத்தந்தையின் முழங்கால் வலியின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. திருத்தந்தையின் வேண்டுகோளுக்கிணங்க திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரொ பரோலின் தென் சூடான் பகுதிகளைக் கடந்த ஆண்டுப் பார்வையிட்டார். தென் சூடான் பற்றிய தனது அனுபவங்களைத் திருத்தந்தையிடம் பகிர்ந்தார்.
நான்காம் நாள்-பிப்ரவரி 3 ஆம் தேதி
தென் சூடானுக்கு திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளவேண்டும் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் எண்ணம், ஆசை, 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நிறைவேறியது. தனது தலைமைத்துவப் பணிக்காலத்தில் 5 முறை ஆப்ரிக்க நாட்டின் பகுதிகளுக்கு திருப்பயணம் மேற்கொண்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தென் சூடானுக்கு வருவது இதுவே முதல் முறை. அதுமட்டுமல்ல தென் சூடானுக்கு வருகை தந்த முதல் திருத்தந்தையும் இவரே ஆவார்.
வறுமை, உள்நாட்டு நல்லிணக்கத்தின் சமநிலையைக் கண்டறிதல், நாடு, நகரம் ஆகியவற்றின் திறந்த காயங்களுக்கு மருந்தாகவும் புதிய தொடக்கத்திற்கு காரணமாகவும் திருத்தந்தையின் இத்திருத்தூதுப் பயணம் இருந்தது என்றால் அது மிகையன்று. திருத்தந்தை மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தை விவரமாக தெரிந்துகொள்வோம்.
தென் சூடானின் ஜூபாவை வந்தடைந்த திருத்தந்தையை ஸ்காட்லாந்து கிறிஸ்தவ சபைகளின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கிரீன்ஷீல்டுஸ் மற்றும் கான்டபர்ரி ஆங்கிலிக்கன் பேராயர் ஜஸ்டின் வெல்பி மற்றும் தென் சூடான் அரசுத்தலைவர் ஆகியோர் விமான நிலையத்தில் வரவேற்றனர். அரசு மரியாதையுடன் வரவேற்கப்பட்ட திருத்தந்தை தென்சூடான் அரசுத்தலைவர் உடன் அரசுத்தலைவர் மாளிகையை வந்தடைந்தார். அதன்பின் அரசுத்தலைவர், அரசு அதிகாரிகள் சமூகத்தலைவர்கள் ஆகியோர் திருத்தந்தைக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்ட பின்னர் ஜூபா உள்ளூர் நேரம் 5 மணிக்கு அரசுத்தலைவர் மாளிகை தோட்டவளாகத்தில் சந்தித்து உரையாற்றினார்.
விமான நிலையத்தில் தென் சூடான் சிறார் இருவர் பாரம்பரிய உடையுடன் திருத்தந்தைக்கு மலர்களைக் கொடுத்து வரவேற்றனர். அதன் பின் அமைதியின் சின்னமாம் புறா திருத்தந்தையின் கைகளில் கொடுக்கப்பட்டு வானில் பறக்கவிடப்பட்டது.
அதன்பின் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 5 கி.மீட்டர் தொலைவில் உள்ள அரசுத்தலைவர் மாளிகைக்குக் காரில் பயணமானார். உள்ளூர் நேரம் பிற்பகல் 3.30 மணிக்கு அரசுத்தலைவர் மாளிகையை வந்தடைந்த திருத்தந்தை அரசுத்தலைவரால் வரவேற்கப்பட்டார். அதன் பின் திருத்தந்தைக்கு அரசு அதிகாரிகள், தலத்திரு அவை தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து அரசுத்தலைவரின் குடும்ப உறுப்பினர்களும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
அரசுத் துணைத் தலைவர், திருப்பீடச் செயலர், கிறிஸ்தவ ஒற்றுமையை மேம்படுத்தும் பணித்துறையின் தலைவர், மாநிலங்களுடனான உறவுகளுக்கான செயலர், தென் சூடான் திருப்பீடத் தூதரகத்தினர், கான்டபர்ரி பேராயர் மற்றும் ஸ்காட்லாந்து கிறிஸ்தவ சபையின் பொதுச்செயலாளர் ஆகியோரைச் சந்தித்து திருத்தந்தை பிரான்சிஸ் உரையாடினார்.
