திருத்தந்தையின் ஆசியப் பயணத்திற்கான இலச்சினை, விருதுவாக்கு வெளியீடு
ஆசியக் கண்டத்தில் இந்தோனேசியா, பாப்புவா நியூ கினியா, கிழக்கு திமோர் மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கான திருத்தந்தையின் திருத்தூதுப் பயணம் வரும் செப்டம்பர் மாதம் 2-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதிவரை நடைபெற உள்ளது. இத்திருத்தூதுப் பயணத்திற்கான அதிகாரப்பூர்வ இலச்சினைகள் மற்றும் விருதுவாக்குகளைத் திருப்பீடச் செய்தித் தொடர்பகம் வெளியிட்டுள்ளது.
இந்தோனேசியா: செப்டம்பர் 3-ஆம் தேதி இந்தோனேசியாவின் ஜகார்த்தாவிற்குச் செல்லும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 6-ஆம் தேதி வரை அங்குத் தங்குகிறார். இந்தத் திருத்தூதுப் பயணத்திற்கான இலச்சினையில் ஒரு புனித கழுகு முன் நின்று, திருத்தந்தை தனது கரத்தை உயர்த்தி ஆசீர்வதிக்கிறார். இது பாரம்பரிய இந்தோனேசிய ‘பற்றிக்’ (batik) வேலைப்பாடுகளால் நெய்யப்பட்ட துணியை நினைவூட்டும் வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
பாப்புவா நியூ கினியா: பாப்புவா நியூ கினியாவுக்குச் செல்லும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கு செப்டம்பர் மாதம் 9-ஆம் தேதி வரை தங்கியிருப்பார். சூரிய உதயம் மற்றும் மறைவைத் தூண்டும் வண்ணங்களில் சித்தரிக்கப்பட்டுள்ள சிலுவை, பாப்புவா நியூ கினியாவிற்கான இலட்சினையாக அமைகிறது. சிலுவையில், பாப்புவா நியூ கினியாவைக் குறிக்கும் விண்ணகப் பறவையைக் காணலாம்.
கிழக்குத் திமோர்: பாப்புவா நியூ கினியாவிலிருந்து, கிழக்குத் திமோருக்குச் செல்லும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் மாதம் 11-ஆம் தேதி வரை அங்குத் தங்கியிருப்பார். இந்நாட்டிற்கான திருத்தந்தையின் திருத்தூதுப் பயணத்தின் இலச்சினையில், திருத்தந்தை தனது கரத்தை உயர்த்தி ஆசீர்வதிப்பதைப் பார்க்கின்றோம். அவருக்குப் பின்னால் பூகோளம் உள்ளது, அதிலிருந்து கிழக்குத் திமோரின் வரைபடம் வெளிப்படுகிறது.
சிங்கப்பூர்: தனது திருப்பயணத்தின் இறுதிக்கட்டமாக, சிங்கப்பூர் செல்லும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் மாதம் 11-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை அங்குத் தங்குகிறார். இந்நாட்டிற்கான திருத்தந்தையின் திருத்தூதுப் பயண இலச்சினை மூன்று அரசர்களை வழிநடத்திய விண்மீன், நற்கருணை மற்றும் சிங்கப்பூர் கொடியின் ஐந்து விண்மீன்களால் ஈர்க்கப்பட்ட பகட்டான சிலுவையைச் சித்தரிக்கிறது. சிலுவையின் இருபுறமும் திருத்தூதுப் பயணத்தின் விருதுவாக்கான ‘ஒற்றுமை-நம்பிக்கை’ என்பது பொறிக்கப்பட்டுள்ளது.
Comment