No icon

ஏப்ரல் 28 முதல் 30 வரை

ஹங்கேரி திருத்தூதுப்பயண விவரங்கள் வெளியீடு

ஹங்கேரி நாட்டின் அரசு அதிகாரிகள் மற்றும் தலத்திருஅவை அதிகாரிகளின் அழைப்பை ஏற்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வரும் வாரம் ஏப்ரல் 28 முதல் 30 வரை அந்நாட்டில் திருத்தூதுப்பயணம் மேற்கொள்வதை மீண்டும் எடுத்துரைத்து அவரின் பயண விவரங்களை வெள்ளியன்று வெளியிட்டுள்ளது திருப்பீட  செய்தித் தொடர்பு அலுவலகம்.

தலைநகர் புதாபெஸ்ட் நகரில் மட்டுமே திருத்தூதுப்பயணத்தை மேற்கொள்ளும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை உள்ளூர் நேரம் எட்டு மணியளவில் உரோம் ஃபியுமிசினோ விமானதளத்திலிருந்து புறப்பட்டு ஏறக்குறைய 1மணி 50 நிமிடங்களில் தலைநகரை வந்தடைந்து அதேநாளில் அரசுத்தலைவர், பிரதமர், அரசு அதிகாரிகள் ஆகியோரை தனித்தனிக் குழுக்களாக சந்தித்தபின் ஆயர்கள், அருள்பணியாளர்கள், திருத்தொண்டர்கள், துறவியர், குருமடமாணவர்கள், மேய்ப்புப் பணியாளர்கள் ஆகியோரைச் சந்தித்து உரையாடுவார்.

ஏப்ரல் 29 சனிக்கிழமையன்று, புதாபெஸ்தின் பெத்தானி இல்லம் சென்று குழந்தைகளைப் பார்வையிடல், புனித எலிசபெத் கோவிலில் ஏழைகள் மற்றும் குடிபெயர்ந்தோரைச் சந்தித்தல், கிரேக்க கத்தோலிக்க சமூகத்தைச் சந்தித்தல், இளையோரைச் சந்தித்தல், அங்குள்ள இயேசுசபையினரைச் சந்தித்தல் போன்ற நிகழ்வுகளில் திருத்தந்தை பிரான்சிஸ் கலந்துகொள்வார்.

ஹங்கேரி நாட்டிற்கான திருத்தூதுப் பயணத்தின் இறுதி நாளான ஏப்ரல் 30 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 9 மணிக்கு பொதுமக்களுடன் திருப்பலி, மாலையில் கல்வி மற்றும் கலாச்சார கழகத்தின் அங்கத்தினர்களைச் சந்தித்து உரையாடுதல் போன்றவைகளை நிறைவேற்றியபின் அன்று மாலை 8 மணியளவில் திருத்தந்தை பிரான்சிஸ் உரோம் நகர் வந்தடைவார்.

Comment