அரசுத்தலைவர் சால்வா கிர்ர் மேயார்டிட் அவர்கள் திருத்தந்தையை வாழ்த்தித் தொடங்கிய உரையுடன் ஆரம்பமான இக்கூட்டத்தில், கான்டபர்ரி பேராயர், நாட்டில் ஏற்பட்ட போரின் பேரழிவையும் அதனால் ஏற்பட்ட துன்பங்களையும் துயரங்களையும் தான் நேரில் பார்த்ததை நினைவு கூர்ந்து எடுத்துரைத்தார். தூய ஆவி செயல்படும் இடமாக தென் சூடான் திகழ வேண்டும் என்று தான் விரும்பி செபித்ததை எடுத்துரைத்த அவர், அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான பதில் நம் கைகளிலேயே உள்ளது என்பதையும் வலியுறுத்தினார். மேலும் வீரம், துணிவு, தைரியம் கொண்டவர்கள் தென் சூடான் மக்கள் எனவும், தங்கள் சுதந்திரத்திற்காக நீண்டகாலமாக போராடி அதை வென்றெடுத்த அவர்கள், உறுதியாக அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்காகவும் போராடும் துணிவு கொண்டவர்கள் என்றும் எடுத்துரைத்தார்.
அவரைத்தொடர்ந்து பேசிய ஸ்காட்லாந்து கிறிஸ்தவ சபைகளின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கிரீன்ஷீல்டுஸ், தாராள உள்ளம் கொண்ட, கடவுளின் அருளுடன் இயங்கும் தலத்திரு அவைகளும் பாதிக்கப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்ட மக்களிடையே நம்பிக்கையை வெளிப்படுத்தும் தலைவர்களும் நமக்குத் தேவை என்று எடுத்துரைத்தார். தனது நீண்ட கால ஆசையான தென் சூடான் நாட்டிற்கு வருகை தந்து அரசுத்தலைவர்களைச் சந்தித்து உரையாற்றினார்.
அமைதி நிறைந்த உங்களின் பயணத்தில் இணையும் பொருட்டு ஒப்புரவின் திருப்பயணியாக உங்களிடம் நான் வந்துள்ளேன். இந்த இளம் தேசத்தைக் கடந்து செல்லும் மிகவும் பழமையான வரலாற்றைக் கொண்ட மிகப்பெரும் நைல்நதியை உருவமாக கொண்டு எனது சிந்தனைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன் என்று எடுத்துரைத்து, நைல் நதியை உருவகமாகக் கொண்டு, அதன் பயணத்தைப் பற்றி எடுத்துரைத்து, இயேசுவின் கெத்சமனி அனுபவத்தின் அடிப்படையில், இனி இரத்தம் சிந்துதல் வேண்டாம், மோதல்கள் வேண்டாம், அமைதியற்ற சூழல் வேண்டாம், அழிவு வேண்டாம். புதியவற்றை கட்டி எழுப்பவேண்டிய நேரம் இது! இனி போரின் காலம் அழிந்தொழியட்டும் அமைதியான புதிய காலம் பிறக்கட்டும் என்றார்.
அரசுத்தலைவர்களைச் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உள்ளூர் நேரம் மாலை 5.45 மணிக்கு இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள தென் சூடான் திருப்பீடத் தூதரகம் வந்து சேர்ந்தார். திருப்பீடத் தூதரகத்தாரால் சிறப்பாக தனிப்பட்ட முறையில் வரவேற்கப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது இரவு உணவை உண்டு உறங்குவதற்குச் சென்றார்.
ஐந்தாம் நாள் - பிப்ரவரி 4 ஆம் தேதி
பிப்ரவரி 4, சனிக்கிழமை தென் சூடானில் தனது இரண்டாம் நாளைத் திருப்பீடத் தூதரகத்தில் தனியாக திருப்பலி நிறைவேற்றித் துவக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். அதன் பின் திருப்பீடத் தூதரகத்தில் இருந்து 2 கி.மீட்டர் தூரம் பயணித்து உள்ளூர் நேரம் காலை 9.00 மணிக்கு ஜூபாவில் உள்ள புனித தெரேசா பேராலயத்தில் ஆயர்கள், அருள்பணியாளர்கள், திருத்தொண்டர்கள், துறவியர் மற்றும் குருமாணவர்களைத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சந்தித்தார். அவர்களுக்கு சிறப்பான கருத்துரை வழங்கினார்.
இப்பேராலயத்தில் கூடியிருந்த அர்ப்பணிக்கப்பட்ட அனைத்து நிலையினருக்குமான கூட்டம், வழிபாட்டுப் பாடல்களுடன் ஆரம்பமானது. ஓர் அருள்பணியாளர், ஓர் அருள்சகோதரி ஆகிய இருவரும் தங்களது அனுபவத்தை திருத்தந்தையின் முன்னிலையில் பகிர்ந்தனர். அதனைத் தொடர்ந்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆப்ரிக்காவிற்காக துன்பப்பட்டு இறக்கத் தயாராக இருக்கும் தைரியமான, மற்றும் தாராள மனப்பான்மை நமக்குத் தேவை என்று வலியுறுத்திப் பேசி இறுதியாக தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் அவர்களுக்கு வழங்கினார்.
திருத்தந்தையின் தென் சூடானின் இரண்டாவது நாளின் முதல் நிகழ்வு முடிந்தவுடன் அங்கிருந்து திருப்பீடத் தூதரகத்திற்குத் திரும்பினார். அதன்பின் திருப்பீடத் தூதரகத்தில் இயேசு சபை அருள்பணியாளர்களைச் சந்தித்து உரையாற்றிய அவர், மதிய உணவை உண்டு சற்று இளைப்பாறினார்.
பிப்ரவரி 4 ஆம் தேதி, சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு குடிபெயர்ந்தோர் மற்றும் புலம்பெயர்ந்தோரை ஜூபா சுதந்திர மாளிகையில் சந்தித்தார். அங்குள்ள சுதந்திர அரங்கில், மனித வன்முறை மற்றும் பெருவெள்ளத்தினால் ஏற்பட்ட அழிவுகளால், உங்களைப் போன்ற இலட்சக் கணக்கான சகோதரர் சகோதரிகள், குழந்தைகளுடன் கூடிய பல அன்னையர்கள் உட்பட பலர் தங்கள் கிராமங்களையும், வீடுகளையும், நிலங்களையும் விட்டு வெளியேற வேண்டியிருந்தது என்பதை நான் நன்கு அறிவேன் என்று எடுத்துரைத்து, வன்முறையின் அனைத்து வடிவங்களை கைவிட்டு, ஒப்புரவின் பாதையில் அடியெடுத்து வைக்கும்படி வேண்டினார். பெண்கள் பாதுகாக்கப்படுவதையும், மதிக்கப்படுவதையும், மாண்புடன் நடத்தப்படுவதையும், கௌரவப்படுத்தப்படுவதையும் உறுதிப்படுத்துமாறு, இந்த நாட்டிலுள்ள மக்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன் என்று மிகவும் உருக்கமாக வேண்டி, “நீங்கள் புதியதொரு அத்தியாயத்தை எழுதுங்கள். இது உரையாடலின் ஒரு புதிய அத்தியாயமாக இருக்கட்டும், இது கடந்தகால துன்பங்களை மறக்காது, ஆனால் சகோதரத்துவத்தின் மகிழ்ச்சிக்கான ஒளியைப் பரப்பக் கூடியதாக இருக்கட்டும். வெவ்வேறு இனக்குழுக்களைச் சார்ந்த உங்கள் இளையோர் இந்த அத்தியாயத்தின் முதல் பக்கத்தை எழுதட்டும்” என்று நம்பிக்கை விதைகளை விதைத்தார்.
பிப்ரவரி 4 ஆம் தேதி, உள்ளூர் நேரம் மாலை 6.00 மணிக்கு ஜான் கராங்க் கல்லறைத் தோட்டப்பகுதியில் நடைபெற்ற கிறிஸ்தவ ஒன்றிப்பு வழிபாட்டில் திருத்தந்தை பங்கேற்றார். வழிபாட்டுப் பாடல்கள், வாசகங்கள் மற்றும் நற்செய்தி வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து கான்டர்பர்ரி ஆங்கிலிக்கன் பேராயர் ஜஸ்டின் வெப்லி, ஸ்காட்லாந்து கிறிஸ்தவ சபைகளின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கிரீன்ஷீல்டுஸ் ஆகியோர் வரவேற்பையும் அறிமுக உரையையும் ஆற்றினர். அதன்பின் அனைவரும் ஒன்றிணைந்து நம்பிக்கையாளர் அறிக்கை செபத்தை செபித்தனர். அதனைத்தொடர்ந்து நாட்டிற்கான இறைஇரக்க மன்றாட்டுகள் எடுத்துரைக்கப்பட்டன. ஒவ்வொரு மன்றாட்டின் போதும் அருகில் உள்ள நடப்பட்டுள்ள மரத்திற்கு நீரூற்றி ஒன்றிப்பின் அடையாளமாக அதனை அர்ப்பணித்தனர். அதனைத்தொடர்ந்து திருத்தந்தை கிறிஸ்தவ ஒன்றிப்பிற்கான தனது உரையை ‘செபிக்க - பணியாற்ற - பயணம் செய்ய’ என்ற தலைப்பில் சிறப்பான உரையை வழங்கினார். திருத்தந்தையின் உரையைத் தொடர்ந்து இறுதி செபமும் மூன்று சமூகத்தலைவர்களின் ஆசீருடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது.
மிகவும் பாதிக்கப்பட்ட மற்றும் இன்னும் துன்பத்தில் உள்ள இம்மக்கள் தொகையை விட்டுவிடாதீர்கள் .இந்நாட்டிற்கு உதவுவோம், வெறுப்பையும் பழிவாங்கலையும் வெல்லும் நம்பிக்கை உடையவர்களான இடம்பெயர்ந்த மக்களை விட்டுவிடவேண்டாம் என்றும் எடுத்துரைத்த திருத்தந்தை, நான் உங்களுடன் இருக்கிறேன், உங்களுக்காக நான் வருந்துகிறேன் என்று கூறி அவர்களுக்கு தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார்.
இறுதியாக, கான்டபர்ரி ஆங்கிலிக்கன் பேராயர் ஜஸ்டின் வெப்லி அவர்கள் செபமும் அதனைத் தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ், பேராயர் ஜஸ்டின் வெப்லி, ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கிரீன்ஷீல்டுஸ் ஆகிய மூன்று சமூகத் தலைவர்களின் இறுதி ஆசீரும் பாரம்பரிய நடனத்துடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது.
ஆறாம் நாள் பிப்ரவரி 5 ஆம் தேதி
பிப்ரவரி 5 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரம் காலை 7.30 மணிக்கு ஜூபாவில் உள்ள திருப்பீடத் தூதரகத்தார்க்கு தனது நன்றியினைத் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கிருந்து 2.4 கி.மீட்டர் தூரம் காரில் பயணித்து ஜான் கராங்க் பகுதியில் திருப்பலி நிறைவேற்றினார். உள்ளூர் நேரம் 8.15 மணிக்கு ஜான் கராங்க் கல்லறைத்தோட்டப் பகுதியை வந்தடைந்த திருத்தந்தை கூடியிருந்த ஏறக்குறைய 70000 மக்களைக் காண திறந்த காரில் பயணம் செய்து அவர்களிடையே வலம் வந்தார். அதன்பின் உள்ளூர் நேரம் 8.45 மணிக்கு திருப்பலி நிறைவேற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆங்கில மொழியில் நடைபெற்ற இத்திருப்பலியில் அரபு, மற்றும் ஆங்கிலத்தில் வாசகங்கள் வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இத்தாலியத்தில் வழங்கிய மறையுரையானது மக்களுக்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. பிப்ரவரி 5, ஞாயிறன்று தென் சூடானின் தலைநகர் ஜூபாவிலுள்ள ஜான் கராங்க் கல்லறைத் தோட்டத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பலியை நிறைவேற்றினார். அப்போது, ‘உலகிற்கு உப்பாகவும் ஒளியாகவும் இருங்கள்ங என்ற தலைப்பில் மறையுரையாற்றி, வன்முறையால் அழிக்கப்பட்டுள்ள அழகான இந்நாட்டில், நீங்கள் ஒவ்வொருவரும் ஒளிர்ந்து சுடர்விடும் விளக்காக வாழ்வதற்கு அழைக்கப்படுகிறீர்கள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் எடுத்துரைத்தார்.
திருத்தந்தையின் மறையுரையைத் தொடர்ந்து அராபோ, டின்கா, பாரி, நொயர், ஸாண்டே ஆகிய உள்ளூர் மொழிகளில் நம்பிக்கையாளர் மன்றாட்டுகள் எடுத்துரைக்கப்பட்டன. ஜூபா உயர்மறைமாவட்டப் பேராயர் ஸ்டீபன் ஆமேயு மார்ட்டின் முல்லா அவர்கள் திருப்பலியினைத் தொடர்ந்து வழிநடத்தி இறுதியில் திருத்தந்தைக்கு தனது நன்றியினையும் தெரிவித்தார். திருப்பலியின் முடிவில் கூடியிருந்த மக்களுக்கு நன்றியினையும் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கி திருப்பலியை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருப்பலியில் நடனமாடிய மக்கள்
கடவுளின் அருளால் தான் அனுபவித்த துன்பங்கள் அனைத்தையும் நம்பிக்கையாக மாற்றிய புனித ஜோசப்பின் பகிதா வைப்போல நம்பிக்கை என்பது பகிர்ந்து கொள்ளப்படும் பரிசாக, பழங்கள் தரும் விதையாக நம் நடுவில் செழிக்க வாழ்த்துகிறேன் என்றும், நம்பிக்கையின் அடையாளமாக உள்ள நாட்டின் அனைத்துப் பெண்களுக்கும் தான் நன்றி கூறி ஆசீர் வழங்குவதாகவும் எடுத்துரைத்தார். மேலும் பேராயர் ஜஸ்டின், ஒருங்கிணைப்பாளர் கிரீன்ஷீல்டுஸ் ஆகியோர்க்கு நன்றி தெரிவித்து நாட்டின் சூழலை அமைதிக்கான படிகளாக மாற்ற தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்றும் கூறினார். நல்லிணக்கம் மற்றும் அமைதிக்கான பாதையை அன்னை மரியாவிடம் ஒப்படைத்த திருத்தந்தை, சுரண்டல், வறுமை, உக்ரைன் போர் போன்றவற்றால் மிகவும் பாதிக்கப்படும் பல நாடுகளில் அமைதியைத் தர அன்னை மரியாவிடம் அருள்வேண்டுவோம் என்றும் எடுத்துரைத்தார். பின் அங்கிருந்து 7 கி.மீட்டர் தூரம் காரில் பயணித்து ஜூபா பன்னாட்டு விமான நிலையத்தை உள்ளூர் நேரம் 10.45 மணிக்கு வந்தடைந்தார். இத்துடன் தென் சூடான் மூன்றாம் நாள் (திருப்பயணத்தின் ஆறாவது நாள்) பயண நிகழ்வினை திருத்தந்தை பிரான்சிஸ் நிறைவுசெய்தார்.
தென் சூடான் அரசுத்தலைவர், சால்வா கீர் மற்றும் ஏனைய அரசு அதிகாரிகள், ஸ்காட்லாந்து கிறிஸ்தவ சபைகளின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கிரீன்ஷீல்டுஸ், கான்டபர்ரி ஆங்கிலிக்கன் பேராயர் ஜஸ்டின் வெப்லி ஆகியோரை விமான நிலையத்தின் சிறப்பு விருந்தினர்கள் பகுதியில் சந்தித்து மகிழ்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அரசு மரியாதையுடன் A359 என்னும் இத்தாலிய விமானத்தில் வழியனுப்பி வைக்கப்பட்டார். 4,945 கி.மீட்டர் தூரத்தை 6 மணி நேரம் 45 நிமிடங்கள் கடந்து உரோம் உள்ளூர் நேரம் மாலை 5.15 மணிக்கு உரோம் பியுமிச்சினோ விமான நிலையம் வந்தடைந்தார்.
அன்னை மரியாவுக்கு நன்றி
காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் தென்சூடான் நாடுகளுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டு திரும்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது பயணத்தின்போது தனக்குப் பாதுகாப்பாக இருந்தமைக்காக அன்னை மரியாவிற்கு நன்றி தெரிவித்தார் .
பிப்ரவரி 5, ஞாயிறன்று உரோமில் உள்ள புனித மேரி மேஜர் பெருங்கோவிலுக்கு சென்று காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் தென் சூடான் நாடுகளில் தான் மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தின்போது தனக்குத் துணையிருந்து வழிநடத்திய அன்னைக்கு நன்றி கூறினார்.
அவ்வாறே ஜனவரி 31, செவ்வாயன்று, தனது நாற்பதாவது திருத்தூதுப்பயணத்தைத் தொடங்குவதற்கு முந்தைய நாள், அதாவது, ஜனவரி 30, திங்கள்கிழமை, மாலை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அப்பயணத்தை அன்னை மரியாவிடம் ஒப்படைத்து செபிப்பதற்காக இப்பெருங்கோவிலுக்குச் சென்றார்.
ஒவ்வொரு முறையும், திருத்தூதுப் பயணத்தை மேற்கொள்வதற்கு முன்பும், பயணத்தை முடித்துவிட்டுத் திரும்பியதும், அன்னையின் திருப்படத்திற்குமுன் செபிப்பதை தன் வழக்கமாகக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சனவரி 31 ஆம் தேதி முதல் பிப்ரவரி 5 ஆம் தேதி வரை காங்கோ குடியரசு மற்றும் தென் சூடான் நாடுகளுக்குத் தான் மேற்கொண்ட அமைதியின் திருத்தூதுப் பயணம் குறித்த இனிமையான நினைவுகளை இன்றைய பிப்ரவரி 8 ஆம் தேதி புதன் பொது மறைக்கல்வி உரையின் போது திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் கூடியிருந்த பார்வையாளர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் பகிர்ந்து கொண்டார்.
இரத்தத்தின் வாடையையும் போர்களின் தடங்களையும் இடிபாடுகளின் சுவடுகளையும் தாங்கி நிற்கும் காங்கோ மற்றும் தென் சூடான் ஆகிய ஆப்பிரிக்க நாடுகளுக்கு, தம் முதுமையையும் உடல் நலத்தையும் பொருட்படுத்தாமல், மனவுறுதியுடன் நம் திருத்தந்தை பிரான்சிஸ் மேற்கொண்ட 40 வது திருத்தூதுப் பயணம் ஒப்புரவின் திருத்தூதுப் பயணமாக அமைந்து காயங்களுக்கு மருந்தாக, கண்ணீருக்கு ஆறுதலாக, பஞ்சத்திற்கு உணவாக, பாதைக்கு விளக்காக, உப்புக்குச் சாரமாக, ஒளிரும் விளக்கிற்கு உறுதுணையாகும் எரிபொருளாக அமைந்தது என்றால் அது மிகையன்று. இந்நாடுகளுக்காகவும் இந்நாட்டு பூர்வ குடி பல்வேறு இனக்குழுவின் மக்களுக்காகவும் நாம் செபிப்போம். (முற்றும்)
Comment